உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 59 · 59 / 77

அரிய கவிதை இப்போது கேட்போம்!

அடுத்து

கவியரசு பொன்னி வளவன்.

காவிரிக்குப் பொன்னி யென்று பெயருண்டு!

அந்தச் சிக்கல் தீர் எப்படிச்

செயல்படுவதென இருந்திடும் போது;

வருகின்றாள் பொன்னி! என்ன கருத்து

தருகிறாள் எனப் பார்ப்போம்!

அடுத்து

நிர்மலா சுரேஷ்

தலைப்பென்ன தெரியுமா?

சீர் பற்றியது!

பெண்ணுக்குரிய தலைப்பு!

சீர்வரிசை பெருக்குதல் பற்றி

சிந்திக்காமல் —

நாட்டின் சீர்பெருக நல்ல

கருத்துக்கள் வழங்குவார் என

நம்புவோமாக!

அடுத்து.

விலை உயர்ந்த கவியரசு

வைரமும் முத்தும்!

தலைப்போ "சீலம் காத்திடுவோம்."

சீலம் காத்துச் சீர்பெருக்கிச் செப்பனிட்ட

செந்தமிழ் நாட்டை நாம் கயவர்க்கு

ஏலப் பொருளாய் விட்டு விட்டால்

மானம் போம்! மனித சாதி என்ற நாமம் போம்!

காலம் அளித்த பரிசு அண்ணல் காந்தி

காஞ்சி அளித்த பரிசு அறிஞர் அண்ணா — இவருடன்

சீலம் வகுத்த பெரியார் வழி நிற்பதற்கும்

ஓலமிடும் ஒதிய மிலார் மனிதர்களின்

விழி திறப்பதற்கும்

பாடுவார் இவர்! பருகிடுவோம் சுவையை!

அடுத்து.

கவிஞர் தமிழன்பன்

தொலைக்காட்சியில்

செய்தி வாசிப்பவர்

செந்தமிழை சுவாசிப்பவர்

உரிமைகள் பெற்றிட இவர்

உரைப்பது என்ன?

வாசிக்கட்டும்! உரிமைகள்

சுவாசிக்கட்டும்!

அடுத்து,

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவியரங்கின் கலகலப்பு மனிதர்...

பளபளப்பு இருக்கும்போது மட்டும்

நம் பக்கத்திலும்,

பரபரப்பான நேரத்தில் பல காத தூரத்திலும் —

இருப்பவரல்ல இந்த எஃகுக் கவிஞர்!

இவர் உலகத்தைக் கற்றிடுவோம் என

உரைத்திட வருகின்றார்!

கற்றிடுவாரோ? அல்லது சுற்றிடுவாரோ?

கவனித்துப் பார்த்திடுவோம்!

முடிவுரை

நிறைவுரையாக நான் ஏதும் கூறாவிட்டால்

குறை யொன்றும் நேராது எனினும்;

ஒன்று கூற விரும்புகின்றேன்!

சிங்கத் தமிழ் இளைஞர் கூட்டம் — நன்கு

சிந்தித்துச் செயல்படுவதற்கு; நான் எழுதிய

சங்கத் தமிழ் நூலில் ஒரு பகுதி

எடுத்துரைப்பேன்; ஏற்றிடுவீர்!

மந்த மாருதத் தாலாட்டில் உறங்குவதற்கு

மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர்!

பணம்பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே

தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர்

செல்வத்தை!

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்,

பெருக்க வைக்கின்றீர்; உமது வயிற்றை!

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத்

தள்ளி விட்டு

பொருள் தேடி அலைகின்றீர்; போதுமென்ற மனமின்றி!

வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க்

கொண்டோரே

வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!

இலையிலிட்டு உண்கின்றீர்?

மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா

வைரத்தால் வறுவல் செய்து வைடூரிய அவியலுடன்

முத்துப் பவளமெனும் மணிகளினால் செய்திட்ட

அரிசியையா

அதனை

குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்

குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்

மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் — அதனை

மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம்!

பொதுமை மணம் கமழ வேண்டும் என்று;

புவியில் நாம் முழுங்குகின்றோம் இன்று!

புதுமையல்ல இம் முழக்கம், புலவர் பிரான் நக்கீரர்;

புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார்,

கேளீர்!

தென் கடல் சூழ் தரணி முழுவதுமே — தன்

வெண்கொற்றக் குடையின் கீழ் வரவேண்டுமெனத்

தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும்,

கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதல் போல்

காடகத்தில் விலங்குகளை வேட்டையாட

கண்ணுறக்கமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்ற

கல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும்.

மானம் காத்திட அவர்தம் உடலுக்குக்

கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும்! — அவரை

மயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக்

கூழோ பொங்கலோ உண்டு களிக்க

ஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒரு

நாழித் தானியம் மட்டும் போதுமன்றோ?

இப்படி

உண்பது நாழி, உடுப்பவை இரண்டேயெனும்

உண்மைதனை உணர்ந்த பின்னும்,

வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்

பெருமையில் சிலர் ஆடல் நீதி தானோ?

உலகிற் பிறந்தோர் அனைவருக்கும்,

உடல், உள்ளத் தேவையெல்லாம்

ஒன்றாக இருக்கும் போது - இதனை

நன்றாகச் சிந்திக்காமல்

வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன்

சேர்த்தல் வேண்டும்?

பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல்

வேண்டும்?

தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத்

தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக்

கொள்கையினை

வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தான்

வாழ்வெடுத்த பயனாகும்!

தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர், அதனைத்

தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில்

நல்லோரெல்லாம்!

"தென் கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்பேம் எனினே, தப்புந பலவே."

(புறநாநூறு: பாடல் 189)

பதவியில் இல்லா காலத்தில் நான்

பாடிய பாட்டாம் இஃது!

பதவி யொரு முள் மாலை! இலக்கியப்

பணி எனக்கு முல்லைச் சரம்!

பதவி யொரு நெடும் பள்ளம்! பொதுப்

பணி எனக்குப் பொதிகைக் குன்றம்!

மானமா? மகுடமா? எனக் கேட்டால்

மானத்தை மட்டுமே மதிக்கின்ற மனிதன் நான்!

கிரீடமா? தலையா? எனக் கேட்கும்போது