உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 57 · 57 / 77

இனிய உடன்பிறப்புக்கள் எல்லோரும்

இரு கருத்துக்கிடமின்றி எடுத்துரைத்த

காரணத்தால்

பணநாயகப்படை எதிர்த்து --- நமது

ஜனநாயகப்படை மோதிற்று!

மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய

மாண்புமிகு இராமச்சந்திரனை; மாவீரன்

என்று போற்ற,

மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்

மாண்டாலும் வெற்றி வாலிக்குத் தானே!

ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே!

எனவே;

வீழ்ந்தாலும் விழுப்புண் பெற்றோர்தான்

வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவர்!

தாழ்ந்தாலும் தமிழன்; தன்மான மிழந்து; தன்

தலையை என்றும் தாழ்த்த மாட்டான்!

தாய் தந்தையரை நன்றியுடன் போற்றும்

தனிப் பண்பாட்டை மறக்க மாட்டான்!

தாயாகத் தமிழர்க்கு அண்ணாவும்

தந்தையாகப் பெரியாரும வாய்த்ததாலே

அவர்க்குச்

சேயாக விளங்குகின்ற தி.மு.கழகம்;

செய்நன்றி சிறிதளவும் மறவாமல் இன்று;

செருமுனையில் பட்டபுண்ணை சிரிப்பாலே ஆற்றி

வருங்கால வெற்றிக்கு வழி வகுக்கக் காண்பீர்!

தமிழ்நினைத்து, இதயத்தைத்

தமிழால் நனைத்து

இமிழ்கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம்தமிழர்

உமிழ்நீரை வாயில் தேக்கி

ஊத்தைப்பல் துலக்கிவிட்டு மீண்டும்

உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல் போல்

அமிழ்தான இனப்பண்பு, கலைமாண்பு,

இலக்கியங்கள் மாய்ப்பதற்குத்

தமிழர்களே ஒப்பிவிட்டார் — கெட்ட

உமிழ்நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்.

அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திட வேண்டும்

அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத் தொழிலாளி

வேண்டும்

உடல் தூய்மை ஒளடதத்தால் அமையும்,

உளத்தூய்மை வாய்மையாலே ஆகும்!

அந்த வாய்மைக்கு வழிவைத்து

வஞ்சகக் கோட்டைக்கு வெடிவைத்து

அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார் — நம்

அண்ணாவின் தலைவர் பெரியார்!

அய்யா பெரியாரின் தலைமையினை ஏற்றுக்கொண்டு

அடிமைத்தளை நொறுக்க அண்ணாவும் புறப்

பட்டார்

பட்டிமன்ற நடுவர் பதவிக்கென்றே பிறந்திட்ட

பகுத்தறிவுப்பண்பாளர் மா.நன்னன் தலைமையிலே

நேற்றிங்கே நடைபெற்ற பட்டிமன்றத்தில்

தோற்றுப்போனது தம்பி துரைமுருகன் அணி

அது ஒரு வகையில் நியாயம் தான்!

அரசியல்தான் அண்ணாவின் நிலைத்த புகழுக்குப்

பெரிதும் காரணமென வாதிட்டார் ஓரணியில்!

பிறிதோர் அணியினரோ சமுதாயப் பணியே.

எனச் சாதித்தார்!

இளவல் செல்வேந்திரன் அணி எடுத்துரைத்த

இக்கருத்தை இங்கமைந்த மன்றம் ஏற்றதாலே

இங்கிதம் தெரிந்த நடுவர் திரு.நன்னனுமே

இதுதான் தீர்ப்பென்று சமுதாயப்பக்கம்

சாய்ந்தார்!

அறுவடைக்குப்பின் வீட்டுக்கு வந்த நெல்லை

அரிசியாக்கி உலையிலிட்டுச் சோறு படைத்தல்

அரசியல் என்றால்;

அந்நெல் விளையும், கழனிக்கு நீர் பாய்ச்சிப்

பண்படுத்தி, உரமிட்டு

அருகில் வளர் களைகளையும் அகற்றுவதே

சமுதாயப்பணி என்பேன்!

அதையுணர்ந்தே அண்ணா சமுதாயப்பணியாற்றி

அரசியலைச் சமுதாய முன்னேற்றப் படைக்கலனாய்க்

கையில் எடுத்தார்!

"சித்திரைத் திருநாள்"

தலைமைக் கவிதை!

தமிழ்ப்புத்தாண்டு (14.4.90) தினத்தன்று முதல்வர் கலைஞர்

அவர்கள் சென்னை தொலைக்காட்சியில் 'சித்திரைத் திருநாள்' என்ற

தலைப்பில் யாத்த தலைமைக் கவிதை வருமாறு:

★

உள்ளன்பு கொண்ட தமிழ் மக்களுக்கும்

உயர் கவிதை படைக்க வந்த பெருமக்களுக்கும் — என்

உயிரினு மேலான உடன் பிறப்புகட்கும்

வணக்கமும் வாழ்த்தும் குவிக்கின்றேன்!

புத்தாண்டு வாழ்த்துரைக்க வருக என்று

தொலைக்காட்சி நிலையத்தார் தூது விடுத்தார்.

"தூ! தூ!! இவன் எதற்கு?" என்ற காலம் மாறி

தூது விடுக்கும் காலம் தோன்றியது விந்தையன்றோ?

இங்கிருக்கும் கவிஞர்களின் அரங்கிற்கு

நான் தலைவனாம்! வேடிக்கை; நல்ல வேடிக்கை!

இலக்கணமெனும் தாய்ப்பால் அருந்தாமல் — பசி

எடுத்த போதெல்லாம் புதுக் கவிதைப் புட்டிப்பால்

குடித்திடும் குழந்தை நான்!

எனை அழைத்து கவியரங்கத் தலைமை ஏற்கச்

செய்துள்ளார்!

ஏன் என்று யோசித்துப் பார்த்தபோது — நான்

"வைகாசி" என் கவிதைக்கென கேட்க மாட்டேன்.

வைகாசி!

"வை காசி" என் கவிதைக்கென கேட்க மாட்டேன்.

அதனாலே —

சித்திரைக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்துள்ளார்கள்!

கவியரங்கில் பங்கு நீ பெற்றந்த சித்திரைப் பெண்ணுக்கு;

ஆசி கூறென்பார்!

பங்குனி பெற்ற அந்த சித்திரைப் பெண்ணுக்கு

ஆசி கூறென்பார்!

புரட்டாசி கூறமாட்டேன் என்பதாலே

"புரட்டு ஆசி" கூற மாட்டேன் என்பதாலே

துணிந்தழைத்தார் போலும்!

மார்கழியாத் தாவணியுடன்

மார் கழி!

மார் கழியாத் தாவணியுடன்

(காற்றாலோ, கையாலோ விலகாத தாவணியுடன்)

மார் கழியாத் தாவணியுடன் ஆவணிப் பெண்ணாள்

மரபு வழிக் குடும்ப மங்கை; எனைப் பார்த்து

ஆ நீயா? என்று... (ஆனி)

ஆடித் தீர்த்தாள் தை தை என்று

அனல் கொட்டு விழிகாட்டி!

எதற்காக?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டாம்;

அதற்காக!

உண்மை தான் எனினும் அவள் உருகாமல்

இருப்பதற்கு நான் சொன்னேன்

தமிழர்க்கு ஓராண்டில் இரு புத்தாண்டு வருவதால்

இரட்டிப்பு மகிழ்ச்சி தானே என்று!

தளிர்ப் பெண்ணின் குளிர் முகத்தில் நிலவு கண்டேன்!

தழுவிக் கொண்டாள்! திகைக்காதீர்! மேலும்,

மற்றொருத்தியா என்று!

மாதம் தான்!

மாதல்ல!!

புத்தாண்டு இவ்வாண்டு என்பதை விடப்

புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு என்பதிலே பெருமகிழ்ச்சி!

புது மனிதன் அம்பேத்கர் அவதரித்து

புதை குழியில் கிடந்தோரை எல்லாம்

கை தூக்கி நடக்க விட்டு அவர் முகத்தில்

கதிரொளியைப் பரவ விட்ட

வரலாற்றை; இந்த வண்ணமிகு திருநாளில்

வாழ்த்த வேண்டும்!

வளர்க்க வேண்டும்; புதிய சிந்தனையை!

இந்தியத் திருநாட்டு அரசியல் சாசனத்தைச்

சிந்தனைக் கருவூலமாய்த் தந்தவர்க்கும் —

விந்தியம் போல் எழுந்து நின்று, மொழி வெறி

வீணர்களின் ஆதிக்கம் தடுத்து நின்றவர்க்கும்;

ஆம்! அடலேறு மனிதர் அம்பேத்கருக்கும்

அரிமா நெஞ்சப் பாரதி தாசருக்கும்

நூற்றாண்டு கொண்டாடும் இந்த ஆண்டில்