உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 34 · 34 / 77

இன்று

எனைவிடுத்து நீ மட்டும் நெடுந்தெலைவு போய் விட்டாய்

என்ன நியாயம்?

இதழுக்குத் தேன் தருவாய் - பதிலுக்கு

நான் தருவேன் மறந்தா விட்டாய்?

மார்பகத்தில் அணைத்திருப்பாய்

மகிழ்ச்சி வெள்ளம் கரை புரளும்

மங்கையென்னைப் பிரிவதற்கு உன் மனம்தான் கல்லோ?”

எனக் கதறும் ஒலி கேட்டு

இனிய நறும் பூப்பெண்கள் அருகே சென்றார்

மடைதிறந்த வெள்ளம் போல் கண்ணீர் கொட்டி

மயங்கிவிழும் நிலைமையிலே ரோஜா நின்றாள்

மல்லிகை முல்லை அருகே சென்று

“என்னடி ரோஜா இன்னமும் அழுகை?

நல்லவர் இருந்தார் நானிலம் வாழ

வல்லவர் இருந்தார் வாரி அணைக்க

போனது வருமோ? புலம்பலை நிறுத்து!

பூக்களின் ராணி! புன்னகை காட்டு!”

ஆறுதல் கூறினார்; அழகு ரோஜா

தேறுதல் பெறாமல் தேம்பியழுதாள்.

“இரவு உமிழும் எச்சில் என்பேன் பனித்துளியை - என்

இறைவனது முத்தம் அமுதம் என்பேன்

அன்றமுதம் தந்தெனுக்கு ஆசை காட்டி

இன்றென்னை எச்சில் பனித்துளியில்

நனைத்து விட்டார்; என் செய்வேன்?

முடிசூடா மன்னரவர் இனி என்னைச் சூடார்

என நினைக்கும் போதெல்லாம்

முள்ளாக குத்துதடி மேனியெல்லாம்!

வாழ்வில் சிரிப்பில்லா எனக்கு இந்தச் சிவப்பெதற்கு?

மனத்தில் மகிழ்வில்லா எனக்கு நறுமணந்தான் எதற்கு?

இந்தியச் சிம்மாசனத்தில் அவர் இருந்தார் - அவர்

இதயச் சிம்மாசனத்தில் நானிருந்தேன்

உறங்குகின்றார் விழித்தெழுவார்; படி

இறங்கி வந்து பாவையெனை அழைப்பதற்குள்

அவர்நெஞ்ச

அரங்குதனில் ஆடுதற்குச் சிவப்பாடை

புனைந்து நின்றேன்

அதற்குள் காலக்

குரங்கின் கை ‘மாலை’யாக ஆகிவிட்டார்;

என் வாழ்வை இரவாக ஆக்கிவிட்டு!

போய்விடுங்கள் எனை விடுத்துத் தனியாக

புனிதனவன் பிறந்தநாளில் கண்புனலை அவன்

காலடிக்குக் காணிக்கையாக்குதலே

என் கடமை”

ரோஜாவின் சொற்கேட்டுச் சோர்ந்து போனேன்; தன்

ராஜாவின் பிரிவாலே வாடுகின்ற அவளையெண்ணிப்

பேசாமல் திரும்பி விட்டேன்; இன்றென்

மனைவி கூந்தல் மணம் வீசாமல் போகட்டுமென்று

மலர் எதுவும் பறிக்காமல் வந்துவிட்டேன் - இன்று

மலர் பறித்தால்; அது மாவீரன் நேருவுக்கு

மாலை தொடுத்திடவே! நம்

மடி பறித்துச் சுதந்திரத்தை அபகரித்த வெள்ளையரின்

கொடி பறித்து விடுதலைக் கொடி பிடித்த கொள்கை வீரன்

அடி கொடுத்தால் வாங்கிக் கொண்டு

அடக்குமுறை தாங்கிக்கொள்ள

அண்ணல் வகுத்த வழி

அயராதுழைத்த சிங்கம்!

இளமையின் எழிலை இருட்டுச் சிறையில்

கழித்த தியாகி!

எண்ணையிட்ட கடுகாய் வெடிக்கும் கோபம் எனினும்

எண்ணையிட்டார் விடுதலை வேள்விக்கென்போம்!

பணமலைக்கிடையே பிறந்தார் எனினும் ஏழையை அணைக்கும்

குணமலையாகத் திகழ்ந்தார் என்போம்!

பணியின் விரைவைப் பம்பரம் என்பர்

பண்டிதர் பணியோ பம்பரம் தோற்கும்

இடி இடிக்கும் பேச்சில் - இளமைத்

துடி துடிக்கும் எழுத்தில் - தேன் ஒரு

படி இனிக்கும் பண்பில் - அதிர்

வெடி முழக்கும் செயலில் - விடாப்

பிடியிருக்கும் குணத்தில் - விடுதலைக்

கொடியிருக்கும் கையில் - கொஞ்சம்

முடியிருக்கும் தலையில் -

(இங்கென்ன வாழ்கிறதோ? எனக் கேட்காதீர் எனைப் பார்த்து)

நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்

நேர் நின்று எதிர்த்ததாலே நேரு வானார்.... இந்திய

நீள் எல்லைக் கோடு தன்னைப் பெரும்பகைவர் கடந்த போது

என்ன

நேருமோ என்றேங்கி இருந்த மக்கள்

நெஞ்சின் துயர் துடைத்து, எதுவும்

நேராது நான் இருக்குமட்டும் எனச் சொல்லி நேருவானார்.

துணிவிருந்தால் உள்ளத் தூய்மையிருந்தால்

துன்பம் நேருமா? எனக் கேட்டார் குழந்தையிடம்

இன்பமே நேரும் மாமா என்றது பிஞ்சும் பூவும்-

இதனால் நேரு மாமா’வானார்.

மதம் கடவுள் நம்பிக்கை இவைகளிலே

அவர் கொள்கை தனி எனினும் பிறர்

மனம் புண்படாமல் நல்வழியில் ஆட்சி செய்தார் தன்

மரணத்தின் பின்னாலே மதச் சடங்கு வேண்டாமெனத் தக்க

தருணத்தில் உயிலெழுதி உலகிற்கு ஒளி செய்தார்

நடுநிலைத் தன்மை நலமெனக் கொண்டு

நானிலம் போற்ற நமது பூங்குன்றனார் நவின்ற

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மொழிக்குத்

தோதாய்க் கொள்கை தொகுத்தே சொன்னார்.

காலத்தின் கோலம் காட்டுக்கு ராஜாவாய்க் கர்த்தபம் ஆகும்

ஏலத்தில் சில பேர் கோபுர உச்சியில் குந்திக் கொள்வர் இந்திய

ஞாலத்தின் தலைவராய் ஜவகர் ஆனது இவ்விதமல்ல! அவர்

சேலத்து மாம்பழம் - சென்னைக் கடற்கரை-

கொற்கை முத்து - கொள்ளேகால் பட்டு-

தஞ்சைக் கோயில் - தண்புனல் காவிரி-

தறியில் காஞ்சி - தடந்தோள் பாண்டியன்-

கருத்தில் மாறுதல் இருந்த போதிலும்-

காலமானார் நேரு என்றதும்

கண்ணீர் உகுத்தார்

கலங்கி அழுதார்

காராக்கிரகம் கிடந்த அண்ணா!

கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்

கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!

படை துள்ளி வரும் - பகை

அள்ளி வரும் - எரி

கொள்ளி வரும் - கரும்

புள்ளி வரும் - சீனக்

கள்ளி வரும் - எனச் சிலர்

எள்ளி வரும் போது - விடி

வெள்ளி வரும் எனப் - பகை

கிள்ளி எறிந்தான் - இன்று திருப்

பள்ளி அயர்ந்தான் - நேரு-

திருப்பள்ளி அயர்ந்தான்!

“வாய் மடித்துக் கிடந்த தலைமகனை நோக்கி

மணியதரத் தேதேனும் வடுவுண்டாயோ?” எனத்

தாய் அடித்து மோதி அழும் காட்சிகளைப்

பேய் ஆட்டம் போடுகின்ற போர் முகத்தை

நாய் நரிகள் தீனி தின்னும் கொடுமைக் கூத்தைக்

காய், பழம், பூ, பிஞ்சு, சாய்ந்து விழும் சமர்க்களத்தை - நம்

கலிங்கத்துப் பரணி சொல்லும். அந்தக்

கலிங்கத்தில் அமைதி பூண்ட அசோக மன்னன

கண்டெடுத்த அறவழியில் உலகு காக்க நேரு பிரான்

கழுகுகளின் இறக்கை வெட்டி வெண்புறாவைப்

பறக்கவிட்டார் விண்ணின் மேலே!

“தலையாகிய அறமே புரி

சரி நீதி உதவுவாய்

சமமே பொருள் ஜனநாயகம்

எனவே முரசறைவாய்” இது

அலை மோதிடும் புதுவையின்

கலைமேவிய பாவலன் - நம்

நிலை மாறிடப் பாடிய காவியம்!

ஜனநாயகம் ஜனநாயகமென ஜவகரும் முழங்கிடச் - சிலர்தம்

தனிநாயகம் சிறந்திடச் செயல்பட்டதை மறந்திடோம்!

பணநாயகம் கணநாழியில் தகர்ந்திடக்

குணநாயகர் நேருவும் உடன் முனைந்திடக்

காலந்தான் போதவில்லை

காலமுமே பொறுக்கவில்லை!

என் கவிதை இனிமேலும் நீண்டு விட்டால்

காலம் பொறுக்காது கவிஞர்களும் பொறுக்கமாட்டார்