கலைஞரின் கவிதைகள்
கவிதை 66 · 66 / 77
புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!
எழுபத்து ஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப் பின்தான்
வகையாகத் தமிழன் வரலாற்றை உணர்ந்தான்!
இலக்கியம் இருந்தது தமிழருக்கு!
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினாய் அதனை
இப்புவி அறிந்திட!
தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!
தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்;
தலைவா! நீ உதித்ததால்தான்
தமிழன் தமிழனானான்!
எழுபத்து ஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
தந்தை பெரியாரின் தளபதி நீ!
விந்தை மனிதர்களால்
விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை,
மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!
அறிஞன் நீ!
அறிவாசான் நீ!
வறிஞன் செல்வன் என்று
வரையறுக்கும் வர்க்கபேதம்
வளர்த்தல் தீதென்று சமதர்ம
வழிநின்று உரைத்தவன் நீ!
எழுபத்துஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
எழும் இக்கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை!
எம்முள்ளத்துயர் இந்நாளிலும் அடங்கிவில்லை
எனினும் நீ அகலாமல் இருக்கின்றாய்
எனும் நினைவில் உன் நிழலாக அசைகின்றோம்!
வாழ்க ஜீவா
நாமணக்கும் நல்ல தமிழ் மணக்கும்
நாஞ்சில் என்ற பேர் மணக்கும்
பாமணக்கும் பூதப்பாண்டி யெனும் ஊர் மணக்கும்
பண்பாளர் ஜீவா புகழ் பாடுகின்ற வாய் தேன்
மணக்கும்!
ஆட்டம் போடும் வாலிபத்தின் - பனி
மூட்டம் கலையா வயதினிலே
நாட்டம் கொண்டார் பொது வாழ்வினிலே
நாட்டை நினைத்தார் முதலிடமாய்!
தோட்டம் நிறையப் பூ இருந்தும்
தொலைவில் பறந்த வண்டினைப் போல்
தொண்டே என்றன் வாழ்வென்று
சுற்றிப் பறந்தார் நாட்டினிலே
வீட்டில் சிலநாள் தங்கிடுவார் - சிறைக்
கூட்டில் பலநாள் வதங்கிடுவார்!
மேடையில் முரசு கொட்டிடுவார் - வாழ்வின்
கோடையில் பயணம் சென்றிடுவார்!
'தாமரை' மலரைத் தந்திடுவார் - அதில்
தமிழாம் அமுதை உண்டிடுவோம்!
கையை ஓங்கிப் பேசிடுவார் - அங்கே
கடும்புயல் வீசக் கண்டிடுவோம்!
வாரீர் என்று அழைத்திடுவார் - அந்த
வாஞ்சை கண்டு சிலிர்த்திடுவோம்!
குன்றாம் அவர்தம் தோளெங்கே?
குன்றா அவர்தம் திறமெங்கே?
நன்றாம் அவர்தம் குணமெங்கே?
நாட்டுக் குழைக்கும் பண்பெங்கே?
வீரம் செறிந்த முகம் எங்கே?
விழிகள் கொட்டும் ஒளி எங்கே?
குருதியெலாம் புரட்சி மணம்
கமழுகின்ற வரிப்புலியை
கொள்கையிலே உறுதிகொண்ட
தமிழ்க் கவியை
கொள்ளையடித்து மகிழ்ந்ததோ
கொடுஞ்சாவு எனக்கேட்டுக்
குமுறுகின்றார் நாட்டுமக்கள்!
வாழ்க ஜீவா! வாழ்க என்றும்!
'நம் நாடு' 21.3.1963
மறைந்த மாவீரன்
தூத்துக்குடி மாவீரன் கே.வி.கே.சாமி கொலையுண்டபோது
இரங்கல் தெரிவித்துப் பாடியது.
★
"சோலையிலே தென்றலிலே இன்பம், பின்னர்-
சொந்த நாட்டைக் காப்பாற்றச் சுழற்றுவேன் வாளை
என்று முழங்குகின்ற காளை!
மொட்டவிழாப் பருவ மலராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர் முகந்தூக்கி நின்ற குத்துவிளக்கு! அவன்
கட்டவிழா மேனிதனைக் கரந்தொட்டுத் தழுவியாடக்
காத்திருந்தாள் பூவையெனும் பாவை
தொழிலாளக் குலத்துக்கோர் முத்தென்பார் அவனை; எழிற்
சத்து மிகும் கனியென்பார்;
பனி நனைந்த மலரென்பார் அவளை!
இருவருமே ஒருவராய் ஆவதெப்போது?
'உருவிய வாளைச் சற்று உறையிலே போடுமே அத்தான்'
என்று முரசு உறுமுகின்ற களம் நோக்கி வாள் தூக்கிப்
பாய்கின்ற காதலனைத் தடுத்து நின்றாள்.
"விடுதலைக்குத் தாவுகின்ற என்னை உன்றன்
காதலுக்குக் காவு கொடுக்க எண்ணாதே பெண்ணே!
கெடுதலைக்கு ஆளாக்கிக் கீழோரால் கீழ் என்று இகழப்பட்ட
என்றன் செந்தமிழர் திரு நாட்டை வாழ்விக்க எழுந்திருக்கும்
அணி வகுப்பில் நிற்பேன்
மணிமாடம்-
கனிப் பேச்சு - வேண்டேன்" என்றான்.
"முற்றிலுமே வெறுத்தீரோ?" என்றாள்
"பற்றில்லை உன் மீது என்று உரைக்கமாட்டேன் பாம்புப்
புற்றில்லை தென் தமிழர் தோட்டத்தில்
என்னும் நிலை வரும் வரையில்-
கற்றிட முடியாதடி காதல் படிப்பு" என்றான்;
அவள் துடித்து நின்றாள்.
"இருவருமே போர்க்களத்தில் இணைந்து நிற்போம்.
அணைந்து விட்டாலும் அப்படியே ஆகட்டும் இருவருக்கும்.
இதற்கென்ன பதில் அத்தான்?"
"இஃதோர் முறை காதலர்கள் கடைப்பிடிப்பதுண்டு!
ஆயின்.... எனக்கது சரிப்பட்டு வராது தங்கம்!
களம் புகுந்து வருகின்ற பகையைச் சாடுகின்ற நேரம் - என்
உளம் புகுந்த நேரிழையாளுக்கு ஏது நேர்ந்ததோ என நெஞ்சம்
ஒருக் கணம் தயங்கும்;
அதற்குள் என் படை மயங்கும்.
வேண்டாமடி பெண்ணே! விடை கொட்டி என் கண்ணே!"
"மணத்திற்குத்தான் இசைய மறுக்கின்றீர்; மங்கையென்னை
உண்பதற்குப் போட்டு வைத்த இலை போலப்
பூப் படுக்கை உண்டே அங்கு வாரீர்"
"பால் சோறு பானையிலே இருக்கட்டும்;
பசியுண்டு இப்போது என்றாலும்
உன்னைப் பாழாக்கிப் போக மாட்டேன்!
அட்டியின்றி விடை தருவாய், அன்னமே!"
"மாம்பழக் கன்னத்தின் அழைப்புக்கும் தடையுண்டா?"
"தடையுண்டு; படை கொண்டு செல்கின்ற நான்
பிணமாகி விட்டாலும், உனக்கு மணமாகித் தீர வேண்டும்.
என் அன்பே!
உன்னை எச்சில்படுத்தி விட்டால் எனக்கென்ன லாபம்?
உனக்குத்தான் பெரு நஷ்டம்!"
"முடியாது! ஒரு முத்தம்...!"
"வேண்டாம்...! திரும்பியபின் மொத்தமாக!"
"அழவிட்டுப் போகாதீர்கள் அத்தான்..."
"காலமெல்லாம் மகிழ்ந்திருப்போம்! கவலை விடு!"
"நீங்கள் கள வெற்றி பெற்றவுடன்,
நான் காதல் வெற்றி பெற்றதாய் மகிழ்வதற்கு இசைவு தாரும்!"
"அசைவொன்றில் ஆயிரம் வண்ணங்கள் காட்டுகின்ற
பசையற்ற தென்புலத்தார்
திசை கெட்டு வாடுவதை மாற்றிய பின்,
அழகு மயிலே!
நாம் மாலை மாற்றிக் கொள்வதில் தடையில்லை, அறிவாய்!"
"வெற்றி பெற்று விரைவில் வாரீர்
கத்துகடல் விளைகின்ற முத்தெடுத்து மாலை தொடுத்து
வைக்கிறேன்!
