கலைஞரின் கவிதைகள்
கவிதை 58 · 58 / 77
தோற்றோடிப் போகட்டும் தொல்லை தரும் தீய சக்தி!
"சாதியிலே மதங்களிலே சாத்திரச் சகதியிலே
சாயாதீர் மனிதர்காள்" என்ற சான்றோன்
வடலூர் வள்ளலார் வார்த்தைகளை மதித்தோ மில்லை!
அவருக்கு
வான் மறைக்கத் தோரணம் கட்டி
விழா மட்டும் எடுக்கின்றோம்; வெட்கமில்லை!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு மென்ற
பெருமகனாம் வள்ளுவர்க்குச்
சிறப்பு மட்டும் செய்கின்றோம்; ஆனால் அவர்
செப்பியதைச் செயல்படுத்த மறுத்து விட்டுப்
பெற்றெடுத்த பெண்ணுக்கும் பிள்ளைகட்கும்
உற்றார் உறவுக்குள் சம்பந்தம் தேடுகின்றோம்;
— இந்த
ஊருக்கு உபதேசிகளால் கொண்ட கொள்கைக்கு
என்ன இலாபம்?
உள்ளதைச் சொன்னால் உடலெரிந்து வருவதேன் கோபம்?
சிந்தனையில் விளைந்த செல்வம் சீர்திருத்தக்
கொள்கையெனில்;
செயல்படாது அதனை விடுத்தல் பெருந்துரோகம்!
துரோகத்தைப் போற்றித் துதிபாடித் தொழுவதற்கு
எட்டப்பன் காலத்திற்கு முன்பிருந்தே பழகி விட்ட
தமிழர்களும் இருக்கின்றார் தமிழ்நாட்டில்! காரி
உமிழ்கின்றான் கட்டபொம்மன் என்றாலும்;
கவலையில்லை அந்தக் காரியவாதிகளாம் - பகைவர்
கால் பிடித்து வாழ்கின்ற மேதைகட்கு!
கொள்கை என்றும் கோட்பாடென்றும்
குரல்வளையை நெறித்தாலும் விடேன் என்றும்
குன்றேறி முழக்கிவிட்டு — அதில்
ஒன்றேனும் நிறைவேறச் செயல்படாமல்;
மன்றேறி மாவீரன் போல் நிமிர்ந்து நின்று
மக்கள் முன்னே நடிப்பதனால் என்ன பயன்?
வாக்கும் செயலும் ஒன்றாக இருந்தால் தான் — நாட்டில்
பூக்கும் அரசு காய்த்துக் குலுங்கும்!
சொன்னதைச் செய்வதற்கும்
செய்வதைச் சொல்வதற்கும்
ஓர் அரசு உமதரசு நடப்பதாலே
சீர் பெருக உழைத்திடுவோம் என்றும்;
தேர்க்காலின் அச்சாணி போன்ற
ஏர்ப்பின்னால் தேசம் இருத்தலே பொருத்தமென்றும்;
எழில்மிகு நகர்கள், ஊர்கள், ஏக்கமிலாச் சமுதாயம் —
தொழில் வளம் பெருகினால் தோன்றிடுமென்றும்,
தீய நோய் பல களைந்து தெளிந்த நல்வாழ்வு காண
தூய நோக்குடன் திட்டங்கள் தேவை என்றும்;
பாயும் புலியாய் அரசினர் இருந்தால்
பதுக்கல் எலிகள் அழுந்துவர் என்றும்;
இடுப்பொடிந்து கல்வியிலும் வேலை வாய்ப்பினிலும்
துடுப்பில்லாப் படகுகளாய்த் தத்தளித்தோர் வாழ்வு;
இட ஒதுக்கீட்டுப் புரட்சிகர மாற்றங்களால்
இனி வரும் காலத்தில் வளம் பெற்றுத் திகழுமென்றும்;
எட்டாவது வரை படித்த ஏழை வீட்டு இளஞ்சிட்டு
எட்டாப் பழமடியோ இல்வாழ்க்கை என ஏங்கியதை
— மாற்றி விட்டு
தட்டாமல் அவள் கழுத்தில் தாலியேற் வைப்பதற்கு
தந்திடும் ஐயாயிரம் தவமின்றிப் பெற்ற வரமென்றும்;
குடும்பத் தலைவரை இழந்து குமுறிக் கதறி
இடும்பைகூர் வறுமையினால் வாடுவோர்க்கு — அரசு
தரும் தொகை தான் அவர்தம் கண்ணீர் துடைக்கும்
அரும் தொகையாய் அமையும் என்றும்;
முட்டையுடன் குழந்தைகட்குச் சத்துணவு — வெறும்
பெட்டைகளாய்ப் பெண்களை எண்ணாதீர் என்று
முப்பது விழுக்காடு முதல் கட்டச் சலுகை என்றும்
முடிவாக ஆணுக்கும் பெண்ணுக்கும்
('அர்த்த நாரீஸ்வர' உரிமை கிட்டுமென்றும்;
(அதாவது பாதி பாதி - 50 சதவிகிதம்)
பெண்ணுரிமை வழங்கினால் தான் பேசுந்திருநாட்டு
மண்ணுரிமை நிலைக்கு மென்றுரைத்து
பெற்றோர் உடைமையில் பாதி பெண்மகவுக்குமெனப்
பெருமை மிகு சம உரிமைச் சட்டமென்றும்;
கருவுற்ற ஏழைப் பெண்கள், கலப்பு மணத் தம்பதியர்
கைம்பெண்ணை மணம் புரிந்தோர், ஊனமுற்றோர்
தொழுநோய் இரவலர்,
பொருளற்றுத் திருவற்றுத் திகைத்திடாமல் — நாம்
புரவலராய் நின்றவரைப் போற்றுவோமென்றும்.
ஆண்டுக்கு மூன்று பண்டிகைகளில்
அய்ந்து கிலோ அரிசி இலவசமென்றும்,
ஆதிதிராவிடர் பழங்குடியினர்க்கு மட்டுமின்றி
அடி மட்டத்தில் உழல்கின்ற மிகப் பிற்பட்டோர்
— சீர் மரபினர்
குடியிருக்க வீட்டு மனை இலவசமாய்க்
கொடுத்திடுவோம் கையகப் படுத்தி யென்றும்;
குடி நீர் இல்லா சிற்றூர் இல்லை எனும்
புது நிலை காணப் பணி புரிவோம் என்றும்;
வானமே கூரையாய் பூமியே பாயாய்
வாழ்ந்தது போதும்!
மீனவர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசித்திட
திட மிகு வீடுகள் தினமும் கட்டிடும்
திட்டத்தை மீண்டும் தொடருவோம் என்றும்;
நாடு காத்தும் மொழி காத்தும் நலிவுற்ற தியாகிகட்கு
நல நிதி மற்றும் வசதி வாய்ப்புகள் தருவது என்றும்;
கல்விச் சாலைகள் சென்றிடு மாணவர்க்குப் பேருந்தில்
கட்டணச் சலுகை வாரி வழங்குவ தென்றும்;
அரசு ஊழியர், ஆலைத் தொழிலாளர், ஆசிரியர் நெசவாளி
அனைத்துப் பாட்டாளி மக்கள் உழவர்கள் என்றே
ஆவி நிகர்த்தவர் நியாயக் கோரிக்கை ஏற்று
தாவித் துயர் களையத் தயாராயிருப்போம் என்றும்;
வெல்லம் போல் இனிக்கின்ற சொல்லால் அல்ல —
சொல்லுக்குச் செயல் வடிவம் கொடுக்கின்ற
— ஆட்சி இது!
அதனால் தான்,
சிந்தனை வளர்ப்போம் — செயல் படுவோம் —
சீர்பெருக்கிச் சீலம் காத்திடுவோம் — என்றும்;
உள்ளத்தில் உண்மை ஒளி கொண்டு
உருக்கைப் போல் உறுதி மிகக் கொண்டு
உரிமைகளைப் பெற்றிடுவோம் என்றும்;
உலகத்தைக் கற்றிடுவோம் என்றும்;
கவிதைக்குச் சுதந்திரம் அளிக்கும்
கவிஞன் நான் தலைப்புகள் தந்தேன்.
தலைப்புகளில்
பாடவருவோர் —
வெற்றித் தமிழ்
பற்றிப் புகழ்
உச்சிக் கவி
கற்றுப் புவி
சுற்றிச் சுழல்
கவிஞர்கள்!
இவர் தரும்
நற்றமிழ்ப்
பொற்குவை
கற்றறிவாளர்
பெற்றிடும்
வாய்ப்பினால்
அற்றது தீமை என
உற்றது வாய்மை என
இலக்கியத் தமிழ்க் கொடி
இப் பூமியில் நடுவோம்!
அறிவியல் தமிழால்
வான விளிம்பினைத்
தொடுவோம்!
முதலில்
அரசு மணிமேகலை
இந்த அரசு, மணிமேகலையாக இருந்தால்
அட்சய பாத்திரம் கொண்டு
அள்ள அள்ளக் குறையாமல்
அனைவர்க்கும்
அனுதினமும்
அமுது படைத்திருப்போம்!
பரவாயில்லை
அட்சய பாத்திர மில்லாமலே
ஐந்து கோடித் தமிழ் மக்களை
அரவணைத்து நல்வாழ்வு நல்கிட
அன்றாடம் சிந்தனை செய்வோம்!
அந்தச் சிந்தனை பற்றி அரசு மணிமேகலையின்
