உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 40 · 40 / 77

தட்டுவழி இல்லாமல் தர்பார்தான் நடத்திடுவர்

அதனாலே...

எட்டும் வழி சிலவற்றை இங்குநாம் கண்டிடுவோம்!

கபிலர்வழி கவிஞர்வழி மட்டுமல்ல

கண்போன்ற நட்புக்குச் சிறந்தவழி

கருணைவழி

சிவிகையொடு செங்கோலும் தேரும் படையுமே

செருக்களத்தில் தோற்ற பாரி செத்து வீழ

செம்மாங்கனியிரண்டாம் அவன் மகளிர் மணமுடிக்க

அம்மா (க்) கவி கபிலன் பட்டபாடு...

இறுதியிலே,

காரிமன்னன் செல்வர்க்குப்

பாரிமகளிர் துணையேயானார்

கபிலரது முயற்சியினால்!

நாடாண்ட தன் தோழன் - தமிழ்

நாயகனாம் பாரிக்குத்தான் செய்யும்

தனிக்கடமை முற்றிற்றென்று

ஏடாண்ட பெருங்கவிஞன் கபில மேலோன்

“என்றன் பாரியுடன் இனிச் சேரத் தடையில்லை”

எனக்கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான்!

சாகின்றான் நண்பன் எனில் அவன் தலையில்

அவசரமாய்க் கல் ஒன்றைப் போடுகின்ற

ஆருயிர்த் தோழருண்டு இந்நாளில்

அவரெல்லாம் வழிமாற்றி நடப்பதற்குக்

கபிலர்வழி... கற்கின்ற வழியன்றோ!

ஒளவை வழி-

கோல்ஊன்றி நடக்கின்ற ஒளவைப்பாட்டி - செங்

கோல்முறை சாயாமல் இருப்பதற்கு வழிகள் சொன்னாள்

இளம்பெருவழுதி வழி - தமிழ்

இனம்பெறு நல்வழியாம்

வள்ளுவர் வழி நடந்தால் - நெஞ்சில்

உள்ளுவரோ பகைவர் நெருங்க!

இல்லறத்தைத் துறந்தவழி இளங்கோ வழி

தமிழர்க்கு

நல்லறத்தைத் தந்தவழி அவர்தந்த சிலம்புவழி!

அப்பரது வாழ்க்கைவழி அன்புவழி...!

அதுபோன்றதே அடிகள் வள்ளலார்வழி

முத்தனைய கொள்கைகளை வகுத்தவழி

அறிஞர் அண்ணாவழி!... அருமை அண்ணாவழி!

இவ்வழிகள் பற்றிப்பாட வருகின்றார்

புலவரெல்லாம்...

வழிவிடுவோம் - சுவை

மொழிபெறுவோம்:

(கவிஞர் சுப்பிரமணியம் ‘கபிலர்வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

அறம் செய விரும்புகின்றார்

அடிகளார் எனக் கேள்வியுற்று

ஏற்பது இகழ்ச்சியெனும் பழமொழி

மறந்துவிட்டு-

அப்துர் ரகுமான்

(ஒளவை) வழிகாண வந்துள்ளார்

ஆத்திச்சூடிதான் நான் சொன்னேன்!

அன்பு ரகுமானே!

ஆறுவது சினம்!

ஊக்கமது கைவிடாமல்

உரைத்திடுக உமதுபாடல்:

(கவிஞர் அப்துர் ரகுமான் ‘ஒளவை வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

இளஞ்சேரன் என்பார்

என்போலத் தலை வழுக்கை...

இருக்கட்டுமே!

இளநீரும் வழுக்கை தானே! என்

இனஞ்சேரும் இளஞ்சேர

இனிய வழி கண்டிடுக:

(கவிஞர் கோவை இளஞ்சேரன் ‘வழுதி வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

சத்து மிகு தமிழ் எடுத்து - பழக்

கொத்து நிகர் கவி புனையும்

முத்து சம்பந்தம்

அடுத்து.

முழக்குகின்றார்-

அவர் பாட்டை

வள்ளுவர் பாட்டை:

(கவிஞர் முத்துசம்பந்தம் ‘வள்ளுவர் வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

சிலம்பு விற்க வருகின்றார்

பாண்டியன்

இஃதென்ன

சிலப்பதிகாரத்தை மாற்றுகின்றாய்

என்கின்றீரா?

இல்லை, இல்லை!

சண்முக பாண்டியனார்

இளங்கோ வழி காட்டுகின்றார்.

இதைத்தான் சொன்னேன்.

(கவிஞர் சண்முகபாண்டியன் ‘இளங்கோ வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

அடி வேண்டும் வழி நடக்க

அப்பரடி வேண்டும் வழி நடக்க என்று

வடிவேலன் சிங்காரமாய் வருகின்றார்-

சிங்கார வடிவேலன் வருகின்றார்.

(கவிஞர் சிங்காரவடிவேலன் ‘அப்பர் வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

மரியதாசு

உரியதாம் மனிதர்க்கு வள்ளலார் வழியெனவே

மரியதாசர் உரைப்பதும் சரிதானே!

(கவிஞர் மரியதாசு ‘வள்ளலார் வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்.)

அடுத்து,

பண்ணாய்ந்து பாடுகின்ற முடியரசு

அண்ணாவின் வழி ஆய்ந்து பாடுகின்றார்!

கண்ணான கவியரசு

எந்நாளும் நம் அரசு

(கவியரசு முடியரசன் ‘அண்ணா வழி’

என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்)

எட்டுவழி கூறிவிட்டார்-கேட்டிருந்தோம்!

இப்போது

எங்கள் வழி எந்த வழி?

சிங்கம்புணரி வழி - திருச்சி வழி-

தஞ்சை வழி-

அண்ணன் எமக்கு வகுத்த வழி

இவ்வழிதான்!

வருகின்றோம் -

வணக்கம்.

❀

வையம் தழைக்க

13.4.73 அன்று சென்னை வானொலியில்

‘வையம் தழைக்க வாழ்த்துவோம்’ என்ற தலைப்பில்

புத்தாண்டு நாளில் நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதை உரை.

அன்பால் அறநெறியால்

கல்வியால் உழவால்

தொழிலால் கலைப்பெருக்கால்

வையம் தழைக்க வாழ்த்த வந்தீர்

வாழ்த்துகின்றேன் உம்மை நானும்!

அன்பு - ‘ஆல்’

அறநெறி - ‘ஆல்’

கல்வி - ‘ஆல்’

உழவு - ‘ஆல்’

தொழில் - ‘ஆல்’

கலைப்பெருக்கு - ‘ஆல்’

ஆறுதலைப்பும் ‘ஆல்’ என்று முடிவதனால்

‘ஆல்’களின் நடுவே நானோர் அரசானேன்!

ஆலமரங்களின் நடுவே அரச மரமானேன்.

வருடப் பிறப்பின்...

வருட.... பிறப்பு....

வல்லியவள் உடல் வருட உடன் ஓர் பிறப்பெனிலோ