உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 35 · 35 / 77

அதனாலே முடிக்கின்றேன் முதற்கவியை அழைத்துவிட்டு!

பெண்ணுரிமை பற்றிப் பாடுதற்குப்

பெரிதும் விருப்பமுற்ற ஆண் கவிஞர்

மண்ணுரிமை காக்கும போர்ப் படைக்குத்

தெள்ளு தமிழ் எடுத்துத் திறன் கவிதைப்

பள்ளு பல தந்திட்ட மறக் கவிஞர்

படையல் உரிமை மட்டும் -

பெற்றுள்ள பெண்ணுக்குப்

படையில் உரிமை வேண்டுமென்க!

உடையில் மட்டும் புது உரிமை

ஒப்போம் என்று கூறிடுக!

சுதந்திரக் கவி வாணரே - என்

சுந்தரக் கவி வாணரே

சுவையான பாட்டப்பம் தந்திடுக

அவையோரும் வீட்டப்பம் போல் உண்டிடுக:

(கவிஞர் எஸ்.டி. சுந்தரம் ‘பெண்ணுரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

பேச்சுரிமை கேட்கின்றார்

பாட்டுக்கிடையே அவர் எப்போதும்

பேசுவது பழக்கம் தானே... அதனாலே

கவியரங்கில் தனக்கு மட்டும்

பேச்சுரிமை கேட்கின்றார்!

ஏச்சுரிமை கேட்கின்றார் சில பேர் இன்று

அதனாலே தமிழ்ப் பண்பாட்டின்

மூச்சுரிமை போகுமென்று அஞ்சுகின்றேன். நேரம்

ஆச்சு; உரிமை தருகின்றாயா இல்லையா என

அன்பர் சுப்பு கேட்கும் வரை தராதிருந்தால்

அது என்றன் தப்பு!

கொத்தமல்லிக் கொப்பு குழம்பினிலே மணக்கும்-

கொத்தமங்கலம் சுப்பு குழம்பாமலே மணக்கும்:

(கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு ‘பேச்சுரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

எழுத்துரிமை என்னிடத்தில் கோருகின்றார்

என் நிலையை அவர் அறியார்

பரப்பிரம்மம், தூக்குமேடை, கலை

ஒளி வழங்கும் உதயசூரியனாம் இப்படிப்

பல எழுத்தைப் பறி கொடுத்து.... அதன்

தலை எழுத்தால் தடை செய்யப்பட்ட கதை இவர் அறியார்

ஆயினும்; எழுத்துரிமை என்னிடமே கேட்கின்றார்

உரிமை தரும் இடத்திலே நான் இருக்கின்ற காரணத்தால்

முருகு சுந்தரத்தைக் கவி எழுத முடுக்குகின்றேன்

வந்திடுக - தமிழ்த்தேன் சிந்திடுக:

(கவிஞர் முருகுசுந்தரம் ‘எழுத்துரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

ஆக்கமுள்ள சொல் நயமும் காவிரி யாற்றுப்

போக்கனைய நடை வளமும் தூய

நோக்கமும் நுண்ணறிவும் கொண்டு

பாக்களைக் கோக்கின்ற பாவலராம் ரகுமான்!

அவர்

வாக்குரிமை கேட்கின்றார் இப்போது

பெற்றுக் கொண்டு எனக்கேதான்

அளிக்க வேண்டுமெனச் சொல்லமாட்டேன்

சொன்னாலோ அதன் பெயர் வாக்குரிமை ஆகாதன்றோ?

வந்திடுக நண்பரே!

வழங்கி விட்டேன் வாக்குரிமை; நீர் பாடும்

பாட்டுக்கு வழிச் செலவு தந்திடுவோம்

ஒட்டுக்கு மட்டும் ஒரு தொகையும் கேட்காதீர்:

(கவிஞர் அப்துர் ரகுமான் ‘வாக்குரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

அரசென்று சொன்னாலும்; ஆர்க்கின்ற

முரசென்று சொன்னாலும் தவறல்ல! கவி

விரச நடைக்காரரிடைச்

சரசமாடி வந்தாலும்

உரசுகின்ற நட்பாலே ஒப்பரிய பாசமுடன்

அரசுப் பொறுப்பேற்ற அடியேன்பால் மீண்டும்

வந்தார் கவியரசு

வந்தவுடன் சொத்துரிமை கேட்கின்றார் - பாவம்

நொந்த மனம்! இவர்

சொத்துரிமை கேட்பதிலும் நியாயம் உண்டு பிள்ளைகள்

பத்துப் பன்னிரண்டு

போகட்டும் அளித்துவிட்டேன் சொத்துரிமை

பெருக, வருக, தருக

(கவிஞர் கண்ணதாசன் ‘சொத்துரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

பாட்டரங்கில் பாவலர்கள்

கேட்ட உரிமை வழங்கிவிட்டோம்

நாட்டுநிலை தொட்டறிந்து

நல்லுரிமை பேணிக் காக்க

உறவுக்குக் கை கொடுப்போம் - நம்

உரிமைக்குக் குரல் கொடுப்போம் - என

முழங்கிக் கலைந்திடுவோம்-

முழுமனிதன் நேருதனை வணங்கிடுவோம்.

வாழ்க!

நன்றி, நன்றி!

(சேலம் பொருட்காட்சியில் 1.8.71 அன்று நடைபெற்ற

‘கண்ணோட்டத்தில் கலைஞர்’ - கவியரங்கில்

கலந்து கொண்டு தனக்களிக்கப்பட்ட பாராட்டுக்கு

நன்றியாக மேடையிலேயே

உடனே இதை எழுதிப் பாடினார்

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.)

என்னை இந்தக் கவியரங்கில் தந்தையென்றும்,

தாய் என்றும், குழந்தையென்றும்,

தலைவனென்றும், சேவகன் என்றும்,

காதலி என்றும், காதலன் என்றும்

குறிப்பிட்டுக் கவிஞர்கள் பாடினார்கள்.

அவர்கட்கு இந்த நன்றிக் கவிதை வரிகளைக்

காணிக்கையாக்குகிறேன்.

விழாத் தலைவர் வேழவேந்தன்

விழுமியதோர் பார்வையிலே

காலைமுதல் இங்கு விரித்து வைத்தார் கவிதைச் சந்தை

கவிஞர் கண்ணப்பன் எடுத்துரைத்தார் பாட்டில் தந்தை.

கத்து கடல் அலைபோல் கவியைத் தந்தாய்

முத்துலிங்க இளம்புலவ என் தாயை மீண்டும் தந்தாய்.

ஆரா அமுதன் வாயால் - நான்

தீரா விளையாட்டுக் குழந்தையானேன்!

என்னையும் ஓர் தலைவன் என்று - கரும்

பொன்னிகர் காமராசத் தலைவர் பெயர் கொண்டார்

மின்னிடும் தமிழால் இங்கோர் காமராசன்

ஏற்றுக் கொண்டார்

சேவகப் பையனாக என் வீட்டில் பணிபுரிந்த அவிநாசி மணிக் கவிஞன்

இன்று என்னையே

சேவகன் என மாற்றிப் பாடிவிட்டான் -

என்ன காலம்!

அருகினில் என் துணைவியார் அமர்ந்திருக்கக் கண்ட பின்னும்

முருகு சுந்தரிக்கு என்னதான் துணிவோ

என்னைக் காதலிக்க?

பிரிந்து போய்ப் பல திசையில்

திரிந்துழன்று மனம் திருந்தியே

விரைந்து வந்து வீடடைந்த - என்

காதலன் எனும் கண்ணதாச! நீ

கோவலன் போல் சிலம்புவிற்கப் போகவேண்டாம்

கழகக் கண்ணகி நான் என்று முனைக்காத்திடுவேன்.

கலங்கற்க!

நன்றி! நன்றி! நன்றி!

அனைவர்க்கும் என் நன்றி!

வெள்ளி விழா

(அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின்

சார்பில், இந்தியா விடுதலை பெற்ற 25-வது ஆண்டு

வெள்ளி விழாவையொட்டி 15.8.72 அன்று

ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதை உரையில் சில பகுதிகள்)

அவை கூடி வந்திருக்கும் அனைவர்க்கும்

அழகு தமிழ்ப் பாவலர்க்கும், நாவலர்க்கும் அமைச்சர்க்கும்

என்புருவம் எனினும் அன்புருவம் சிலம்புக்கும்

என் தலைதாழ்ந்த வணக்கங்கள்

அன்னைத் திரு நாட்டோரே

என்னை உங்கள் ஊழியனாய் ஏற்றுள்ளீர்,