கலைஞரின் கவிதைகள்
கவிதை 39 · 39 / 77
வாழ்ந்த பெருமையெல்லாம் வகைப்படுத்தி
ஆழ்ந்த கருத்துப் பேழையொன்றைத் தந்திட்டார்-
கருத்துப் பேழையது! கறுத்த மனத்தினர்
கழகத்தைக் கவிழ்ப்பதற்குக் கற்பனையில் தயாரித்த
காதறுந்த பேழையல்ல!
கருத்துப் பேழையது....
காஞ்சி அண்ணல் தந்த கற்பூரப் பேழையது!
பெரியாரின் வலக்கரமாய் - அறிவில்
வறியோரைக் கரையேற்றும் விசைப்படகாய்
சிறியோரின் பிழைபொறுக்கும் செங்கதிராய்
வெறியோரைப் பணியவைக்கும் வித்தகராய்
நெறியோடு முறையோடு அரசியல் நடத்திச் சென்று
திருவோடு ஒழிவதற்குத் திட்டம் சொன்னார் - இங்கே
திருவோடு இருந்திட்ட சிலபேர் இன்று
தெருவோடு போகின்றார் நம்மைத் திட்டி!
பருவோடு சண்டை போட்டால் நம்முகம்தான் கெடும்
பரவாயில்லை என்று புனுகு போட்டால் பரு உதிரும்...
முக அழகு கெடுக்கவந்த பருவுக்குப்
புனுகு மணம் ஒருகேடா? புலிபோலச் சீறிடுவர் என் நண்பர்!
பொறுமையெனும் புனுகால்தான் பொல்லாப் பருக்கள்
உதிருமெனில்
மணமென்றதனைக் கருதாமல்
மருந்தென்றதனைத் தடவிடுக!
இருந்துழைத்து வளர்ந்திட்ட இயக்கத்திலே
ஈவெரா பெரியாருடன் கருத்துமாறி...
இன்னொரு கழகம் காண்பேன் என்று
கண்ணீர் பெருக்கிப் பிரிந்தபோதும்
இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் இருப்போமென்று
எதிரிகட்கு இடித்துரைத்தார் எங்கள் அண்ணன்... இன்றோ
உதிரிகளைச் சேர்த்துக் கொண்டு
உடைவாளால் தாய் வயிற்றைக் கிழிப்பதற்கும்
எதிரிகளாம் பேய்மடியில் வீழ்வதற்கும்
இழிகுணத்தோர் ஓடுகின்றார்; விரைவில் முடமாவர்!
அண்ணன்-
ஆளுங்கட்சிக்கெதிராக அறப்போர் செய்தபோதெல்லாம்
ஆழம் பார்க்கத் தொண்டர்களை
அனுப்பும் பழக்கம் என்றுமில்லை
அவரே முதலில் களம் புகுவார், அவரே முதலில்
சிறைப்படுவார்!
“மாநிலங்கள் மானினமாய் இருக்கவேண்டும்; அவைமீது
பாய்ந்து தாக்க மத்தியிலே புலியாக உறுமவேண்டும்-”
இக்கொள்கை
குடியரசுக்கேலாதென்று உரிமைகேட்டார் நமது அண்ணன்,
வேங்கைக்கழகு மானை வேட்டையாடல் எனத் தமக்கு வரும்
தீங்கை உணராச் சிலபேர்கள் குதிக்கின்றார்.
அண்ணன் கொள்கை அதுவல்ல,
அதிகாரப் பரவல் முறை தேவையென்று முரசறைந்தார்-
அவ்வழிதான் நல்வழியென்று அணிவகுப்போம்.
ஆதிக்கப் பிணி தொலைப்போம்.
பல்கலைக் கழகம்போல் திகழ்கின்ற அவர்பற்றிப்
பல தலைப்பில் பாடுகின்றார் கவியரங்கில்...
❀
பின் கண்ட தலைப்புகளில்
கவிஞர் பலர் பாடி முடித்தனர்
அன்னை அண்ணா - கவிஞர் ஈரோடு தமிழன்பன்
தலைவர் அண்ணா - கவிஞர் கா.வேழவேந்தன்
காவலர் அண்ணா - பாவலர் மா. முத்துசாமி
நடிகர் அண்ணா - கவிஞர் முருகுசுந்தரம்
திரையுலக அண்ணா - டாக்டர் ஒளவை நடராசன்
முதல்வர் அண்ணா - கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு
எழுத்தாளர் அண்ணா - கவியரசு பொன்னிவளவன்
பேச்சாளர் அண்ணா - கவிஞர் அப்துர் ரகுமான்
கலைஞரின் முடிவுரை
அன்னையே! அருமைமிகு தலைவரே! அறக்காவலரே!
உண்மை நடிகரே! ஒப்பற்ற முதல்வரே!
எழுத்தால் பேச்சால் எம்முள்ளம் கவர்ந்தவரே!
பழுத்தாய் நீ அறிவில் என்று
பறித்துக்கொண்டு ஓடியதோ காலக் குழந்தை?
என்செய்வோம் அண்ணா? நீ
எங்களோடு இருப்பதாக எண்ணிக் கொண்டு,
வன்செயல்கள் சதித்திட்டம்
வஞ்சவெறிக் கூத்து அனைத்தையும் வெற்றிகண்டு
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இன்றுபோல் என்றும் உழைப்போம் அண்ணா!
அங்கே உன்னைக் காண்போம் அண்ணா!
❀
தமிழ் வளர
வழிநடைப் பயணம்
12.4.73 அன்று பறம்புமலையில் நடைபெற்ற பாரி
விழாவில் “தமிழ் வளர வழிநடைப் பயணம்” என்ற
தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதையுரை.
மலையெலாம் வளத்தைப் பாடும்! தமிழர்
கலையெலாம் பண்பைப் பாடும்! கடல்
அலையெலாம் நடமே ஆடும்! பகைமைக்
குலையெலாம் நடுங்கி ஓடும்!
கோடுவளர்
காடுதனில்
ஓடிவிளை
ஆடுகின்ற
பீடுமிகு மானினமும்
பாடும் இசை
ஜோடிக்குயில்
தாளமொடு
பாவமிடு
கானமயில்
புள் இனமும்
பட்டுக்கொடி
கொற்றக்குடை
சுற்றிச்சுழல்
வெற்றித்திரு
முத்துத்தமிழ்
சுற்றுச்சுடர்
பெற்றுக்குல
கொடைபாரிப்
புகழ்வாரித் தொழுதிடுவோம்.
வழிநடைப் பயணமென வாகான தலைப்பீந்து
விழியொத்த தமிழினம்தான் வளர்வதற்கு
வகைசெய்தீர்! வாழ்க! வாழ்க!
இனம் வாழத் தினம் அயராப் பணிபுரிவோம்
சினம் கொள்ளல் தீதன்று தமிழர்க்குக் கேடு வந்தால்!
சிங்கத்தின் கூட்டமன்றோ: சிறுநரிகள்
ஊளைக்கா தலைவணக்கம்?
பொங்குற்ற புலிகள் முன்னே புல்லியர்க்கா ஆர்ப்பாட்டம்?
எங்குற்றான் என் தமிழன்?
இங்குள்ள இழிவுகளை எதிர்ப்பதற்குத் துணிவின்றிச்
செங்குத்துத் தூணைப்போல் நிற்கின்றானா?
அங்கத்தில் துடிப்பின்றிக் கிடக்கின்றானா?
அய்யோ பாவம் அவனுக்குச்
சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள்!
தங்கத்தில் சிலையொன்று அமைத்திடுங்கள்!
உளி இரண்டை உதட்டின் மேல் வைத்தாற்போல்
ஒளிமிகுந்த பாண்டியர்க்கு மீசையுண்டு
இளி வந்ததில்லை என்று இனமுழக்கம் செய்வதுபோல்
காதின்
வெளிவரையில் படர்ந்திருக்கும் சோழன் மீசை
களிறாட்டுந் துதிக்கை போன்று
கண் நோக்கி வளர்ந்திருக்கும் - சற்று
நெளிகாட்டும் நீளமீசை சேரன் மீசை!
அன்றந்த மீசையெலாம் துடித்ததனால் - பகைக்
குன்றங்கள் பொடியான கதைகள் உண்டு
இன்றந்த வீரம் வேண்டும் - மிகவும் வேண்டும்
இன்செயலில் வீரம் தேக்கி
வன்செயல்கள் அறவே போக்கி
முன்பிருந்த தமிழர்களின் உணர்வைப் பெறுக...
மான உணர்வைப் பெறுக...
தன்மான உணர்வைப் பெறுக...
இங்கு புலவீர்
எட்டுவழி குறிப்பிட்டுப் பாடுகின்றீர் - தமிழர்க்கு
முட்டுவழி காட்டியவர் யார் என்பீர்?
குட்டுவழிப் பேர்வழிகள், நாம் குனியும் வரை
