கலைஞரின் கவிதைகள்
கவிதை 43 · 43 / 77
அங்கத்தில் பழுதென்றால் அறுத்தெறிய ஒப்புகிறோம்,
உயிர்பிழைக்கப்
பங்கமுறு சாதிமத பேதங்களால் அல்லலுறும் - மனித
சங்கத்தின் நோய் களையத் திகைக்கின்றோம்
அந்தச்
சரிதானா? எனக்கேட்டார்
சிங்கத்தின் குரல்கேட்டுச் சிறுநரிகள் ஊளையிட்ட
கதைதானே நடந்ததிங்கே!
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு
செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும்வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் - இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;
ஏரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார். இன்றைக்கோ
இறப்பின் மடியினிலே வீழந்திட்டார்.
மதுவிலக்கு தேவை என்று மகாத்மா காந்தி சொன்னவுடன்
மதுக்கலயம் கட்டாமல் இருப்பதற்குத் தோட்டத்தில்
மண்டி நின்ற தென்னைகளை வெட்டிச் சாய்த்தார்-
வைக்கத்து வீரர் என்று யாரைச் சொன்னோம்?
“வை கத்தி! தீண்டாமை கழுத்தில்” என்று
வரிப்புலியாய்க் களம் சென்று வாகைசூடி
வையத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம்வீரர்
காங்கிரசுக் கட்சிக்கு மீகாமனாய்க்
கதர் இயக்க வெற்றிக்குத் தளபதியாய்க்
காந்தி வழி நின்றிட்ட கர்மவீரன்
கட்சிக்குள் போராடக் காலம் வந்து
காஞ்சிபுரம் மாநாட்டில் வெளிநடந்தார்
வ.வே.சு. அய்யர் என்பார் வடிகட்டிய தேசபக்தர்
வகுப்புவாத உணர்வாலே வம்புக்கு அழைப்புத் தந்தார்.
சேரன்மாதேவி ஊரில் சிறந்ததொரு குருகுலத்தில்
ஒரு குலத்துக்கொரு நீதி கடைப்பிடித்தால்
சகிக்குமா பெரியார் மனம்? சமருக்கு வில்வளைத்தார்.
சரித்திரம் படைக்கலுற்றார். அதன் விளைவாய்த்
தன்மான இயக்கத்தின் தந்தையாகத்
தமிழர் இனப்பாதுகாப்புத் தலைவராகப்
பெரியார் ஆனார் - புது
நெறியார் ஆனார்!
பிற்பட்டோர் நலனுக்கென்று நீதிக்கட்சி
பெரும்பணிகள் இயற்றிடவே முனைந்தபோதும் - அது
பித்தாபுரம் பனகல் என்று பிரபுக்கள் காலடியில்
வற்றாத செல்வந்தர் கைத்தடியில் இருந்ததாலே
அதை மாற்றி
மாளிகையில் இருந்தகட்சி மக்களிடை வருவதற்கு
மாமேதை அண்ணாவின் துணையுடனே வெற்றி கண்டார்
மந்தி கை மாலையென
இந்தி கைத் தமிழர், ஆக
வஞ்சகச் சூழ்ச்சிகள் வலையாக விரிந்தபோது
அஞ்சிடா நெஞ்சுகொண்டு அறுத்தவர் பெரியார்தானே?
அவர்,
பாதம் படாத பட்டி தொட்டி உண்டோ- அவர் பேர் கேட்டுக்
காதம் ஓடுகின்ற ஆத்திகரும் (அவர்) பேசக்கேட்டால், தமிழ்க்
கீதம் கேட்ட கிறுகிறுப்பில் மயங்கிப்போவார்,
அறிவு மழை பொழியும் எழில்
வழியும் - இருள் கழியும்
தெளிவுமிகு உரைகள் பல
ஒளிரும் திறன் மிளிரும்
கடலின் மடை அலையின் ஒலி - மலையின் முடி-
தழுவும் முகில் வழியும்!
அறிவு மழை பொழியும்!
ஆணவங்கள் அழியும்!
அடிமை முறை ஒழியும்!
அய்யாவின் பேச்சென்றால்
அதிரசம் தின்பதுபோல் கழகத்தவர்க்கு,
அணுகுண்டு வெடித்தது போல்
கயவர்கட்கு!
அவர் தலைமை ஏற்று நானும் அவருடனே
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில்
ஆரூரில் மாணவனாய் இருந்தபோதே இணைந்துவிட்டேன்
அதன் பிறகு புதுவையில் நான் தாக்குண்டபோது
அய்யாவின் கையாலே மருந்திட்டார், என்காயத்திற்கு!
குடியரசு அலுவலகக் குருகுலத்தில்
கொள்கை வழிப்பாடங்கள் பயின்றகாலை - நான்
தமிழரசுத் தலைவனாக வருவேன் என்றும், எனைவளர்த்த
தந்தைக்கு அரசுமரியாதையுடன்
இறுதி வணக்கம் செய்வேன் என்றும்
எண்ணியும் பார்த்ததில்லை;
“பாராட்டிப் போற்றிவந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!
ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிபீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் - அவர்
வெண்தாடி அசைந்தால் போதும்.
கண்ஜாடை தெரிந்தால் போதும்-
கறுப்புடை தரித்தோர் உண்டு - கொடுமையை
நறுக்கியே திரும்பும் வாட்கள்”
ஈரோட்டு குருகுலத்தில் நான் இயற்றியது இப்பாடல்!
இன்றைக்கும் நினைக்கின்றேன் - பெரியார்
இளவயதில் மறையவில்லை
நிறைவயது வாழ்ந்துவிட்டே ஓய்வு கொண்டார் எனினும்,
தாஜ்மகால் திடுமெனத் தரைக்குள்ளே போய்விட்டால்
அதைக் கட்டி; ஆண்டு பல ஆயிற்றே என்று
ஆறுதல்தான் பெறுவோமா?
தஞ்சைக் கோபுரம் சாய்ந்து விட்டால் அதற்கு
வயது அதிகமென்று சொல்லித்
தாங்குதல்தான் எளிதாமோ? இவரோ,
தஞ்சைக் கோபுரம்போல் உயர்ந்தவர்-
தாஜ்மகால்போல் சரிதம் படைத்தவர்-
அவர் வாழ்வார் வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்,
வாழ்கின்ற பெரியார் பற்றிப் பாடுதற்கு வண்டமிழ்க்
கவிஞர்களை
வரிசையாக அழைக்கின்றேன்!
அகத்துறைப் படைப்புகள்
13.7.74 அன்று சென்னை மாநகர மருத்துவக்
கல்லூரிகளின் மாணவர்கள் நடத்திய
முத்தமிழ் விழாவில் ‘அகத்துறைப் படைப்புகள்’ என்ற
தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்,
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதையுரை.
★
வணக்கம்.
வளர்பிறைத் தமிழ் வளர்க்க வந்தவர்க்கும்
தளர்விலாத் தன்மான வேங்கைகட்கும்
கவியரசு கண்ணதாசருக்கும் வணக்கம்.
(நாடு இதனை) நாடிதனை அறிந்து மாத்திரையால் மக்கள்
கேடுகளைந்து காப்பவர்க்கும் வணக்கம்.
அகத்து உறையும் ஆயிரம் பிரச்சினைகள் இடையே
அகத்துறைப் படைப்பு எனும் கவியரங்கத் தலைமை தாங்க-
நகத்துறையும் அழுக்கு கூட உடல் நலத்தைக் கெடுக்குமென்று
பகுத்துரைக்கும் பயிற்சி பெற்ற
மருத்துவத்துறை மாணவர்கள்
வருத்துகின்றார்; ஒப்புக்கொண்டே...
மாணவர்கள் தமிழுக்கு விழா எடுத்தல்
மாபெரிய அதிசயமாய்ப் போன நாளில்
மருந்தாளும் வித்தை கற்போர்
விருந்தொன்றைப் படைக்கின்றார் தமிழுக்கென்றால்.
சிரந் தாழ்த்தி வணங்க வேண்டும்
கரங் கூப்பித் தொழுதல் வேண்டும்.
வேலைநிறுத்தமென்ற விழலுக்கு நீர் பாய்ச்சிப்
பாலை நிகர்த்த கல்வி பருகாமல் பாழ்படுதல்
சேலை நிகர்த்த விழிப் பெண்கள் -
சேலை இழுத்தல் ஒரு தொழிலாய்ச் சீரழிதல்
ஒருந்தில் சென்று பேருந்து கொளுத்தல்
இவை விடுத்துச்
