உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 52 · 52 / 77

நிறை வயது வாழ்ந்து விட்டே

ஓய்வு கொண்டார் எனினும்

தாஜ்மகால் திடுமென தரைக்குள்ளே

போய்விட்டால்

அதைக்கட்டி ஆண்டுபல ஆயிற்றே

என்று ஆறுதல்தான்

பெறுவோமா?

தஞ்சைக் கோபுரம் சாய்ந்துவிட்டால்; அதற்கு

வயது அதிகமென்று சொல்லித்

தாங்குதல் எளிதாமோ? இவரோ

தஞ்சைக் கோபுரம் போல் உயர்ந்தவர்

தாஜ்மகால் போல் சரிதம் படைத்தவர்

எழுச்சி ஞாயிறுக்கு நூறாண்டு!

எங்கள் அண்ணனுக்கு!....

அவர் கண்ட நம் கழகத்திற்கோ

இன்று முப்பதாம் ஆண்டு!

புயற்காற்று ஒரு பூந்தென்றலைப் பிள்ளை

யாய்ப் பெறுவதுண்டோ?

அப்படிப் பிறந்த பிள்ளைதான்

நம் அண்ணன் எனும் மந்தமாருதம்!

சண்டமாருதங்களையும் தன்

புன்னகையால் விரட்டுகின்ற மந்தமாருதம்!

“தாழ்ந்த தமிழகமே!” என அழைத்து, நாம்

வாழ்ந்த பெருமையெலாம் வகைப்படுத்தி

ஆழ்ந்த கருத்துப் பேழையொன்றைத் தந்திட்டார்

கருத்துப்பேழையது! கறுப்புப் பணக்காரன்;

கழகத்தைக் கவிழ்ப்பதற்குக் கற்பனையில் தயாரித்த

காதறுந்த பேழையல்ல —

காஞ்சி அண்ணன்தந்த கற்பூரப் பேழையது!

பெரியாரின் வலக் கரமாய் - அறிவில்

வறியோரைக் கரையேற்றும் விசைப்படகாய்

சிறியோரின் பிழை பொறுக்கும் செங்கதிராய்

வெறியோரைப் பணியவைக்கும் வித்தகராய்

நெறியோடு முறையோடு, அரசியல் நடத்திச் சென்று

‘திருவோடு’ ஒழிவதற்குத் திட்டம் சொன்னார் - இங்கே

‘திரு’வோடு இருந்திட்ட சிலபேர் இன்று

தெருவோடு போகின்றார் நம்மைத் திட்டி

பருவோடு சண்டை போட்டால் நம் முகம்தான் கெடும்

பரவாயில்லை என்று புனுகு போட்டால் பரு உதிரும்.

ஈ.வெ.ரா. பெரியாருடன் கருத்துமாறி

இன்னொரு கழகம் காண்பேன் என்று

கண்ணீர் பெருக்கிப் பிரிந்த போதும்

இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இருப்போமென்று

எதிரிகட்கு இடித்துரைத்தார் எங்களண்ணன்! இன்றோ

உதிரிகளைச் சேர்த்துக் கொண்டு

உடைவாளால் தாய்வயிற்றைக் கிழிப்பதற்கு

இழிகுணத்தார் ஓடுகின்றார்; விரைவில் முடமாவார்!

இன்றைக்கு நடந்தது போல் இருக்குதய்யோ கழகக்

கன்றை விட்டுப் பசுபிரிந்த அந்தக் காட்சி

குன்றைத் துளைக்குமொரு வேல் எடுத்துக்

குறிபார்த்து நெஞ்சைக் கிழித்தது போல்

என்றைக்கும் நமைவிட்டுப் பிரியாத அண்ணன்

அன்றைக்கு மறைந்துவிட்டான்; அய்யகோ

ஆயிற்று எட்டொன்பதாண்டு!

‘கொன்றை வேந்தன்’ என அவ்வையின் பாட்டுண்டு — நம்

கொள்கை வேந்தனுக்கோ அழியாத பாட்டுண்டு!

பொங்கு கடல்நடையும் பூவையரின் மென்நடையும் தன்

புதுத் தமிழ் நடையில் காட்டியவன்

பொல்லாங்கு உரைப்போரை வாதத்தில் மாட்டியவன்

பொடியெடுத்துப் போடும் நேரம்

புன்னகையால் எதிரிகளைப்

பொடியாக்கி வாட்டியவன்.

புழுதிக் குணம் படைத்தோரை ஓட்டியவன்.

பொன் மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன்.

எழுதுகோல் வைத்திருந்தான் அண்ணன்

ஏமாந்த தமிழர்களின் தலையெழுத்தை மாற்றத்

தாளில் உழுத கோல்!

அது

பாக்குக்கும் வெற்றிலை சுண்ணாம்புக்கும் அவர் வாய் சிவக்கும்

தாக்குதற்கு தமிழர்களை இந்திமொழி வந்தால்

அவர் கண் சிவக்கும்.

‘அக்ராசனாதிபதி’யை அவைத்தலைவராய் உலவ விட்டார்

அந்தநாள் “பிரசங்கம்” சொற்பொழிவாய் மாறிற்றின்று!

‘நமஸ்காரம் கிமஸ்காரம்’ எல்லாம்

நலமான தமிழிலே நல்வணக்கமாய் மலர்ந்தது காண்!

தூய்மையாய்த் தமிழில்

கொடியேற்றுவிழா வந்த பின்னர்

துவஜா ரோகணத்துக்கு அங்கென்ன வேலை?

‘வாய்மையே வெல்லும்’ என்றதும்

‘சத்யமேவஜயதே’ கோபித்தா கொண்டது?

சங்கம் வளர்த்த தமிழில் அர்ச்சனை கூடாதென்று

சங்கராச்சாரியாரும் கூறுகின்றார்! இன்று

காஞ்சி பீடத்து போர் முறையைச் சந்திக்க

காஞ்சித் தலைவன் நமக்குக் கற்றுக்

கொடுக்காமல் போகவில்லை...

ஆண்டவர்க்கு ஆலயத்தில் அன்னைமொழியில்

அர்ச்சனை வேண்டாமெனில் அந்த

ஆண்டவரும் நமக்கு வேண்டாமென முரசறைவோம்!

அண்ணன் என்ற இளந்தென்றலுக்கு நாம் தம்பிகள்!

அதே நேரத்தில் பெரியார் என்ற

பெரும் புயலுக்கு நாம் பேரப்பிள்ளைகள்!

வடமொழித் திணிப்பாளர் நம்

வரலாற்றை மறக்க வேண்டாம்!

அடலேறுத் தமிழ் இனத்தின் கால் மிதித்தால்

நம் கால்கள் மொழிப் பகையின்

தலை மிதிக்கும் எச்சரிக்கை!

நாற்பதாண்டு கால மொழிப்போரின் சிப்பாய்கள் நாம்

நமக்கென்ன வந்த தென்று விதிவிலக்குப் பெற்ற வீரரல்ல!

நமது குலக்கொழுந்துகள் எல்லாம் துப்பாக்கி வேட்டுக்குப்

பலியாகி

நடுத்தெருவில் பிணங்களாகப் பூத்தபோதும்

தீக்குளித்து அணையா விளக்குகளாய் ஆனபோதும்

நாடு தழுவிய மொழிப் புரட்சிப் பூகம்பத்தில்

நல்லவேளை சிக்கிடாமல்

ஓடி ஒளிந்த மனிதர் சிலர் இன்று ஒழிக்கின்றேன் இந்தியை என்று

ஒப்புக்குப் பேசி வீரத்தை விலைக்கு வாங்குகின்றார்

அவசர காலச் சட்டத்தின்போது இந்திக்கே ஆதரவு என்று

அபசுரத்தில் பாடிய கட்சிக்காரர்கூட

ஆகாது இந்தியெனக் கூறுகின்றார்கள்...

பூனைகளே சிறுத்தையைப் போல் உறுமும்போது

சிறுத்தைகள் நாம் சினந்தெழுந்தால்

புவி நடுங்கப் போர் நடக்காதா?

சிறைச்சாலை, சித்ரவதை இவையெல்லாம்

கழகத்துக் காரனுக்குப் பழைய கதை!

ஆட்சிக்கு இந்தி மொழியாம்-

ஆண்டவன் பூஜைக்கு வடமொழியாம்

ஒரு தமிழன் மிச்சமாக உயிரோடிருக்கும் வரை

ஒப்பமாட்டான்! ஓதிய மிலார்

முருங்கைக்கொம்புகள்

தப்பமாட்டா இரும்புத் தூண்களை மோத வந்தால்!

பெரியாரும் அண்ணாவும்

இல்லாததாலே - நம்

பிரியம் போல் நாட்டை

நடத்தலாம் என்றெண்ணிவிடாதீர்!

அவர்கள் இருந்திருந்தால் எங்கள் உணர்வெனும்

நெருப்பாற்றுக்கு அணைகளாய் அமைந்திருப்பார்! மெழுகு

மரங்களே! நீங்கள் உருகி வழியாமல் தப்பியிருப்பீர்!

மூக்கணாங் கயிறில்லா காளையின் முன்னே

முண்டா தட்டுவதும் முட்டாள்கள் வேலை!

பொறுமைக்கும் எல்லையுண்டு

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல

அமைதியாய் இருக்கச் சொன்ன அண்ணன்கூட

மறையாமல் இருந்திருந்தால்

“பொங்கி எழுக தம்பீ” என்றே முழங்கிடுவார் வேறென்ன?

நாட்டாட்சியா நடக்கின்றது இப்போது —

காட்டாட்சி யன்றோ தொடர்கின்றது

எதிர்க்கட்சியை

எப்படி டைக்கலாம்

என்பதே சிந்தனை.

எந்த இடமானாலும்

நமைப் பற்றியே நிந்தனை,

கொடும் வழக்கு, கொலை வழக்கு என்று

கடும் வழக்குப் போடுவதால் கழகம் மிரளுமாம்!