உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 38 · 38 / 77

அங்கேயும் இருக்கின்றாய்!

அலைமேயும் கடலோரம் துயில்கின்ற எம் அண்ணனே-!

அணையா விளக்கே! அன்பின் ஒளியே!

நீ தந்த அணையா விளக்காம்

தி.மு.கழகமென்னும் தீபச் சுடர் ஏந்தி

இருட்டு மனிதர்களின்

புரட்டுச் செயல் அனைத்தும்

விரட்டி அடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்!

அண்ணன் ஒரு கவியரங்கம்

4.2.1973 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில்

நடைபெற்ற அண்ணா நினைவுநாள்

கவியரங்கத்திற்கு தலைமை வகித்து

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்

பாடிய தலைமைக் கவிதையுரை.

★

வங்கக் கடலோரம் உறங்குகின்ற நம் அண்ணன்

அடிதொழுது தொடங்குகின்றேன் தலைமையுரை

எட்டுக் கவிஞர் என் தலைமை யேற்றுப்

பட்டுக் கவிதைகள் நெய்திட வந்துளார்

வசவாளர் சிலர் உலவும் தமிழகத்தில் - கவி

நெசவாளர் இவர்களையே வாழ்த்திடுவோம்....

ஆயிற்று ஆண்டொன்றுக்குமேல் அரங்கேறிக் கவிபாடி

அதனாலே அறிவழகன், வீராசாமி அழைத்தவுடன்

ஆகட்டும் பார்ப்போமெனச் சொல்லாமல்

அப்படியா வருகின்றேன் என ஒப்பிவிட்டேன்

எப்படியும் என்பாட்டை நீங்கள் கேட்க வேண்டும்

என்பதற்கு வரவில்லை

செப்பரிய சிறப்புமிகு கவிஞர்களின்

சீர்கவிதை கேட்பதற்கே நான் வந்தேன்

கவி எழுத நேரமில்லை எனினும்

கலைஉள்ளம் எனை விடுவதில்லை

காலை முதல் பார்வையாளர் சந்திப்பு - அதற்கடுத்து

கவின்மிகு கூவத்தில் படகு வெள்ளோட்டத்

தொடக்கவிழா

நாலு மணிக்கெல்லாம் நமது பாரதி பேராலே

துறைமுகத்தில் ஒரு நிகழ்ச்சி!

இதற்கிடையே அடிக்கின்ற

தொலைபேசி மணிக்கெல்லாம் பதிலைச் சொல்லி

ஏதோ கிறுக்கி வந்தேன் கவிதையெனும் ஒருகத்தை!

அண்ணனுக்குக் கவியரங்கம் நடத்துகின்றோம்-

அறிவீரோ நண்பர்களே! அண்ணனே ஒரு கவியரங்கம்!

புவியரங்கின் மீது பூவரங்கம் அமைத்துக் கொண்டு

திருவரங்கத் துயில் கொள்ளும் தெய்வம் அவர்!

அந்தத் தெய்வத்தை வணங்குகின்றேன்!

அந்தத் திசை நோக்கிப் பாடுகின்றேன்!

அண்ணன் பூஜைக்கு என்ன பொருள்

கொண்டுசென்றாய் எனக் கேட்பீர்!

மண்ணில் புழுப்போல நெளிந்தவர்க்குக் குடிசை மாற்றி

மாடியுடன் வீடு கட்டித் தந்த செய்தி

அண்ணன் காலுக்குக் காணிக்கை மலரன்றோ!

இலட்சம் பேருக்கு இந்த ஆண்டு - கண்ணில்

பார்வை தரல் இலட்சியமாய்க் கொண்ட செயல்

அண்ணன் சந்நிதியில் வைக்கின்ற வாழைக்கனியன்றோ!

தொழு நோய்ப் பிச்சைக்காரர்க்குத்

தூய்மைசேர் இல்லங்கள் ஏற்படுத்தல் அண்ணனைத்

தொழுவதற்கேற்ற தூபதீபப் பொருள் அன்றோ!

சிற்றுார்க்கும் பேரூர்க்கும் பட்டி தொட்டிக்கும்

மின் இணைப்பு இல்லா நிலை இனி இல்லையென்று

அண்ணனிடம் கூறுவது கற்பூர ஜோதியன்றோ!

வெற்றிலை பாக்கென்றால் அண்ணனுக்கு வெகு விருப்பம்

விவசாயத் தொழிலாளர் வீட்டுமனைச் சட்டத்தைச்

சொன்னாலே வாய் சிவக்கும் அண்ணனுக்கு

வெற்றிலை படைத்தது போல்!

கூவம் மணப்பதற்குத் திட்டம் கண்டோம் அண்ணா...

உன் வாசல்

கோலமிட்டு யாம் வைத்த குங்குமம் அதுதான் அண்ணா!

என மொழிந்து-

நேற்றுக் காலையிலே நாமெல்லாம் நடந்து சென்று

காற்றுத் தாலாட்டும் அண்ணன் கல்லறையை வணங்கி வந்தோம்

ஆற்றுப் பெருக்கெனவே ஆயிரம் லட்சமென்று

அண்ணனுக்கு... தமிழ்

ஊற்றுப் பெருக்காலே பண்பாடிக் கண் எல்லாம் குளமாகத்

திரும்பி வந்தோம்.

தேற்றும்மொழிக் கரசன், தென்பாங்கின் பெருவேந்தன்

ஏற்றும் விளக்கெல்லாம் ஏழைக்கே ஒளிகாட்ட வேண்டுமென்று

சேற்றில் தாமரைபோல் கருத்தவிழ்த்த நம் அண்ணன்

“என்னைப்

போற்றிப் புகழ்ந்ததெலாம் போதுமடா என் தம்பி!

தூற்றித் திரிகின்றார் சிலபேர் நம்கழகத்தை! எண்ணெய்

ஊற்றி விஷத்திரியை எரியவிட்ட குற்றமன்றோ! இன்று

சோற்றுத் துருத்தியெலாம் சுழற்றுகின்றார் அட்டைக் கத்தி

கூற்று வந்து என் உயிரைக்கேட்டுப் பெற்ற காலம்வரை

என் வீட்டுக்

கூடம் வரைதான் அனுமதித்தேன் கூடிக்கெடுப்பவரை! நீயோ

அடுக்களைவரை அழைத்துச்சென்றாய்... அதன் பயனை

அனுபவிக்கின்றாய் இன்று!

ஆனது ஆயிற்று தம்பி! ஆடிக்காற்றில் பஞ்சாகப்

பறந்து போகும் பகையெல்லாம்!

அலட்சியச் சிரிப்பாலே எதிர்ப்புகளைத் தூளாக்க... நான் தந்த

அறிவுரையை மறந்திடாமல் பணியாற்று! அவர்கள்

ஓங்காரச் கூச்சலிடும் கோட்டானாய் அலறட்டும்

ஆங்காரம் அவசரமெல்லாம் அவர்களுக்கே தீங்காக முடியட்டும்

பாங்கான தமிழ்ப் பண்புடனே பொறுமைகாட்டி - என்னை

நீங்காமல் நினைவில் வைத்த தம்பிகளை ஒருங்குகூட்டி

மாங்குயில் போலக் கூவுவீர் நம் கொள்கைகளை-

மறைந்திடுவர் ஆந்தையெல்லாம் தம் குரல் கேட்டுத்

தாமே நாணி!”

எனச்சொல்லி நம் அண்ணன் வாழ்த்துத் தந்தார்.

மனக்கதிராய் ஒளிவீசம் மாமல்லன் ஊரில் பிறந்து

பல்லவன் ஆனார்!

தனக்கெதிராய் எழுந்திட்ட சூழ்ச்சிகளைப்

புறங்காணும் சோழனானார்!

குணக்குன்றாம் கொங்குநாடன் கொடுப்பதிலே குமணனானார்!

வனப்புமிகு தமிழ்வளர்க்கும் பணியினிலே பாண்டிய

வேந்தனானார்!

வாகை சூடிப் பகைப்புலத்தை வெல்வதிலே சேரனும்

அவரேயானார்

‘நமஸ்காரம்’ என்பதுதான் நல்ல தமிழ் என்று

சமத்காரமாய்ச் சொல்லி வந்த கூற்றினை எதிர்த்து

வணக்கமெனும் தமிழை வழக்கத்தில் கொண்டுவந்தார்!

விவாக சுபமுகூர்த்தமென்று விழி பிதுங்கச் சொல்வதுதான்

விவேகிகளின் அழகென்று விவாதித்த காலம் மாற்றி

வீணைத்தமிழ் குழைத்து ‘மணவிழா’ என்றொலித்தார்!

வித்திட்டார் பொதுமக்கள் நெஞ்சகத்தில்

புலவர்க்கே உரிய தமிழ்வளர!

அகராசனாதிபதியை அவைத்தலைவர் என்றதுவும்

அண்ணாதானே! இல்லையேல்

சனாதிபதிக்கும் மேல்பதவி அக்ராசனாதிபதிப்பதவி

ஆகுமன்றோ?

ஏறுகின்றார் மேடையெனில் அது மகுடிநாதம்-

எழுதுகின்றார் ஏட்டிலென்றால் அது தமிழர் வேதம்

எதிரிகளின் தலையெல்லாம் நெற்கதிர்போல் தாழ்வதற்கு

எம் அண்ணன் கற்றிருந்தார் சொல்லை ஆள்வதற்கு!

வாதம் செய்வதிலே வழக்கறிஞர் சிங்கமெலாம் தோற்க நேரும்!

பிடி

வாதம் செய்வதிலே தேர்ச்சியில்லை அண்ணனுக்கு!

கம்பன் தமிழுக்குச் சிரக்

கம்பம் செய்கின்றேன்; ஆனால்

கம்ப ராமாயணம் ஏலேன் என்று

தும்பை மலர் உள்ளத்தார்

துணிவு நிறை இதயத்தார்

தூயநற் சோமசுந்தர பாரதியை ஒப்பவைத்தார்.

அண்ணன்

நெடுஞ்செழியனைக் கண்டதில்லை,

அன்பழகனைக் கண்டதில்லை.

நிச்சயமாய்ச் சொல்லுகின்றேன்

அவர்களை அண்ணன் கண்ட, தில்லை.

ஆமாம்

அவர்களை, அண்ணன் கண்ட

தில்லைநகர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்

எல்லையில்லாப் புகழ் பெற்ற உரையொன்றை ஆற்றியுள்ளார்.

“தாழ்ந்த தமிழகமே” என அழைத்து, நாம்