கலைஞரின் கவிதைகள்
கவிதை 32 · 32 / 77
காலொற்றிக் கடவுள் மீது கண் எடுத்துக்
கண்ணப்பன் வைத்ததுவும் ஒரு பக்தி
கல் எறிந்து சாக்கியரும் கடவுளையே
கண் மூடிப் பூசித்ததும் மற்றொரு பக்தி
எம்பெரும! சிவனே! என்று இறையைப் போற்றி
ஏழைகளை ஏறெடுத்தும் பார்க்காவிட்டால் எங்கே பக்தி?
ஏகலைவன் கட்டைவிரல் காணிக்கை தந்ததிலே குருவின் பக்தி
ஏகுருவே! உன் கையைக் காணிக்கை தா! என்பதுதான் புதிய
பக்தி.
பாவையவள் கணவனையே தெய்வமெனல் பழைய பக்தி;
பாவம் அவன்; பாவையிடம் மண்டியிடல் பதியின் பக்தி;
பக்தியிலே பல உண்டு அதையெல்லாம்
சக்தி மிகு வார்த்தைகளால்
சர வரிசை விடுதற்கு
முடியரசு வருகின்றார்
விரைவில் முடி! அரசு!
எனச் சொல்லாமல் அழைக்கின்றேன் - வந்திடுக!
(கவிஞர் முடியரசு 'பக்தி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
வாழ்வெனும் பாதைக்கு வந்தவரே
வழிகள் பல கண்டவரே
கல்வி பெறுக; அதனைக் கசடறப் பெறுக!
பதவி பெறுக; அதனைப் பண்புடன் பெறுக!
செல்வம் பெறுக; அதனைச் சீலமுடன் பெறுக!
கலை மணக்கட்டும் நும் வாழவில்
புகழ் குவியட்டும் நீர் தேடிப் போகாமல்
பக்தி வெள்ளம் நாடு, மொழி, மக்கள்மீது பாய்ந்தாலே
இறைவன் அருள் கிட்டி விடும்.
ஏழையின் சிரிப்பில்தான் அவன் இருக்கின்றான்
இதை மறவாதீர்!
வணக்கம்
வாழ்க!
கணக்கு
2.8.1970 அன்று சேலம் தமிழ்ச் சங்கத்தின்
ஆதரவில் 'கணக்கு' என்ற தலைப்பில்
நடைபெற்ற கவியரங்கில்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதையுரை
★
ஏலம் போல் மணக்கின்ற இன்தமிழைச் சுவைப்பதற்குச்
சேலம் நகர்தனிலே மொய்த்திருக்கும் வண்டுகளே!
ஆலம் விழுதுபோல் ஆசுகவி பாரதிக்கும் பாரதிதாசனுக்கும்
சீலமுடன் அமைந்துவிட்ட செங்கரும்புக் கவிஞர்களே!
கோலம் செய் துங்கத் திருமுகத்துத் தூமணியாம் நண்பர் கணபதியார்
ஞாலம் பெய் தமிழ் மழைக்குச் சங்கம் கண்டு
ஓலமிடு கடலலைபோல் ஓயாமல் தமிழகத்தில்
காலமெலாம் பணியாற்றச் சூளுரைத்துச் சுற்றுகின்ற
பம்பரமாம் என்றனையும் பிடித்திழுத்து- என் கவியாற்றல்
அம்பலமாய் ஆக்கிவிடத் துணிந்து விட்டார்.
கம்பனும் கூத்தனும் இருந்த காலத்தில் கண்டவர் எல்லாம்
கவிகள் எனத் திரிவதற்கு இடமேயில்லை - இந்தக்
கருணாநிதி முதலமைச்சாய் இருக்கின்ற காரணத்தால்
ஒரு நாளும் என் கவிதை இடித்துரைக்க யாருமே
துணியவில்லை அதுவரையில் லாபம்தான்
அடியேனும் அதனாலே துணிந்து விட்டேன்
கணக்காக ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்திடுக
தாமதமாய் வந்துவிட்டுப் பின்
தளுக்காகப் பேசிடுதல் தவிர்த்திடுக
எனச் சொல்லாமற் சொல்லி எனை அழைத்திட்டார்
கணக்குப்பற்றிப் பாட்டரங்கு என்றதனால் எதிலும்
கணக்காக இருக்கின்ற நானும்
எனக்காக மட்டுமின்றி என் கவிக் குடும்பம்
தனக்காகவும் வாங்கிடுவேன் வழிச் செலவு
கணக்காக! கவலற்க; கவிஞர்களே!
கணக்குதான் முன் காலம்
கல்வியிலேயே முதலிடம் பெற்றதனால்
கணக்காயர் என்றே கழறினார் ஆசிரியரை.
கணக்குகள் பலவிதம்
கணக்குப் பார்ப்பவரும் பலவிதம்
பாட்டாளியின் வியர்வையிலே
முதலாளி பார்ப்பதுதான் பணக்கணக்கு
கூட்டாளி தன் அன்புக்குக்
கூலியொன்று கேட்பதுதான் பதவிக் கணக்கு
பாவையவள் பாக்கி விழும் கடனுக்கு
அடுக்களையில் கரிக் கோட்டால் கிழிப்பதுதான்
பால் கணக்கு; தயிர் கணக்கு
பாவம் - பிள்ளை; பள்ளியிலே தப்பிக்க வேண்டுமென்று
பெற்றோர் போட்டுத் தருவதுதான் வீட்டுக் கணக்கு
பாவபுண்ணியம் பாராத அரசியல் மேதையெலாம்
பாமர மக்களிடம் போடுவதோ ஓட்டுக் கணக்கு!
மந்தையிலே மாட்டுக் கணக்கு -ஆட்டுக் கணக்கு -
மொந்தையிலே மட்டும் போடாதே கணக்கு!
ஆடிக்குத் தை ஒரு வருடம்; ஆக மாசம் பதின்மூன்றுக்கு
நூற்றுக்கு வட்டி நூற்று மூணு
ஆகமொத்தம் ஐநூற்று மூணு!
அட்டியின்றிக் கொடுத்திடுக நம்ப கடனை!'
செட்டிமார் சீமையிலே வட்டிக் கணக்கு!
பைந்தமிழ்ச் செல்வமாகும்-
பதினெண் கீழ்க் கணக்கு!
கணக்குப் பிள்ளை செய்வதும் கணக்கு - ஒரு பெண்ணை
மணக்கப், பிள்ளை செய்வதும் கணக்கு!
இந்தக் கணக்கில்
இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல் மணக்கணக்கு
இருபது பதினெட்டைக் கூட்டிச் செல்லல் காதல் கணக்கு
இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் குடும்பக் கணக்கு
இதில் குசேலனுடன் போட்டியிடல் கொடுமைக் கணக்கு!
தான் போட்ட கணக்குத் தவறியதால்
தற்கொலையை முத்தமிட்டான் இட்லர் என்போன்!
மான் போட்ட கணக்குகளை வேங்கை அழித்துவிடும்
ஏன் போட்டாய் தப்புக் கணக்கென்று
வேங்கையினை வேடன் வீழ்த்திடுவான்
இதுதான் உலகு!
சாண் போட்டால் எட்டிருக்கும் இவ்வுடலில் கணக்கின்றி
நாண் போட்டுக் கட்டியதால் நகருகின்றோம்
தேன்போட்டுப் பேசுகின்ற நாக்கொன்று கணக்காக
இருந்தாலும்
திறமையினால் இரண்டாக ஆக்கிக் கொண்டு திரிகின்றோம்
இரு கரத்தைக் கணக்காக நமக்கெல்லாம் வழங்கிவிட்டு
இறைவன் மட்டும் பலகரத்தை பாரமாய்ச் சுமப்பதேனோ?
நல்லவேளை
கணக்கின்றிக் கரங்கள்தமை மனிதர்க்குப் படைத்திருந்தால்
கள்ளநோட்டு அடிக்கும் ஓர் கை
கலப்படம் செய்யும் ஓர் கை
கன்னியரை இழுக்கும் ஓர் கை
காட்டிக் கொடுக்கும் ஓர் கை
களவுதனை நடத்தும் ஓர் கை
கத்திதனை ஏந்தும் ஓர் கை
கழுத்தறுக்கத் துணியும் ஓர் கை
இன்றைக்கு தனித்தனியாய்
இவ்வேலை நிகழ்வதாலே
இருக்கின்ற காவல் துறையாரும்
இவரையெல்லாம் அடக்குகின்றார்:
இல்லையேல்-
வகை வகையாய் முளைத்திருக்கும் கைகள் எல்லாம்
கொலை கெலையாய்ச் செய்து விட்டுக்
கூத்தடிக்கும்! நாடு கொந்தளிக்கும்!
கணக்காக வாழவேண்டும் மனிதர் என்றே
ஆற்றிலே போடினும் அளந்து போடென்றார்.
கணக்கின்றி ஏதுமில்லை!
கால் வைத்தார் நிலவில் என்று கம்பீரமாய்க் குரலெழுப்பக்
கணக்காகச் செலவு எத்தனைக் கோடி; விஞ்ஞானக்
கணக்கினிலே சிறு தவறு விளைந்திட்டாலும்
கால் வைத்தா திரும்பிடுவர்? விண்வெளியில்
கால் வேறு தலைவேறாய்ச் சிதறியன்றோ போயிருப்பார்!
கணக்கின்றி என் கணவர் முத்தமீந்தார் என ஒருத்தி
கட்டிலோரம் ஒலிப்பதிவு செய்திருந்தால்
அதற்கும் ஓர் கணக்கு உண்டன்றோ?
அதனாலே; கணக்கின்றி ஏதுமில்லை!
நானும்.... காலக் கணக்கின்றிக்
மொழிந்திட்டாலும்
கவிதை வரி கூறிக்கொண்டே இருந்துவிட்டால்
கணக்குப் பற்றிப் பாடவந்த கவிஞருக்குக் கோபம்
கணக்கின்றி வந்தாலும் வந்துவிடும்!
