உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 48 · 48 / 77

தகுந்தவரைக் கொண்டதனைப் போக்கிடவே

தமிழன்புக் கவிஞரை நாம் அழைத்துள்ளோம்.

அவை அச்சமின்றிச் சொல்லாடும் அருந்தமிழா;

சுவை சொட்டும் மொழியாலே கவிதை பொழி!

(கவிஞர் தமிழன்பன் ‘அச்சம்’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

அஞ்சால் துஞ்சல் அறிவார் தொழில் எனினும்

வெஞ்சமர் முடுக்கிக் கொள்கையில் வென்றிட

அஞ்சுதல் தீதே! ஆண்மையும் இலதே;

அச்சம் வரின் ‘இழிவு’ வருமென்று ஆண்ட தமிழ்

இனத்துக்கு

அறிவுறுத்த வருகிறார் அப்துர் ரகுமான்

அவர் பாடுகின்ற சுவை ‘இழிவு’

ஆனால் அது தமிழ்ப் பொழிவு!

(கவிஞர் அப்துர் ரகுமான் ‘இழிவு’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

இழிவு வரின் இறப்பதுதான் தமிழர் மாண்பு

இது வந்தும் பலபேர் உயிரோடு இருப்பது பற்றி

வியக்கின்றார் குருவிக்கரம்பையார்

குத்தூசி குருசாமியைப் பெற்றெடுத்த சிற்றூர்

முத்தான சண்முகத்தை நமக்களித்துத்

தமிழகத்தை வியப்பினிலே ஆழ்த்துதம்மா!

(கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் ‘வியப்பு’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து

வீரம் பற்றிப் பாடுதற்குச் செயலில்

வீரம் காட்டும் கவிஞருண்டு - நெஞ்சில்

ஈரம் என்றும் எனக்குண்டு இந்தப்

பொன்னிப் பயிரை வளர்ப்பதற்கே!

வளவன் வாழ்ந்த மாதநில் - பொன்னி

வளவன் பாடும் கவி கேட்போம்.

(கவியரசு பொன்னிவளவன் ‘வீரம்’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

காலை முதல் இந்தக் கவியரங்குவரை

கண்ணல் நிகர் தமிழோசை கேட்டு

மகிழ்ந்தம் உண்டு மகிழ வேண்டாக் கிடக்கின்றேன்

மனமகிழ்ந்து ஓர்பொழுது நிம்மதியாய் கழிக்கின்றேன்

முடிமன்னர் முதுபுலவர் வளர்த்த தமிழ்த் தேனைப்

படியபடியாய்க் குடித்த பின்னர்

முடிவுரையும் கூறுதற்கு முடியுமோ என்னால்?

பூம்புகார் வந்தோரே!

புத்துணர்ச்சி பெற்றோரே!

சென்று வருக என வாழ்த்துதற்கு முன்...

சித்திரை முழுநிலா இன்று கண்டிடுக

முத்திரைப் பொன்னாம் குழந்தைகட்கு

முத்தம் ஈந்திடுக கடற்கரையில்

குழந்தைகட்கு மட்டும் தானா எனக் கேட்காதீர்.... அது

மடந்தைக்கும் காளைக்கும் இடையிலுள்ள விவகாரம்!

பூம்புகார் நிலா பார்த்திடுவீர் - தமிழ்ப்

புவியாண்ட சோழ மன்னன் கொற்றக்குடை அதுபோல

இருப்பதையும் எண்ணிடுவீர்! நம்

இலட்சியத்தை எய்திடவே சிலம்பு

இலக்கியத்தைச் சிந்தையிலே பதித்திடுவீர்!

அலையாயும் கடலோரும் நிற்கும்போது

அண்ணாவழி நடக்கின்ற அரசுக்கும் வாழ்த்துச் சொல்வீர்

வணக்கம்!

அண்ணா வழியில்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 15.9.1975

அன்று மாலை நடைபெற்ற அண்ணா கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதையுரை

★

தமிழே! தேனே! தங்கக் கனியே!

அமிழ்தே! அன்பே! அழகுக் கலையே!

எழிலே! அறிவே! எண்ணச் சுடரே!

பொழிலே! புகழே! பொன்னின் மணியே!

திருவே! உருவே! திங்கட் குளிரே!

தருவே! நிழலே! நிழல்தரு சுகமே!

தாயே உன்றன் தாளினைப் பற்றி

தலைமைக் கவிதை பாடிட வந்தேன்

அண்ணா வழியில் அயரா துழைக்கப்

பண்ணால் முழங்கிப் பயணம் தொடரக்

கண்போல் கழகம் காக்கும் சூளுரை

விண்போய் முட்டிட உரக்கக் கூவுக!

இன்றைக்கு நடந்தது போல் இருக்குதய்யோ கழகத்

கன்றை விட்டுப் பசு பிரிந்த அந்தக் காட்சி!

குன்றைத் துளைக்குமொரு வேலெடுத்துக்

குறிபார்த்து நெஞ்சைக் கிழித்ததுபோல்

என்றைக்கும் நமைவிட்டுப் பிரியாத அண்ணன்

அன்றைக்கு மறைந்துவிட்டான்; அய்யகோ!

ஆயிற்று ஏழெட்டாண்டு!

‘கொன்றைவேந்தன்’ என அவ்வையின் பாடுண்டு... நம்

கொள்கை வேந்தனுக்கோ அழியாத பாடுண்டு!

பொங்கு கடல் நடையும் பூவையரின் மென் நடையும் - தன்

புதுத்தமிழ் நடையில் காட்டியவன்

பொல்லாங்கு உரைப்போரை வார்த்தையில் மாட்டியவன்

பொடி எடுத்துப் போடும் நேரம்

புன்னகையால் எதிரிகளைப்

பொடியாக்கி வாட்டியவன்

பழுதிக் குணம் படைத்தோரை ஓட்டியவன்

பொன்மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன்

எழுதுகோல் வைத்திருந்தான் அண்ணன் - அது

ஏமாந்த தமிழர்களின் தலையெழுத்தை மாற்றத்

தாளில் உழுதுகோல் - நம்

நாளில் அழுதவரைச் சிரிக்கவைக்க

அவன் தந்த ஆட்சிக்கோல்.

குதிரைகள் பறக்கும் மேடைப் பேச்சரங்கில்

கொய்யாத் தமிழ் எடுத்துக் கொடுத்திட்டார்,

கதிரார், ராய்க்கின்றார் தமிழ்மொழியை என்றபோது

அவர்,

மொழிப் போரின் மூலபலம்! களம் கண்டு

விழிப்போரை கண்டுகொண்டு - தன்னைப்

பழித்தோரைப் பாராட்டும் பண்பாளர்,

அழித்தாராம் ஆதிக்க மொழி வெறியை!

பல்தாரம் பட்சணம் - பாணிக் கிரகணம் -

வதுவர கிரகப் பிரவேசம் பந்துமித்திர் -

நமஸ்காரம் - உபய குசலோபரி

நாமாவளி துவஜாரோகணம் என

நாக்குக்கு நுழையாத வடமொழிப் படையெடுப்பால்

வாக்குக்குச் சுவை சேர்க்கும் வண்ணத் தமிழ் வாடுவதோ?

பாக்குக்கும் வெற்றிலை சுண்ணாம்புக்கும் அவர் வாய்

சிவக்கும்

தாக்குதற்குத் தமிழைப் பிறமொழி பெருகி வந்தால்

அவர் கண் சிவக்கும்

அக்கிராசனாதிபதியை அவைத் தலைவராய் உலவவிட்டார்

அந்த நாள் பிரசங்கம், சொற்பொழிவாய் மாறிற்றின்று!

நமஸ்காரம் கிமஸ்காரம், எல்லாம்

நலமான தமிழிலே நல் வணக்கமாய் மலர்ந்தது காண்!

தூய்மையாய்த் தமிழில் கொடியேற்று விழா

வந்த பின்னர்

துவஜாரோகணத்துக்கு அங்கென்ன வேலை?

வாய்மையே வெல்லுமென்றால்

‘சத்யமேவ ஜெயதே’ கேட்டுத்தா கொள்கும்?

அண்ணனை ஒரு சீமான் என்பேன்

அவர் நண்பர்களையே செல்வமாய்ப் பெற்றிருந்தார்!

அண்ணனை ஒரு துறவி என்பேன்;

அவர் வாழ்வெல்லாம் காவி தரித்திருந்தார்!

அண்ணனை ஒரு தெய்வம் என்பேன்;

அவருக்கு துரோகிகளும் தூபதீபம் காட்டுகின்றார்!

அண்ணனை ஒரு கண்ணன் என்பேன்;

அவரைப் பூதகியும் தூக்கிப் பால் கொடுக்கின்றாள்!

அரியாசனமாய் அவர் நம் இதயத்தை ஆக்கிக் கொண்டார்

அரியா சனங்கள் அவரை ஆரம்பத்தில்

புரியாமல் எதிர்த்ததுண்டு

சரியானச் சமதர்மம் போதிக்க வந்த

தென்னாட்டு மார்க்ஸ் என்று

பின்னால்தான் தெளிவடைந்தார்

நரியும் பரியாய்ப் போன கதை

நாரதர் பெண்ணாய் ஆன கதை

உரியைக் கண்ணன் உடைத்த கதை