உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 47 · 47 / 77

முத்துச் சர

சோழனூர் வருவீரே!

சுவை விளக்கம் தருவீரே!

என அழைத்தோம்; எண்மர் இதோ வந்துள்ளார்!

எட்டெடுத்துச் “சிலப்பதிகாரம்” இயற்றியவர் - சுவை

எட்டெடுத்துச் சேர்க்காமல் விடுவாரோ?

“எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும்

பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேற்

போக்கிய பூம்புகார்ப் பொற்றொடி மாதவி தன்னோடு

அணைவுறு வைகலின் அயர்ந்து மயங்கி

விடுதலரிய விருப்பின னாகிய கோவலன்”.

கெடுதலரியாக் கண்ணகியுடன் பகிர்ந்த இன்பம் கணக்கிலதே!

தும்மை பலாக் கண்ணகியும் கோவலனும்

“தாமப் பணிக்கிளொன்றித் தோய்ந்தாளென வொருவார்

தாமர் மனைவியெனக் கை கலந்து - நாமந்

தொலையாத இன்பமெல்லாம் துன்னினார்.... மண்மேல்

நிலையாமை கண்டவர் போல் நின்று”

உவகையில் மட்டுமல்ல;

அழுகையிலும், ஆள் தாள் பற்றித்

தொழுகையிலும் மாதவி, கண்ணகி பாத்திரங்கள்

போட்டி போடும்

“காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்முடன் கூடி

அருந்தமிழாற்றல் அறிந்திலராகிச்

செப்பிய மொழிகளைச் சேரன் கேட்டுக்

கொட்டுக முரசெனக் கூறிய சொல்லும்

கொடியவர் முடித்தலை எறிய கல்லும்

வீரச்சுவை விளக்குகிற காட்சி - தமிழன்

வெற்றிக் கொடி பறக்கவிட்ட மாட்சி!

தித்திக்கும் தேன்பாகைத் தெவிட்டாத தெள்ளமுதக்

கோவலனை

எத்திக்கும் புகழ் பாண்டியனே திருடன்னெனக் கொன்றுவிட,

தீச்சுழலாய்ப் பெருகிவந்த கண்ணகியோ

தீர்ப்பளித்த மன்னவனைத் தலைகுனிய வைப்பதற்குச்

சிலம்பெடுத்து உடைத்தபோது - தன்

எலும்பெடுத்து உடைத்ததுபோல்

வியப்புற்றான் மதுரை வேந்தன்

உடன் வீழ்ந்திறந்தான்

“நீதி வழுவா நெறிமுறைப் பாண்டியன் நான் - அந்த

நெடுஞ்செழிய மன்னவனா நீதி தவறிவிட்டேன்?

என்ற கேள்வியில்தான் எத்துணை வியப்பு?

எத்துணைப் பதைப்பு?

வியப்புறுதல், நகைத்தல், அழுதல், வெகுளல்,

வீரம், இழிவு, அச்சம், உவகை என்னும்

எட்டுவகைச் சுவையினிலே எதிலும்

ஒட்டுறவு இல்லாத பிறவிகளும் உலகிலுண்டு!

இடி முழக்கம் கேட்டது போல் அரங்கில்

வெடிச் சிரிப்பு நகைச் சுவையைக் கலைவாணர்

படித்தவர்க்கும் பாமரர்க்கும் வழங்கும்போது

இடித்து வைத்த புளிபோல் சிலர்பேர்

இளித்திடவும் விருப்பாமல் இருப்பதுண்டு!

அடுக்கடுக்காய்ச் சிறைவாசம்

அடக்குமுறை வனவாசம் என்றே

அருமைமிகு கொள்கைக்குத் தியாகம் ஏற்ற

பெருமைமிகு தலைவர்களும் மறைந்து விட்டால்

அழுகை நிறை அகத்தினராய்

ஆயிரம் பதினாயிரம் நூறாயிரமென மக்கள் கூட்டம்

இடுகாட்டுப் பொட்டலிலே ஏங்கி நிற்கும்

இறந்தவர்க்கு இறுதி வணக்கம் செய்வதற்கு; அப்போது

கோமாளிக் கூத்தாடும் ஓர் மனிதன் அங்குவந்தால்

ஏமாளிக் கூட்டமொன்று கூச்சல் போடும்!

கைதட்டு - ஆரவாரம் - களிப்புக்கூத்து - நம்

காதுகளும் கண்களும் தாமாக மூடிக்கொள்ளும்!

அழுகைக்கும் உவகைக்கும் இடம் பொருள் தெரியாதோர்;

கழுதைக்கும் கீழானோர் எனச் சொல்வேன்!

நூற்றிரண்டு மெய்ப்பாடாம் சுவை பிரித்துப் - பழி

நூற்புலவர் தொல்காப்பியர் கருத்து நெய்தார்.

அவற்றில் தலையான எண்சுவையும் கிளையான பல்சுவையும்

கவிநயத்தில் காட்டுதற்கு இங்கே கவிஞருண்டு

அவிநயத்தில் காட்டுதற்கும் அணங்கு உண்டு.

ஆனாலும் சில பெண்கள் ஆட்டம் கண்டால் - நம்

வாணாளில் பெரும்பாவம் செய்தோர் ஆவோம்!

தீப்போலத் தகிக்கின்ற காமத்துக்கும்

தேன்போலக் கொட்டுகின்ற கோபத்துக்கும்

சினங்கொண்ட நாகமெனச் சீறுகின்ற “பாவ”த்துக்கும்

செம்மாதுளைக் கன்னங்கள் குவிக்கின்ற நாணத்துக்கும்

சிறிதளவு வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் இருப்பதில்லை.

அரிதாரப் பூச்சு முகக் கலையிலோர் அசைவுமில்லை.

அங்கங்களின் சேட்டையன்றித் தங்க மகள் சிலை முகத்தில்

அணுவளவு மாற்றமேனும் அவிநயத்தால் கண்டதுண்டோ?

‘திமி திமி’ என ஆடுகின்றார் - அவை அதிர

‘மிதி மிதி’ எனச் சேறு மிதிக்கின்றார்

அவரெல்லாம் தொடர்ந்து ஆடிவந்தால் - குட்டிச்

சுவராகும் நடனமேடை! கொலையாகும்

- கலை என்பேன்

இறுதியிலே ‘உவகை’ வைத்து எட்டுவகை மெய்ப்பாட்டை

அறுதிமிட்டு மாலை செய்தார் காப்பியனார் - இன்றோ

உவகையுடன் தொடங்கிடுவோம் கவியரங்கம்

உறுதிமிகு வீரத்தைக் கடையில் கேட்போம்

கடைச் சரக்கா வீரமெனக்

கண்மணியே கேட்காதே - சில

கட்சித் தலைவர்க்கு விலை கேட்கும்.

பொருளாய்த் தான் போயிற்று வீரம்!

போர் என்றால் நான் முந்தி நீ முந்தி

எனும் கூட்டம் நம் கூட்டம் - அக்கப்

போர் பேர்வழிகள் கூட்டமல்ல! வைக்கம்

போர் வீரர் வழி வந்தவர் நாம்! வைக்கோல்

போர் இந்தத் தீயுடனே விளையாடலாமா?

எதற்காக நல்லரங்கில் பிறர் நினைவு!

உவகையிலே தொடங்கி நம் கவியரங்கு

உலகு புகழ் வீரமுடன் முடியட்டும்.

கடையில் வீரம் கேட்கலாம் என நாளிங்கு

கழறியதின் விளக்கம் புரிகிறதா நன்கு?

இடையழகு மணிமேகலையில் காட்டிச், சிலம்பில்

நடையழகு காட்டுகின்ற தமிழணங்கே! இதோ, கவிஞர்

படை வரிசை கிளம்பிற்றம்மா உனக்குப்

பா வரிசை வைப்பதற்கு! நடக்கட்டும்

கை வரிசை! நானழைக்கின்றேன் கவிஞர்களை!

கவிஞர்களை அறிமுகம் செய்து தலைவர்:

முதலில்,

வைரமுத்துக் கவிஞர் சிலம்புப்

பரலில் உவகை பற்றிப் பாடுவோர்

(கவிஞர் வைரமுத்து ‘உவகை’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

உவகையைத் தொடர்ந்து அழுகை வரல் காண்பீர்!

உருவிலே பெருந்தேவன் வயதிலே இளந்தேவன்

சிலம்பிலே ‘அழுகை’ எனும் அழுகைச்

செந்தமிழில் அள்ளி அள்ளித் தருவார்.

(கவிஞர் இளந்தேவன் ‘அழுகை’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

அழுகை கண்டு நகைப்பவரும் உண்டு

அந்தக் கல்நெஞ்சக் கவி கண்ணப்பன்

நகையோடு வருகிறார்... கோவலன்போல் வரவில்லை

சிலம்பென்னும் நகையோடும் மதுரைக்கு வரவில்லை.

சிலம்பினிலே செழிக்கின்ற

நகை காட்டப் பூம்புகார்க் கவியரங்கிற்கு வருகிறார்:

(கவிஞர் கண்ணப்பன் ‘நகை’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து

வீணாக நகைப்பவர் மேல் வெகுளியால்

பாய்ந்திடுவோர் உண்டு

சீராகக் கால்தூக்கி ஆடுகின்ற நடராசன் தில்லையிலே

இங்கு,

நேராகக் கவிதூக்கி வருகின்றார் தி.கு.நடராசன்

தமிழ்க் கொல்லையிலே...

வெகுளி பற்றி வெகுளாமல் பாடுமய்யா!

(கவிஞர் தி.கு. நடராசன் ‘வெகுளி’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

வெகுண்டவரைக் கண்டாலே அச்சம் வரும்