கலைஞரின் கவிதைகள்
கவிதை 49 · 49 / 77
ஊரார் போற்றிய பழைய கதை
எரியில் துரும்பாய் ஆகியவர்
பெரியார் தந்த பேரறிஞர்
இரக்க மெனும் ஒரு பொருளிலா அரக்கனென
இராவணனைக் கம்பன் இழந்தது செல்லாதென
உருக்கமிகு ஓவியத்தை எழுத்தால் தீட்டிச்
சுருக்கென்று தைக்கின்ற கேள்விகளால்
தேவலோகப் பிறவிகளைத் தெருவுக்கு இழுத்து வந்தார்
மேனிப் பசிமுழுதும் தீர்ந்தபின்னர்
மேனகையைக் கைவிட்ட மாமுனியும்
தந்திரத்தால் அகலிகையைச் சுவை பார்த்த
இந்திரனாம் இணையற்ற பெருவேந்தும்,
கருணையின் வடிவங்கள் தாமோ?
கம்பரே! இராவணன்தான் கடு நெஞ்சக் காவலனோ?
அண்ணன் எழுப்பிய வினாக்களுக்கு - இந்த
மண்ணில் எவர்தான் விடையளிப்பார்?
அண்ணன் எழுதிய நூல் கொண்டு
சின்னக் கதை யொன்று நெய்கின்றேன்
“ஓர் இரவு சந்திரோதயத்தில்
நல்லதம்பி வீட்டு வேலைக்காரி
ஓடுகிறாள் சந்திர மோகனிடம்
காதல் ஜோதியிலே
சொர்க்க வாசல் கண்டு
கம்பரசம் பருகுகிறார் மொண்டு!
கண்டிருந்த பெற்றோரும் கடுங்கோபம் கொண்டு
நியாயத்தை நிலை நாட்ட நீதிமன்றம் சென்றார்.
வேலி போட்டுக் காதலைத்தான்
தடுத்திடவா வேண்டும்? இந்தத்
தாலிபோட்ட அத்தானை நான்
மறந்திடவா வேண்டும்?
தாய் மகளுக்குக் கட்டுவதா தாலி?
எனக்கேட்டு வாதிட்டாள் குமரிக் கோட்டம்-
என்னாகும் அவள் முன்னே பணத்தின் தோட்டம்?
நீதிதேவன் மயக்கத்தைப் போக்கி நின்று
நீவீர் வாழ்க நன்று என வாழ்த்திச் சென்றான்!
உண்டென்பார் சிலர் இல்லை யென்பார் சிலர்
எனக்கில்லை கடவுள் கவலை!
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - இதை
ஒப்புவதே உண்மை ஆத்திகமாம்!
ஒருவனை ஒருவன் ஏமாற்றாதிருப்பதே நாத்திகமாம்!
நன்றே சொல்வேன் நமக்குக் கடவுள்
நலிந்தோர் சிரிப்பில்தான்! இதனைக்
கொள்கையாய் நாட்டுக என்றார் - அறிவுக்
கொடியை ஏற்றுக என்றார்.
கழகம்தான் மெய்யான கம்யூனிஸ்ட்டென்று
பழகு தமிழ் உவமையெல்லாம் காட்டியது அண்ணனன்றோ?
வறுமையை ஒழித்திட அவர் காட்டியதே நல்வழியன்றோ?
உரிமைகள் பெருகிட உண்மைகள் நிலைத்திட
அவர் உரைத்ததுதான்
புது நெறியன்றோ?
நாடு தழைத்திட நற்றமிழ் வளர்ந்திட
அவர் நாவசைவே முரசன்றோ?
நாளும் அவர் நமையாளும் அரசன்றோ?
வாரத்து நாட்களிலே புதனைத்தான்
தேர்ந்தெடுப்பீர் வைத்தார் அண்ணா,
வாழ்ந்திட்ட நாட்களிலே எதனை நான்
தேர்ந்தெடுத்து நினைத்துப் பார்க்க?
தம்பிவா, தலைமை ஏற்க வா என்று
அழைத்தாரே நாவலரைத் திருச்சியிலே, அதனையா?
தீராத பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சிந்திக்கப்
பேராசிரியர் வீட்டுக்குச் செல்வாரே; அதனையா?
பிரிய மனமின்றிப் பிரிந்திருந்த
பதினெட்டு ஆண்டின் பின்னே
பெரியாரின் முகம் காணச் சென்றோமே அவரோடு
அதனையா?
கணைகள் பல தாக்கினாலும் உன்னை இந்த
கணையாழி காக்குமென்று கடற்கரையில்
அணிவித்தாரே; அதனையா?
எதனை நினைத்தாலும் எங்கண்ணா
உனதுருவம் ஏற்றமிகு திருவுருவம்
அதனை நினைத்தே யாம் ஆறுதலைக் கொள்கின்றோம்.
தம்பி படையான் படைக்கஞ்சான்
என முழங்கிவிட்டுத்
தனிமரம் தோப்பாகாது என சொல்வாய் இங்கோர்
தனிமரம் தானேதான் தோப்பென்று
போன கதை நீ அறிவாய்
சனிப்பெயர்ச்சி சிலருக்கு நல்லதென்பர் புராணிகள்!
இது மெய்யோ? பொய்யோ?
நம் கழகத்தில் சனிப்பெயர்ச்சி
நற்பலனைத் தந்ததண்ணா!
உன் வழியில் உழைக்கின்றோம் அதனாலே
ஒதிய மிலார் - முருங்கைக் கொப்பு
ஒடிபட்டுச் சிதறுதல் போல் - பகை
முறிபட்டுப் பஞ்சாய்ப் போகும்!
நீ தந்த விளக்கெடுத்து நடக்கின்றோம்
நெய்யிட்டுத் திரியிட்டு உதவுகின்றார் தமிழ் மக்கள்
கடுமழையில் அணையாமல் காற்றுக்கு நடுங்காமல்
கரம் பொத்திக் கைவிளக்கைக் காக்கின்றோம் -
வரம் ஒன்று தந்திடண்ணா! நான்
தவம் இருந்து கேட்கின்றேன்
அடித்தளத்து மக்களுக்கு
அடுக்கடுக்காய்ச் சாதனைகள்
அண்ணா! உன் வழியில் அயராமல் நடப்பதெல்லாம்
கண்ணால் ஒரு முறை நீ பார்த்து விட்டால்
எம் கவலையெல்லாம் பறந்துபோகும்!
தண்ணார் முழு நிலவே
தட்டாமல் நீ வந்துவிடு
இந்த வரம் நீ தந்தால்
இறவா வரம் பெற்றதுபோல்
இன்பத் தமிழகமே கூத்தாடும் - எங்கள்
துன்பமெல்லாம் தொலைந்துவிடும்
கலைஞரின் முடிவுரை:
முடிவுரை எதற்காக இன்று?
‘அண்ணா வாழ்க’ என்பதே நமக்கு
முத்துரையும்
முடிவுரையும்!
அதனாலே அனைவரும் சொல்வோம்,
அண்ணா வாழ்க!
அண்ணா வாழ்க!
அண்ணா வாழ்க!
வணக்கம்!
❀
நடந்திடுவேன் நமது அய்யா,
அண்ணா வழியில்!
உடன் பிறப்பே உனக்கோர்
உண்மை தெரியுமா?
என்னைச் சுமந்து பெற்ற
அன்னையின் மடியிலும்
காணாத சுகத்தை; என்னைத்
தூக்கி வளர்த்த தந்தையின்
தோளிலும் காணாத சுகத்தை;
சோதரிகள் இருவர்
சுவாசக் கருவிகளாய் இருந்து
இயக்கிடும் போதும்
காணாத சுகத்தை;
கைபிடித்து என்பால்
பாசம் பொழியும் துணைவியர்
அன்பிலும் காணாத சுகத்தை;
குழலையும் யாழையும் வெல்லும்
என்ற குறளையும் வெல்லும்
என் குழந்தைகள் மொழியில்
காணாத சுகத்தை; வாழ்க என
வாய் மலர்ந்து நீ முழங்கும் போதும்,
வருக என்று நான்
அழைக்கும் போதெல்லாம்
அதனை ஆணையெனச் செயல்படுத்தி
என் முன் நிற்கும்போதும்,
களம்புகுக என உதடசைக்கு முன்
கடமை முடித்து நீ நிமிரும் போதும்,
காணுகிறேன்! மகிழ்ச்சி
பூணுகிறேன். அகமுழுதும்!
நாணுகிறேன், உன் அன்புக்கு
