உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 41 · 41 / 77

மெல்லியலாள் ஒல்லியாவாள்.....

வருடம் பிறக்கட்டும்... வையகத்தீர்

வருடம் ஒன்று பிறத்தல் வேண்டாம்!

பங்குனியை விரட்டி விட்டுச் சித்திரையாள் பந்தாடுகின்றாள்

இங்கவளின் ஆட்டமெலாம் எண்ணி ஒரு மாதம்தான்

எங்கிருந்தோ ஒருத்தி வருவாள் வை, காசியென்று

ஆ, நீயா என்று வியப்பதற்குள் ஆடி முடித்திடுவாள்-!

திங்கள் தொறும் இந்தச் சதிராட்டம் தொடர்ந்து

செங்கமல இதழ்கள் போல் ஆண்டு உதிரும் பின் மலரும்!

புத்தாண்டு இதுவென்போம் புகழ் தொடுப்போம்

பத்தாண்டு காலத்திற்கு முன் நான் சிறைப் பறவை

பல்கவிதை, நூல்கள் எலாம் எழுதுதற்கு அங்கே நிறைய நேரம்;

இன்றோ நான் கொட்டில் மாடுபோல் கிடக்கின்றேன்;

நன்றோ எனை இழுத்துக் கொம்பு சீவி இங்கெல்லாம்

நிறுத்துவது?

வானொலியாரைத்தான் கேட்கின்றேன்? ஏனய்யா

வாய் திறக்க மறுக்கின்றீர்?

கட்டாமல் விட்டாலும் இது கண்ணியம் தவறி

முட்டாத மாடென்ற துணிவுதானே உமக்கெல்லாம்?

பரவாயில்லை-

தட்டாமல் வந்திடுவேன் தமிழ்த்தீனி கண்டால் என நம்பித்

தலைமை ஏற்க ஆணையிட்டீர்! நானோர் தும்பி

தேன் வெள்ளம் கரை புரளும்

திருமலியும் தமிழ்ப்பூக்கள் மணம் பரப்பும்

ஊன் உள்ளம் எல்லாமே உருகும் வண்ணம்

உலகத் தமிழ் மறையின் ஒலி முழங்கும்

“ஏன் பள்ளம்” வாழ்வினிலே எனக் கேட்டு

ஏழைகளைச் சிரிக்க வைக்க வழி பிறக்கும்

மான் துள்ளும் சீர்மை கண்டு

மனமொடியும் வேங்கை வீழ

பேன் திரியும் தலையோ காடு? வறுமைப்

பேய் விலக எழுந்ததே தமிழர் நாடு!

எனச் சங்கம் ஊதுதற்கு

இங்குற்ற இளங்கவிகள் பாடல் கேட்போம்.

அன்பால்...

அன்பால் வையம் தழைப்பதற்கே வழிகூறி

என்பும் உரியர் பிறர்க்கென்றார் வள்ளுவனார்

உன்பால் கொண்ட காதல் அன்பால் - உன்

அன்பால்...

என்பால் நீ தந்திடுக உன்னை என்று

பூப் பால் அருந்துகின்ற வண்டினம் சூழ் ஓா புதர்பால்

காமத் தகிப்பால் - ஓர் ஆண்பால் ஓர் பெண்பால்

பேசிடக் காணுகின்றோம்

அன்புதான் அதற்கு அடிப்படை எனினும்

அதனையும் மிஞ்சும் அருமைத் தாயன்பு!

கட்டில் பூ ஒருத்தி தன் கட்டுக்குள் இருந்தவனை

எட்டிக் காயாக்கிப் போட்டதுடன் - எனக்கோர்

காணிக்கை வேண்டுமென்றாள், என்னவென்றான்.

சட்டியின்றி வேகவைத்த பணியாரம் போன்றாள்

அட்டியின்றித் தருவாயோ பரிசு என நழுவினாள்

கட்டிக் கரும்பே கேள் கண்மூடித் திறப்பதற்குள்

தருகின்றேன் எனத் தழுவினான்.

வெட்டி வந்து உன் தாயின் இதயத்தை என் கையில்

வைத்திடுக என்றாள்? அவனும் சென்றான்.

பெட்டிக்குள் மணிபோல் வைத்து மகனைக் காப்பாற்றும்

ரொட்டி போல் கொத்தியே கொண்டோடி வந்தான்;

எட்டி வைத்த அடி சறுக்கிக் கீழே வீழ்ந்தான்.

“பட்ட அடி பலமோ மகனே? அய்யோ!” என்று

வெட்டுண்ட தாயாரின் இதயம்

வெட்ட வெளியில் கிடந்து அலறியதாய்க் கதை உண்டு.

அஃதன்றோ தாயன்பு?

தாயன்பு தனி அன்பு -தங்கக் கனி அன்பு

நாயன்பு கூடக் காட்டாத நல்லோர் சிலர்

இருக்கின்றார் உலகில்! அவர் வாழட்டும் நன்கு.

புண்ணில் சீழ் ஒழுகும் தொழு நோயர்க்குப்

புண்ணிய திருத்தலம் கட்டுகின்றோம்

கண்ணில் ஒளி மங்கிய ஏழையர்க்குக்

காசின்றிப் பார்வை வழங்குகின்றோம்.

மண்ணில் நிகரிலாக் கோயில்கள் அவைதான்

பொன்னிலோ செம்பிலோ ஆண்டவன் இல்லை

அவன்

புகலிடம் அன்பிலே இதனை அறிந்திடுவீர்.

அறநெறியால்....

அன்புதான் அடிக்கல் நாட்டல்;

அறநெறி மாளிகை அமைப்பதற்கே!

அண்ணல் காந்தியும் அவர் வழி நேருவும்

அண்ணா வாழ்ந்ததும் அறநெறி காக்கவே!

எண்ணத் தொலையா பேதங்கள் அகற்றிச் சமத்துவ

வண்ணக் கலாபம் ஆடிடச் செய்வோம்

உழுபவர்க்கு நிலத்தில் சொந்தம்

உழைப்பவர்க்குத் தொழிலில் சொந்தம் - இந்த

உரிமைக் குரலைச் செயல்படுத்துகின்றோம்

உண்மை அறநெறி வகுத்திடுகின்றோம்.

உதட்டில் அறநெறி - உளத்தால் சிறுநரி

உலவுதல் காண்பீர் - ஒதுங்குதல் நன்றாம்.

கல்வியால்....

நாலைந்து ஆண்டின் முன்னே நாற்பத்து மூன்று கோடி

கல்விக்குச் செலவென்றால்

நலமுடனே கல்வி தழைப்பதற்கு இவ்வாண்டு

நூற்றெட்டுக் கோடி தருகின்றோம்.

தொடக்கத்தில் புத்தகத்தில் உலகத்தைப் படித்துவிட்டால்

தொடர்ந்து நாம் உலகத்தைப் புத்தகமாய்ப் படிக்க ஏலும்

தொல்லை பல தாங்கிக் கொண்டு பெற்றோரும் அரசினரும்

தொகை தொகையாய்க் கல்விக்கு வழங்குவதை

எண்ணிப் பார்த்து (மாணவர்)

எல்லைமீறிப் போகாமல் கிளர்ச்சிகளைத் தவிர்த்தல் சேவை

எதிர்கால ஒளிவிளக்காய்த் திகழ்தல் தேவை.

உழவால்...

அழமாட்டாக் குறையாக அன்றொரு நாள்

அரிசிக்கு வரிசை நின்ற

நிலைமாற்றிப் போட்டவர்கள் உழவரன்றோ?

அன்று நம் கிடங்கு நிலையோ அந்தோ பரிதாபம்!

அதற்கெதிராய் இன்று ஐம்பத்தைந்து லட்சம் டன்

அரிசி மட்டும் உற்பத்தி!

ஆதவர்க்கு முன் எழுந்து உழைக்கின்ற

உழவர் குலத்தவர்க்கு ஏதும் நேரா வண்ணம்

காக்கின்ற அரசு இது.

தொழிலால்...

எழிலுடைய தமிழகத்தின் பகுதியெங்கும்

தொழிலுடைய மக்களையே காணல் வேண்டும்.

மழையின்றி மின் வெட்டுத் தொல்லை - அது நம்

பிழையன்று! நூல்

இழையன்றி நெசவாளர் துயரம் - விரைவில்

வழிகண்டு இடர் தவிர்க்க முனைவோம்

தொழிலாளர் நலம் பேணும் அரசாக மிளிர்வோம்.

கலைப்பெருக்கால்...

“தமிழன் என்றோர் இனம் உண்டு - தனியே

அவற்கோர் குணமுண்டு”

நாமக்கல்லார் நவின்றது மறவோம்.

நம் கலை, சிற்பம், காவியம் துறவோம்

கலை தோய்ந்த நெஞ்சில்தான் - மக்கள்

நிலை தோன்றும் - கருணை தோன்றும்

இலை என்று சொன்னவுடன் - எதுவும்

இலை என்று சொன்னவுடன் - ஏழையின்

கண் காட்டும் ஏமாற்றச் சோகத்தைக்

கலை காட்டும் உள்ளம்தான் புரிந்துகொள்ளும்!

நிலையாட்சி இருப்பதற்கு - நெஞ்சில்

கலையாட்சி இருத்தல் வேண்டும்.

‘கலை ஆட்சி’ என்று கூவினாலும் - இந்தக்

கலையாட்சி என்றும் கலையாத ஆட்சியாகக்

காலமெல்லாம் நினைவில் நிற்பதற்கே

கடற்கரையில் சிலையாட்சி காணுகின்றீர்!

கல்லறையில் அண்ணா உறங்குவதும்

கண்கலங்கப் பல்லாயிரவர் வணங்குவதும்

கலை உள்ளம் கண்ட படைப்பன்றோ?

காவிரி புகும் பட்டினத்தில்

கண்ணகி கதை கூறும் சிலைகளாலே

கலைக்கூடம் கண்டதும் கலை நெஞ்சே!

கடும் வேலை தலை நெறிக்கும் போதும் இந்தக்

கவியரங்கத் தலைமைக்குத் துரத்தியதும் கலை வெறியே!

காஞ்சி ஆண்ட மன்னவனும்

கலை பயின்ற பல்லவனும் -