உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 46 · 46 / 77

ஈரோட்டு முழக்கத்தால் மாய்ந்ததன்றோ!

அதைத் தொடர்ந்து நம் அண்ணா

இன உணர்வுத் திருநாளாய்ப் பொங்கல் கண்டார்

ஏர் உழவர் பெருநாளாய்ப் பொங்கல் கண்டார்!

❀

சிலப்பதிகார விருந்து

பூம்புகார் கொற்றப்பந்தரில் 25.4.1975 அன்று

மாலை நடைபெற்ற “சிலப்பதிகார விருந்து”

என்னும் தலைப்புள்ள கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதையுரை

★

வணக்கம்

வண்ணத் தமிழ் வடிவம் எங்கள் நாவலர்க்கும்

எண்ணக் கருவூலம் இனிய பேராசிரியர்க்கும்

கண்ணொத்த மன்னை, சாதிக் அமைச்சருக்கும்

அண்ணன் வழிவந்த அனைவர்க்கும் வணக்கம்.

சிலம்பொலிக்கும் சிவஞானச் செல்வர்க்கும்

செந்தமிழ்ப் பழஞானக் கணேச நல்லார்க்கும்

சிரம் தாழ்ந்த வணக்கம்.

சீரழிந்த பூம்புகாரைச்

செம்மையுறச் செய்யும் பணி

ஆர்வமுடன் நடப்பதற்கு

அழைப்பேற்று வந்துள்ள

அன்புள்ளம் அத்தனைக்கும் அடியேனின் வணக்கம்.

சிலப்பதிகார விருந்தொன்றைத் தருவதற்குச்

சீலமிகு தமிழெடுத்து வந்துள்ள

கவிநெஞ்சங்கட்கு - என்

கனிவான வணக்கம்.

அருந்தமிழே! அமுதே!

நறுமலர் மணமே! தேனே

அன்னையாய் வந்தென்னை ஆட்கொண்டவளே!

அண்ணனாய் வந்தென்னை ஆளாக்கியவளே!

காஞ்சி அண்ணன் கால்மலர் தொழுது

கவியரங்கம் தொடங்குகின்றேன்

வாழ்த்திடம்மா

தமிழர்கள் வாழ

தமிழ் நிலம் வாழ!

குடகுமலை உச்சியிலே கோலங்காட்டி

அழகுமகள் காவிரியும் ஆடவந்தாள்

ஆடவந்த ஆரணங்கை அடைவதற்கு

ஓடிவந்த கர்நாடகத்தான் “அணை” என்றான் - அவன்

கையணையைத் தாண்டிக் கல்லணைக்குள் நுழைந்து- தன்

கற்புநெறி காப்பதற்குத் தஞ்சைக்குத் தாவி வந்தாள்

பூம்பாவை காவிரியின் புகார் கேட்டுச் சோழ மன்னன்

பூம்புகாரின் கடல் அலையைக் கணவனாய் ஆக்கிக் காத்தான்

பிறந்த வீட்டை மறந்திடாமல் - என்றும்

புகுந்த வீட்டு வளம் பெருக வாழ்வதுதான்

பெண்மணிக்குப் பெருமையென்றால் - நம்

கண்மணியாம் காவிரிக்கும் அது பொருத்தம்தானே?

இவ்வாறு

காவிரி புகுந்த பட்டினம் தான்

காவிரி புகும் பட்டினமாய்த் திரிந்து நின்று

காவிரிப் பூம்பட்டினமாய் மாறிற்றென்பேன்.

கரிகாலன் பெருவளத்தான் திருமாவளவன்

கனிவுமிகு நடபுக்கு அவன் உறையும் வாளும்

கயமைமிகு பகைமைக்கோ உறை விட்டெழுந்த வாளாம்

உறையூரைத் தலைநகராய்க் கொண்டு - பின்னும்

ஒரு ஊரை மணந்து கொண்டான் தலைநகராய் - அந்த

இரு தார மணத்தானுக்கு வாய்த்த இளையவளே

இனியவளாய் இங்குநமை வரவேற்கும் பூம்புகாராம்.

“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்” என

பட்டினப்பாலை முழங்குகின்ற துறைமுகப்

பட்டினமாய் விளங்கிற்றந்நாள்!

மருவூர்ப்பாக்கமுண்டு ஆங்கு மறங்கெழுவீரருண்டு

மருவு பெண்ணாசையால் மயங்குகிற

மாநகர நம்பியர்கள் நடமாடும் பகுதியுண்டு

நாளங்காடி உண்டு - அங்கு பிற

நாட்டார்கள் நாள்தோறும் வருதல் உண்டு

அரச வீதி ஆடும் கொடித் தேர் வீதி

வணிகர் வீதி வாய்மை நிறை வேளாளர் வாழும் வீதி

மருத்துவர், சோதிடர், மாகதர், கூத்தர்

மண்டிக்கிடக்கும் யானை குதிரை சூழும் வீதி

சித்திரப் பாக்கமெனச் செப்பும் சீர்மலி

பட்டினப் பாக்கமாய்த் திகழ்ந்ததந்நாள்

வடநாட்டுப் படையெடுப்பில் சோழன் பெற்ற

புகழ்நாட்டும் பட்டிமன்றம், முத்துப்பந்தர்,

தோரணவாயில், தொல்புவியில் தமிழன் வெற்றி

நிலைநாட்டும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம்

கலைநாட்டம் கொண்டோரைக் கவர்ந்திழுக்கும் பாவை மன்றம்,

முருகன் கோட்டம், அதனருகே திருமால் கோட்டம்,

அருகன் கோட்டம், அதனருகே புத்தர் கோட்டம்,

முத்தமிழ் ஒலிக்கும் கோட்டம் நாள்தோறும்

சித்திரைத் திருநாள் கூட்டம்

இதையெல்லாம் சித்தரிக்கும்

இளங்கோவின் குணவாயிற் கோட்டம்

எல்லாமே அழிந்ததம்மா கடலாலும் காலத்தாலும்

என்றாலும்

சேரன் தந்த சிலம்புச் செல்வம்

அழியாத கருவூலம் அணையாத திருவிளக்கு

அந்த,

விளக்கொளியில் விழிப்புற்று

மறக்கவொண்ணா மொழிப்பற்றால்

விளைந்தது தான் புதிய புகார் - வெறும்

வீணர்கள் தினம் எழுப்புகின்ற புகாரல்ல!

வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் மூச்சால்

பொங்கிப் படைத்த புதிய புகார் - பூம்புகார்.

மனை விளக்குக் கண்ணகிக்கும் மாதரசு மாதவிக்கும்

புனைவைர மார்பன் கரிகாற் சோழனுக்கும்

பாவரசு இளங்கோவின் பண்பார்த்த சிலம்புக்கும்

எழிலார்ந்த புத்துருவம் கொடுக்கச் செய்ய

எனைப் பெற்ற தமிழகமும் என் தாய் தந்தை

இருவர்க்கும் எவ்வாறு நன்றி சொல்வேன்?

நமக்குச்

சிறப்பதிகாரம் பலவற்றை உரிமையாக்கத் - தன்னாட்சி கோரி

இறப்புவரினும் அதனை உவந்தேற்போம் என்றும் - பதவி

துறப்புவரினும் பொறுத்தடுத்தோம் என்றும் - இந்தச்

சிலப்பதிகாரமன்றோ உணர்வூட்டல் கண்டோம்!

வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்தார் நம் வரலாற்றை அழித்தார்

இன்று

கொஞ்சுகின்ற சிலம்பன்றோ நம் சரித்திரத்தைக்

கொஞ்சமேனும் காட்டுகின்ற கோபுரத்துத் தீபம்.

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுளென

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியதை

அடிகள் நீரே அருளுக என்றிட

எழுந்த காப்பியம் எழுச்சிக் காப்பியம் - அந்த

இலக்கியத்தில் விருந்தொன்றை அளிப்பதற்கு

இணையற்ற கவிஞர் எண்மர் இங்குள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப”

இலக்கணக் கிழவர் இயம்பிய வழியில்

எட்டுச் சுவையை இங்கே படைப்பார்

நகை அழுகை இழிவு வியப்பு

அச்சம் வீரம் வெகுளி உவகை எனப்

பகை நோக்கமின்றிப் பாடுகின்ற போட்டி.

அழுகையினால் நகை கேட்டு அடையக் கூடும்

அச்சத்தால் அடங்குகிற அத்தானை மணந்துவிட்டால்...!

இழிவு வந்தும் வெகுளாதார் நிலை கண்டு

வீரர்க்கு நெஞ்சில் வியப்புத் தோன்றும்!

உவகையும் அழுகையும் ஒரு தாய் மக்கள்

ஒருவரை ஒருவர் நிழல்போல் தொடர்வர்!

இந்த

எட்டுச்சுவை

பிட்டுத் தமிழ்

கட்டித் தயிர்

வட்டில் நிறை

கொட்டித் தர

பட்டுக் கொடி

கொற்றக் குடை