உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 50 · 50 / 77

ஈடு கொடுக்க என்னால்

முடியவில்லையே என்று;

முகம் நாணுகிறேன்!

எழுபத்தி ஒன்று இன்று -

எத்தனை இன்பதுன்பக்

கலவைச் சம்பவங்கள்

இந்த எளியோன் வாழ்வில்!

அறிவார், என் வழி;

பெரியார் அண்ணா வழி எனினும்

எத்தனை கோடியப்பா

ஏச்சும் பேச்சும்

எதிர்ப்பும் போரும், என்

நெஞ்சம் சுமந்து, சுமந்து,

நிமிர்ந்து நிற்கிறது

நிலைத்து நிற்கிறது!

உளி வீச்சு படுகின்ற

கல் எல்லாம்

உயிராடும் சிற்பமாவதில்லை;

சிற்பமாய் என்னைச்

செதுக்கியோர்க்கு நன்றி!

உலைக்களத்துக் கடும் நெருப்பில்

சம்மட்டி அடிபடுகின்ற

சகலமான இரும்புகளும்

வாட்களாய் ஈட்டிகளாய்

வடித்தெடுக்கப்படுவதில்லை!

வாளாக ஈட்டியாக என்னை

வார்த்தோர்க்குக் கை நிறைய

வாரி இறைக்கின்றேன் நன்றி மலர்!

காலணியாம் என்னை நீ

வாழ்த்துகின்றபோது,

களிக்கின்றேன்; ஆனால்

காலனியாய் மீண்டும் நாடாகக்

“காட்டு” ஒப்பந்தம் கண்டு

முகம் சுளிக்கின்றேன்.

இந்தி வெறியர்களின்

பூச்சாண்டி மிரட்டல்களால்

எரிமலை பூகம்பம்

எழுகிறதே நெஞ்சில்!

சமூக நீதியென்று

கண்துடைப்பு வித்தை மட்டும்

காட்டுகின்றார், மனம்

புண்பட்டுத் துடிக்கின்றேன்.

அங்கே அராபத் கண்ட

அரசியல் தீர்வொன்றால்

பாலஸ்தீனியர்க்குப்

பாதி சுதந்திரம்!

தென் ஆப்பிரிக்காவில்

வெள்ளை இருட்டில்

கறுப்பு விடியல்!

இங்கே ஈழம் மட்டும்

அணையாமல் இன்னும்

எரிந்து கொண்டிருக்கிறது!

இந்தியா இரண்டாகப் போய்

பின்னர் மூன்றாக ஆனது.

இருக்கும் மீதியில்

எத்தனை சாதிகள்

எத்தனை சண்டைகள்!

மதச்சார்பற்ற கொள்கை

மடிந்து போனால்

குலைந்து போகும் தேசம்.

மனித நேயத் தேடலில்

மனிதனையே தொலைத்துவிட்டு

மயங்கிடும் கட்சிகள்

மாறிடும் காட்சிகள்.

இத்தனைக்கு மிடையே

இந்தப் பிறந்த நாளில்

ஏற்றிடும் சூளூரை;

“நானிருக்க பயமேன்”

என நவில்கின்ற

உயிரினும் மேலான - என்

உடன்பிறப்புடன் இணைந்து,

நாடு காக்க, மொழிகாக்க,

நமதினமக்கள் உரிமைகாக்க

அயர்ந்திடும் நிலையே

அணுப் பொழுதுமின்றி

தொடர்ந்திடுவேன் தொண்டு!

நடந்திடுவேன்; நமது

அய்யா, அண்ணா வழியில்!

முப்பெரும் விழாக் கவியரங்கம்

தலைமைக் கவிதை

★

எங்களுக்கு உயிராக வாய்த்த தமிழே!

திங்களுக்கும் மாசுண்டு-

தீந்தமிழே நீ களங்கமிலாக் கதிர் ஒளிதான்!

பொங்கலுக்குச் சுவை கூட்ட வெல்லம் வேண்டும்-

பொதிகைமலைத் தமிழே உனைவளர்க்க

சங்கொலிக்கும் போர்க்களத்தில்

நல்ல உள்ளம் வேண்டும்-

வீரமாய்த் தழைக்கும் தமிழே!

வெற்றியாய் விளையும் தமிழே!

அங்கொலிக்கும் தோல்விப்பேச்சு இனி எதிரிக்கேயன்றி

நமக்கல்ல என நாடதிர நகைப்பாய் தமிழே!

பங்கு வைத்து தமிழர் வாழ்வைக் கூறுபோட

எங்குதித்த ஆட்கள் எலாம் வந்துவிட்டார்

கங்குகரை இல்லாமல் தமிழர்படை திரள வேண்டும்

கண்மூடி ஊமைகளை விழிக்க வைத்துப் பேசவைத்து

களம் நோக்கி நடை போடச் செய்யவேண்டும்...

அந்தக்

கனல் கிளம்ப எங்கள் சொல்லில் செயலில்

கலந்திருந்து உறவாடும் புறப்பாட்டே!

கலிங்கத்துப் போர்ப்பாட்டே! கடற்கோளுக்கும்

அழியாமல்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

முன் தோன்றி மூத்த குடியின் பழம்பாட்டே! இன்று

நான் பாடும் புதுப்பாட்டுக்குச் சுவை வழங்கும்

மா, பலா, வாழைத் தமிழே! நீ வாழ்க நன்று!

முப்பெருங் கடலும் கண்டோம்

முத்தமிழ் மொழியும் கண்டோம்

முப்பெரும் மன்னர் கண்டோம்

முக்கொடி பறக்கக் கண்டோம்

முச்சங்கப் பெருமை கண்டோம்

முக்கனிச் சுவையும் கண்டோம்

முப்பெரு விழாவைக் காண்போம்.

அண்ணா, பெரியார், கழகத்தை - நாம்

எண்ணாதிருக்கும் நாள் உண்டா?

கண்ணாம் கொள்கை காப்பதற்கு

இந்நாள் சூளுரை மேற்கொள்வோம்.

பொன்னோ பொருளோ எதற்காக?

போலிகள் அலைவார் அதற்காக!

ஈரோடு பேன் நிறைந்த தலையாக

இருந்த நிலை மாற்றி எழிலாக்க

ஈரோட்டு சீப்பொன்று இல்லாவிட்டால்

இன்று

இதற்குள்ளே தமிழ்நாடு மொட்டையாகப் போயிருக்கும்!

அவர் பிறந்த நாள்தான் தெரியும்

நட்சத்திரம் தெரியாது!

நட்சத்திரங்களைப் பற்றி அவர் கவலைப்பட்டதும்

கிடையாது!

ஆனால் லக்கினம் என்னவோ சிம்மம்தான்!

அந்தச் சிம்மத்தின் முன்னே

சிறுநரிகள் வாலாட்டம் செல்லுபடியானதில்லை.

பொங்கும் எரிமலை அவர் - அதன்

நெருப்புக்குழம்பு வைதீகபுரியை

நோக்கிப்பாய்ந்து பெருகிற்று!

அவர்ஒரு காட்டுத்தீ! அதில் சனாதன

மலைப்பாம்புகள் கருகிப் போயின!

கரைகளை உடைத்துப் படையெடுக்கும்

காட்டாற்று வெள்ளம் அவர் - அந்த

வெள்ளத்தில் பழம்பஞ்சாங்க மண் வீடுகள்

இருந்த இடம் தெரியவில்லை!

அவர் ஒரு போர்வாள்! அதன்

ஒரு வீச்சிலேயே புரோகிதம்

மூச்சற்றுப் போயிற்று!