உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 63 · 63 / 77

முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ?

ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனை

கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்

கனமான பாறையொன்றை அவன் தலையில்

உருட்டி விட எத்தனிக்கும்

உலுத்தர்களைக் கண்டால்

உதைக்கத் தான் வேண்டும்!

ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்!

ஆறிலும் சாவு தான் நூறிலும் சாவு தான்;

ஆனது ஆகட்டுமே — இந்த

ஆட்சி தான் போகட்டுமே!

மகுடமின்றி வாழ முடியா மனிதர்களா நாம்?

சிசுவாகப் பிறக்கும் போதே

சிம்மாசனத்துடனா பிறந்தோம்;

சீதை வில்லுடன் பிறந்தது போல்?

கொற்றக் குடையா? கொள்கையா?

எது வேண்டும் எனில், கொள்கையை

விற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்!

ஆட்சி; வரும்! போகும்! நிலையல்ல!

அய்யா அண்ணா வகுத்த கொள்கை;

போகாது! வாழும் நிலையாக! எனவே

ஆட்சியில் இருப்பினும்

இல்லாதிருப்பினும்

தன்மானம் உயிரென மதிப்போம்.

தமிழர் இனமானம் என்றுமே காப்போம்.

கொண்ட குறிக்கோளைப் பழித்துக்

கண்டபடி பேசும் பிறவிகளைப் பார்த்தால்

"போடா வெங்காயம்!" என்பார்

பெரியார், கோபத்தில்!

"வளம் பெரிய தமிழ்நாட்டில்

தமிழரல்லார் வால் நீட்டினால்

உதை தான் கிடைத்திடும்"

என்றுரைப்பார் பாவேந்தர்!

நாராசப் பேச்சாளர், ஆபாச எழுத்தாளர் — காணின்;

நமது அண்ணா; "நடுங்கா நாக்கழகர் நரகல்

நடையழகர்!" என நையாண்டி புரிந்திடுவார்!

ஆத்திரம் தாங்காமல் தானே அம்பேத்கர்

அரசியல் சட்டத்தையே தேவைப்படின்

கொளுத்த வேண்டுமெனக் கொந்தளித்தார்!

எந்தத் தலைமுறையும்

இந்தத் தலைவர்கள் போல்

இனியொரு முறை காண்பதில்லை!

அந்தத் தலைவர்களின்

எண்ணங்கள் வெற்றி பெற

சூளுரைப்போம்!

சுடர் முகம் தூக்குவோம்!

இடர் பல வரினும்

எதிர்த்து நிற்போம்!

வெற்றி காண்போம்!

“அறிஞர் அண்ணா வழியில்”

முப்பெரும் விழாவையொட்டி அண்ணா அறிவாலயம்

கலைஞர் திருமண மண்டபத்தில் 16.9.1994 மாலை நடை

பெற்ற கவியரங்கத்திற்கு தலைமை வகித்து தலைவர்

கலைஞர் அவர்கள் பாடிய கவிதை.

வணக்கம்!

ஆகஸ்டு 15

சுதந்திரம் பிறந்த நாள்

செப்டம்பர் 15 - தமிழனுக்குச்

சுவாசம் பிறந்தநாள்

செப்டம்பர் 17 -தமிழனுக்குச்

சூடு பிறந்த நாள்

அதே நாளில்

சொரணையும் பிறந்ததாலே

நாம் பிறந்தோம்;

ஆம், கழகம் பிறந்தது.

இத்தனையும் இணைத்தே இரும்புச்

சத்தனைய கொள்கை விளக்கம் தர

முத்தனைய விழா

முப்பெரும் விழா எடுக்கின்றோம்.

இவ்விழாவில்,

கவியரங்கம் பாட வந்துள்ள

கவிஞர்க்கும், காண வந்துள்ள

தமிழ்ப்பெருமக்களுக்கும் வணக்கம்.

மலர்கள் எல்லாம்

ஒன்றுகூடி ஒருநாள்

மாநாடு போட்டுத்

தீர்மானம் நிறைவேற்றின

"கவிஞர்களே!

இனியும் உமது கவிதைகளில்

எம் பெயரை

உவமைக்கு அழைக்காதீர்!"

மண்ணோக்கிக்

கண்ணால் கெஞ்சி

வெண்ணிலவு

ஒரு வேண்டுகோள் வைத்தது:

"பண்ணில் எனைவைத்துப்

பாடியது போதும்

விண்ணில் எனைச் சுதந்திரமாய்

இருக்க விடுவீர்!"

முகில்கள் கூடிப்

பேரணி நடத்தி

முறையீடொன்றைச்

சுமந்து வந்தன.

"மோகன சுந்தரிகள்

கூந்தலுக்கு இனியும்

மேகத்தை உவமை காட்டல்

வேண்டாம் கவிஞர்களே!"

மான்களும், மயில்களும்,

மற்றும் பலவும்

மறியலே நடத்திக்

கோரிக்கை விடுத்தன

"கவிஞர்களே! எத்தனை காலம்

எமை இழுத்துக்

கவிதைக் கூண்டில்

அடைத்து மகிழ்வீர்?

வேண்டும் விடுதலை" என்றே

தாண்டிக் குதித்தன!

எம் கவிஞர் கூட்டத்தில்

எல்லோரும் திகைத்துப் போய்

ஏனிப்படிக் கோரிக்கை?

போராட்டம்? பேரணி? எனக்

கவரிமான், கானமயில்,

வான்நிலவு, வண்ணமலர்,

முகம் நோக்கிக் கேட்டபோது

வந்த பதில்:

"எங்களின் புகழ்பாடி

உவமை காட்டிக் காட்டி

எங்களுக்கே சலிப்புத்

தட்டிவிட்டதய்யா" என்பதுதான்!

மானும், தேனும், மயிலும், குயிலும்

வானும், கடலும், கதிரும், நிலவும்

மாடப்புறா, ஜோடிக்கிளி,

மா, பலா, வாழைக்கனி

ஆடும் கொடி, பாடும் அருவி,

அகில், முகில், மலை, சிலை

அனைத்துமே இனி எமது

ஒத்துழைப்பு இல்லையெனப்

புறக்கணித்ததால்; சரி...

சொல்லுங்கள் நீங்களே

சலிப்புத் தட்டாத

பெயர்தான் என்னவென்று

கேட்டு நின்றோம்!

சலிப்புத் தட்டாத பெயர் ஒன்றுண்டு!

நினைத்திடில்;

புளிப்பு, கசப்பு, அணுகிடாத பெயர்!

இலக்கியமாய் என்றும்

வாழுகின்ற பெயர்!

இணையிலாச் சரித்திரமாய்

ஆகிவிட்ட பெயர்!

மலர் என்பீர்;

வாடி விடுவோம்! அப்பெயரோ

வாடாமல் மணம் வீசும்,