கலைஞரின் கவிதைகள்
கவிதை 68 · 68 / 77
பிறந்த நாள்
15.7.76 காமராசர் பிறந்த நாளன்று
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்
எழுதியது
இன்றைக்கு உன்றன் பிறந்தநாள் - கொள்கைக்
குன்றுக்கு எங்கணும் திருவிழா!
விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய்
சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும் சித்ர வதையும்
சிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி.
ஆயிரம் உண்டு கருத்து மோதல் - எனினும்
அழியாத் தொண்டு மறந்திடப் போமோ?
தமிழ் நிலம் மணக்க வந்த திருவே!
அமிழ்தெனும் பொதுப்பணியின் உருவே!
கருத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் - நெஞ்சில்
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும்-
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்
கட்சிகளை நோக்கி, நீ கடுமொழிகள் தொடுத்திடுவாய்
கட்சித் தலைவர்க்கோர் இன்னலென்றால் துடித்திடுவாய்!
பெரியாரின் கல்லறையில் உன் கண்ணீர்!
பேரறிஞர். மூதறிஞர் மறைந்தபோதும் உன் கண்ணீர்!
பெற்ற தாய்தனை நான் இழந்தபோதும்.
உற்றார் உறவுபோல் நீ வந்து உகுத்தாய் கண்ணீர்!
பெருமகனே! உனக்காக எம் கண்ணீர்
பேராற்றுப் பெருக்கெனவே பாய்ந்த தன்றோ?
தனிமனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு
தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்,
குமரிமுதல் இமயம்வரை உன்கொடி பறக்கக்
கோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்,
''குணாளா! குலக்கொழுந்தே!" என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.
பச்சைத் தமிழன் எனப் பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.
கருப்புக் காந்தியென உன்னை - இந்தக்
கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுததன்றோ!
வாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும்
காட்டினாய்! - உன்
வாழ்வையே ஒரு பாடமாய் அனைவர்க்கும் நிலை நாட்டினாய்!'
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள்
என்றைக்கும் அது சிறந்த நாள்!
— 15.7.76 முரசொலியில் வெளிவந்தது.
அவன் பிறந்தநாள்
என ஒன்றில்லை!
இந்தத் தென்கோடித் தமிழகத்தின்
இதயவேந்தன்.
இனிக்கின்ற வெல்லத்தையும் இதழ்
விரிக்கின்ற மலர்களையும்
சொற்சுவையாலும் - எழுத்தின்
சுகந்த மணத்தாலும் வென்றிட்டப்
பொற்காலப்பூபதி எங்கள் அண்ணன்!
சிதையும் கருத்துக்களை
விஷப்பல்லாய்ப் பொருத்தி
சீறிவரும் நாகங்களையும்
எதையும் தாங்கும்
இதய மகுடியாய்
சுருளச் செய்யும் பெருந்தகையாளன்!
நாமம் தொலையா அர்ச்சனைகள்
நாளும் நடக்கும் அண்ணனுக்கு!
ஆமை போன்றான் அடக்கத்திலே
ஊமை போலப் பொறுத்திருப்பான்!
ஆனால்
தீமையொன்று தமிழர்க்கெனில்
தீயைப் போலத் தாவி எழுவான்!
அடைகாக்கும் கோழி போல
அவனைத்தான் நம்மையெல்லாம்-
இன்று நாம்
படை நடத்தும் பாங்கெல்லாம்
அவன் தந்த பயிற்சிதானே!
செம்பவளம் இதழ்களிலே -
சிந்துவதே முத்துவார்த்தை!
சினம் மேவா விழிகளிலே -
ஜொலிப்பது தான் வைர ஒளி!
அவன் பிறந்தநாள் என ஒன்றில்லை
அமுதத் தமிழ் பிறக்கின்ற
அனைத்து நாளும் அவன் பிறந்த நாளே!
உடன் பிறப்பே,
உனக்கு மணிவிழா!
நமது குடும்பத்தின் திருவிழா - உன்
நாக்குத் தமிழ் மணத்தால்
கழக நந்தவனம் சிறக்கும் - உன்
வாக்குத் திறத்தாலே
வஞ்சினப் பகையனைத்தும் பறக்கும் - உன்
ஆக்கப்பணியணி கழகத்தைக்காத்து - நெடுந்
தூக்கத் தமிழரை எழுப்பும்!
நீயோர் ஒளிமணி;
ஓயாமல் ஒலிக்கின்ற தமிழ்மணி!
பள்ளந்தான் தமிழர் வாழ்வில்
விழலாமோ என்று,
உள்ளந்தான் கொதித் தெழுந்தாய் - புது
வெள்ளந்தான் உந்தன் பேச்சு!
வீரம் செய்கின்ற இனத்தின் மூச்சு!
வெற்றி விளைக்கின்ற வாளின் வீச்சு!
அகமென்றும் புறமென்றும் அடுக்கிடும்
அருந்தமிழ் இலக்கியங்கள் தேன் வடித்திடும்!
புலவர் கூட்டமோ,
அதனை உன்பால் பருகத் துடித்திடும்!
யாரோ சிறியார் நரியார்
ஏதோ வாதோ செய்திடத் துணிவேரேல்
பேராசிரியக் கூர்வேல் பிளக்கும்!
தீராப் பிணியும் தீர்ந்து தமிழ் இனம் பிழைக்கும்!
பெரியாரின் பிள்ளைகள் நாம்
பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம் - இந்தப்
பெருங்குடும்பம் பெருமகிழ்வுக் கடலில் துள்ள
அருமருந்தே! அன்பழக உடன்பிறப்பே!
அறுபது நிறை மணிவிழா போல் - இன்னும்
அடுக்கடுக்காய் பலவிழா காண நீ
பல்லாண்டு வாழியவே!
எமது அருமைப் பாண்டியரே!
சவுந்தரம் உமது மேனிமட்டுமோ?
உள்ளமும் கூடத்தான் சவுந்தர்யமானது!
உறுதியும் புலிதான் உமது தோற்றம்-
பன்னீர் செல்வத்தைப் போன்ற கம்பீரம்
பட்டி வீரன்பட்டி பாண்டியர்க்கு என்று;
அண்ணன் அழகிரி அடிக்கடி சொல்வதை
அருகிலிருந்து சுவைத்தோரில் நானும் ஒருவன்.
நானும் அன்பிலும் நாகூர் அனிபாவும்
தேனும் பாலும் கலந்த விருந்தோம்பலை
பட்டி வீரன் பட்டியில் கண்டு மகிழ்ந்தோம்.
பகுத்தறிவுக் கனிகள் உண்டு மகிழ்ந்தோம்.
மறுநாள் காலையில் மலையோரத் தோட்டத்து
நறுமண ஏலம், காய்கள், மலர்கள்
அனைத்தையும் எமக்குக் காட்டி விளக்கிட
அமைத்துச் சென்றீர்; அது இன்னும் நினைவில்!
அய்யப்பனை மீண்டும் படைத்திட்ட பி.டி.ராஜனும்
"பொய்யப்பா கடவுள்" எனும் சவுந்தரபாண்டியனும்
நெய்யைப் போல் வெண்ணெய்க்குள் ஒன்றிருக்கும்
நெஞ்சத்தால் நண்பர்களாய் வாழ்ந்திட்ட பண்புதான் என்னே!
ஆரூரில் ஓர் நாள் யாம் இளந்திராவிடர் நடத்திய கூட்டம்;
அதில் கலந்து நீவிர் ஆற்றிய உரைதான் ஆயிரம் பொன்னாம்!
சுயமரியாதை இயக்கத்தின் பெயரால்; பெரியார்
சொல்வது எதுவாயினும் அதனை ஆணையாய் ஏற்பேன்
பவள விழா மாநாட்டை மதுரை மூதூரில்
என்றீர்!
பாண்டியன் நகர் என்று பெயர் வைத்து
தி.மு.க. நடத்திய நிகழ்ச்சியொன்றே - வரலாற்றைத்
திரும்பிப் பார்க்க மறவாத இயக்கமென நிரூபிக்கும் சான்றாகும்!
பேரவைத் தலைவராயிருந்த பாண்டியன் தொகுதியாம்
சேரன்மாதேவியிலே சிறப்புறு பாலமொன்று
எண்பது லட்சம் செலவில் எழிலாக அமைந்தபோது
வண்டமிழ்ச் சவுந்தரபாண்டியன் பெயர்தான் வைத்தேன்.
ஆட்சிக்கு வருவோர் பக்கம் கொள்கை வைத்துக்
