கலைஞரின் கவிதைகள்
கவிதை 69 · 69 / 77
கட்சிக்கு அடிமைகளாய்த் தொழுது நிற்கும்
பல் இளித்தான் கூட்டத்திற்குச் சவுக்கடி
பல்லாயிரம் தந்திடுவீர்; பாண்டியரே உம் சொல்லால்!
அரிநாம மந்திரத்தை ஜெபிக்கின்ற மகாமகங்கள்
பரிணாம வளர்ச்சி எனப் பசப்பிக் கொண்டு
அரிமாவாய் வாழ்ந்திட்ட அறிவியக்க தளபதியின்
அழகு திருமேனியினைத் திறக்கின்ற "பொருத்தம்" தான்
என்னே!
ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தி ஒன்பதாம் ஆண்டில்
அய்யாநின்று நடத்திய செங்கை சுயமரியாதை மாநாட்டில்
பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டுமென்ற
கண்ணனைய தீர்மானம் உமது தலைமையில்
நிறைவேறியதைத்தான் நினைவில் வைத்து,
முறையாகத் தி.மு.க. ஆட்சியிலே சட்டம் செய்தோம்
நாடார்கள் மட்டுமின்றி உமை
நாட்டோரே புகழ்கின்றார்; போற்றுகின்றார்.
சாதி ஒழிந்தால்தான் சமுதாயம் முன்னேறுமென
ஆதி மகன் வள்ளுவனின் திருக்குறளை
அணுப்போதும் மறவாது வாழ்ந்திருந்த
கணுக்கரும்பே! கலங்காத சிங்க ஏறே! நீவிர் வாழ்க என்றும்!
புண்ணுக்கு மருந்திட்டு
ஆற்ற வழி தேடிடுவாய்!
கண்ணுக்குள் பாவைபோல்
உண்டிடும் உள்ளம் கைம்
பெண்ணுக்கு இருப்பதையும்
உணர்ந்திடுவாய்!
"என் மனைவி இறந்திட்டாள்
வேறுமணம் வேண்டு" மென்பாய்!
பின் நீ சாவு முனை அடைந்திட்டால்
உன் மனையாள் காவு கொடுக்க
வேண்டுமோ காதல்தனை!
தருமனும் பீமனும் மற்று மூவரும் போதாது
கருணனையும் காதலித்தாள் பாஞ்சாலி
அடடா! இலக்குமியும் பார்வதியும்
இசைச் செல்வி கலைமகளும்
கடலைதனை வறுக்கவில்லை
கற்பிழந்த காரணத்தால்!
இந்திரனுக்குடன்பட்டாள்
அகல்யை எனும் ரிஷி குலத்தாள்;
சந்திரனைக் காமுற்றாள்
தாரையாம் தவப் பெண்ணாள்;
இத்தனை புராணத்தையும்
இந்நாட்டுப் பண்டிதர்கள்
முத்தமிழில் தீட்டித் தந்தார்
முதுகெலும்பு வளைந்ததாலே!
"மலை வந்தெதிர்த்த போதும் கற்புக்
குலையோம்" என வீரமொழி பேசும் பெண்டீர்
மேற்சொன்ன பெண்களெல்லாம் தெய்வமென்றால்
ஏற்பாரோ மானமுள்ளார் உங்கள் பேச்சை?
எறிபத்தர் எதிரிகளை
மழுவால் வதைத்தார்!
முறிபட்டார் தாய்தந்தை
மனைவிமக்கள், கோட்புலியால்!
நிலைக்களமாம் அன்புக்குச்
சைவம் என்பீர்!
கொலைக்களத்தில் குலச் சிறையால்
சமணர் செத்தார்!
தலைக்கனம் பிடித்துப் பிதற்றுகின்ற
மெய்யன்பீர்!
வலைக்குள் மாட்டிட
வளர்த்துவந்த புராணத்தைச்
சாக்காட்டால் மோதிச் சடுதியில்
சாய்த்திடுவோம்!
பூக்காட்டில் புகுந்துவரும்
தென்றலல்ல நாங்கள்!
புயல் என அறிவீர்!
கேட்டுண்டோ?
''முன்னூறு நானூறு வேலியேன்
முதலாளியே?
உன்னாலே ஒரு ஏழை
உயர்ந்ததுண்டா?" என்று
எந்நேரங் கேட்டிடும்
என்னாட்டுத் தோழா!
உரமான உனது நெஞ்சின் வினாவை
வரவேற்று உபசரித்து மகிழ்கின்றேன்
மரமாவாய் என்கேள்வி எழுந்தவுடன்!
கல்லுக்கு ஆயிரம் வேலி
ஆலயத்தில் உண்டு நண்பா!
புல்லுக்கும் பயனில்லை புலம்புகின்றார்
ஏழை மக்கள்!
பல்லிடுக்கால் ஒரு வார்த்தை;
பாரத வீரா! நீ கேட்டதுண்டோ?
பரணி பலபாடிப் பாங்குடன்
வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்
சோதாக்கள் சில கூடி
வருணத்தை நிலை நாட்ட
வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங்காக்க
மறத்தமிழா போராடு!
சுண்டெலி வந்ததென்று
சூரப்பூனை அடுப்பின்
அண்டையில் பதுங்க.
அரவமொன்றாடியோட
கண்ட கீரிப்பிள்ளை
கலங்கியே வியர்த்து நிற்க,
மண்டலத்திலில்லா இம்
மாபெரும் வேடிக்கைகள்
வண்டமிழ் நாட்டில் வந்தால்
வாகை சூடி வாழ்ந்திருந்து
சண்டைக்குச் சளைக்காத
சிங்கத் தமிழக்காளை யெல்லாம்
நண்டுக்குப் பயந்தொளிந்த
நரியைப் போல்-அந்நிய
வெண்டைக்காய் வீரரிடம்
வெற்றிகளைக் கொடுத்திடுவார்!
இன்றுமா கூச்சல்?
காவிரியின் கரையினிலே
பெண்ணையின் பாய்ச்சலிலே
சரிதமில்லை! சரிதமில்லை!
ஐயகோ தமிழ்நாடே;
ஆரம்பம் கங்கையிலாம்! பாண்டியர்
ஆண்டதை யார் கண்டார்?
சேரர் செழிப்பைச் செதுக்கிய தெவர்?
சோழர் வளப்பம் சொன்னது முண்டோ?
செருப்பாண்ட கதைதான்
சரிதத் தொடக்கம்!
மறுப்பவரெல்லாம் மானம் விற்றார்.
மாற்றியமைத்திட மாணவர் வந்தார்!
பளிச்செனப் பாய்வர் பாசறை வீரர்!
இளித்த வாயரே இன்னுமா கூச்சல்?
சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப்
பழத்தைச் செருகி இடையில் மல்லிகை
இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை
மடலை வைத்தால் பச்சைக் கிளியே!
உன்போல் படைப்பு! உன்போல் படைப்பு!
வட்டத் தலையே! சிவப்பு மூக்கே!
சின்ன இறகே! நீண்ட வாலே!
கன்னற் கிளியே! சொன்னது பிசகா?
வர்ணனை கேட்டு வாழ்த்த மறுப்பாய்
புகழ்ச்சொல் கேட்டும் போற்றிட மாட்டாய்.
காரணம் அறிவேன் சின்னக் கிளியே!
கூண்டில் உன்னைப் போட்டத னாலே
தூண்டிற் புழுவாய்த் துடிக்கிறாய் நீயும்
சிறையில் உன்னை அடைத்து மகிழ்ந்தேன்
இன்று தெரிந்தேன்-
சிறைமிகக் கொடிது, சிறைமிகக் கொடிது!
மன்னித் திடுவாய் மன்னித் திடுவாய்!
பொன்மொழிப் பாவாய் மன்னித் திடுவாய்!
என்சிறை முடிந்ததும் உன்சிறை உடைப்பேன்
சிறையின் கஷ்டம் சிறையால் உணர்ந்தேன்.
அடிமைப் புள்ளே! அழகுக் கிள்ளாய்!
