உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 36 · 36 / 77

சொன்ன சொல் தவறாமல் செயல்படுவேன்

எனக்கூறி இற்றை நாளில் வணங்குகின்றேன்...

அள்ளிமுடித்த கூந்தலிலே பூவோடும் - கீழே

துள்ளி விழாக் கெண்டை மீன் விழியோடும்

புள்ளி மேவும் புதுக்கோலச் சித்திரத்தில்-

விடுதலைக்கு

வெள்ளிவிழா என எழுதிக் காட்டுகின்ற

இந்தியத்துப் பெண்ணே - இளம்மாதே! எழுச்சிக்குத் தாயே!

விந்தியத்துக்கப்பாலே வீரத் தமிழகத்தில்

பந்தயத்துக் குதிரைபோல் பாய்ந்தோடித்

தியாகத்தீயில்

முந்திக் கொண்டு குதித்திட்ட மறவர்க்கு வாழ்த்துக்கூறி

நான் வணக்கம் செய்வேன்....!

இருபத்தைந்தாண்டுகளாய் எரிகின்ற விளக்கைக் கண்டோம்.

அவ்விளக்கில்

இரத்தத்தை எண்ணெய் எனப் பெய்து ஏற்றி வைத்த

எம்மனோர் பாட்டன்மாரைத் தொழுது நின்றோம்!

குயில் கூட்டம் பாடுகின்ற கோலச் சோலையிலே

கோட்டான்கள் காட்டுக்கூச்சல் கேட்டிடவோ?

மானாடும் பொழில் - மயிலாடும் பூங்கா-

மந்திகளின் ஒய்யார மண்டபமாய் மாறுவதோ?

தென்றல் நுழைய வீடு கட்டி - அதில்

தீ புகவே விட்டிடவோ?

எங்கள் நாடு - எங்கள் மக்கள் - எங்கள் ஆட்சி

திங்கள் முகமெனச் சிறு குறையிருப்பினும்

எங்கள் நாடு - எங்கள் மக்கள் - எங்கள் ஆட்சி

சிங்கமறவர் - தங்க மங்கையர் - காப்பார் என்று

பொங்கு தமிழில் புவியினுக்குணர்த்துவோம்!

அத்தனை பேரையும் இயம்பிடல் இன்று

இயலாதென்றே எண்ணிச் சிலரைக்

கணக்காய் வகுத்துக் கவிதை புனைந்திட

வானொலி நண்பர் விடுத்த அழைப்பும்

தேனொலியாய் என்செவியில் விழுந்திடப்

பேரொலி முழங்கும் சூழல் விடுத்துப் - புலவர்கள்

சீரொலி கேட்க ஓடி நான் வந்தேன்.

பாரதிபற்றிப் பாடுதற்கோர் பாரதி வந்துள்ளார்.

சுப்பிரமணிய பாரதியின் சுவையான தமிழ்ப்பாட்டைச்

சுத்தானந்த பாரதியின் புதுப்பாட்டில் கேட்டிடலாம்....

அதனாலே; இவர் முற்றும் துறந்தவர் என்றாலும்-

பற்றுத் துறக்காதவர் - தமிழப்

பற்றுத் துறக்காதவர் - பலமொழி

கற்றும் மறக்காதவர் - தாய்மொழியை

மறக்காதவர் - இங்கே

சிறக்காதவர் - இங்கே

சிறக்காது அவர் பாரதி பற்றிப்

பாடாவிட்டால் - எனவே அவர் பாடுகிறார் இப்போது:

(பாரதியார் பற்றிக் கவிஞர் யோகி சுத்தானந்த

பாரதியார் பாடி முடிக்கிறார்)

அடுத்து,

தூத்துக்குடியில் சுதேசிக் கப்பலைப்

பார்த்த வெள்ளையர் பதைத்திடும் வண்ணம்

ஓட்டிக் காட்டி ஓட்டாண்டியாகிக்

கோவைச் சிறையினில் கொள்கை காத்திடச்

செக்கிழுத்த நம் செம்மல் வ.உ.சி.

சிறப்பினை விளக்கிட சென்னையில் ஒரு சிலை

முன்னரே வைத்துப் புகழ்பெற்றோம் எனினும்

அடுத்த திங்கள் ஐந்தாம் நாளினில்

இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார்

சிந்தை உவந்து மேலுமோர் சிலையினைத்

தூத்துக்குடியில் திறந்திட இசைந்துள்ளார்

விஞ்சு புகழார்க்கு நம் அஞ்சல் துறையினர்

நினைவுத் தலையும் நிகழ்த்தலை நினைத்தனர்

சிறை சென்ற தியாகி சிதம்பரனார் போல்

சிறை சென்று தியாகம் செய்த நம் நண்பர்

செந்தமிழ்க் கவிபுனை சிந்தை படைத்திட்ட

சுந்தரம் வந்துள்ளார் கவிதை தந்திட:

(வ.உ.சி. பற்றிக் கவிஞர் எஸ்.டி. சுந்தரம்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

வ.வே.சு. அய்யரெனும்

வாய்மைகொள் செயல்மறவர்

ஆவேச நீர்ச்சுழலில் சிக்கி

அன்றொரு நாள் மாய்ந்து விட்டார்

இன்றந்தச் சுதந்திர வீரரை நம்முன்

எழுந்து நடமாடச் செய்ய வந்துள்ள இக்

சொழுந்து யார்?

இக்கால ஒளவை போலத் தக்கபடித் தமிழ்பாடும்

மிக்க திறனுடைய சௌந்தரா கைலாசம்

அம்மையார் கவிதையைத் தம்மகள் மூலமாய்

நம்மவர்க்கிங்கே நயமாய் அனுப்பினார்;

பாடுக செல்விநீ கேட்ட தாலாட்டை:

(வ.வே.சு. அய்யர் பற்றிக் கவிஞர் திருமதி

சௌந்தரா கைலாசம் சார்பில் அவர் மகள்

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

சிம்மக் குரலோன் சிவா எனத் திகைத்து

நம்மை ஆண்டவர் நடுநடுங்கி அஞ்சுமாறு

நோயின் கொடுமையுடன் நாளெல்லாம் கால்நடையாய்த்

தாயின் விலங்கொடிக்கத் தாயகத்தைச் சுற்றிவந்து

திருச்சி சிறைக்கோட்டம் சிறக்கக் கைதாகி

இருட்படலம் நீக்கும் எழுஞாயிறு போன்ற

சுப்பிரமணிய சிவா என்னும் ஒப்பற்ற தியாகியினைப்

பாடுதற்கு வல்லார் யார்?

உப்பில்லா உணவு உருப்படுமா? கொத்தமங்கலம்

சுப்பில்லாக் கவியரங்கம் சுவைதருமா? கொத்தமல்லிக்

கொப்பு கறியினிலே மணக்கும்! என் நண்பர்

கொத்தமங்கலம் சுப்பு

கவிதையெலாம் மணக்கும் - கேட்ட தமிழர்

நெஞ்சமெலாம் இனிக்கும்.

சிவசிவா என்று சும்மா இருக்காமல் இவ்வயதில்

சிவாபற்றிக் கவிபாட அவாவுற்று வந்தவரே

அவை ஏறாது போம் - நீர் இந்த

அவையேறாது போம் என்று சொல்லிவிட்டால் இங்கே நல்ல

சுவை ஏறாது போகுமன்றோ?

சப்பென்று போகாமல் அவைக்குச் சுவைதருக

சுப்பு அவர்களே!

(சுப்பிரமணிய சிவா பற்றிக் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

பற்று வைத்தல் தவறன்று; பாவமன்று - ஆனால்

பற்று, கொஞ்சம் முற்றிப் போய் வெறியாக மாறுமாகில்-

விபரீதம் பலவாய் விளைவதுண்டு நாட்டினின்று

ஏகாதிபத்தியத்தை இந்திய நாட்டில்,

போகச் செய்யாவிட்டால் வேகாது இந்தவுடல்

அந்நியரை விரட்ட வேறோர் அந்நியரைத்

துணைகோடல் நன்றென்னும் துணிவுகொண்ட ஓரிளைஞர்

நேத்தாஜி போசுக்கும் மூத்த வழிகாட்டியாய்

செருமானியர் படையுதவி பெறுவதற்கும் முயன்றவராம்

நாஞ்சில் தமிழ்மண்ணில் நல்ல பழங்குடியில்

தோன்றிப் புகழோடு மாய்ந்த சண்பகராமன்

வெளிநாட்டிற் செத்தாலும் வெந்தபின் தன் சாம்பல்

தமிழ்நாட்டில் தெளிக்கப்பட வேண்டுமென்ற

மானம் படைத்தவொரு மறத்தமிழன் வீரத்தைக்

கானம்பாடி நமைக் களிப்பிக்க வருபவரோ

வானம்பாடியாம்-

பூவிரியுஞ்சோலைக்

காவிரிக் கரைதோன்றிப்

பாவிரிக்கும்-

பண்பாளர்

பண்டைநாள்

நண்பர்தான் - நற்கவிதை விருந்தொன்றை

உண்பதற்குத் தருவார் உவந்து:

(சண்பகராமன் பிள்ளை பற்றிக் கவிஞர் வானம்பாடி

பாடி முடிக்கிறார்)

அடுத்து,

வன்முறை, தீவிரவாதம் இவையெலாம்

நன்முறையாகா; நாட்டுக்குத் தீமைதான்!

அண்ணலும் அண்ணனும் அமைத்த நற்பாதை

அகிம்சைதான்; எனினும் அன்று நம் முன்னோர்

அன்னியர் ஆட்சியை அகற்றிநம் அடிமைத்

தளையினை அறுத்திடத் தகாவழி நாடுதல்

பிழையிலை என்றும் சிற்சிலர் பேசினர்

தவறுதான் இலையென அவருள் ஒருவனாய்