உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 31 · 31 / 77

வந்திருக்கும் புவியரசு பாடக் கேட்போம்.

(கவிஞர் புவியரசு 'கல்வி' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து பதவி;

அடவியிலே ஆயுள் வரை இருப்பதுவும் பெரிதல்ல

குளவி நுனிக் கொடுக்கினிலே இதழ் பொருத்தி

வலிபொறுப்பதுவும் பெரிதல்ல - இந்தப்

பதவியிலே இருப்பதுதான் பெருந்தொல்லை கச்சியேகம்பனே!

கோபுரத்தின் உச்சியிலே இருக்கின்றேன் என எண்ணிக்

குடல் கருகும் பேர்வழிகள்

கோபுரத்து மாடத்தில் கூடு கட்டி வாழ்கின்ற புறாக்கூட்டம்

கொண்டிருக்கும் மகிழ்வுகூட எனக்கில்லை என அறிந்து

கூறிடுக அனுதாபம்! கொண்டிடுக நட்புணர்வு!

பதவியெனும் கொடுங்கத்தி சிலபேரின் கழுத்தறுக்கும்; பிறர்க்கு

உதவி புரிவதற்கே பதவியெனப் பொறுப்பேற்றால்

உயிர் பறிக்கும் கத்தியாலே பல உயிர்கள்

காத்திடவும் கூடுமன்றோ?

பழமறுக்கும் கத்திதான் பதவியென்போம்

பழிவாங்கும் வாளாக இருத்தல் கேடு!

சிரஞ்சீவியாய்ப் பதவியில் இருப்போமென்று

செருக்குமிகக் கொண்டலைந்த லூயி மன்னன்

சிரம் சீவிப் போட்டுவிட்டுப் புத்தாட்சி கண்ட கதை

மறக்க மாட்டோம்.

அறங்கூறும் வள்ளுவர்க்கு வாய்த்த நல் தொண்டர்களால்

புறங்கூறல் புறக்கணித்துப் புவியாண்டால் - நம்

திறங் கூறப் புலவர் கூட்டம் திரண்டு வரும்

தேசம் வாழ்த்தும்

உடும்பு போல் பதவியிலே ஒட்டிக் கொள்வோன்

உடும்பு வேண்டாம் கை விட்டால் போதுமென்பான்

கரும்பு போல் இனிக்குதென்று கடிக்கத் தொடங்கிக்

கரிக்குதப்பா உப்பாகஎனக் கழன்றோர் உண்டு!

பதவி பற்றிப் பாடுதற்குப் பாவலராம் ரகுமான் இருக்கையிலே

பலவரிகள் நானேதான் படிவிட்டேன் - இது

பதவியிலே உள்ள மோகமல்ல;

பாட்டினிலே உள்ள மோகமென்பேன்

நாட்டினிலே நற்கவிகள் பெய்துவரும்

நம் நண்பர் ரகுமானின் நாவெல்லாம்

பதவித்தேன் சொட்டுவதைப் பார்த்திடுவோம்

பதவிதனைப் பதம் பிரித்தால்

"ப" கரம் நீங்கி - தவி! தவி!! என்று சொல்லும்;

தவிக்கின்றோம் அதனாலே பதவி என்றால்!

பாடட்டும் அவர் பாட்டை;

பிறகு பார்ப்போம்:

(கவிஞர் அப்துர் ரகுமான் 'பதவி' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து செல்வம்;

"செல்வோம் செல்வோம்" என்று உருண்டு

செல்லுவதால் 'செல்வம்' என்பார், பண்டிதர்கள்

சீமான்கள் இரும்புப் பேழையிலே

'செல்' அரித்துப் போகுமட்டும் இருப்பதாலே

செல்வம் எனச் செப்புதலும் பொருத்தம்தானே!

இலக்குமிதான் செல்வத்தின் தெய்வம் என்பார்

இலக்குமிகள் ஒருகோடி வறுமையிலே உழல்கின்றார்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் என்றவர்தான்

பொருளிலார்க்கு இவ்வுலகமில்லையெனப் புரிய வைத்தார்

செவிச்செல்வம் போதுமென்று நிறைவு கொண்டால்

செவியார நாலு 'வாழ்க!' போட்டுச்

சென்று வருக என்றிடுவார் வழிச்செலவு வழங்காமல்

வானொலியார்!

செல்வமுடையார் சீதக்காதி போல் இருத்தல் வேண்டும்

செழுந்தமிழன் குமணன் போல், பாரிபோல்

செகமதிலே சிரிக்க வேண்டும்

செல்வமுடையார்க்கு அவர் இலக்கணம்!

செல்வ 'முடையார்'க்கு

"ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்தது இல்"

என்ற குறள்தான் இலக்கணம்!

செந்நாப் புலவர்க்கெல்லாம் செல்வ மழை கொட்டுதற்கு

சிறப்புறு தமிழண்ணல் இருக்கும்போது

செல்வமைனைத்தும் நானே தட்டிக்கொள்ளல் முறையே அல்ல!

செல்வம் தருக என அழைக்கின்றேன்; தந்திடுக தமிழண்ணால்:

(கவிஞர் தமிழண்ணல் 'செல்வம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து கலை;

.........

கவியரங்கம் முடிந்த பின்னர் செய்யும் வேலை

கலை அரங்கை! என்பார் நன்றி கூறி!

கலைத் திலகம் என்றாலோ பட்டமாகும்!

கலை - திலகம்! என்றாலோ மங்கை பட்ட மரமாவாள்!

கலை பிணைக்கும் அரசியலை இக்காலத்து!

கலை பிணைக்கு - அரசியல் ஏது எக்காலத்தும்!

கலை, பிணைக்குத் தன் நிழலை அளித்த செயல்

கலித்தொகையில் காதல் காட்சி

தன் நிழலைத் தானே கண்டஞ்சும் காட்சி

கலையுலகில் நாள்தோறும் காணும் மாட்சி

கலை குறைந்தால் மதி குறையும்

காண்கின்றோம் நாள்தோறும் வானவெளியில்!

கலை நிறைந்தோர் உள்ளத்தில் கருணை உண்டு

கவலைகளை உணர்கின்றற பண்பும் உண்டு

கண்ணீர் விடுகின்ற ஏழைதனைக் காணும்போது

கலைஞன் தான் படைத்த பாத்திரத்தைக் காணுகின்றான்

கற்பனை ஓட்டத்தில் அவன் நிலையை அறிகின்றான்

கவலைதனைத் தீர்ப்பதற்குக் கடமைதனைச் செய்கின்றான்

கலை கலைக்காக எனக் கதைத்தோர் ஓய்ந்து விட்டார்

கவின் ஒளி வீட்டுக்காக; விளக்குக்காக அல்ல என

விளக்கம் பெற்றார்!

கலைகளிலே எத்தனையோ வகையுண்டு - தொகையுண்டு

கவின்கலை

நுண்கலை

ஆடற்கலை

பாடற்கலை

ஆயகலை அறுபத்து நான்கு கலை

வட கலை, தென் கலை தவிர!

இத்தனை கலைகளையும் முத்தனைய தமிழ் எடுத்து

இவண் வழங்க வந்துள்ளார் என் நண்பர் வாலி என்பார்

வாலுடையவான் வாலி என்று சொல்வது தவறென்று

காட்டுதற்கே

வாலில்லா வாலியவர் வந்துள்ளார்

வாலுடையோன் வாலி என்றால்

காலுடையோரெல்லாம் காலிகளோ! இல்லை இல்லை!

வண்ண மணித் தமிழால்

எண்ணச் சரம் தொடுக்க

வந்திடுக வாலியாரே:

(கவிஞர் வாலி 'கலை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து புகழ்;

கடற்கரையில் தலைநீட்டும் நண்டுகளைக் கை நீட்டிப்

பிடிக்க ஓட

உடனவைகள் போன இடம் தெரியாமல் பதுங்கி விடும்;

புகழும் அதுதான்!

தேடி அணைத்தால் ஓடி விலகும்

கோடி கொடுத்தால் வாடி வதங்கும்

மாடிகள் கண்டு மயங்காது

மூடி மறைத்தால் தயங்காது

நாணயமுள்ளவனை நத்திக்கிடக்கும்

ஆணவமுள்ளவனை எட்டி உதைக்கும்

தியாகியின் கால்களில் மலர்கள் கொட்டும்

தீரனின் சேவடி தொழுது வணங்கும்

அரியதாம் புகழின் பெருமைகள் பற்றி

மரியதாசெனும் மாண்புறு கவிஞர்

இனிய தாம் மொழியில்

இயற்றுவார் கவிதை:

(கவிஞர் மரியதாசு 'புகழ்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து பக்தி;

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

வைத்துப் படைத்தல் பக்தி எனிலோ

சற்றும் ஒப்பார் ஆண்டவன் என்போர்

திருத்தலம் கோயில் திருக்குளமெல்லாம்

தீர்த்த யாத்திரை செய்வதும் பக்தி

திருத்தலம் கோயில் திருக்குளமெல்லாம்

திருமுடன் மனத்தில் நிறுத்தலும் பக்தி