உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 67 · 67 / 77

என்றன் தென் பாண்டித் தேவா!

நீர் திரும்பும் வரை இங்கேயே நிற்கின்றேன்

இல்லையேல் இக்கடற்கரையே எனக்கமைந்த கல்லறையாம்!"

"சிப்பியிலே விளையாத சிரிப்பு முத்துக் காட்டிடுவாய்;

என் சிந்தையிலே உறவாடும் செந்தமிழின் நலம்பாடித்

திரும்புகிறேன்" எனப் பிரிந்தான் -

கடற்கரையின் வெண்மணலில் காரிகையைத் தனியே விடுத்து!

அழகு சிப்பிகளால் முத்தளித்து;

ஆடும் அலைகளால் உப்பளித்து

உயர்வளிக்கும் பெருங்கடல் நீர் - வாய்

கொப்பளிப்பதற்கும் பயனில்லை என்பதற்காக வெறுப்பாருண்டோ?

அஃதே போல்

நாட்டிற்கு உழைக்கின்ற உத்தமனாம் பெரு வீரன் தன்னை

உடனே தழுவிடவில்லையென்று வெறுக்கவில்லை அந்த

வேல் விழியாள்.

விடைபெற்றுப் போன சிங்கம், தலைவனைக் கண்டு பேசி

நிலைதனை அறிந்து தேர்ந்து,

நீதிக்குத் தொடுக்கும் யுத்த தளபதியாக நின்றிருந்தான்.

பெருஞ்சேனை முகப்பதனில்

நாடளிக்கும் குணக்கேடர்களைக் கூடியெதிர்ப்பதற்குக்

கூவுகிறான், நல்வீரன்! தெருவெல்லாம் பாசறைகள்;

தென்பாண்டி மண்டலத்தில் பாடி வீடு அமையாத பகுதியில்லை

போருக்கு நாள் பார்க்க வேண்டியதுதான் பாக்கி.

தோளுக்கு நிகரானவரில்லை. எம் வாளுக்கு வழி சொல்வீர்;

எனச் சொல்லித் தொகை தொகையாய்க்

குவிந்து விட்டார்.

தொல்புவியில் முதன் முதலாய்த் தோன்றி நின்ற தமிழ்க்

குலத்தார்

தென் புலத்தார் எழுந்துவிட்ட சேதி கேட்டுத்

திக்கெல்லாம். திகைப்பு காட்டும் இன எழுச்சி பெற்றவெள்ளம்

இளைஞரது பட்டாளம், பாட்டாளிப் படை வரிசை

இத்தனையும் அணிவகுப்பில் சேர்ந்து கொண்டு

"நாள் குறிப்பீர்" என ஓலைவிடுத்தார் தலைமைத் தளபதிக்கு.

தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து செயலாற்றுதலே

குறள் வகுக்கும் இலக்கணமெனக் கொண்டிருக்கும்

தலைவனவன்.

"விரைவில் போர் துவங்கும், பொறுத்திருங்கள்" எனப்

பதில் இறுத்தான்

படைகொண்டு செல்வதற்கு இன்னும் சில நாட்களே

எனக் கண்டு சிந்தை மகிழ்ந்தான்... அதற்குள்

கொடும் விந்தையொன்று உருவாகும் என யார் கண்டார்?...

பாசறைக்குப் பக்கத்தே படை நடத்தும் விதம் பற்றித்

தனிமையிலே நின்று யோசனைக்கு அடிமையானான்

அப்போது-

ஆறேழு நரிக் குணத்தார் அவன் மீது பாய்வதற்கு ஓடி வந்தார்

ஓதிய மிலார்களே! ஒன்றுக்கும் பயனற்ற பிறவிகளே!

என்ன வேண்டும்?" எனக் கேட்டான்.

'உன் உயிர் வேண்டும்" எனச் சொன்னார்-

"உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற நாய், நரிகள்,

கழுகுக்கும், பருந்துக்கும் இவ்வுடலைக் கொடுப்பதற்கே

களம் செல்ல இருக்கிறேன்.

அதற்குள்ளே உமக்கு 'முடை' என்றால் எடுத்துச் செல்வீர்

ஆயின் ஒன்று; என்னொருவன் உயிர் பறித்தல் மட்டுந்தான்

உம்மாலே ஆவதன்றி

நான் வளர்த்த உணர்ச்சிகளை - உண்மை வீரர்களை -

அழித்துப் போடல் ஆகாதென அறிவீர்" என்றான்.

தமிழ் கேட்கும் செவியில்லாப் பாம்பு மனிதர்

"படபட" எனச் சுற்றிக் கொண்டார்.

படைவீரன் அங்கங்களை ஆலமரத்து விழுதுபோல்

அறுத்தெறிந்தார்.

வாள் தடுக்க எழுந்த கரத்தினிலே விரல்களெல்லாம்

'பொல பொல' வென உதிர்ந்தன தரையில்,

மலை பிளக்க வெடி வைத்தது போல் மாவீரன்

மண்டையைப் பிளப்பதற்கும் துணிந்து விட்டார்.

தலை நொறுங்கித் தரையில் சாய்ந்தான்.

அத்தை மகள் முத்தமிடத் துடித்த இதழில்

தேர்ந்தெடுத்த மணிமார்பில்

அரிவாள் வீச்சு! மலர்முகம் புதைத்திருக்க அவள்

உதிர வெள்ளம்

ஓடிவிட்டார் உயிர் எடுக்க வந்த கொடியோர்;

உத்தமனும் கடைசி மூச்சை நாட்டுக்கே அளித்து விட்டு

துயில் நீங்காத் தொட்டிலில் படுத்துக் கொண்டான்.

சித்திரம் சிதைந்தது எனக் கேள்வியுற்றாள்;

முத்து மாலை கட்டிக் கொண்டு

கடல் அலையின் ஓரம் நின்ற கட்டழகி!

மாலைதனை அறுத்து விட்டார் மாபாவிகள்;

சேனைதனை நடத்திச் செல்லும் சிங்கம்-

அங்கம் அறுபட்டுத் துரோகிகளால் துடித்து வீழ்ந்த காட்சி-

அம்மவோ! 'கேட்பதற்கு இத்தனை நாள் வாழ்ந்தேனோ?"

"வெண்மணலில் நின்றிருப்பாய் பெண்ணே!

விரைந்து வந்து மணந்திடுவேன் உன்னை"

எனச் சொன்ன வாய் மூடிற்றாமே?

கம்பீர நடைபோடும் கால்கள் சோர்ந்து விட்டனவோ?

கனல் பொழியும் கண்களிலே எனை மணக்கும் போது

குளிர் பொழியும் எனச் சொல்லி வாழ்ந்தேனே,

என் நறுந்தேனே!

உன்னை சாவுச் சகதியில் ஊற்றி விட்டார்களாமே சண்டாளப்

இனி எனக்கேன் வாழ்வு?" என்றாள்

முத்து மாலையைக் கடலில் வீசி எறிந்தாள்

அதைத் தொடர்ந்து, தானும்

பிறவிகள்

அத்தானை நினைத்தவாறு ஆழ்கடலின் அடியிற் சென்றாள்.

என் இனிய நண்பா!

ஏன் பிரிந்தாய்?

கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது கலைஞர் எழுதியது

★

என் இனிய நண்பா!

இளவேனிற் கவிதைகளால்

இதய சுகம் தந்தவனே! உன்

இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்?

தென்றலாக வீசியவன் நீ - என் நெஞ்சில்

தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்

அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததே யன்றி

அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!

கண்ணதாசா! என்

எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!

கவிதை மலர்த்தோட்டம் நீ! - உன்னைக்

காலமெனும் பூகம்பம் தகர்த்துத்

தரைமட்டம் ஆக்கிவிட்டதே!

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்

கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ

கல்லறைப் பெண்ணின் மடியினிலும்

அப்படித்தான் தாவி விட்டாயோ;

அமைதிப்பால் அருந்தித் தூங்கிவிட!

இயக்க இசைபாடிக் களித்த குயில் உன்னை

மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை

தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்

தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை!

திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் சுவைப்

பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித் தமிழா! பிரிவின்

மத்தியிலே ஏன் விட்டுச் சென்று விட்டாய்?

அடடா! அந்த இளமைக் கழனியில்

அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென

ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!

அறுவடைக்கு யாரோ வந்தார்!

உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!

நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்

நிலை பெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க - உன்பால்

இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்!

என் நண்பா!

இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை

இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!

எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு

இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறைந்தாய்! உனை

மறக்க முடியாமல் உள்ளமெலாம் நிறைந்தாய்!

இன்றைக்கு

உன்றன்