கலைஞரின் கவிதைகள்
கவிதை 60 · 60 / 77
கிரீடமே போதுமென இளிக்கின்ற கிறுக்கனல்ல நான்!
அதனால் தான் —
உறவுக்குக் கை கொடுப்போம்
உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றுரைத்துப் பதவித்
துறவுக்கும் தயாராகப் பத்தாண்டுக்குமேல் கழித்தவன் நான்!
பணி புரியும் வாய்ப்புத்தான் பதவி!
பதவி, பவிசு, படாடோபம் எல்லாமே, ஊதிய
பலூனைப் போல் வெடித்து விடும்
பண்பார்ந்த தொண்டொன்றே
வானைப் போல் நிலைத்து நிற்கும்!
இஃதறியாச் சில பேர்கள்
பதவி யொன்றே பிறவி யெடுத்த பயன் என்று
கரையிலிட்ட மீனைப் போல் துடிக்கின்றார்!
அவர்களுக்கும் சேர்த்துப் புத்தாண்டு வாழ்த்துக் கூறி
அறிஞர்க்கும், கவிஞர்க்கும்
அனைத்துப் பிரிவு தோழர்க்கும்
நன்றி கூறி அமைகின்றேன்!
நல்வணக்கம் ஏற்றிடுக!
எழுத்துக்கள் மூன்று -
எண்ணங்கள் மும்மூன்று
ஐம்பெரும் விழாவையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில்
"எழுத்துக்கள் மூன்று, எண்ணங்கள் மும்மூன்று" என்கிற தலைப்பில்
நடைபெற்ற கவியரங்கில் முதல்வர் கலைஞர் அவர்கள் பாடிய தலை
மைக் கவிதை.
★
பெரு விழா - திரு விழா; நமக்கு
ஒரு விழா முப்பெரும் விழா!
இந்த ஆண்டோ; மேலும்
இரு விழா சேர்ந்து
ஐம்பெரும் விழா ஆயிற்று!
அய்யா
அண்ணா
கழகம் பிறந்தநாள் விழா
அம்பேத்கர்
பாவேந்தர்
இருவர்க்கும் நூற்றாண்டு விழா;
திராவிட இயக்கத்தின்
தோற்றம் குறிக்கும் வைர விழா;
மண்டல் குழு பரிந்துரையை
மைய அரசு ஏற்றமைக்கு
மகத்தான வெற்றி விழா!
மனிதாபிமானி வி.பி.சிங்கிற்கு
மனமார்ந்த நன்றியினைத்
தெரிவிக்கும் திரு விழா!
விழா காண வந்துள்ள
அனைவர்க்கும் என் வணக்கம்.
அறிவியக்க அடலேறு இனமானப் பேராசிரியருக்கும்
ஆருயிர் இளவல் நாஞ்சிலார்க்கும்
அருமை நண்பர் அன்பிலுக்கும்
மன்னைக்கும் மத்திய அமைச்சர் மாறனுக்கும்
அமைச்சர் பெருமக்களுக்கும் — எங்கள்
அவைத் தலைவர் தமிழ்க்குடிமகனார்க்கும்
புதுக்கவிஞன் டி.ஆர்.பாலுவிற்கும்
பழைய கவிஞர்கள் அனைவருக்கும்
வணக்கம்!
எழுத்துக்கள் மூன்று
எண்ணங்கள் மும்மூன்றென
கவியரங்கம் அமைத்திட்டார் — அதில்
கழுத்துக்கு மேலே இருக்கும்
தலையைப் போல் — என்னைத்
தலைமை ஏற்கச் செய்திட்டார்.
தடந்தோள், கைகால், முண்டம்,
கண், காது, மூக்கு, வாய், வயிறு.
இருதயம், சுவாசப்பை எதுவுமின்றித்
தலை மட்டும் தனியாக இயங்கிடுமோ?
இயங்காது என்பதாலே
இந்த அங்கங்கள் எதுவும்
இறுமாப்புக் கொள்வதில்லை.
இவையெல்லாம்
எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானமென்று
பண்பாகப் பணியாற்றும் பாங்கு காண்போம்.
என் அங்கங்களே!
அன்புத் தங்கங்களே!
என் உயிரினும் மேலான
அன்பு உடன்பிறப்புகளே!
உண்மைதானே;
நான் உரைப்பது!
பிரதான உறுப்பு நான் தான் என்று
அவதாரம் எடுத்த ஆண்டவன் போல்
தலை, ஒரு நாளும் ஆணவம் கொண்டதில்லை
இந்தத் தலை ஆணவம் கொண்டதில்லை.
நிலை தவறி அசைந்தது மில்லை.
அதனாலே;
தலையைத் தாங்கி
கழுத்து முதல் கால் வரையில்
கடமையாற்றிக் கண்ணியமுடன்
கட்டுப்பாடு காத்திடும் காட்சியினைக்
கழகமாய்க் கண்டு, மகிழ்ந்து,
தலைதாழ்ந்து வணக்கம் செலுத்துகிறேன்.
தலையில் பாயும் ரத்தம் தான்
காலுக்கும் பாய்கிறது — ஆனாலும் பிரமனின்
தலையிற் பிறந்தோர் உயர்ந்த குலத்தோர் என்றும்,
தொடையிற் பிறந்தோர் வைசிய வருண மென்றும்,
காலில் தோன்றிய நாம் கடைநிலை சாதி யென்றும்,
வகுத்தனர் வருணாசிரம தருமம் என்றால்;
பிரமனின் ரத்த ஓட்டத்தில் மட்டும்
ஏன் இத்தனை கோளாறு?
பிரமன் என்ன ஆணா? பெண்ணா?
பெண் என்றே வைத்துக் கொண்டாலும்
உடல் முழுவதும் கருப்பையைத் தைத்துக் கொண்டா
பிள்ளை பெற்றாள்?
புளுகித் தொலைப்பதற்கும் ஓர் அளவு வேண்டும்.
பொல்லாத புராணங்கள் அபத்தமென
அறிய வேண்டும்.
இதை யெல்லாம் சொன்னால்
இறைவன் கோபிப்பான்
உனக்கு அற்ப ஆயுள்
எனச் சாபம் இடுவான்!
இதை விட வேகமாக
இந்த விஷயத்தைப் புட்டு வைத்த
அய்யா பெரியாருக்கு
அகவை தொண்ணூற்றி ஐந்து!
கண் மூடி வழக்கமெல்லாம்
மண் மூடிப் போக என
கல்லறைக்குப் போகும் வரை
கர்ச்சித்த பெரியாருக்குப் பிறந்த நாள்!
கட்டித் தங்கமாய் பகுத்தறிவுக் கருத்தைத்
தந்தார் அவர்! அதைப்
பெட்டியில் வைத்துப் பூட்டாமல்
அணிமணி செய்து,
தமிழர்க்குச் சூட்டியவர் அண்ணா!
கசப்பு மருந்து
உயிர் காக்கும் மருந்து என
சுயமரியாதைச் சூரணம் தயாரித்தவர் பெரியார் — அதை
கனியிடை கலந்து, தமிழ்த் தேனில் தோய்த்துப்
பிணி அகலத் தந்தவர் அண்ணா!
நுதல் அகன்ற அறிவரசன் அண்ணா; கழகத்தின்
முதல் மாநில மாநாட்டைச் சென்னையிலே
ஆண்டு ஐம்பத்தி ரெண்டில்
கூட்டிய வேளையிலே — மாநாட்டுக்கு
அவரைத் தலைவராக வழி மொழிந்து
நான் பேசிய போது தான்;
மூன்றெழுத்துக்குள்ள மகிமையே
முகில் கிழித்து வெளிக் கிளம்பும்
முழு நிலவாக ஒளி விட்டதம்மா!
மூன்று கடல் சூழ்ந்த தமிழ் நிலத்தில்
மும்முரசு கொட்டி மூன்று கொடிகட்டி
முக்கனியாம் முத்தமிழை வளர்த்த
மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்கள் நாம் — நமது
மொழிக்குப் பெயர் "தமிழ்" — மூன்றெழுத்து!
தமிழர்க்குரிய தனிப் "பண்பு" — மூன்றெழுத்து!
பண்பில் எழுந்திடும் "அன்பு" மூன்றெழுத்து!
அன்பில் விளையும் "காதல்" மூன்றெழுத்து!
