கலைஞரின் கவிதைகள்
கவிதை 65 · 65 / 77
பற்றி அப்போது திருவாரூரிலிருந்து வெளியான 'முரசொலி'யில்
கலைஞர் தமது இளம் வயதில் எழுதிய கண்ணீர்ச் சித்திரம் இது.
இருட்டறையில் இரு கண்கள் மூடிக் கொண்டு
உருட்டுகின்றார் உலகத்தார் என்று சொல்வோர்
அழுந்தட்டும் அறியாமை, அதையுணர்த்த
முழங்கிற்று பெரியாரின் முரச ஒலி
அவ்வழி வந்தோன்... அன்பன்... தோழன்
அருமைச் செல்வன்... அறிவியக்க வீரன்
ஞாயிற்றின் நல்லொளியில்
ஆயிற்று காலமென்று அகன்றுவிடக் கருக்கல்
அங்கே...
கிழக்கினில் கிளம்பிய காலைக் கதிரவன்
வெடுக்கென வீழ்ந்தான் கடலில் எனறால்
வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ?
இருள் நீங்கி ஒளி பெறவே இந்நாடு முந்துங்கால்
மருள் சூழ்ந்த சாவு மேகம் இளங்கதிரை மறைத்ததுவே!
குன்றெடுக்கும் நெடுந்தோளன் குலத்தினனே!
கொன்றொழிக்கும் கொடுவாளால் குள்ளநரிக் கும்பலின்
குலை பிடுங்க குகை விட்டு வெளிவந்த சிங்க ஏறே!
மலைத் தோளா! மாணிக்கக் குன்றே!
பழச்சுளை உன் பேச்சு! பார்வையிலே பனி வீச்சு!
நீ போய்விட்டாய்... நின்னோடு நின் புகழ் போமோ?
பன்னீர்ச்செல்வமே! உன் பால்வடியும்
முகமெங்கே? பாண்டியன் மீசையெங்கே?
பசியேறிய வெறி கடலின் பாழலைகள்
ஓய்ந்தனவா உனைத்தின்று!
"தின்னட்டும்... தின்று மகிழட்டும்... என்றும்
எண்ணட்டும் திருவிடத்தா"ரென்றே எங்கு ஒளிந்தாய்?
பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும்
பாட்டாளிக் குணத்தினை எங்ஙனம் கற்றாய்?
கோமானே! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர்
ஓமான் கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்!
பழுதற்ற திராவிடப் பொன்னாடு! பழமை
மதுவுண்ட மக்கள் எல்லாம் விழித்தெழுதல்
இது காண்டல் ... நின் பணிக்குக் காணிக்கையாம்!
சுற்றி எதிர்ப்புகள் சூறாவளியாய்ச் சீறிடினும்
வெற்றி எமக்கென்றே வெளிக் கிளம்பிவிட்டோம்!
பஞ்சைகளல்ல நாங்கள்...
தஞ்சைக் காவலன் சந்ததியார்!
வீழ்ந்திட நேரிடினும் நின் செயல்பாடி
வீழ்ந்திடுவோம்!'
கலைத்தாயின் தலைச் செல்வன்!
கலைவாணர் என்.எஸ்.கே. மறைந்ததையொட்டி
கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை
★
பனிப் பார்வை, கனிப்பேச்சு, தனித் திறமை
இனிப்போடு எழில் காட்சி தருகின்ற இசைப்புலவன்!
அழைக்கின்ற போதெல்லாம் மக்கட்
சிரிப்பு.
பணிபுரிய வருகின்ற நற்றொண்டன்!
தழைக்கின்ற செந்தமிழன்! மழைக் கரத்தால்
மாநாடு காக்கின்ற வள்ளல்!
உழைக்கின்ற ஒருபேறே பெரும்பேறு எனக்கொண்ட தமிழேறு
கலையுலகின் தனிவேந்தன் - அலைகடலாம் அவன் உள்ளம்
நிலைகுலைய நமைவிடுத்து நீங்காத துயில்கொண்ட
கொடுமை என்னே!
"சிரிப்பொன்றே மனித வாழ்வுக்கு மருந்து - அதைச்
சிந்தனைத் தேனில் குழைத்து நாள்தோறும் அருந்து-
நான் உள்ளவரை குறையாது அவ்விருந்து!"
என மொழிந்து வாழ்ந்திட்டான் - அந்தோ.
எரி நெருப்பில் வீழ்ந்திட்டான்!
ஏழைகளைச் சிரிக்க வைத்தான்-
கோழைகளை நிமிர வைத்தான்-
எமையெல்லாம் கதறவைத்து இறப்புலகு ஏகிவிட்டான்!
படக்கலையில் அறிவுமணங் கமழச் செய்து - நாட்டின்
வலக்கரமாய் அமைந்திருந்த "நல்ல தம்பி!"
முடக்கலாம் பெருநிதியை எனக் கிளம்பும் மூளி எண்ணம்
முனை முறிந்து போகும் வண்ணம் 'பணம்' தந்த பாவாணன்!
விதவைதனை "மணமகளா"ய் ஆக்கி வைத்துக் காதற்
பறவைகளைப் புதுவானம் மேவ விட்ட கர்மவீரன்!
கல்லடிக்கும் கயவர்தம் சொல்லடிக்கும் மத்தியிலே
கூறிவந்த கொள்கைகளை
வல்லடி வம்பர்களும் பல் இளிக்கும் விதத்தினிலே
வில்லடிப் பாட்டாலே விளக்கி வந்த வித்தகனாம்!
ஆடுகின்ற கோயிலுக்குப் போகின்றான் பழைய நந்தன் - அறிவு
தேடுகின்ற ஆலயத்தை நாடுகின்றான் புதிய "கிந்தன்"
ஓடுகின்றார் உனைக் கண்டு ஒதியமிலார்
உள்ளத்தார் என மகிழ்ந்தோம்.
இன்றோ
உனை யிழந்து உளம் நெகிழ்ந்தோம்!
இதழ்க் கடையில் புன்னகையைத் தேக்கிக் கொண்டு
மலர்க் கண்ணால் வரவேற்புக் கூறுகின்ற காட்சி எங்கே?
கிளிச் சிறகின் நிறம்காட்டும் இலை எடுத்துப் புதுக்
கிளிஞ்சல் சுண்ணாம்பும் பாக்கும் சேர்த்துக்
குதப்புகின்ற கோலச் செவ்வாய் காட்டுகின்ற
குறுஞ்சிரிப்பு முகந்தான் எங்கே?
புனலிலே மிதக்கட்டும் தமிழர் என்றே
தணலாகிப் போனாயோ, கலைத் தலைவா!
நீரோடை நிலங்கிழிக்கும் நெடிய பெருந்தமிழ் நாட்டில்
சீரோடு வாழ்ந்திருந்த கலையரசே! நீ
வேரோடு சாய்ந்துவிழப் புயல் வீசும் என உணர்ந்தால்
கோடானுகோடி கரம் அப்புயலைத் தடுத்திருக்கும்!
"எதிர்ப்புகளை இள நகைப்பால் இடறிவிட்டு
என் தலைவன் அண்ணாவின் அருகிருப்பேன்"
என உரைத்து எழுந்திட்டாய்! அதற்குள்
சாவின் மடிதனிலே விழுந்திட்டாய்!
என்னுயிரே! இன்னமுதே! என்ன நினைத்து உயிர் விட்டாய்?
"பொன்மலையைக் குவித்திட்டேன்; இன்று புழுதிமலை
அடிவாரத்தில் கிடக்கின்றேன்" எனச் சொல்லிப்
புகழ்மலையின் உச்சிக்குப் போனாயோ?
புது மணியே! புகழ் முத்தே!
பொது உடைமை முளைக்கின்ற "ருசியா"வில்
கலைப் பயணம் நடத்துதற்குச் சென்றாயே;
அதுபோல எண்ணமிட்டோ பெரும்பயணம் மேற்கொண்டாய்;
எம் மீது பெரும்பழியைச் சுமத்திவிட்டு?
கலையே! கற்பனையே!
அழகே! அறிவே!
அன்பே! அறமே!
யாருண்டு இனிமேல் உன்போல் நல்லோன்?
நீயுண்டு: நின்புகழுண்டு என்றென்றும் தமிழர் நெஞ்சில்!
உன் நிழலாக அசைகின்றோம்!
அண்ணாவின் 75-வது ஆண்டு நினைவுநாளில் எழுதியது
★
அண்ணனே!
எங்கள் உயிரே!
உணர்வே!
இனமானக் கோவே!
எழுச்சியின் வடிவே!
எண்ணங்கள் மலரும்
எழிலார் சோலையே!
எஃகுக் கம்பிகளாம்
இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!
எழுபத்துஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
அழகுதமிழ்ப் பேச்சில்
அருவிகளை வென்றவன் நீ!
ஆங்கிலச் சொல்மழையோ - உன்
ஆற்றலுக்கு ஆலவட்டம்!
எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!
எறும்பென மாறி நாங்கள்
அவற்றைச் சுவைத்தோம்!
எழுபத்துஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
காந்தம் உன் விழியில்!
சாந்தம் உன் மொழியில்!
வீரம் உன் செயலில்!
விவேகம் உன் முறையில்!
பாசம் உன் உடன்பிறப்பு!
பரிவு அதன் மறுபதிப்பு!
இதயமோ எதையும் தாங்கும்!
