உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 51 · 51 / 77

சிந்துபாடும் சிற்றாறுகள் சீறிப்பாய்ந்தாலே

சீரழிவைத் தடுக்க முடியவில்லையே

அவரோ

பெரியாறு!... அது சினந்து கிளம்பினால்

இதிகாச புராணங்களின் ஆணிவேரே

அறுந்து போகாதா!

தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர்

ஒளியைப்போல

செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோட

பொங்கியே எழுந்தார் பெரியார்

புதுமைக் காளைகள் கோடி

உறுதியாய்க் கூறுகின்றார்

குருதிதான் பணயமென்று

இந்நாட்டான் இங்குவாழ்வான்

எந்நாட்டையும் புறங்காணும் புகழுடையான்

தமிழ்நாட்டான் தலைகுனிந்தான், இதோ நிமிர்ந்தான்

கொழித்து விட்ட உமிகள் தான்

இனிக் குள்ளநரிக் கூட்டத்தார் -

பழித்துவிட்டான் பகுத்தறிவால்

பக்தி, மதம், புராணமெல்லாம்

பாழ்! பாழ்! பாழ்! என

உதித்துவிட்ட புதுக் கருத்து - புரட்சிக் கருத்து

மிதித்துவிட்டால் புழுக்கூட புலியாகுமென்றால்

புலியென்ன ஆகும்? புரியாதார் இன்னும் கூட

இருக்கின்றாரே!

அதை

ஆனால்

அழுக்குருவப் பன்றி முதல் - சொறிநாய் -

கழுதைக் கூட்டம் -அனைத்துக்கும்

உரிமையுண்டு உயர்ஜாதிக்காரர்

உலவுகின்ற தெருக்களில் ஓடி விளையாட

கடவுளரின் கால் மூலம் பிரசவித்த

கடைக் கோடிச் சூத்திரனும் பஞ்சமனும்

அந்தத் தெருப்பக்கம் நடந்தாலே தீட்டு என்று

அநியாய நீதி உண்டு - அதன்பேர்தான் மனுநீதி -

மறுப்பதற்கு ஆளில்லை; ஈரோட்டில் பெரியார்

பிறப்பதற்கு முன்னே! அதனால்தான்

பாம்பைக் கண்டால் பிறகு அடி என்று சொன்னார்

வேம்புக் கொள்கையின் மண்டைபிளந்தது

அந்த அடியாலே!

வள்ளிக்கும் பார்வதிக்கும் பாமா, ராதா

வகையறாவுக்கும்

வருடந்தோறும் திருமணத் திருவிழா

நடத்துகின்றீர் —

போன ஆண்டு நடந்த திருமணத்திற்கு

ஆனகதி என்ன அய்யா என்று

அய்யாதான் கேட்டார் - அறிவின் கேள்விக்கு

இன்று வரை யார் அளித்தார் விடை?

ஒருநாள் கைலாசத்தில்

குளிக்கச் சென்ற பார்வதி

அழுக்கைத் திரட்டி அதற்கு உயிரூட்டி

ஆண்கள் வராமல் பார்த்துக் கொள் என்று

ஆடையின்றிக் குளிக்கின்ற அறையின் பக்கம்

அவ்வுருவைக் காவலுக்கு வைத்திருந்தாள்....

அப்போது அவசரமாய் உள் நுழைந்த

ஆலகாலம் உண்ட சிவனை ஆண் என்று

அவ்வுருவம் தடுத்து நிறுத்தியதால்

சினம் கொண்ட சிவனாரும்

அழுக்குருவின் சிரத்தை அறுத்தெறிந்தார்

அது கண்ட பார்வதி கொதித் தெழுந்து

அவள் பெற்ற அழுக்குப் பிள்ளைக்கு உயிர் கொடுக்க

ஆணையிட்டாள் அவள் கணவன் சிவபெருமானிடம்!

ஆனையொன்று தெருவில் போயிற்று

அதன் தலையை வெட்டி அழுக்குருவில்

பொருத்திவைத்தார்

அதுதானே ஆனைமுகப் பிள்ளையார்

என்று கதையுண்டு

அறிவீர் அன்றோ?...

அத்தனை பெரிய பிள்ளையைச் செய்யுமளவுக்கு

அன்னைபார்வதி உடலில் அழுக்கிருந்தால் அவள்

எத்தனை நாள் குளிக்காமல் இருந்திருக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்கு வித்திட்டு

புராணத்தைக் கேலிப்பொருளாக்கியவர்

ஈரோட்டுக் கிழவர் அன்றோ?

களையெடுத்த சமுதாயக் கழனியில்தான்

பொதுவுடைமைப் பயிர் வளருமென்று கருத்துச்

களையெடுத்துத் தந்தவரும் பெரியார்தானே!

“ஆத்மா” உண்டென அளக்கின்றவனே! பின்னர்

அடுத்த ஜென்மக் கதை எங்கே வந்தது?

ஆர்த்தது கேள்வி முரசொலியாய்

அடங்கினார் ஆமையாய் சனாதனிகள்!

இருட்டில் அசையும் செடி கொடி கண்டு

இருளன் காட்டேரி, பிசாசுகள் என்று

குருட்டுமதியினர் கூவிச் செத்தனர்

பேயுமில்லை பிசாசுமில்லை; பித்தர்களே!

சுருட்டும் ஆட்கள் சொல்வதை நம்பாதீர் என்று

சுயமரியாதைச்சுடர் கொளுத்தியது யார்?

அவர்தான் பெரியார்!

பச்சைத் தமிழன் என்று காமராசரை அவர்

இச்சையுடன் அழைத்தது எதற்காக?

பிற்பட்டோர் வாழ வேண்டும் அதற்காக!

காலமெல்லாம் நீடிக்க வேண்டும்

கழக ஆட்சியென அவர்

விரும்பியதும் எதற்காக? அவர்

கண்ட கனவெல்லாம் படிப்படியாய்

நிறைவேறும் என்பதற்காக!

திருவரங்கப்பெருமாள்போல் படுத்திருந்த

தமிழ் உணர்வைத்

திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்து

தீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார் அன்றோ?

தெருவரங்கம், கலையரங்கம், இசையரங்கம்,

திரையரங்கம்

எல்லாமே “அம்மாமி அத்திம்பேர்” என்ற

“ஜலதரங்கம்”! அது மாற்றித்

தமிழரங்கம் தனியரங்கம் கண்டவர்க்குக்

கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ?

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு

வெண்

கருவண்டு - அதில்

சங்கொத்த கண்களிலே விழியிரண்டும்

சாகும் வரை ஒளியுண்டு!

பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றிய பின்! - இவரோ

படுகிழமாய்ப் போன பின்னும்

பம்பரமாய்ச் சுற்றி வந்தார்.

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்

எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்

நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் நிறைந்திட்டார்!

அறிவுமழை பொழியும் — எழில்

வழியும்! இருள் கழியும்!

தெளிவு மிகு உரைகள் பல

ஒளிரும்! திறன் மிளிரும்!

கடலின் மடை —

மலையின் முடி —

அலையின் ஒலி —

தழுவும் முகில் வழியும்

அறிவுமழை பொழியும்

ஆணவங்கள் அழியும்

அடிமை முறை ஒழியும்

அய்யாவின் பேச்சென்றால்

அதிரசம் தின்பது போல் கழகத்தவர்க்கு

அணுகுண்டு வெடித்தது போல் கயவர்கட்கு!

அவர்

இளம் வயதில் மறையவில்லை —