கலைஞரின் கவிதைகள்
கவிதை 64 · 64 / 77
என்றென்றும்!
நிலவென்பீர்
நிலையின்றிப் பிறையாவோம்!
அப்பெயரோ;
குறையின்றிக்
குளிரொளி வழங்கும் என அறிக!
முகில் என்பீர்
காற்றடித்தால்தான்
கரைந்து மழையாவோம், நாங்கள்!
காற்றின்றிக் கருணை மழை பொழியும்
கருப் பொருளாய் உமது கவிதைக்குப்
பெருமை சேர்க்கும்
பெயர் ஒன்று காண்பீர்;
அப்பெயர்தான் அண்ணா எனும்
அருமைமிகு பெயர் என்று;
அருவியும், தென்றலும், அழகிய மலரும்
பழகிய பலவும் — அகமகிழ்ந்து
ஒரு குரலில் எழுந்து முழங்கின!
அறியாதார்க் கன்றோ
அண்ணாவை அறிமுகம் செய்ய வேண்டும்
அவரைத்தான் அறியா தோரும்
மெத்த அறிந்தவர் போல்
நடித்தால்தான் நாட்டில்
நடமாட முடியுமென்று
கருதுகின்ற கதையைத்தான்
நாள்தோறும் காட்சியாகக்
காண்கின்றோமே!
மலர்கள் முதல் மற்ற
உவமைப் பொருள்கள் அனைத்தும்
மனவருத்த முற்று
எமது பெயரை எல்லாவற்றுக்குமிழுத்துச்
சலிப்புத் தட்டச் செய்யாதீர் என்று
எதிர்ப்புணர்வைக் காட்டும் போது;
சலிப்புத் தட்டாமல் இருக்கின்ற பெயர்
சரித்திரத்தில் பொன்னெழுத்தால்
பொறித்த பெயர்
களைப்பு போக்கிடும் பெயர்
களிப்பினை வழங்கிடும் பெயர்
அண்ணா — அண்ணா — அண்ணா எனும்
அந்தப் பெயர்தானே!
அழுக்கான பேர்வழிகள் கூட
அண்ணா பெயரை,
மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரித்து;
பழுக்காத இரும்பில்
படைக்கலன் தயாரிப்போம்
என்கின்றார்!
ஒரு பேச்சுக்குக் கூட
அண்ணா அதை மறுப்பதில்லை!
இதிலும்,
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென
இருக்கின்றார் போலும், நமதண்ணா!
பெரியாரின் கருத்துக்கள்
கசப்பான மருந்து என்று;
பேரறிஞர் அண்ணா அம்மருந்தை
இனிப்புக்குள் வைத்து
இதமாக அளித்திட்டார்!
உடையுங்கள் விநாயகரை என்று
உரைத்திட்டார் உடைத்திட்டார் பெரியார்!
விநாயகரை வீணாக உடைக்கவும் வேண்டாம்;
விநாயகர்க்குத் தேங்காய் உடைக்கவும் வேண்டாம்
கழகத்தின் கொள்கையிதைக்
கைவிளக்காய் ஏந்தி நின்றார் அண்ணா!
விநாயக சதுர்த்திக்கின்று
வாழ்த்துச் செய்தி தருவோரும்
வித்தகராம் அண்ணாவின் பெயரை
விண்ணதிர முழக்குகின்றார்!
மண்சோறு தின்னுகின்றார் மந்திரிமார்
மாரியம்மன் கோயிலுக்குள் உருளுகின்றார்
வேப்பஞ்சேலை கட்டி,
அம்மன் விழாக் கொண்டாடிவிட்டு
விரட்டுகின்றோம் மூடநம்பிக்கையை எனில்
வெட்கம், வெட்கமெனக் கூறி விலகிவிடாமல்
பக்கம் போய்ப் பாதபூஜை செய்கின்ற
பதவிப் பஞ்சோந்திகளும்
பகுத்தறிவு ஜோதிகளாம்!
அண்ணாவின் பேரைச் சொல்லி
இப்படி அழகாக முடிச்சவிழ்க்கின்றார்;
நியாயந்தானா?
பாலப் பருவ முதல் காஞ்சியிலே
பல காலம் வாழ்ந்த அண்ணன்
பக்கத்துத் தெரு மடத்துப் பெரியவரை
பார்த்ததில்லை என்பதுதான் வரலாறு — இன்றோ
சின்னவரை தெரிசிக்கச் சென்று வந்த
செய்தியினை எட்டுக்காலம் போடுகின்றார்!
பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சி
படுகின்ற பாட்டையும் நீ பாரண்ணா!
அண்ணாவைப் பார்த்தோர்க்கும்
அவருடன் பழகியோர்க்கும்
இருக்கின்ற வேறுபாட்டை;
அன்றொரு நாள் நாவலர்
விளக்கக் கேட்டோம்;
இன்றவரே — பார்த்தோர் பக்கம் சாய்ந்து
பாயிரம் பாடக் கேட்டோம்!
என் முகத்தருகே தன்முகம்
வரவேண்டும்; படத்தில்
விழவேண்டுமென்று நேற்றுத்
தவங்கிடந்து தவித்தோர் எல்லாம்
இன்று; அண்ணா
உன்னருகே நான் அமர்ந்திருக்கும்
புகைப்படத்தினிலே
மைதடவி மறைக்கப் பார்க்கின்றார் — இந்த
அற்பரெல்லாம் அரசாளத் துடிக்கின்றார்;
அடடா; உன்சிரிப்புக்கு அர்த்தம் புரிகின்றதண்ணா!
"பரந்த மனம், நன்றிகெட்ட பாவிகளை
மன்னிக்கும் குளிர்ந்த மனம்
வேண்டுமடா தம்பி" என்கின்றாய்
ஆம் அண்ணா; அதனால்தானே
உன் இதயத்தை இரவலாகக் கேட்டுப் பெற்றேன்!
பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம்,
இன உணர்வு, சமூகநீதி, மொழிப்பற்று
இவற்றுக்கெல்லாம்;
பாராள வந்த காரணத்தால் — புதுப்புது
பாஷ்யங்கள் சொல்லுகின்றார்!
அவர் பால்: பதவி பெற்றோர், பல் வகை
சலுகை பெற்றோர்,
"ஆம்... ஆம்" எனத் தலையாட்டுகின்றார்!
பாரதத்துப் பகாசூரனுக்குப்
பல்லுக்குப்பல் இருகாதம்
பல்லிடுக்கு முக்காதமெனில்
ஆம் ஆம் எனப் பம்பை அடிக்கும்
படவேட்டம்மன் கோயில்
பூசாரிச் சீடனுக்கும்
இவர்களுக்குமென்ன வித்தியாசம்?
சிலையாக நிற்கின்றாய், சிரித்துக்கொள்கின்றாய்
கொலைவாளால் கொள்கை அழிக்கின்றார்;
பொறுத்துக் கொள்கின்றாய்!
ஏன், என்று எமக்கும் புரிகின்றதண்ணா;
அண்ணா வழியில் அயராதுழைப்பதற்குச்
சூளுரைத்து, சுயமரியாதைச் சுடரொளியாய்த்
தம்பியர்கள் இருக்கின்றார் — அவர்கள்
சோரம் போகமாட்டார்
போலிகளைக் கண்டு ஏமாறும்
பொதுமக்களுக்கு,
உண்மைகளை உணர்த்திப்
பொய்மைகளைப் புறக்கணிக்கச் செய்திடுவார்
என நம்புகிறாய் அண்ணா — உன்
நம்பிக்கை வீண் போகாமல்
நடந்திடுவோம் அண்ணா!
பன்னீர்ச்செல்வமே!
1940-ஆம் ஆண்டு லண்டனில் இருந்த இந்திய அமைச்சருக்கு
ஆலோசகராகப் பணியாற்ற திராவிடத் தளபதி ஏ.டி.பன்னீர்ச் செல்வம்
அவர்கள் விமானத்தில் லண்டன் சென்றபோது, விமானம் ஓமான்
கடலில் வீழ்ந்து மூழ்கியது. மறைந்த பன்னீர்ச் செல்வம் அவர்களைப்
