உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 55 · 55 / 77

துறக்காத மனிதர் வாசனை - என்றும்

மறக்காத மனிதர் நாங்கள்!

இறக்காத புகழுக்குரியார் - அவரால்

சிறக்காத செயல் தான் உண்டோ?

செருக்கான சொற்கள் பஞ்சம் - யாரும்

வெறுக்காத வாசன் நெஞ்சம்!

தருக்கோடு நிமிர்ந்ததில்லை வாசன் தலை!

தகுதியற்றோர் முன் வளைந்த தில்லை அந்தத் தலை!

★ ★ ★

எத்தனையோ வழிகளிலே வளர்க்கின்றோம்; கரும்புச்

சத்தனைய சுவைமிக்க தமிழ்மொழியை!

முத்தனைய நகைச்சுவையால், கட்டுரையால், கதைகளாலே - பூங்

கொத்தனைய புதுமை தவழ் விகடனையே வளர்த்த தெவர்?

அவர் இன்று நம்மோடில்லை - ஆனாலும் அவர் வைத்த

சுவர் உண்டு சித்திரமுண்டு - இதய விழிகளாலே

பருகிடுவோம் மொண்டு!

★ ★ ★

ஆனந்த விகடனுக்கு அகவை ஐம்பதாமே? இல்லை;

அதிலும் ஓர் திருத்தமுண்டு; ஐம்பத்திரண்டே உண்மை;

வாய்மையுள்ள விகடனாரே; வம்புக்குத் தான் கேட்கின்றேன்;

‘வயதை நீர் குறைத்துச் சொல்வதாலே என்ன லாபம்? - இன்னும்

வாய்ப்பு தேடி அலைகின்றீரோ திரையுலகில்? - உமக்கு

வயது முதிர முதிரத் தான் வைரம் பாய்கின்றது

வண்ணமிகு பாத்திரங்களேற்று எண்ணத்தைப் பொழிகின்றீர்-

தண்ணிலவு, தகத்தகாயச் சூரியன், விண்மீன்கள் இவை;

தம் வயது கோடி கோடி ஆண்டென்று கூறுவதைக் கேளீரோ...

அவைபோல் நீவீர் வாழ்க பல்லாண்டு!....

கண்மணியே! கருமணியே! கருத்தோடு சிரிக்க வைக்கும்

பொன்மணியே! புதுமணியே! புகழ்மணியே!

பன்மணித் திரள் போலப் பண்பார்ந்த நடைபழகி

நெல்மணிக் குவியலாக வாசக உழவர்களை மகிழ்விப்பாய்!

பெண்மணி; உன்னைக் கண்டால் பெறுகின்ற உற்சாகம்தான்

கண் எதிர் காஞ்சிபுரம் சேலை கண்டும் பெறுவதில்லை...!

வித்துவான்கள் இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர்

விகடனைத் தான் புரட்டிப் பார்ப்பார்; விமர்சனத்தை...!

வித்தகர்கள் நூலுக்கு மதிப்புரையும் - அன்று

விகடன் இதழ் தந்தால் தான் பெருமை கொள்வார்!

கேலிச் சித்திரம்கூட - விகடன் ஏட்டில்

மாலியின் கைபட்டு உயிர்பெற்றுப் பேசக் கண்டோம்!....

பல்கிப் பெருகும் சொல்வளச் சுனைகளாய்க்

கல்கியின் கதைகளோ கருத்தைக் கவரும்!

கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும் - அதைச்

சொல்கையிலே பண்பாடு தேவை யென்று

செய்கையிலே காட்டியவன் விகடன் தானே;

பொய்கையிலும் நீர்ப்பாசி மிதப்பதுண்டு

அதுபோல

சில நேரம் குறையும் உண்டு - ஆனால் குற்றம் இல்லை.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற போது

எலி வளை எலிகளுக்கே என்றான் விகடன்!....

பகுத்தறிவுப் போட்டிதனை பழங்காலத்தில் நடத்தினாலும்

பஞ்சாங்கத்து சோதிடத்தில் வல்லவன்தான்

விகடன் போலும்!...

அதனால் தான் அவன் சொன்னபடி

எலி வளையாய் இருக்கின்ற தமிழகத்தைக் காண்கின்றோம்!

எலி வளையில் எலிகளைத் தான் காணவில்லை....

எட்டுக்கால் பூச்சி, பாம்பு, தேள், பூரான்

எல்லாமே அடிக்கும் கொட்டம் தாங்கவில்லை!

சாதியெனும் பூச்சிக்கு எட்டுக்கால் - இல்லை, இல்லை....

சரியாகச் சொல்லவில்லை நான்! எண்ண முடியாத கால்!

பாதியில் வந்த பல கால் பூச்சியை

தேடி அழித்திட வேண்டாமோ?-

பாம்பாய், தேளாய், நெளியும் வன்முறை

பலி கொள்ளும் உயிர்கள் கொஞ்சேமா, சொல்வீர்....

★ ★ ★

ஆலமரத்துக்கு விழுது போன்றார்....

பாலசுப்ரமணியன் - பரிவுடன் என்பால்

விகடன் பொன்விழா வீறுடன் நடைபெற

வீற்றிடுக தலைவராய் கவியரங்கிற்கென்றார்;

ஒரு பதவியில் இருந்தால் தான் உனை மதிப்பேன் என்றில்லாமல்

தெருப் புழுதியில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குன்றாதென்று

கருப்பும் சிவப்பும் கலந்த என்னை கனிவுடன் அழைத்தார்

விருப்பு வெறுப்பிலா பாலுவின் பண்பை

விளக்கொளி என்பேன்; வியந்து போற்றுவேன்!

★ ★ ★

அதிர்ச்சி அடையாதீர்!

ஆனந்த விகடனை நான் “காந்தாரி” என்பேன்....

அம்மிக் குழவி இல்லாமலே இவள் நூறு பிள்ளைகளைப்

பெற்றவள்!

வயிற்றெரிச்சலில் பிறக்காத காரணத்தால்

அத்தனை பிள்ளைகளும்

தனித்தனி ஏடுகள் நடத்தும்

தகுதியைப் பெற்றன!

★ ★ ★

கனம் சாஸ்திரிகள் - கனம் பிள்ளைவாள் -

கனம் மந்திரியார் என்பது போல்-

‘கனம்’ என்ற பெருமை விகடனுக்கு இல்லவே இல்லை-

காரணம் யாரும் விகடனை எடைபோட்டு நிறுக்க

பழைய பேப்பர் கடைக்கு அனுப்புவதே இல்லை-

‘பயிண்டு’ செய்து பத்திரமாய்ப் பாதுகாக்கும்போது

‘பவுண்டு’ கிலோ கணக்கென்ற ‘கனம்’ தான் ஏது?

பெண்களின் கைகளில் இருக்கும்போது - அவர்கள்

கண்களுக்கு ‘விகடன்’ ஓர் காதலன்!

விட்டுப் பிரிய மனமின்றி அவர்தம்

பட்டுப் புடவையோடு அணைத்திடுவார்!

ஆண்களுக்கோ ‘விகடன்’ ஓர் ஆரணங்கு;

அட்டையெனும் ‘ஜாக்கெட்’ அழகிலேயே அவர்கள்

மயங்கிடுவர்!

‘விகடன்’ இன்று மாப்பிள்ளை! அதனால்:

வேடிக்கை நலுங்கெல்லாம் வாடிக்கை:

வீணாகக் கோபிக்கக் கூடாது!

‘விகடன்’ ஒரு டாக்டர் - இவன்

அருகே யிருந்தால் - எல்லா

நோயாளிக்கும் ஒரு ஆறுதல்!

‘விகடன்’ ஒரு ஊர்சுற்றி-

எல்லா ரயில்களிலும் பஸ்களிலும்

இவனைக் காணலாம்!

‘விகடன்’ ஒரு பைத்தியம்! - காரணம்?

இவன் இருக்குமிடத்தை

பத்து பேர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்!

இதோ! இங்கேயும் பத்துப்பேர் -

இனிய தமிழ் எடுத்துப் பாட வந்துள்ளார்...

என்னைச் சுற்றிப் பத்துப் பேர்

எனக் கொள்ளினும் ‘கொள்க!...

நானும் ஓர் பைத்தியம் தானே தமிழ் என்றால்!...

நாயாகப் பிறந்தாலும் தமிழ்த் தொண்டர் முன்தானே

வால் குழைப்பேன்...

வெறி நாயாக அலைந்தாலும் ‘தமிழ்’, ‘தமிழ்’ என்றுதானே

நான் குரைப்பேன்! என்

தாயாக இருக்கின்ற தமிழே! - தொட்டில்

தாலாட்டாய் எனை வளர்த்த தமிழே!

ஊன் கலந்து உயிர் கலந்து

தேன் கலந்த பலாச்சுளை போல்

தித்திக்கும் தமிழே!

வான் கலந்தே என் மூச்சு கரையுமட்டும்

நான் பிறந்த மண்ணுக்குக் கடமை செய்வேன்!

அமுத மொழி தமிழுக்குப் பணி செய்யுங்கால்

சமுதாய முற்போக்குப் பார்வையிலும் கூர்மை வேண்டும்!

அதனால்தான் ‘விகடன்’ நம்மை ஆர்வமுடன்

அழைக்கின்றான் “சமுதாயப் பார்வை”க்காக!

★ ★ ★

‘சமுதாயம்’ என்பது - பாபம்; ஒரு பரிதாபமான சொல்;

அதன்மீது பழியைப் போட்டு

ஆயிர மாயிரம் அநீதிகளை

கன்னி கழியாக் கயவர்கள் பிரசவிக்கிறார்கள்!

அந்த அனாதைப் பிள்ளைகளோ;

அராஜகக் கல்விக் கூடங்களில் சட்டம் படிக்கின்றனர்!

படிக்கும் சட்டங்கள் பயனற்றுப் போகாமல்

வெடிக்கும் குண்டுகளாய் வேகமாய் மாறுகின்றன!

வன்முறையன்றோ இஃதென்று கேட்டால் - வேறு

நன்முறை என்ன கற்று தந்தது சமுதாயம்?

இந்தக் கேள்வி, நறுக்கென எழுகிறது!

பாபம் சமுதாயம் - பரிதாபத்திற்குரிய சமுதாயம்!