உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 53 · 53 / 77

கோழி குத்திக் கோபுரம் சாயுமாம்-

கங்கை யமுனை பெருக்கெடுத்து

வட புலத்தில் நுழைந்தது போல்

கள்ளமது பெருக்கெடுத்துத்

தமிழ் நிலத்தில் பாயுதய்யா!

மது அரக்கனை விரட்டுவேன் என மார்தட்டுகின்றார்

அவன் என்ன அரக்கன் வடிவிலா

விரட்டுவதற்கு!

இருக்கின்றான்

ஆளுங்கட்சி அமைப்பாளனாகவன்றே சிரிக்கின்றான்.

கற்பழிப்பு, கொலை, களவு,

கண்ணீர்ப்புகை, துப்பாக்கிப்

பிரயோகம் - லஞ்ச ஊழல்

நிர்வாகக் குறுக்கீடு - நீதியிலும்

தலையீடு அடுக்கடுக்காய்

ஆயிரம் சான்றுண்டு - அதற்கெனத்

தனியாக ஒரு கவியரங்கம் நடத்தவேண்டும்.

அத்தனையும் மறைத்து விட்டுப்

புத்தனைப் போல் ஏசுவைப் போல்

நடிக்கின்றார் நம்பச் சொல்லி!

மாடுகளை ஏலம் போடுவேன் என்று

மந்திரிகள் இதுவரையில் பேசக் கேட்டதுண்டா?

இதோ மாட்டுக்கார வேலன் பேசுகின்றார்

கட்டை வண்டி ஊர்வலங்கள் நடைபெற்றால்

கண்டிப்பாய் வண்டி நொறுங்குமாம்!

காளை மாடுகளும் ஏலம் போகுமாம்!

கண்ணீர் விடும் விவசாயி கனற்பிழம்பாய் மாறி விட்டால்

மாடுகளை ஏலமிடும் போக்கெதிர்த்து

மந்திரிகளை ஏலமிடத் துணிவானே -

நெல்லிக்காய் மூட்டையென்று தமிழர்களை

நினைத்து விட்ட காரணத்தால்

நெஞ்சழுத்தம் வளர்கிறது; நறுக்க வேண்டும்!

எல்லாத் தமிழர்களும் எப்போது கூடுவது?

பொல்லாதார் ஆதிக்கம் எப்போது புறங்காணச் செய்வது?

எழுந்திடும் கேள்வி, எனக்குத் தெரியும்.

கரிசல் உண்டு மண்ணிலே

களைகள் உண்டு கழனியில்

பதர்கள் உண்டு நெல்லிலே

துரோகி உண்டு தமிழரில்

தொலைவில் இல்லை அருகிலே!

பதவிகள் வேண்டும்; தினம்

பல்லக்குச் சவாரி வேண்டும்

அதற்காகப்

பகைவரின் பாதத்தைக் கழுவிடவேண்டும் - எனில்

பாய்ந்தோடி முந்திக்கொள்ளும் வீடணர்கள் காணும் சுகம்

பரத்தையர்கள் ஆடவரின் பிணத்தைத் தழுவிக்

காசுபெறும் சுகம் போல்தானே!

அதனால் -

தமிழ்த் துரோகிகளைக் கண்டு

அஞ்சவேண்டாம் - அவர்கள்

துருப்பிடித்த ஆணிகள்!

அண்ணா பெரியார் படங்களைக்கூட

அந்த ஆணிகள் தாங்கமாட்டா!

அவர்கள் கொள்கைகளை எங்ஙனம் தாங்கிடுவார்!

கோழைகள் விலகட்டும்

வீரர்கள் தொடரட்டும்

கொட்டுக முரசென்று

இனமுழக்கம் செய்திடுவோம்;

இழிவுகளை அகற்றிடுவோம்.

அய்யா ஏற்றியது அறிவு விளக்கு —

அதனைக் காற்றில் அணையாமல்

காத்த கரம் அண்ணன் கரம்

மீண்டும் பெருங்காற்று

இன்று

அண்ணன் கரமில்லை - அதற்குப்பதிலாக

ஆயிரம் லட்சம் கோடியென்று

கரங்கள் நீளட்டும் - அந்தக் கரமனைத்தும்

அண்ணனுக்குச் சொந்தமான கரங்களே தான்! தூய்

தம்பிகளின் கரம் —

தொண்டர்களின் கரம்!....

அவையனைத்தும் அண்ணாவின் கரம்!

அகரம் தமிழுக்கு முதல் எழுத்து

அண்ணாவின் பெயரோ தமிழர்க்கு முதல் எழுத்து

அந்த முதல் எழுத்துத் தலைவர் தந்தது

முன்னேற்றக் கழகம்!

முன்னேற்றம் தமிழர்க்கு வாய்ப்பதெனில்

முப்பெரும் விழா மட்டும் போதாது..

இப்பெரும் நாடு காக்க நமது மொழி காக்க

இன்றைக்கே சூளுரை ஏற்க வேண்டும்.

பெரியாரின் துணிவுதனைப் பெறுதல் வேண்டும்

பேரறிஞர் அண்ணாவின் தெளிவுதனை உணரவேண்டும்

பேரெதிர்ப்புக்கு அஞ்சாத உறுதி வேண்டும் —

ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்

ஆனது ஆகட்டும் என்று

உயிர்த்தித்திப்பை எண்ணாத தியாக உள்ளம் வேண்டும் —

ஊடுருவும் துப்பாக்கி ரவைகளுக்குத் தீரநெஞ்சைத்

திறந்து காட்டல் வேண்டும் —

“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை

எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”

என்ற புரட்சிக்கவியின் திண்மை வேண்டும்....

புரட்டுக்களை உருட்ட வேண்டும்!

புதுமைகளை வளர்க்க வேண்டும்!

போலிகளைப் பொசுக்க வேண்டும் —

போர்க்குண மறவராய் உலவ வேண்டும்

என்றுமே பெரியார் அண்ணா — நம்

இதயத்தில் வாழ வேண்டும்.

❀

மாறி வரும் ஊரினிலே

“மாறி வரும் ஊரினிலே” என்ற தலைப்பில்

10.8.80 அன்று புதுவை வானொலி நிலையத்தார்

புதுவை கம்பன் கலையரங்கில் ஏற்பாடு செய்த

விடுதலை நாள் கவியரங்கில்

கலைஞர் தலைமையில்

சமத்துவம், உழைப்பு, சுற்றுப்புறங்கள்,

மனைநலம், கல்வி, ஒருமைப்பாடு ஆகிய

துணைத் தலைப்புகளில் ஆறு கவிஞர்கள் பாடினர்.

கலைஞர் அவர்கள்

தலைமையேற்று மொழிந்த கவிதை வருமாறு:

★

மாண்புமிகு புதுவை முதல்வருக்கும்

மற்றுமுள்ள அமைச்சருக்கும்

சட்டபேரவைத் தலைவர் - துணைத் தலைவர்க்கும்

திட்டமுடன் பணிவகுத்துச் செயலாற்றும்

மதிப்புமிகு மாநிலத்து அமைப்பாளர்க்கும்

மன்றம் நிறைந்து வழிகின்ற கூட்டமாம்

இன்னுயிர் தந்தும் செந்தமிழ் காக்கும்

என்னுயிர் உடன்பிறப்புக்கள் அனைவர்க்கும்

வணக்கம் கூறுகின்றேன்!

வணக்கம்

வானொலிக் கவியரங்கம் கேட்க வந்த

வண்டமிழ்ப் பெரியோர்க்கும்-

வகை வகையாய்க் கவிபாட வந்துள்ள

நகை முகக் கவிகளுக்கும் வணக்கம்

எதுகை மோனை எதையும் பற்றி

எழுதாக் கவிஞனை வருக என்றே

புதுவை வானொலி அழைத்தது புதிரே!

அதற்கோர் நன்றி ஏற்றிடு வீரே!

எட்டயபுரத்து எரிமலைக் கவிஞன்

பட்டயக் கவிதை படைத்த மண்ணில்

பூகம்பப் புரட்சி புரிந்த புலவன்

பாரதி தாசன் பிறந்த மண்ணில்

கெடுதலை அடிமைத் தளையை அறுத்த

விடுதலைக் கவிதை அரங்கு கண்டோம்.

சரித்திரத்துப் பொன்னெழுத்தில்

சுதந்திரத்தை மின்னவிட்டு

தரித்திரத்தை தலைமீது தாங்கிநிற்கும்

தாயகத்தை வாழ்த்துகின்றேன்.

நரிக்குணத்தார் அன்னியர்கள்

நாட்டைவிட்டுப் போன பின்னும் - நம்

துரைத்தனத்தால் உற்றபயன்

நலிந்தோர் எல்லார்க்கும் கிட்டவில்லை.

புதுவையிலே குடித்துவிட்டுக்