உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 42 · 42 / 77

தஞ்சை ஆண்ட சோழனும்-

வஞ்சி ஆண்ட சேரனும்-

கூடல் ஆண்ட பாண்டியனும்

கோலமிகு கலைகளால்

சீலமுற வாழ்ந்தனர்

சிந்தையிலே நின்றனர்...

கலை வாழ்க - தமிழ்

மலை வாழ்க!

கவி வாழ்க - இந்தப்

புவி வாழ்க!

எனக் கூறி அழைக்கின்றேன்

அணி வரிசைக் கவிஞர்களை!

முதலில்,

அரசு மணிமேகலை

வெறும் மணிமேகலை என விளித்தால்

துறவி மணிமேகலை எனத் தோன்றுமென்று

அரசு மணிமேகலை என்றார்; இவர் தந்தை அரசு

எனக்கு மிக நெருக்கமாய் இருந்த நண்பர்-

தரிசு நிலமாய் இருக்கின்ற உளம் திருத்த அன்புப்

பரிசு வழங்க வருகின்ற மணியே வருக:

(கவிஞர் அரசு மணிமேகலை ‘அன்பால்’ என்ற

தலைப்பில் பாடி முடிக்கிறார்)

அடுத்து.

அறம்பாட வருகின்றார் அன்பர் பொன்னடியார் - அவர்

திறம் பாட நேரமில்லை!

அவர் பாட நாம் மகிழ்வோம்:

(கவிஞர் பொன்னடியான் ‘அறநெறியால்’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்)

அடுத்து,

யான் பெற்ற இன்பம் வையம் பெறுக என்று

தான் பெற்ற கல்விதனைக் காட்டுதற்கு

வான் பெற்ற புகழோடு வருகின்றார் உசேன் புலவர்:

(கவிஞர் உசேன் ‘கல்வியால்’ என்ற தலைப்பில்

பாடி முடிக்கிறார்)

அடுத்து.

கழனியிலே உழைத்தால்தான்

கதிர் விளையும் எனக் கூறிப்

பழனியப்பக் கவிராயர் பாடுகின்றார்:

(கவிஞர் சாமிபழனியப்பன் ‘உழவால்’ என்ற

தலைப்பில் பாடி முடிக்கிறார்)

அடுத்து.

எழிலாய்க் கவிதை ஆக்கும் தோழர்

‘தொழிலால்’ என்று தொடங்கிடுவார்-

கல்லை ஆ துரைப் புலவ!

சொல் அய்யா ஓர் பாடல்:

(கவிஞர் கல்லை ஆ. துரை ‘தொழிலால்’ என்ற

தலைப்பில் பாடி முடிக்கிறார்)

இன்று பாடிய கவிஞர் துரைக்கு

நன்று திருமணம் நாளைக் காலையில்

சென்று வாழ்த்திட நேரமில்லை. அதனால்

இன்றே வாழ்த்துவோம் அனைவரும் சேர்ந்தே!

அடுத்து;

கலைப் பெருக்கால் கவிாட்ட

அலைப் பெருக்காய்த் தமிழ்பாட

அழைக்கின்றேன் கபிலவாண:

(கவிஞர் கபிலவாணன் ‘கலைப்பெருக்கால்’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்)

முடிவுரை:

சொல்வதைச் செய்வோம்

செய்வதைச் சொல்வோம்

பொய்ம்மை தடுப்போம்

வாய்மை வளர்ப்போம்

ஏழைகள் சிரிப்பே

இன்பம் என்போம்

எல்லோர்க்கும் எல்லாம்

கிடைத்திட உழைப்போம்

வையம் தழைக்க

வறுமை தொலைப்போம்!

இதனை

வருடம் ஒருமுறை பாடுதல் இன்றி

வளையாப் பணியாய் வாழ்வினில் கொள்வோம்

வணக்கம்.

தந்தை பெரியார்

சேலம் நேரு கலையரங்கில் தமிழ்ச் சங்கத்தின்

சார்பில் 11.1.74 அன்று நடைபெற்ற

“தந்தை பெரியார்” கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதை முன்னுரை.

★

மாண்புமிகு அமைச்சர்களே, மாவட்டத் தோழர்களே

வணக்கம்.

வளமார் தமிழகத்துக் கவிஞர்க்கும்

வாஞ்சைமிகு சேலத்துப் பெரியோர்க்கும்

உளமார்ந்த என் வணக்கம்

ஏற்றிடுவீர்.

ஓய்வில்லை எனக்கென்று தெரிந்திருந்தும்

உரிமையுடன் கவியரங்கு நிகழ்த்த வரவேண்டுமென்று

உத்திரவை வேண்டுகோளாய் விடுத்துவந்தார்

உழுவலன்பர், உழைக்கின்ற மெய் அன்பர்,

நம்மைப்

படகுபோல் கவிழ்த்திடுவோம் என்கின்றார்; இந்தப்

படகேறிப் பதவியிலே தொற்றிக் கொண்டோர் -

தூளாக ஆக்கிடுவோம் என்கின்ற துரோகிகளும்

என்

முதுகில்பாயும்

வாளாக மாறிடுவோம் என்கின்ற பாவிகளும்

சூழ்ந்தெதிர்க்கும் சூழ்ச்சியினை முறியடிக்க, நான் சிந்தனையில்

ஆழ்ந்திருக்கும் போதன்றோ ஆணையிட்டார் கவி எழுத

நேற்று, காலை முதல் நள்ளிரவு முடியும்வரை

ஏற்றமிகு நிகழ்ச்சிகள் எட்டுக்குமேல் கோவையிலே! கற்பனை

ஊற்றுக்கண் திறக்குமா அதற்கு மேலே? இருந்தாலும்

காற்றுக்கு அசைகின்ற கொடிபோல - நண்பர்களின்

கட்டளைக்கு அசைகின்றேன்

கவிபாட!

கவி எழுதும் ஆற்றல் எனக்குண்டென்ற காரணத்தால்

கவியரங்கத் தலைமைக்குத் தூண்டுகோலாய்த் துணைநின்ற

கணபதியை நினைக்கின்றேன், கவியரங்கம் தொடர்கின்றேன்.

ஆர். வி. கணபதியை நினைக்கின்றேன்

அழகு தமிழ்க் கவியரங்கம் தொடர்கின்றேன்.

பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்த

சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம் - ராம்

சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம், பெரியார்

ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்.

கவியரங்கம் பாடவந்த, காணவந்த பெருமக்காள்!

திருவரங்கப் பெருமாள் போல் படுத்திருந்த தமிழ் உணர்வைத்

திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்து

தீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார் அன்றோ?

தெருவரங்கம், கலையரங்கம், இசையரங்கம், திரையரங்கம்,

எல்லாமே ‘அம்மாமி அத்திம்பேர்?’

ஜலதரங்கம்! அதுமாற்றித்

தமிழ் அரங்கம், தனி அரங்கம் கண்டவர்க்குக்

கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ? அதனால்தான்

“பயிர் போன்றார் உழவருக்குப் பால்போன்றார்

குழந்தைகட்குப் பசும்பால் கட்டித்

தயிர் போன்றார் பசித்தவர்க்குத் தாய் போன்றார்

ஏழையர்க்குத் தகுந்தவர்க்குச்

செயிர் தீர்ந்த தவம்போன்றார் செந்தமிழ்

நாட்டில் பிறந்த மக்கட்கெல்லாம்

உயிர் போன்றார்” என்று

பாரதிதாசப் பாவேந்தன் பாடிச்சென்றான் அவரை!

வீடு கட்டி அதற்குள்ளே வைக்கோலைத் திணிப்பதுவோ?

வீடுகட்டாமலே வைக்கோற்போர் போடலாமே

எனச்சொன்ன ஈ.வே.ரா. நாத்திகரா?

இல்லை இல்லை!

அவர்,

இயற்கையின் புதல்வர் - இந்த மண்ணை மணந்த மணாளர் -

எதிர்காலத் தமிழகத்துப் பெருமைக்குத் தூதர்” என்று

அக்ரகாரத்து அதிசய மாமனிதர் வ.ரா. முன்பு

அழகாக வரைந்தார் ஒரு கட்டுரைதான்!

தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர் ஒளியைப் போல

செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோடப்

பொங்கியே எழுந்தார் பெரியார், புதுமைக்காளைகள் கோடி

உறுதியாய்க் கூறி நின்றார் குருதிதான் பணயமென்று!