கலைஞரின் கவிதைகள்
கவிதை 54 · 54 / 77
காலி செய்த புட்டிகள் போல்
நடுத்தெருவில், வயற்காட்டில், கிணற்றோரம்
விதவிதமாய் வயிறு காய்ந்து கிடக்கின்றார்
ஏழைமக்கள் நடைப்பிணமாய்!
பொன்னாடு இதுதான் என்று
எந்நா தான் புகழ்ந்திடுமோ?
நன் மானம் காப்பதற்கு ஆடையில்லை
அடங்குதற்கு வீடுமில்லை
சன்மானம் ஒரு கேடா;
சகதிக்கும்? சேற்றுக்கும்?
சாக்கடை வாழ்பூச்சி புழுவுக்கும்?
தேவையில்லை!
தன்மானம் போவதற்குத் தானா
போராட்டப் பாற்கடலில்
சுதந்திரத்தைக் கடைந்தெடுத்தோம்?
இல்லாத காரணத்தால் திண்டுக் கல்லில்
அல்லாவின் நாமம் தொழும் அன்பு மக்கள் - வரிசையில்
நில்லாமல் தானம் வாங்கப் பாய்ந்த தாலே
பொல்லாத சா வுரலில் பொடியாய்ப் போனார்
நெரிசல் எனும் உலக்கை பட்டு;
நெடிய தொரு உலகை விட்டு!
வேட்டி சேலை வாங்குதற்கு ஓடிவந்தார்
வாட்டுகின்ற வறுமையாலே தேடி வந்தார்
வீணைகள் போல் நொறுங்கி விட்டார் - இறப்பின்
ஏணைகளில் தூங்கி விட்டார்; தாலாட்டின்றி!
மலர்களாம் தாய்க் குலத்தார்
மழலைகளாம் அரும்புக் கூட்டம்
மயானத் தோட்டத்தில்
மரணச் செடிகளாய்ப் பூத்ததம்மா
களர் நிலப் பயிர் போலக்
காண்பதுதான் சுதந்திரமா?
பலர் வாடச் சிலர் வாழப்
பெற்றது தான் விடுதலையா?
இடர் போக்கி இல்லாதார் பிழைப்பதற்கு
இனியேனும் விதி செய்வோம்
விடை கொடுப்போம் தலை விதிக்கு
படை யெடுப்போம் பூர்வ ஜென்மப் பலனின் மேல்
தடை விதிக்கும் ஆதிக்கக் கோட்டையினை
அறவழியில் தகர்த் தெறிவோம்.
மடை திறந்த வெள்ளம் போல்
மகிழ்ச்சியினைப் பெருக்கிடுவோம்.
‘மாறி வரும் ஊரினிலே’ என்று - தமிழில்
ஊறி வரும் கவிஞர்களைக் கொண்டு - புதுவை
வானொலியார் அரங்கொன்று கண்டோர்! - சுவைத்
தேனருவிக் கவிக்கனிகள் தெவிட்டாது உண்போம்!
புதுவை எனக்குத் தியாக
முத்திரை குத்திய
யாத்திரை பூமி
நான் செத்துப் பிழைத்த க்ஷேத்திரம் இதுவே!....
பலர், தீர்த்தமாடும் இந்த திவ்ய ஸ்தலத்தில்
பயல் தீர்ந்தான் என்று அடித்துப் போட்டார்!
சாக்கடையில் தூக்கி எறிந்தார் என்னைச்
சாக்காட்டுக் கொசு கடிக்காததாலே
புதுவை என்னை வாழ வைத்து-
புதிய சோதனைகளைத் தாங்க வைத்தது!
அன்றே என்னை விழுங்கி யிருந்தால்
இன்றெனக்குத் தொல்லை துளியும் இல்லை!
ஆறி வரும் பூமியிலே அழகழகாய் ஊர்களுண்டு
மாறிவரும் ஊரினிலே மகத்தான புதுமை உண்டா?
ஆறிவரும் பூமியிலே அழகழகாய் ஊர்களுண்டு
அருவியுண்டு நதிகள் உண்டு ஆழ்கடல் மிகவுமுண்டு.
தாவி வரும் மான்குட்டி - தாயின் மடிப் புலிக்குட்டி
காவினிலே குயிற்பாட்டு - களிப்பினிலே மயிலாட்டம்!
இயற்கையின் செழிப்பு - எழிலின் சிரிப்பு
இனிய நற் சிந்தனை - எதிலுமோர் மாற்றம்!
செய்திடத் துணிவும் - செயலில் கனிவும்
சேர்ந்திட வேண்டும் - பேதம் சிதைத்திட வேண்டும்!
பிறப்பால் உயர்வு தாழ்வெனும் பேச்சு! - அறிவுச்
சுரப்பால் அழிந்து அறவே போச்சு! எனினும்
மறப்பார் இல்லை பேதம் - என்றும்
துறப்பார் இல்லை சமயங்கள் மோதல்!
சமத்துவத்தைச் சதிராட விட்டு - அரங்கில்
சதி செய்து காலொடிய வைத்து
சாமி செயல் நாமென்ன செய்வ தென
சமாளிக்கும் கூட்டத்தைச் சாட்டை கொண்டு தாக்கு!
உழைக்க வேண்டும் என்ற உபதேசம் யாருக்கு?
உழைத்துழைத்து உருக்குலைந்த பல கோடிப் பேருக்கா?
உலைக்களத்துச் சுடுநெருப்பில் வேகின்றார்
நிலக் களத்துப் பெருஞ்சேற்றில் சாகின்றார்
புகை கக்கும் ஆலைகளில் மாய்கின்றார்
புயலுக்கும் அஞ்சாமல் அலைகளிலே மாய்கின்றார்.
பாலைகளைச் சோலைகளாய் ஆக்குகின்றார்.
சாலைகளைச் செப்பனிடப் பாறைகளைத் தாக்குகின்றார்.
கன்னலென உபதேசம் புரிகின்றாரே;
இன்னுமென்ன உழைத்துக் கிழிக்க வேண்டும்?
சக்திக்கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதி
சலியாது உழைத்தலுத்த மக்களுக்கு உடனே வேண்டும்!
அஃதின்றி அறிவுரைகள் பிரசங்கங்கள் ஈர விறகுக் கட்டை!
பழுதின்றிச் சமைக்க உதவாது சமதர்மத்தை!
நாடு வாழ நாம் தயாரிக்க வேண்டும்
நடைமுறையில் அந்த நளபாகத்தை!
சுற்றுப்புறம், மனைநலம், கல்வி, ஒருமைப்பாடு - இவை
வெற்றுப்புறம் ஆகாமல் இருப்பதற்கும்-
வெற்றிகளைக் குவிப்பதற்கும்,
உழைப்பின் பெருமை உணர்தல் வேண்டும்.
உயர்வு தாழ்வற்ற சமத்துவ நிலையும் வேண்டும்.
மாறி வரும் ஊரினிலே
வெங்காயம் கூடப் பாஞ்சாலி சபதம் செய்யும்
உரிக்க உரிக்கத் தோல் சேலை வருவதாலே
வெங்காயம் கூடப் பாஞ்சாலி சபதம் செய்யும்.
மாறி வரும் ஊரினிலே
மண்ணாங்கட்டி, தன்னைக் கர்ணன் எனப் புகழ்ந்து கொள்ளும்
கரைகின்ற இரக்க உள்ளம் கர்ணனுக்கு - மழையில்
கரைகின்ற மண்ணாங்கட்டியும் கர்ணன் தானே!
மாறி வரும் ஊரினிலே
அம்மிக் குழவியும் தன்னை ஆண்டவன் என
ஆராதிக்கச் சொல்லும்,
ஆலயத்திலும் நான்தானே சிவலிங்கமென
ஆர்ப்பாட்டம் புரியும்!
அந்தச் சமத்துவம் கேலிக்குரியது
செக்கெல்லாம் சிவலிங்கமாகாது காண்!
மாறி வரும் ஊரினிலே
நித்தம் ஆறு வேளை தின்பவனும்
உழைப்பாளியாம்; காரணம்
நெற்றி வியர்வை நிலத்தில் விழத் தின்கின்றானாம்!
பித்த மனிதனவன் என்று பேரிகை கொட்டிடுக!
மாறி வரும் ஊரினிலே
போலிகள் அசலாகும்
பித்தளை பொன்னாகும் - இந்தப்
பொய்மைகளை வீழ்த்திடவே
மாறி வரும் ஊரினிலே - தமிழில்
ஊறி வரும் கவிஞர்களை அழைக்கின்றேன்.
சந்தத் தொடர் கொஞ்சும் கவி
தந்தச் சிலை மிஞ்சும் எழில்
இன்பத் தமிழ்நெஞ்சம் நிறை
அன்புச் சுடர் ஏந்தி - கவி
அரங்கினிலே வாரீர்!
சமுதாயப் பார்வைகள்...!
‘ஆனந்த விகடன்’ பொன்விழாவையொட்டி 7.1.80 அன்று
நடந்த கவியரங்கிற்கு தலைமை ஏற்றுத் தந்த கவிதை.
★
வணக்கம்,
கற்பனையாம் நூலெடுத்து
தமிழ்த்தறியில் கவிதைகளை
நெய்து வந்த கவிஞர்களே,
வணக்கம்.
என்றும் தமிழ்பால் அன்புடனே - இந்த
மன்றம் வந்த பெரியோரே,
வணக்கம்,
பாட்டுத்தேன் சுவைக்க
பறந்து வந்த வண்டினங்காள்!
வாசனை மலர்கள் நாங்கள்
வரவேற்று வணங்குகின்றோம் - அன்பு
