உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 8 · 8 / 77

திலோத்தமையைப் புணர்ந்த காதை.....

கடலோரம் நதியோரம் காட்டோரம் வீட்டோரம்

ஆயக் கன்னியரின் குடம் கவிழ்த்த கண்ணன் காதை...

தாபமிகும் காமக் கதையெல்லாம் கற்பித்தான்!

தந்தை ஆடுகின்ற சூதுக்குக் காயானாள் தத்தை!

தளராது கற்பித்தாள் இளவலுக்கு இன்ப வித்தை!

விவேகபுரி வீரனாக வந்திருப்பான் செல்வன் என்று

"வில்வித்தை, ஆனையேற்றம் முடிந்ததா?" எனக் கேட்ட

இடித்துரைத்து மைந்தன் சொல்வான்

"ஏனப்பா அந்த இழவெல்லாம்?

எழிலெல்லாம் கூட்டியுள்ள இன்பவல்லி தந்த

சுகம் கண்டேன்....

இறைவனது பாதாரவிந்தம் காண வழி கண்டேன்!"

இரணியனை

என உரைத்த மகன் மீது சீறிப் பாய்ந்தான்,

"தினவெடுத்த தோளாலே திசையை உலுக்கும்

பனைமரத்து வைரம்போல் உறுதி கொண்டேன்!

இயற்கையை வழிபடுகின்ற இனத்தின் மீது

இறைவனென்ற பெயராலே சிலையை நுழைக்கும்

இழிகுணத்தார் வாய்கிழிக்க வாள்பிடித்தேன்!

காட்டடா யாரென்று உந்தன் தெய்வம்... இல்லையேல்

காட்டாற்றில்.....நடுக் கடலில்.... எரி தழலில்...

போட்டமுக்கிப் பொடி செய்து மண்ணில் இறைப்பேன்..."

வேட்டு முழக்கம்போல் வெட்டொன்று துண்டிரண்டாய்

வீசிய வார்த்தைகளால்

ஆட்டுமூளை பெற்றுவந்த அரச மைந்தன் அஞ்சி நின்றான்!

அரசி அங்கு குறுக்கிடாதிருந்திருந்தால்.....

தமிழரின் மானம் தங்கும்;

இரணியனின் மகன்தான் சாவான்...

"நாளை இரவுக்குள் கடவுளை நீ காட்டாவிட்டால்

பாரமாய் உன்னைச் சுமந்து பெற்ற தாயாரும்...

பாஷாணமாய் வாய்த்துவிட்ட காதலியும்...

பதறி அழப் பாடையிலே ஏறிடுவாய்!

மகனில்லை- மறவனில்லை-என் மரபுக்கு

இனிப் புகழ்ச்சியில்லை - போ போ மறைந்து விடு"

எனப் புலம்பி நின்றான்...

மலைமோதும் விதம் போலப் படை மோதும் போதும்

மாற்றார்கள் வெட்டுக்கிளி போலச் சூழ்ந்து வந்தபோதும்...

மனங்குலையா மாவீரன்;

மறத் தமிழர் சரித்திரத்தின் பொன்னேடு:

மகன் ஆரியர்க்குத் துணைபோனான் எனக் கேட்டு

ஒளிந்து சென்று இளவரசன் ஒடிந்துபோனான்!

ஓமகுண்டத்தின் பால் அமர்ந்திருந்த வேதியன்முன்,

"உயிர் போகும் நிலை பெற்றேன்.... உமது

கடவுள்களை வரச்சொல்லும்!" என உரைத்தான் நடந்தவற்றை!

"பயம் வேண்டாம் வா!" என்று

பைங்கிளியாம் ஆஷாதேவி

மடிதனிலே போட்டுக் கொண்டு

மாறி மாறி முத்தம் தந்தாள்!....

அவன் மனம் மாற்றிப் போடுதற்குத்

தனம் போர்த்தி அணைத்து நின்றாள்!

விதவிதமாய்க் காம இன்பம் - கற்பாடமெல்லாம்

முடித்துவிட்டுப் புதிதாகக் கை வரிசை ஆரம்பித்தாள்;

கலவி இன்பப் புதிய அகராதி யாத்தாள்!

குலவி மகிழ்ந்தாள்.. புழுவைப் புலன் மாற்றும் குளவியானாள்!

கொட்டினாள்.... கொவ்வை இதழால்!

அவ்வைத் தமிழ் பாடும் பெரும் நாட்டை

ஆளவந்த இளவரசன் அடங்கினான் அவள் பிடியில்!

அதுதான் சமயமென அரியதோர் சதித்திட்டம்....

ஆரியம் நிலைக்கும் திட்டம்...

ஓமகுண்டத் திருச்சபையில் உடனடி நிறைவேற்றம்!

அதை அறியாப் பிரகலாதன், அப்பாவின் முன் சென்று

"ஆண்டவனைக் காட்டுகின்றேன்!" எனச் சொன்னான்!

"எங்கே?" என உறுமிற்று இரண்ய சிங்கம்!

"இந்தத் தூணிலே!" எனச் சொன்னான்;

அது, ஆஷாவின் தூண்டுதலால் சொன்ன சொல்லாம்;

"தூணிலோ இருக்கின்றான்: தூ, தூ! மிக வெட்கம்!

தூயவரின் மனத்திலே இருக்கின்றான் எனச் சொன்னால்

அறிவுலகம் மறுக்காது!

அறிவற்றோய் இந்தத் தூணிலா?

தூணிலா....?" எனக்கேட்டு இடி முழக்கம் செய்தவாறு

இரும்புக் காலணியால் தூணைத் தூளாக்க ஓங்கிவிட்டான்!

துரோகிகள் ஏற்பாட்டால் தூண் முழுதும் காந்தம் பரவியிருக்கின்ற சேதி

பாதுகாப்பாளரும் அறியார்!

பகுத்தறிவை இழந்துவிட்ட மகனுந்தான் நின்றான்;

பாதகரின் ஏற்பாடு - பாவை தந்த சுகத்தாலே மறந்தான்!

ஓங்கிய இரும்புக் காலணி ஒட்டியது காந்தத் தூணோடு|

வீங்கிய புயத்தோன் வியப்பினில் ஆழ்ந்தான்!

ஆங்கு மறைந்த சூதனொருவன்

அரிமாக் கோலம் பூண்ட படியால்

ஆரியன் என்று யார்க்கும் தெரியாமல் - தெற்குச்

சூரியன் மார்பில் ஈட்டி நுழைத்தான்!

குபு குபுவெனப் பெருகிற்று உதிரம்!

குடலை அறுத்தனர்; நாவை அறுத்தனர்;

உடலை வெட்டினர், உருவை அழித்தனர் ...

நமதாண்டவன் நரசிங்க வடிவில் வந்தான் என

நம்புதற்குக் கதையும் விற்றனர்

மூடிற்று மூடுபனி ஆரியத்தை எதிர்ப்பதற்கு

முழக்கமிட்ட வாயென்று;

ஆடற்று ஆரியம் திருக்கூத்திது!-

தெய்வந்தான் தந்தை உயிர் கொண்டதெனத்

தெரிவுற்ற மைந்தனுமே மறையப் போனான்!

அவனறியான் ஆரியத்தின் முழு உருவை-

ஆடுதற்கு ஆவலுடன் நிற்கிட்டான் அரியணையில்!

அந்த துரோக மகன் இன்றில்லை;

ஆயின் என்ன? அவன் வழியில்

ஆரியத்தின் காலடிக்கும் எண்ணற்ற

பிரகலாதர் இருக்கின்றாரே; இந்த நாட்டில்!

✤

வாளி மன்னன்

நற்சிந்தைப் பொற்குன்று கிட்கிந்தை நல்லோன்;

மற்போரில் வாட்போரில் நிகரில்லா வல்லோன்!

தற்கொண்டான் தனைப் பேணும் தமிழணங்கு தாரை;

கற்கண்டு மொழியாலே களிப்பூட்டும் பாவை!

பற்கொண்டாள் முத்தெடுத்து!

விற்கொண்டாள் புருவத்தில்!

சந்திரனும் கற்கின்றான் அவளிடத்தில்

ஒளிகாட்டும் புதிய வித்தை!

தோள் வலியால் வாள் வலியால் தொகை தொகையாய்ச்

சூழ்கின்ற பகைமை எல்லாம்

தூள் தூளாய்ப் போய் ஒடுங்கும் - தொல்லை நீங்கும்!

வேள் பாரி, வழங்குவதில்! தமிழின்

தாள் வீழ்ந்து வணங்குவதில் வள்ளுவனே! அந்த

வல்லவனின் ஆட்சியிலே வறுமையில்லை! அதனாலே

வாட்டமில்லை;

நல்லவர்க்கும் களங்கமொன்று இருப்பதுவே இயற்கையன்றோ?

கொல்ல வரும் மலைப்பாம்பு: கொடும் விலங்கு; கொள்கையிலா

எல்லையில்லாச் சுயநலத்தின் மொத்த உரு; முழுமூடம்;

இழிபெயரோன் சுக்ரீவன் - இளையோனாய்ப் பிறந்து விட்டான்!

அனுமன் எனும் ஓரமைச்சன் அவனுக்குப் பெருந்தோழன்;

மனுவின் முறை வேண்டுமெனப் போராடும் மதக் குரங்கு!

கணுவிலெல்லாம் சுவைக்கின்ற கரும்பினிலே

அணு அணுவாய் வேப்பெண்ணெய் கலப்பதற்குத் திட்டம்

யாத்தான்;

தினை மாவாம் தென்தமிழை அழிப்பதற்குத் திசைகெட்ட

ஆரியத்தின் துணைநின்ற துரோகி அவன்

"அண்ணனையே சாய்த்துவிட்டால் அரியணை உன் காலடியில்

அறிவாய் நீ சுக்ரீவா!" என மொழிந்து முட்டாளை முடுக்கி

தருணமது பார்த்திருந்த இருவருமே கூடிப்பேசி விட்டான்.

அவுணன் எனும் முரடன்தன்னை அண்ணன்பால் ஏவிவிட்டார்;

மற்போரில் எனைவெல்வார் யாருமில்லை;

மறுப்போர்கள் போட்டியிட வரலாமென்று

மார்தட்டி எதிர்நின்ற அவுணன் தன்னைப்

புன்னகையால் வரவேற்றுப் போர்முரசு கொட்டிவிட்டான்:

மண்ணாளும் மாமன்னன், மறத்தமிழர் குலவிளக்கு!

எத்தனை நாள் நடக்குமிந்த மற்போர்?

இருவருமே பெருவீரர்; எனப்பேசும் ஒரு கூட்டம்!

மன்னனினும் வல்லவனாய்த் தோன்றுகிறான்;

இன்னலேதும் வந்திடுமோ வேந்தனுக்கு? என ஏங்கும் ஒரு கூட்டம்!

தோற்றத்தால் மலை போன்றான்;

தோளிரண்டும் உரல் போன்றான்.

தோற்றுத்தான் போவார் மன்னர்; எனத்துவளும் ஒரு கூட்டம்!

அனைவருமே எதிர்பார்த்த அதிர்ச்சி ஏதும் நிகழாவண்ணம்