கலைஞரின் கவிதைகள்
கவிதை 56 · 56 / 77
கன்னக் கோல் பிடிக்கின்ற திருடனும் - திருவிழாக் கூட்டத்தில்
கத்தரிக்கோல் வைக்கின்ற சிறுவனும்
கையும் களவுமாய்ப் பிடிபடும்போது
கடவுளே, நான் என்ன செய்வேன்?
கண்ணிலா சமுதாயம் என்னைக் கள்வனாக்கிற்று
என்றுதான் கதறுகிறான்!
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
மாடனைக் காடனைத் தெய்வமென்று
மனிதப் பிஞ்சுகள் தலையைக் கிள்ளியெடுத்து
மாயாவி கொடுக்கும் நரபலி கண்டு - அட
மாபாவி என அலறித் துடித்தால்-
அவனும் சொல்கிறான்;
நானென்ன செய்வேன்; இந்த நாசகார
‘சமுதாயம்’ இப்படி என்னை ஆக்கிற்றென்று
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
பழங்காலச் சிலைகளின்
கைகால் ஒடித்தும் முறித்தும்
பலநாட்டு வாணிபம் நடத்தும்
கொள்ளையன் கூட
வெள்ளையாய்க் கூறுகிறான்
‘சமுதாய’க் கொடுமையால்... இந்தச்
சண்டாளத் தொழிலுக்கு வந்தேன் என்று!
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
பச்சை விளக்கு காட்டப்படாத காரணத்தால்
இச்சைக்கேற்ற இந்த விளக்கை
ஏற்றிக் கொண்டேன் என்கிறாள்;
சிவப்பு விளக்குச் சீமாட்டி!...
சீ! தூ! இஃதோர் பிழைப்பா என்றால்;
தூ! தூ! இந்த ‘சமுதாயம்’ என்கிறாள்;
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
★ ★ ★
இதில்... மொத்தத்தில்
என்னவோ ஓர் உண்மை முழு
வெளிச்சம் காட்டத்தான் செய்கிறது.
சமுதாய முற்போக்கு அடித்தளம் கட்டாமல்
சமதர்மப் பொருளாதார மாளிகை எழுப்பி
சர்வதேச அரசியல் கலசங்கள் அமைத்தாலும் - அது
சடசட எனவே நொறுங்கி விழுந்திடும்
இந்தச்
சங்கடம் புரிந்தே விகடன் நம்மை
“சமுதாயப் பார்வை” காணச் செய்கின்றான்!
மனித மலர்க் கூட்டம் - தன் தோட்டத்திற்குப்
புனித வேலி யொன்றைப் போட்டுக் கொண்டது
அதன் பேர்தான் சமுதாயம்!
பூமியில் முதன் முதலாய்த் தான்றியது மனிதனல்ல
புழு, பூச்சி, மீன், குரங்கு, மிருகங்கள், பறவை இனமே!
பூர்வ ஜென்ம வாசனைக்குப் பொருள் விளக்கம்
புரிகிறதா - இப்போது?...
அடுத்த ஜென்மம், அதற்கு அடுத்த ஜென்மம் - என்பதெல்லாம்
ஆயிரங்கோடி ஆண்டுக்குப்பின்
மாறப்போகும் மனிதன் எடுக்கப் போகும் - ஜென்மம்தானே?..
நிலத்தில் உதித்தது மனித ஜாதி!
நிச்சயமாய்ச் சொல்வேன் அப்போது ஒன்றே ஜாதி:
நெருப்பைக் கண்டு, நீரைத் தடுத்து, குடும்பப்
பொறுப்பையும் ஏற்ற பின்னர், சமூகம் பிறந்தது!....
பிறந்த சமூகம் பரந்து விரிந்து
பிரிவினை வரப்புடன் பெரிய சமுதாயம் ஆனது!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் - இந்த
குறள் மொழிக் கொப்ப குழுக்கள் அமைந்தன.
குறுமதியாளர் குறுக்கே புகுந்து
அறநெறிக் கொவ்வா ஜாதிகள் கண்டனர்....
அன்புளம் வீழ்ந்தது- வம்புகள் பெருகின!...
அதன் விளைவு!
அஞ்ஞான இருளில் மனிதனை மனிதன்
தின்று வாழ்ந்தான்; இன்றோ
விஞ்ஞான ஒளியில் மனிதனை மனிதன்
கொன்று வாழ்கிறான்....!
அணி மலர்த் தோட்டம்தான் சமுதாயம் - எனினும்
தனி மலர் ஒவ்வொன்றும் நறுமணம் தந்திடல் வேண்டும்...
சிறு துளி தான் பெரு வெள்ளம்.... ஒவ்
வொரு துளியும் விஷத் துளியாய் இருத்தல் நன்றோ?
விஷத் துளியைத் தேன் துளியாய்
விடியுமட்டும் குடிக்கின்றான் மதுவென்று! அதை
விலக்குதற்கும் சட்டங்கள் உண்டு - நாட்டில்
'கலக்கலு'க்கும் ஆங்காங்கு திட்டங்கள் உண்டு!
கலப்படத்தைத் தொழிலாகக் கொள்கின்றார்.
களிமண் உருண்டைகளைத் தானியத்திற்கு
கலப்பு மணம் செய்கின்றார்:-
இந்தக்-
கலை கற்று நிலை கெட்டு நிற்போர் தான் - நல்ல
விலை பெற்று நம்நாட்டு நாணயத்தை விற்கின்றார்!
வியாபார நாணயத்தை விற்கின்றார்!
நலம் கெடுக்கும் நாடு கெடுக்கும்
நச்சுச் செயல் புரியலாமா எனக் கேட்டால்...
நாவசைத்து நமக்குச் சொல்வார்
நான் என்ன செய்யட்டும், 'சமுதாயக்' கோளாறு என்று!
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
ஆடு, மாடு, பன்றி முதல் கழுதை வரை
ஆடையிலே உரசிச் செல்லும்-
ஆலயத்தைச் சுற்றி வரும்;
ஆண்டவன் பெற்ற பிள்ளை
அரிஜன வகுப்பார் மட்டும்
தீண்டினால் திருநீல கண்டம் என்பார்...
சரிதானா இக்கொடுமை எனக் கேட்டால்
சமுதாயத்தில் அன்று முதல் இருந்து வரும் நீதி என்பார்.
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
நம் பார்வை பட வேண்டிய சமுதாயம் ...!
நான் நம்பவில்லை சிவனார் நெற்றிக்கண் திறந்த கதை!
இருந்தாலும் இங்கிருக்கும்
இழிவான சமுதாயத் தீமைகளை
எரித்துப் போட்டுச் சாம்பலாக்க
நடக்க வேண்டும் அந்தக் கதை யென விரும்புகிறேன்....
நாம் திறப்போம் நெற்றிக் கண்ணை!
நாடு வாழ, நலிவு தீர
நமது பார்வை சமுதாயத்தின் மீது
நன்றாகப் பாயட்டும்!
கற்பனைக்
குன்றாக உயர்ந்து நிற்கும் கவிஞர்களே
ஒன்றாகக் குரல் உயர்த்தி,
உரிமைகளைக் காத்திடுவோம்!
உறவுகளைப் போற்றிடுவோம்!
உண்மைகளைப் பேச வைப்போம்! - தீய
உள்ளங்களைத் தெளிய வைப்போம்!
கலைவாணர் அரங்கக் கவியரங்கம்
★
பல்வேறு தலைப்புகளில் அண்ணா பற்றி
பலாச்சுளைச் சொல் எடுத்துப் பாவலர்கள்;
கல்மீது எழுத்தாகக் காலத்தால் அழியாத
கவிதை தீட்ட வந்துள்ளார்!
கலைவாணர் அரங்கத்தில்;
கவிவாணர் அரங்கம் இன்று!
காதில் விழுகிறது சிலபேரின் கேலிச்சிரிப்பு!
"கவியரங்கம் ஒரு கேடா கழகத்துக்கு?
விழா நடத்தச் சிறிதேனும் வெட்கமிலையோ இவர்கட்கு?
வெற்றி பெற்ற நாமிங்கே வீரவாள் சுழற்றிநிற்க;
வீணர்கட்கென்ன முப்பெரும்விழா வேண்டிக்
கிடக்கு" தென;
ஆணவக்குரல் ஒன்று கேட்குதங்கே!
விளக்கமொன்று அவர்கட்கும் உங்களுக்கும்
சொல்வேன் நான்!
விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்த
— திருடன்;
அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு அகப்படாமல்
— ஓடியதைப் போல்
அருப்புக்கோட்டை, நெல்லைத் தொகுதிகளை
வென்று விட்டார்!
இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன்;
இந்த 'இடிஅமீன்' ஆட்சியிலே நமக்கு;
இடைத்தேர்தல் எண்ணம் எள்முனையும்
வேண்டாமென்று!
இருந்தாலும் போர்க்களத்தில் விழுப்புண்
பெறுவதே பெருமை என்று;
