கலைஞரின் கவிதைகள்
கவிதை 33 · 33 / 77
அதனாலே அழைக்கின்றேன் அவர்களையே;
முதலில் பெருக்கல்;
காற்றின் பெருக்கல் புயலாகும்
நாற்றின் பெருக்கல் பயிராகும் இனிய
சாற்றின் பெருக்கல் சுவையாகும்
ஆற்றின் பெருக்கல் புனலாகும் முருகு
பாட்டின் பெருக்கல் என்னாகும்?
பொன்னாகும் பூவாகும்
புதிய கவியாகும்!
சேலமாநகர் தனக்கு எத்தனையோ சிறப்புக்கள்!
சேலமா? நகர்! என்றார் இரும்புத் தொழிற்சாலை கேட்டபோது!
இன்று
சேலம் மாநகராய் ஆவதற்கு இரும்புக் கனி தந்துவிட்டார்
சேர்வராயன் மலைக் கனியும்
சேலத்து மாங்கனியும்
செந்தமிழர் பெற்று மகிழ்ந்தாலும் என்
செம்மாதுளைக் கவிக்கிணையோ எனக்கேட்கும் என் நண்பர்
முரகு சுந்தரனார்
பருகிடவே தமிழ் தருவார்!
உருகும் திருவாசகத்திற்கு நெஞ்சென்பார்
இவர் வாசகமும் அவ்வாறே
அன்பரே முருகு!
ஆடிப் பெருக்கு நாளைக்கு; இப்போது நீர்
பாடிப் பெருக்குமய்யா:
(கவிஞர் முருகுசுந்தரம் ‘பெருக்கல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கழித்தல்;
விழித்திருக்கும்போதே வீட்டினுள் புகுந்து விட்டுப் பின்
விழித்திடுவான் கள்வன் திருதிருவென்றே! விளையாட்டெனவே
மொழிந்திடுவான் அகப்பட்டுக் கொண்டால்!
இவன் போன்றார் செயலையெல்லாம் முழுமூச்சாய்
ஒழித்திடவும், தீமைகளை அழித்திடவும் தீவிரமாய்ப்
பழித்திடவும், வாழ்நாளைப் பயனுறவே
கழித்திருக்கும் என் நண்பர் தமிழண்ணல்
‘கழித்தல்’ பற்றி, இன்பங் கொழித்திருக்கும் செந்தமிழில் தேன்
குழைத்துக் கூட்டிச் சுவைபெருக்கி நலம்
வகுத்திடுவார்; காலத்தை வீணே
கழித்திடாமல் அன்னார்க்கு வழித்தடத்தை ஒதுக்குகின்றேன்!
வருக, வழங்கிடுக:
(கவிஞர் தமிழண்ணல் ‘கழித்தல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து வகுத்தல்;
வகுத்தல் எனும் கவியமுதம்
தொகுத்தளிக்க வரும் புலவர் - நபிகள்
வகுத்த நெறிவாழ் கவிஞர் - விஜயன்
வில்லிலே விளையாடுவதில் வீரன் என்பார் - இவரோ
சொல்லிலே விளையாடும் தமிழ் வீரர்
வெற்றிபல கண்டு நான் விருதுபெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால், அப்துர்
ரகுமானைத் தருக என்பேன்
அவர் பாடுகின்றார் இப்போது:
(கவிஞர் அப்துல் ரகுமான் ‘வகுத்தல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கூட்டல்;
கழித்தல் கணக்கில் இருந்த கண்ணதாசன் இன்று
கூட்டல் கணக்கில் இணைந்துவிட்டார் நம்மோடு;
சேலத்தில் சேர்ந்த நண்பர் நாங்கள்! மீண்டும்
சேலத்தில் சேர்வதற்கு யார் தயவு வேண்டும்?
கவியரசென்று என் தோழர்தம்மை அழைக்கின்றார்!
எனக்குக் கோபம்
யான் அமைச்சுதானே; இவர் அரசன்றோ?
அரசராக இருந்தாலும் இவர் என் ஒற்றர் என்பேன்
ஐயிரண்டு பத்தாண்டு ஐயா இவர் மாறுவேடம் பூண்டு
மாற்றார் படை வீட்டைச் சுற்றி வந்தார்
இன்று மறுபிறவி எடுத்து இங்கு வந்தார்
குயில் என்று பறக்கவிட்டேன் பாடி வர
கோட்டான்கள் கூட்டத்தில் குயில்பாட்டு எடுபடுமா?
கூப்பிட்டுக்கொண்டேன் என் தோட்டத்திற்கே!
தோட்டம் வந்த குயிலே! என்
தோளில் தொத்தும் கிளியே!
கூட்டல் கவிதை ஆர்த்துக்
களிப்பில் எம்மை ஆழ்த்து:
(கவிஞர் கண்ணதாசன் ‘கூட்டல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
கூட்டணி அமைத்திடும்
குலவிக் கொஞ்சிடும் எனவே நம்பிக்
கொடுத்தோம் வாக்கை! ஆனால்
இந்தக் கூட்டணி
வம்பில் கூட்டணி எனினும் தமிழில்
தங்கக் கட்டணி, தளரா
சிங்கப் பாட்டணி!
எது பெரிது? கூட்டலா? கழித்தலா? பெருக்கலா? வகுத்தலா?
எனக் கேட்கும் கேள்விக்கு - திருக்
குறளொன்றை மாற்றிப் போட்டுத்
தெரிவிக்கின்றேன் புதுத் தீர்ப்பு:
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்” இது திருக்குறள்.
“வகுத்தலும் பெருக்கலும் வேண்டாவாம் கூட்டலும்
கழித்தலும் ஒழித்து விடின்”
இது என் தீர்ப்புக் குரல்!
வணக்கம்;
வாழ்க!
நேரு கண்ட ஜனநாயகம்
14.11.1970 அன்று சென்னையில் ‘நேரு கண்ட
ஜனநாயகம்’ என்ற தலைப்பில்
நடைபெற்ற கவியரங்கில்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதையுரை
★
தங்கக் குணம் படைத்த நாவலரே
தகைமைசால் அமைச்சர்களே
சங்கத் தமிழ் எடுத்துக் கவி பாட வந்திட்ட புலவர்களே
சான்றோரே
வணக்கம் ஏற்றிடுக!
வங்கக் கடலருகே உறங்குகின்ற நம் அண்ணன்
அடிதொழுது தொடங்குகின்றேன் தலைமையுரை;
புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்
அன்னை மடி சுகம் அளிக்க
சென்னை நகர் ஒளி தெளிக்க
முன்னை இருள் விலக்குதற்கு
முயல்கின்ற தமிழ் அரசு
முதுபெரியோன் காந்தியாரின்
மூத்த பிள்ளை நேருவுக்கு
முத்தமிழால் கவி தொடுக்கும்;
புவியரங்கில் புகழ்குவித்த பண்டிதர்க்குக்
கவியரங்கில் மாலை சூட்டும்.
பூத்திருக்கும் தோட்டத்தில் புகுந்துவிட்ட என்றனுக்குக்
காத்திருந்த காட்சியொன்றைக் கவியாக்கித் தருகின்றேன்;
சிரிக்கின்ற மல்லிகையின் காதுகளில் செண்பகம்தான்
ஏதோ சேதி தனைச் சொல்ல;
சேர்ந்திருவர் சாமந்தியிடம் ஓடி
அவள் செவியில் வாய் வைத்தார்; பின்னர்
மூவருமே முல்லையிடம் முனகிவிட்டு அவளோடு
நால்வருமே நந்தவனம் முழுவதும்
நடைபோடத் தொடங்கி விட்டார்.
யாரைத்தான் தேடுகின்றார் பூப்பெண்கள்? கட்டுதற்கு
நாரைத்தான் தேடியலைகின்றாரோ - என எண்ணி நான்
வியந்தேன்.
தென்றலிலே மணம் பரப்பித் தேடுகின்றார் தேடுகின்றார்
தெரியவில்லை யாரை என்று!
“முழங்காலை வலிக்குதடி” என்றாள் முல்லை.
“சிவந்ததடி என் பாதம்” எனச் செண்பகம் இளித்தாள் பல்லை.
சாமந்தி மல்லிகை இருவர்க்கும் பெருந்தொல்லை
பூங்காவின் மூலையொன்றில் புலம்பல் ஒலி கேட்டவுடன்
பூப்பெண்கள் “அதோ அதோ!” எனச் சொல்லி
அந்த இடம் பறந்திட்டார்
“பூமானே! புகழ்க்குன்றே! போனாயோ என் தலைவா?
கோமானே! கொள்கை வேந்தே! உன்னைக்
கொள்ளையிட்ட கூற்றெங்கே?
எனையெடுத்து முத்தமீந்து இதயத்தில் ஏற்றிக் கொண்டாய் -
