உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 44 · 44 / 77

சீருந்தும் தமிழ் வளர்க்கச்

சேர்ந்தவரே! வாழ்க, வாழ்க!

நானும் ஒரு நாள் மாணவனாய் இருந்ததுண்டு -

என் பெற்றோர்

நாணும் ஒரு நிலை வராமல்

நான் என்றும் நடந்ததுண்டு!

படித்திடும் போழ்தோ

துடித்திடும் காதல்...

எனக்குத்

தமிழ்மீது!

கடித்திடும் கரும்பென

இனித்திடும் தமிழ்ப்பணி-

அன்றொரு நாள் ஆரூரில் நான் கண்ட

அரிதான தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்

அரிமா நடை பாரதிதாசனின்

அருவி நிகர் தமிழ் வாழ்த்தைப் பெற்றது காண்!

அன்றந்த விழா சிறக்க - அன்பாலே

அவர் அளித்த வாழ்த்து இதோ-

“தண்பொழிலில் குயில்பாடும் திருவா ரூரில்

தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங் காண்

வண்மையொடும் உண்மையொடும் வாழ்ந்தி டுங்காண்

மக்களிடை எழுச்சிக்கு மருந்தா குங்காண்

புண் வாய்ந்தோர் அல்லர்காண் திருவா ரூரின்

புலி இளைஞர்கள் தோள்கள் பூரித் தார்காண்

கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்

கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை

வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார்

வால் நீட்டினால் உதைதான் கிடைத்திடும் காண்!”

இந்தப்

புரட்சிக் கவிஞரது போர் முழக்கம்

புறம் அகம் நூல்கள் தரும்கவி முழக்கம்

புதுமைத் தமிழின் பெரு முழக்கம்!

பொங்கிடும் இளமையின் தனி முழக்கம்!

அந்நாளை எண்ணுகின்றேன் - இன்பத்தை

நினைவாலே உண்ணுகின்றேன்

இந்நாளும் அதுபோல வாராதோ?

கண்ணான மாணவர்கள் கண்விழித்துப் பாராரோ?

பொன்னான தமிழ்காக்க ஓரணியில் சேராரோ?

எண எண்ணி வலிக்கின்ற நெஞ்சுக்கு

ஏற்ற மருந்தாக இந்த விழா அமைந்தென்பேன்!

அகத்துறைப் படைப்பென்றும்

புறத்துறைப் படைப்பென்றும்

வகுத்திட்டார் இலக்கியத்தைப் பழந்தமிழர்

இகம்பரம் என்பது தமிழுமல்ல;

தமிழர்க்குரிய்துமல்ல!

அகம் புறம் என்பதே தமிழாம்

தமிழர்க்கக்கே உரியதாய்த்

திணை பிரித்து எழுதிய தமிழன் திறனுக்கு

இணை கொடுத்து நிற்க இலக்கியமேது?

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப”

ஒல்காப்புகழ் வாய்ந்திட்ட

தொல்காப்பியம் சாற்றும் இதனை!

“அகம் பெரிதா? புறம் பெரிதா?” என

அன்றொரு நாள் அன்பழகருடன் வாதிட்டேன்

அறிஞர் அண்ணா இடைமறித்து விளக்கம் தந்தார்!

“பகிர்ந்து கொள்ளக்கூடியது புறம் தம்பி-

பகிர்ந்து கொள்ள முடியாதது அகம் தம்பி!”

அந்த

அண்ணாவின் விளக்கம் தான்

அகத்துறைக்கே விளக்காகும்-

பண்பாடுடைய அகத்திணையின் பெருமைதனைப்

பாண்டவரும் பாஞ்சாலியும் உணராததால்

பகிர்ந்து கொண்டனர் அகத்துறையை ஐவருக்கும்!

அது அவர்தம் மரபின் குற்றம்:

பண்பாடு அதுவெனப் பாராட்டி மகிழ்தல்-

பகுத்தறிவு அற்றோர் குற்றம்!

அகத்திணை புறத்திணை இரண்டே ஆயினும்

தினைத்துணையும் அகலாது திகழ்தல் காண்பீர்-

வேல்பாய்ந்த புண்ணோடு வீரன் வருவான் - காதலி

வேல் பாய்ச்சும் விழியாலே மருந்து தருவாள்!

குளத்துக்குள் மீன்போலக் கூடிக்கிடந்தாலும் - போர்க்

களத்துக்கு அழைப்பென்றால் கரை ஏறிடுவார்

கண்ணுக்குள் கண்வைத்துக் கலவிக்கலை துய்த்தாலும்

மண்ணுக்குத் தீமையெனில் மறவர் குலம் எழுந்து விடும்

அக்குலத்தின் மாண்பதனைச் சித்தரித்துப்

பொற்புடைய கவிமாரி பொழிவதற்குச்

சொற்குலத்தின் சொந்தக்காரரெலாம் வந்துள்ளார்-

நற்குலத்தைப் பழிப்பவர்க்கும்

நாக்குத் தழும்பேறியோர்க்கும்

தாய்க்குலத்தின் அறைகூவல்

தமிழ்க்குலத்தின் போர்ப்பரணி

கேட்கட்டும்! கேளாச் செவிப்பறையைக்

கிழிக்கட்டும்!

அகத்துறையில்,

தலைவன் என்றும் தலைவி என்றும்

செவிலி என்றும் தோழன் என்றும்

தாய் என்றும் ஊர் என்றும்

நிலவு என்றும் தென்றல் என்றும்

தோழி என்றும் துணை நின்று

தோகை விரித்தாடுந் தமிழில்

பாகை வெல்லும் கவி தந்து

வாகைசூடக் கவிஞர் உள்ளார் -

தலைவன் எனத்தலையற்றோர் சிலர்

சொல்லிக் கொள்ளும் இற்றை நாளில்

நிலையான அகத்திணையின் தலைவர் பற்றிப்

பாடக் கேட்போம் -

தலைவி என்பாள் தலைவிதியை

எண்ணிக் கொண்டு கிடப்பவளோ?

இல்லை! இல்லை!

தலைவிதியை மாற்றுதற்குத்

தோழியினை தூதாக்கிச்

செவிலியையும் தோதாக்கித்

தென்றல் சுமந்து வரும்

காதலனை

நின்று சுடும் நிலவினிலே வரவேற்கக்

காத்திருப்பாள்-

தோழன் என்றும் துரோகியானதில்லை அகப்பாட்டில்!

புறப்பாட்டில் துரோகி உண்டு - அவனது ஆரம்பப்

புறப்பாட்டிலேயே அது வெளிச்சமாகும்!

ஊரார் பழிப்புக்குக் காதல் ஒளிந்து மறைவதில்லை-

ஆனால் இன்று

ஊரார் எதிரிலேயே, கடற்கரையில்-

காருக்குள் - கலையரங்கில்-

காதல் சேட்டை என்ன நியாயம்?

ஊரார் எல்லாம் ஊனமுற்ற விழி படைத்தோர்

எனும் நினைப்போ?

அன்றிக்

காதலர்கள் கண்மூடிக் கொள்வதாலே

காசினியே கண்மூடிக் கொண்டதாகத்

துணிதல் நன்றோ?

காதலுக்கும் வழி வைத்துக்

கடமைக்கும் இடம் வைத்துக்

கண்ணியத்தை நிலை நிறுத்திக்

கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதான்

அகத்துறைப் படைப்பாகும் - குடும்பக்

கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதான் - இன்றைய

அகத்துறைப் படைப்பாகும்!

அகத்துறையில் படைப்பென்று நினைத்து

ஆறு, ஏழு, எட்டென்று படைத்து விட்டால்-

பின் அந்தப்

படைப்பினால் மிகுவது

பதைப்பே யாகும்!

அறிந்து சொன்னேன்... நன்றாய்ப்

புரிந்து சொன்னேன் - அனுபவத்தில்

தெரிந்து சொன்னேன்-

உணர்வீர் நன்கு!

❀

பொங்கல் விழா

சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் 14.1.75

அன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற

பொங்கல்விழாக் கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்