உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 29 · 29 / 77

தன்னலப் பேராசைதான் உட்பகைக்கு ஆணிவேராம்;

வன்முறையும் வளர்ந்துவிடும் கிளைகளாக!

ஒற்றுமையின்மையினால்

உதயமாவது தான் ஏற்றத் தாழ்வாகும்!

இத்தனைக்கும் அறிவின் வறுமைதான் காரணமாம்; எனப்

புத்தரது எண்ணங்கள் தந்திடுவார் சத்தனைய நற்கவிஞர்!

வறுமைதனை விரட்டிடவே இயக்கம் காண

அருமைமிகு நேரமென்பார் சிலபெரியோர்

எருமையன்றோ வேகத்தில் வறுமைப் பேயும்?

எட்டடி கொடுத்தால் எடுத்தடியும் வைத்திடாதே!

விரட்டினால் திரும்பி வரும்

மிரட்டினால் மீண்டும் வரும்

வாய்மைக்

குறட்டினால் பல்பிடுங்கி வீழ்த்திவிட்டால்

புரட்டினாலும் எழுந்திடாத உடலாகும் உயிரற்று;

வறுமையிலே கற்பனைகள் செழிக்குமென்பார்;

முத்து முத்தாய்க் கவி பிறக்கும் என நவில்வார்;

சத்தி முத்தப் புலவரையும்

சாத்தக் கவிராயரையும்

நித்த நித்தம் அலைகின்ற பாணரையும்

கொத்துக் கொத்தாய் உதாரணங்கள் தந்திடுவார்

செழிப்பினிலே கவிபிறந்த கதையுந்தான் மெத்தவுண்டு.

மன்னன் அதிவீரராமன் என்ன;

தென்னவனாம் பாண்டிய வேந்தன் என்ன;

கன்னல் மொழிக் கவிப்புலவச் சிங்கமன்றோ?

வறுமையினால் கவிபெருகும் என்று சொல்வோர்

வளமையினை ஏழைக்கு

அனுமதியாப் பெருஞ்செல்வர்

இதனையெலாம்

புலமையினால் புலப்படுத்தத்

திறமைமிகு கி.வா.ஜ. வந்திடுக!

(கவிஞர் கி.வா.ஜகந்நாதன் 'வறுமை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

வறுமை அகன்றது வாட்டம் தீர்ந்தது

அருமை அருமை அன்பரின் கவியெனக்

கருமை விழிகள் விரிந்திடப் புகழ்வோம்! அதற்குள்

கொடுமை யொன்று புகுந்திடக் கண்டோம்

அடிமை கொண்டிடும் தன்னல மாயை

பேராசையுடனே வருவதை எதிர்த்துப்

போராசையுடனே கணைகள் தொடுக்கச்

சீரார் புலவர் அப்துல் கபூரும்.

கூராய்த் தமிழைக் கொண்டே வருவார்.

நெஞ்சை

(கவிஞர் அபதுல் கபூர் 'தன்னலப் பேராசை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

சென்று சென்று மீண்டுவரும் தன்னலத்தைச்

செந்தமிழால் சாடியது

நன்று நன்று நன்றேயென்போம்! அடுத்து

உட்பகையை ஒருகை பார்ப்போம்

கட்புலனில் எட்டாது காய் இலையில் மறைதல்போல்

நட்பிடையே தோன்றுமிது

நாளும் ஒரு வடிவெடுக்கும்;

தேளும் வெட்க விஷம் கலக்கும்!

வாளும் வாளும் உரசுவது வெளிப்பகையாம்

தோளும் தோளும் இணைந்திருக்கத்

துரோகச் செயல் புரிவதுதான் உட்பகையாம்

அப்பகையைத் தேடுதற்கும்

அதைக் கண்டவுடன் சாய்ப்பதற்கும்

தீரனுண்டு கவியரங்கில்

தூரன் என்பார் அவர் பேர்தான்

ஈரமுள்ள நெஞ்சத்தார் - துள்ளும்

வீரமுள்ள கவியுரைப்பார்.

(கவிஞர் பெரியசாமித்தூரன் 'உட்பகை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

ஓடிற்று உட்பகையும் - இடம்

தேடிற்று நமக்குள்ளே நுழைந்துகொள்ள;

வாடிற்று முடியாமல்;

ஆடிற்று அடங்குதற்கே!

கோடிட்டுக் காட்டுகிறேன்

பாலிட்ட நஞ்சு போலப்

பக்குவமாய் எட்டிப்பார்க்கும் பின்னர்

ஆலிட்ட விழுதுபோல அங்கிங்கே பரவிவிடும்; அதனாலே

தாழிட்டுத் தடுத்திடுவீர் உட்பகையை....

தனிப்பண்பு காத்திடுவீர்! அடுத்து:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்ற கொள்கைதனைக்

கொன்று போட்டுக் கொக்கரிப்பார் செயல்மறுக்க

அன்று பார்த்த இளமையுடன் இருக்கின்ற தமிழ் எடுத்துத்

தின்று பார்த்தால் வெல்லமென இனிக்கின்ற

யார் அவர்?

கவி தொடுக்க ஒருவர் உண்டு...

உப்பின்றி அறுசுவை யுண்டோ? கவி

சுப்பின்றி இந்த அரங்குண்டோ?

கொத்தமங்கலத்தார் - ஒற்றுமையின்மையைக்

கொத்திடவே வருகின்றார்.

(கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு 'ஒற்றுமையின்மை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

வேற்றுமையில் ஒற்றுமைதான் வேண்டுமென்று

வெகு காலம் விளக்குகின்றோம்

விளங்காதார் துடிக்கின்றார்

வெடிகுண்டாய் வெடிக்கின்றார்...

விண்முட்டும் கமுகோடு போட்டி போட

மண்விட்டு எழுந்திருக்கும் தென்னையுண்டு

கண்பட்ட இடமெல்லாம் கேரளத்தில் நேற்றுத்

தென்பட்ட காட்சிதனைச் சொல்கின்றேன்; அதுபோலே

ஏற்றமிகு நிலையோடு போட்டி போட்டுத்

தோற்றதில்லை தாழ்வென்னும் நிலைகொண்டார் சோவியத்தில்!

நாற்றமிகு உயர்வு தாழ்வு நலிந்து போக

ஆற்றல்மிகு கவிதருவார் தங்கராசன்:

(கவிஞர் தங்கராசன் 'ஏற்றத்தாழ்வு' பற்றிப் பாடி முடிக்கிறார்.)

தலைவர் கலைஞர்:

ஏற்றத் தாழ்வெல்லாம் எதற்கென்று குமுறிக் கேட்டு, அந்த

நாற்றங்கால் தனையே தூர்த்துப் போட

வன்முறைதான் ஆகாதென்போம் - அண்ணல் காந்தி சொன்ன

நன்முறைதான் வேண்டுமென்போம்!

மென்முறையால் வீடு காக்கும் சவுந்தராதான்

தன் முறை வந்ததென்று அறிந்திடுக; கவிபாட;

(கவிஞர் சவுந்தரா கைலாசம் 'வன்முறை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

முடித்துவிட்டீர் கவியரங்கம்; அதற்குள்ளே - தேன்

குடித்துவிட்ட வண்டுபோல் சுழல்கின்றேன்!

நீவிர் எழுதியவை மீண்டும்

படித்துவிட்டுப் பரிசளிக்க நான் என்ன கம்பனுக்குப் பொன்

அவிழ்த்துவிட்ட சடையப்ப வள்ளல் தானோ? இல்லை.

இல்லை...

இடித்துவைத்த புளிபோல் இருப்பார் சில ரசிகர்;

கடித்துவிட்ட செங்கரும்பை விடவா முடியும்?

கவியரங்கில் தேனமுதை

வடித்து வைத்த புலவர்களே!

எளியோன் வாழ்த்து ஏற்றிடுக

எழிற் பொங்கல் திருநாளில்

வணக்கம்.

வாழ்க!

வாழ்வெனும் பாதையில்

14.4.70 அன்று சென்னை வானொலியில்

"வாழ்வெனும் பாதையில்" என்ற தலைப்பில்

நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதையுரை

★

வணக்கம்

வந்திருக்கும் அனைவர்க்கும் - கவி

வடித்தளிக்கும் புலவர்க்கும் வணக்கம்

நித்திரையில் ஆழ்ந்திருந்த நீள்வையம்

நீலவிழி ஒளிகாட்டி நடைபோட்டு

முழுமூச்சாய் ஆண்டுபல உருண்டுருண்டு

முத்திரைகள் பலவற்றைப் பதிப்பதற்கு

சித்திரைத் திங்களிலே சிரிக்கின்ற

செழுமை கண்டோம் - பெருமை கொண்டோம்

சௌமியதான் சென்ற ஆண்டு நம்

சௌமியனைத் தமிழர்க்குத் தந்த ஆண்டு

சௌமியாவை அண்ணனுமே புனைப்பெயராய்ப் - பூண்டு

சுவை சொட்டக் கதை குவித்துப் போனார் - மாண்டு!