உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 30 · 30 / 77

'சௌமியா' மறைந்து, 'சாதாரண' வந்தது போல்

-அந்தச்

சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன்

அரங்கின்றி வட்டாடுகின்றார் அரசியலில் பலபேர்.

குரங்கின்றிச் சேட்டைகள் ஏராளம் காண்கின்றோம் சமூகத்தில்

சிரங்கொன்றைச் சொறிந்து விட்டால் பலவாய் ஆகும்.

தரங்குன்று மனிதரையும் கடிந்து கொண்டால் அவ்வாறேதான்!

இந்நிலையில் இச்சாதாரணன்

புவியாள வந்தாலே பொறுப்பதில்லையென்னும் போது

கவியாளவும் வந்து விட்டால் என் கதிதான் என்னே?

அவிசொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வோன்

அந்நாள் ஆள்வோன்.

கவி தெரிந்து ஆயிரம் பாடல்கள் புனைவோன்

இந்நாள் ஆள்வோன்.

பொறுக்குமா மனம்?

அடுக்குமா இது?

தடுக்கலாம் இதை!

அடக்கலாம் உடன்!

தகர்க்கலாம்! கை

முறிக்கலாம்! கால்

முடக்கலாம்! எனப்பலர்

முனகலாம்! ஆனால்

"இருள் விலகிப் பொழுது விடியுமா?

ஏழைக்கின்னும் உதவிட முடியுமா?" என்று இந்தச்

சாதாரணன் சிந்திக்கின்றான்.

பூதாகாரப் பேயிருள் விலகிவிட்டால்

தீதான தனியுடைமைப் பற்றற்றுச்

சீரான பொதுவுடைமைத் தத்துவங்கள்

ஏராளும் மனிதர் வாழ்வில்

தாராளமாயெங்கும் தங்கிடுமே - எனச்

சாதாரணன் சிந்திக்கின்றான்

வாழ்வெனும் பாதையை வளப்படுத்த

வன்முறையால் ஆகாதெனல் எம் கொள்கை

தாழ்வு உயர்வெனும் பேதம் நீங்கத்

தண்ணொளி சேர் அமைதி தேவை.

புரட்சியெலாம் மனப்புரட்சி!

கிளர்ச்சியெலாம் உளக்கிளர்ச்சி!

எழுச்சியெலாம் எழுத்தில் பேச்சில்!

எண்ணமெலாம் சமதர்மம் செயல்படுத்த!

இவையிருந்தால் என்றைக்கோ வந்திருக்கும்

ஏற்றமிகு பொற்காலம் - புதுமைக்காலம்.

வாழ்க்கையென்பது என்னவென

உணர்ந்த மனிதன் இருக்கின்றானா?

பறவையும் விலங்கும் ஊர்வன மற்றும்

"உயிர் வாழ்கின்றன" என்போம்.

பகுத்தறிவு மனிதன் வாழவில்லை; அவன்

வாழ்க்கையை நடத்துகின்றான் என்போம்.

நடத்துகின்றோம் நாம்தான் வாழ்க்கையை என்ற

நம்பிக்கையில்லான் மனிதனே அல்ல; ஏதோ

கடத்துகின்றோம் நாளை என்று

நகர்த்துகின்றனர் பல பேர் வாழ்வை

இருவர் தெருவில் சந்திக்கும்போது

"என்னப்பா சுகமா?" எனக் கேட்பின்

"ஆமாம் சுகந்தான்" என்ற பதில் வந்திடுமோ பகர்ந்திடுவீர்!

"ஏதோ இருக்கின்றேன்" என்றிழுத்து

ஏக அலுப்பில் பதில் அளித்து நகர்கின்றார் நண்பரை விடுத்து!

ஏனிந்தச் சோர்வு வாழ்க்கையிலே? இதழ்த்

தேனீந்த மனைவி பொய் என்பார் அவட்குத்

தானீந்த குழந்தை பொய் என்பார்

'ஆ' நீந்த வேண்டுமே சம்சாரக் கடல் என்பார்

எப்போது இதெல்லாம் எனக் கேட்டால்

தப்பாது வயது சொல்வேன்; எழுபதுக்கு மேல்தான்!

பாவம்

இருபதுக்கும் முப்பதுக்குமிடையில் கூட

இன்பமெனில் பேரின்பந்தான் என நவிலும்

இளந்துறவி உண்டே என்பீர்

இதில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே எனக்கு ஐயம்!

இவரெல்லாம் பஞ்ச புலன் அடக்கவில்லை

இவர்க்குப் புலன்தான் ஒன்றிரண்டு பஞ்சமென்பேன்

இன்னும் சிலரோ;

அனைத்தும் பொய் என்று பகலில் கூறி

அனைத்தும் உண்மையென இரவில் சொல்வார்

வாழப்பிறந்தவன் தான்மட்டுமென்று.

தாழப்பறந்து மீன்கொத்தும் பறவை போல்-

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே செய்தல் வாடிக்கையாம்;

திருந்திச் செயல்படுதல் அவர்க்கு நன்று! அல்லால்

திருத்துகின்ற சட்டங்கள் திருத்திவிடும்;

தீயர் கொட்டம் நிறுத்திவிடும்.

குட்டக் குட்டக் குனிகின்ற குப்பனுக்கோ

குலதெய்வம் துணையென்ற நினைப்பினிலே

குனிந்து குனிந்து கூன் மேவும்;

கூனன் நிமிர்வதற்கே மருந்துகள்

கூடிய விரைவில் வரும். அவன்,

குலதெய்வம் விளக்கேற்றும் புதுவீட்டில்!

இனிக்கின்ற சர்க்கரையைக் குழந்தைக் கூட்டம்

அள்ளி அள்ளி வாயில்

நிறைக்கின்ற காட்சிதனைக் கண்டிருப்போம்.

சுவைக்கின்ற இன்பத்தை அளவறிந்து

நுகராமல்... மாடு

மிதிக்கின்ற சேறுபோல் ஆக்குகின்றார்

சிலபேர் தம் வாழ்வை!

வேண்டிய மட்டுமே உணவருந்தி மகிழும் வேங்கை -பசி

தாண்டிய பின்னும் மான்களை விழுங்கி மயங்கும் பாம்பு!

காடகத்தில் இரு காட்சி கண்ட பின்னும் - வாழ்வு

நாடகத்தில் நடிக்கின்றோர் கற்கவில்லை - என்ன செய்ய?

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

ஆனது ஆகட்டுமென்று

அறப்போர் புரிவோன் அரிமா வீரன்;

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

ஆனது ஆகட்டுமென்று

அயராதின்பம் அனைத்தும் துய்ப்போன்.

வீரனே அல்ல; விலங்கினும் கீழோன்!

தன் வீடு-தன் மனைவி-தன் பிள்ளை-தன் சுற்றம்

என்றிருப்போன் நடத்துவதும் வாழ்வல்ல

எம்நாடு -எம்உரிமை - எம்மொழியாம்-அனைத்தும் காக்க

என்னாலே இயன்றதெலாம் செய்திடுவேன்

என்போன்தான் பொதுமனிதன்!

ஆதலால்

மதுவுண்ட வண்டுபோல் தேன் குடத்தில் மிதந்திடாதீர்

எதுவேண்டும் எனக்கென்று துறவி மொழி' புகன்றிடாதீர்

எல்லாமே எனக்கென்று ஏழைகளைப் பிழிந்திடாதீர்!

வாழ்வென்னும் பாதையிலே வழிகாட்டும் பலகைகளாம்

கலையும் கல்வியும் கவிஞர்கள் காட்டுவர்

பதவியும் பக்தியும் பாவலர் விளக்குவர்

புகழும் செல்வமும் புலவர்கள் பொழிவர்

முதலில் கல்வி;

கற்றது கைம்மண் அளவென்பர்

கற்றவர்க்குக் கையில் மண்

கல்லாதார்க்கோ தலையில் என்பேன்!

கைமண்ணால் பானை வனைவர்

தலைமண்ணோ சூளைக்கும் ஆகாதே!

'இளமையிற் கல்' என்றால்

இளமையிலே கல் எடுத்து எறிதல் என்று

ஏன்தான் சிலபேர் பொருள் கொண்டார்?

கல்விசிறந்தவர் கம்பர் என்பர்

கல்வியிற் சிறந்தவர் வம்பராதல் தீதன்றோ?

முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதோர் எனில்-கற்றவரோ

முப்பத்திரண்டு புண்ணுடையராய் விளங்கல் ஏனோ;

சிந்தித்தீரா!

கல்லூரி கண்டவன் நானல்ல எனினும் என் கையில்

கல் ஊறியதில்லை எப்போதும்!

கவியூறும் நெஞ்சில்

கலையூறும் கொஞ்சம்

புவியேறப் புகழேறும்

தமிழூரை ஆள்வதற்குத் தமிழில்

கற்றது போதுமென்று

உற்றவர் சொன்னதாலே

ஒப்பினேன் உளமின்றி - இன்று

தப்பினேன் உம் தயவால்!

வாழ்வெனும் பாதையிலே

வறட்டுக் கதைபேச நேரமில்லை:

வளமான 'கல்வி' பற்றி