கலைஞரின் கவிதைகள்
கவிதை 61 · 61 / 77
காதலர் விரும்பும் "வீரம்" மூன்றெழுத்து!
வீரர்கள் விழுப்புண் ஏந்தும் "களம்" மூன்றெழுத்து!
களத்தில் காணும் "வெற்றி" மூன்றெழுத்து!
வெற்றிக்கு விதையான "அறிவு" மூன்றெழுத்து!
அந்த அறிவுப் பெட்டகமாய் வந்துதித்த
"அண்ணா" மூன்றெழுத்து!
அந்த அண்ணன் கண்ட
கழகமும் "தி.மு.க." — மூன்றெழுத்து!
அன்று நான் இவ்வாறு
பேசியதைத் தொடர்ந்து தான்;
மூன்றெழுத்திலே ஒரு மூச்சிருக்கும்
பாடலே வந்தது!
இன்று; எழுத்துக்கள்
மூன்று
எண்ணங்கள் மும்மூன்றும்
பாட்டரங்கில் வந்துளதே!
அடிநாள் தொட்டு அடிமைகளாய் தொழும்பர்களாய்
ஆதிக்கக் காரர்களின் சவாரிக் குதிரைகளாய்
தாழ்த்தப்பட்டோர் அல்லலுற்றுத்
தணல் வீழ் மெழுகாய்த்
தவிதவித்துக் கிடந்த நிலை மாற்ற
தகத் தகாயச் சூரியனாய் எழுந்தான்
ஒருவன் — அந்தத்
தகைசான்ற அறிஞனுக்குப் பெயர் தான் அம்பேத்கர்!
சாதியாவதேதடா சமயமாவதேதடா
சாதியும் சமயமும் சாற்றிடும் மனிதர்காள்!
ஆண்டவன் படைப்பில் ஆயிரம் பேதம்
அவன் செயல் எனிலோ,
தோண்டுவம் அந்த
ஆண்டவன் கண்களை வாரீர் என்றே;
மாண்டிடும் புழுக்களாம் மனிதரைக் காத்து,
அவர்
மீண்டிடப் போர்க்கொடி உயர்த்திய மேலோன்!
இனித் தகுதியில்லை உமக்கு;
எமை அடக்கி ஆள!
தனித் தொகுதி ஒன்றுதான்
எம் நிலை மாற்றுமென்று;
புயலாய்ச் சீறி
பூகம்பமாய்க் குலுங்கிப்
புரட்சி செய்த
புதிய புத்தன்!
அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருத்துக்கள்
அனைத்தும் இணைத்து
அழகின் சிரிப்பாய்
அனலின் தகிப்பாய்
கவிதைகள் தந்த பாரதிதாசன்;
எரிமலைக் குழம்பை வேலில் தோய்த்து,
இலட்சியக் கவிதைகள் வடித்த புலவன்!
புரட்சி என்ற சொல்லுக்கு உண்மைப்
பொருளைப் புரியவைக்கும் அவன் பாடல்!
உவமைகள் தென்றலேறி பவனி வரும்.
உண்மைகள் விரிவானாய் ஒளி வெள்ளம் பாய்ச்சும்.
தமிழுக்கு மகன் அவன்! தமிழாகவே மலர்ந்தவன்!
அமிழ்துக்கு நிகரான பாக்கள்!
அத்தனையும் மகரந்தப் பூக்கள்!
(இதோ அழகின் சிரிப்பில் புரட்சிக் கவிஞன் பாடுகிறான்
புறாக்களைப் பற்றி)
"இட்டதோர் தாமரைப் பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறு வேறு இருந்த ருந்தும்
கட்டில்லை; கீழ் மேல் என்னும்
கண் மூடி வழக்கமில்லை."
(புறாக்கள் ஒழுக்கம் பற்றிப் பாவேந்தர் கூறுகிறார்.)
"அவள் தனி; ஒப்ப வில்லை;
அவன் அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக்கின்றான்" இந்தத்
தகாச் செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
ஒரு சில தறுதலைகள்
கவலைசேர் மக்களின் பால்
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்."
இருளையும் அழகென இயம்பிய புலவன்
இவனன்றி யாருளர்? கண்டு சொல்வீர்!
(இருள் எங்கெங்கே இருக்கிறதாம் - அங்கெல்லாம்
இல்லாவிட்டால் அழகு நிறைவு அடையாதாம்.)
"உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய்; மங்கை
கயல் விழிக்கடையில் உள்ளாய்;
காதின் நடுப்புறத்தும்,
அயலிலும் சூழ்வாய் பெண்ணின்
முகத்தினில் அடையாளத்தை
இயக்குவாய் இருளே! உன் சீர்
ஓவியர் அறிந்திருப்பார்."
(இருளை அறியாமைக்கு ஒப்பிட்டு - அறியாமை அறிவைத்
தரும் - அறிவினால் அறியாமையைத் தர முடியாது என
வாதிடுகிறான் பாவேந்தன்.)
"அறிவென்றால் ஒளியாம், ஆம் ஆம்!
அறியாமை இருளாம், ஆம் ஆம்!
அறியாமை அறிவைச் செய்யும்
அறியாமை அறிவால் உண்டா?"
(அதற்கு ஒரு நிகழ்ச்சி)
"சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
நள்ளிருள் விளக்குத் தேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார்; கிடைக்கவில்லை.
பெட்டியில் இருப்பதாகப்
பேசினார்; சாவி இல்லை;
எட்டுப் பேர் இதற்குள் தேளால்
கொட்டப்பட்டுத் துடித்தார்;
"கட்டாயம் தூய்மை வேண்டும்"
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித்திட்ட நல்ல
இருளே உன் பெருமை என்னே!"
(புறாக்களைப் பற்றி இருளைப் பற்றி உவமை நயத்தோ
டும் நகைச்சுவை உணர்வோடும் பாடிய பாவேந்தன்;
இதோ புரட்சிக் கவிஞனாய் சங்க நாதம் செய்கிறான்;
பாருங்கள்)
"வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப் பின் தெற்கில் வந்தே
இடக்கினைச் செய நினைத்த
எதிரியை அந்நாள் தொட்டே
"அடக்கடா!" என்றுரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென்றாலும்
தடந்தோள் உண்டெனச் சிரித்தாய்!"
இந்தப் பாவேந்தன் பாட்டுப்
பழுதாக வில்லை யென
மெய்ப்பிக்கத் தான்
தென் கோடி மூலையிலே
பொய்ப்பித்தர் மாயவாதம்;
மண்டல் கமிஷனுக்கு எதிராக
எடுபடவில்லை யென்று;
தெரிவித்தோம் தேசத்துக்கே
அறிவிப்போம் அகிலத்துக்கும்!
வாழை மரம்; தன்னை
வெட்டிக் கட்டியதை அறியாமல்
வருவோரை வரவேற்கும் மண வீட்டில்!
அது போல வடக்கில் உள்ள பிற்பட்டோர்
அவர் நிலை அறியாது கிடக்கின்றார்.
அதனாலே மண்டலுக்கு
அங்குள்ள மாநிலத்தில் எதிர்ப்பதிகம் - ஆனால்
இங்கு, சுண்டலுக்கு கையேந்தி
சூழ்ந்து நிற்கும் அடிமைக் கூட்டம் மிகக் குறைவு!
அது ஏன்? என்ற கேள்விக்கு
இதோ விளக்கம்!
எழுபத்தி ஐந்து ஆண்டின் முன்னே
எழுந்தது பார் ஓர் இயக்கம் - சர் பிட்டி
தியாகராயப் பெரியோன் கண்ட
திராவிடப் பேரியக்கம்!
