உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 28 · 28 / 77

ஏவிய அரசாணை திரும்பப் பெற்று இன்பக்

காவியத் திருநாளாம் பொங்கலன்று - அன்றைக்குக்

கூவிய குயில்கள் எல்லாம் மீண்டும் கூவ - மக்கள்

தூவிய மலர்மலைமேல் மாத்தமிழாள் நடந்துவர - நம்

மாநிலத்து மாந்தரெல்லாம்

மா, பலா, வாழையெனும் முக்கனியின் சுவையினுாடே

தித்திப்புப் பொங்கல் தின்றிடவே வேண்டுமென்று எம்

சக்திக்கு ஏற்றவாறு உழைக்கின்றோம்; சற்று,

புத்திக்கும் கூர்மை தீட்டக் 'கவியரங்கச்

சாணைக்கல் பக்கம்

வா;' என்றார் வானொலியார்

இருப்பதாலே வந்துற்றேன்

புத்தி இருப்பதாலே வந்துற்றேன் புதிய

கூர் ஏற்றிக் கொள்வதற்கு!

சீர் ஏத்திப் பாடுகின்ற செந்தமிழர்

வேர் ஒற்றிக் கிடக்கின்ற பலாக் கருத்தைச்

சுளை சுளையாய் எடுத்து வைக்கச் சுற்றுமுள்ளார்

தளை தொடையாம் யாப்பெல்லாம் கற்றிலன் நான்

வளை அணியாப் பெண் கரம் போல் வடித்தளிப்பேன்

சில பாடல்

பொறுத்தருள்வீர் புலவர் ஏறே

அழகு தமிழ்ப் பொங்கல் நாளில்

அன்புப் போர் முரசமெனும் தலைப்பினிலே

அறுவர் இதோ பாடவந்தீர் அய்யன்மீர்!

குகனொடும் ஐவரானோம் என்றதுபோல் இந்தத் தமிழ்

மகனொடும் எழுவரென எண்ணிக் கொள்க.

எழுவர் நாம் இவ்வரங்கில்

'எழுவாய் தமிழா' என்றே

உழவர் நாள் கொடி ஏற்றிடுவோம்!

மழவர் நிலம் காப்பதற்கு

மார் தட்டிச் சூள் உரைத்திடுவோம்!

பொங்குக பால் என்று முழங்குகின்றோம் இந்நாளில்; அது

பசும்பாலா? அல்ல; அல்ல!

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் தந்த பால்

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்

அதற்கும் அப்பால்

வேறென்ன பால் பொங்க வேண்டும்?

"கன்னல் கொண்டு வா' என்றேன் சுவைப்பதற்கு—

அவளோ பிள்ளைக்

கனியமுதைத் தூக்கித் தருகின்றாள்; அதுதான் இன்பம்.

''வாங்கி வருக மஞ்சள்" என்றாள்! "எதற்காக? அதனை

வழித்திடலாம் உன் முகத்தில்!" என்றேன்.

என் வீட்டு மகிழ்ச்சி கண்டு

எதிர் வீட்டார் இஞ்சி தின்னல் ஆகாதென்று அதனை

வேரோடு பிடுங்கிப் பொங்கல்

வேகின்ற பானையிலே கட்டுதலே இந்நாட் சிறப்பாம்!

முட்டுகின்ற மாட்டுக்கும் பொங்கல் உண்டு

மாடு பிடிக்கத் தோள்

தட்டுகின்ற வீரர்க்கும் பொங்கல் உண்டு.

காளைதனை வென்றவனே எனக்கேற்ற காளை எனப்

பாளை நகைப் பாவையவள் பகர்ந்ததெலாம் பழைய

நாளை நினைப்பூட்டும் இலக்கியமாம்.

ஒளி வரவால் இருள் மறையும்

உளி வரைந்த சிற்பங்கள் பளபளக்கும்

களி நடன மயில்களெலாம் கலாபம் காட்டும்

தெளிதேன் தருக என இழுத்திடுவான் குஞ்சி;

துளி தேன் தந்துவிட்டுப் பறந்திடுவாள் வஞ்சி!

பொங்கல் நாளில் புதுப்புது இன்பம்

எங்கணும் தோன்ற எழுந்தான் கதிரோன்!

எதையும் அன்பால் அணுகி வென்றிட

உதய சூரியன் உயர்ந்தான் இன்று!

பார்த்தீரோ பசுமை வெள்ளம்

பச்சைப் பாய் விரித்தது போல் காட்சி என்னே!

சிந்துபாடும் சிறுநதியின் சிரிப்பொலி கேள்!

சீறிவரும் வனவேங்கைக் காட்டாற்றுத் தண்ணீர்

மீறி வரவொண்ணுமோ அணைகள் தாண்டி!

கடன் பெற்று வேளாண்மை புரிகின்ற முயற்சிக்கெல்லாம்

உடன்பட்டு உறுதுணையாய் நிற்கின்ற அரசு காண்க!

உரம் மலிவாய் வழங்குதற்கும் ஈகைக்

கரம் வேண்டுமன்றோ! அதனைத்

தரமறிந்து அண்ணன் தந்துவிட்டே போயுள்ளார்

சிரம் ஆட்டி எமை ஏற்காமல் சிலர்

ஓட்டைகளைக் காட்டுகின்றார். நாத

சுரம் காட்டும் ஓட்டையெலாம் நல்லிசைக்கே என்றிடுவேன்

அசையும் விரலாக நீர் இருந்தால்

இசையும், தென்றலாய் மாறிவிடும் இற்றை நாளில்!

வான் முட்ட எழுந்து நிற்கும் ஆலையிலே

தான் மட்டும் வாழுதற்குச் சிலர் இருந்தால்

பேன் பிடித்த தலையாகும் நமது நாடு

நான் படித்த மருந்ததற்குச் சமதர்மந்தான்

அந்நிலைதான் வருதல் மட்டும்

இந்நிலையில் உழைப்போர் வாழ வகைகாணல் மிகவும் நன்று!

வாய் திறந்து சூளுரைப்போம் இன்று

அதற்கு

பூட்டுப் போடவில்லை பொதுவுடைமைக் கொள்கைதனைப்

புறக்கணித்தும் பேசவில்லை.

ஏட்டுக்குள் இருக்கின்ற அக்குறிக்கோள்

நாட்டுக்குள் மெல்ல மெல்ல வந்தேதான் தீர வேண்டும்.

பாட்டுக்குள் பொதிந்துள்ள கருத்தெல்லாம்

சமதர்மப்

பரவுமுன்னே பாங்காகத் தொழில் அமைய நம் நாட்டில்

கூட்டான அமைப்புகள் பெருகிடவே

பொங்கல் நாளில் புதிய பாதை ஏற்றிடுவோம்!

இனிய பாதையிதை இடைக்கால பாதையென்போம்; பின்னர்

கனிய வைப்போம் கற்களையே

உழவரது வியர்வையினால் சூல் கொண்ட

கழனித்தாயின் வயிற்றில் மகளாய் வந்து

அனைவரது சீராட்டும் பெற்றுக் கொண்ட கதிராம் மங்கை

மணவறையில் பெண்போலத் தலைகுனிந்து

நிற்கின்றாள் பொங்கல் நாளில்

தமிழர் என்போர் மகிழ்கின்றார்;

தைதை என்றே குதிக்கின்றார்!

தண்ணொளி சேர்ப்பது தையன்றோ?

தையல் என்றால் பெண்ணன்றோ?

தைப்பதும் ஒருவகைத் தொழிலன்றோ?

முள்ளாய்த் தைப்பார் சிலபேர்கள், நமக்குக்

குல்லாய் தைப்பார் சிலபேர்கள்!

தமிழர் என்போர் மகிழ்கின்றார்;

தைதை என்றே குதிக்கின்றார்! என்னைக்

கவி, தையென்றே அழைக்கின்றார்

தைத்தல் எனது தொழில் அல்ல

புதைத்தல் எனது தொழில் என்பேன்.

தீமையைப் புதைத்தல் தீதறு செயலாம் - இய

லாமையைப் புதைத்தல் இனிப்புறு தொழிலாம் - அறி

யாமையைப் புதைத்தல் அறிவார் தொழிலாம்

ஊமைகள் வாழ உயிரைக் கொடுத்த

உத்தமன் காலில் முகத்தைப் புதைத்தல் என்றன் தொழிலாம்.

பட்டா இரு லட்சம் பெற்றவர்கள் வாழ்த்துகிறார்

தட்டாமல் தண்ணீர் தருவதற்கும் திட்டமிட்டு

எட்டாத பழமென்று இருந்தோர்க்கும் வளவங்கி

முட்டாது கடன் தரவே தனி முயற்சி!

கிட்டாதோ அதிகாரி பார்வையென அலைந்த துயர்

வெட்டாமல் வெட்டியின்று மாதமோர் நாள்

கட்டாயம் சிற்றுார் சென்று மனுநீதி வழங்குகின்றோம்!

பொன்சாரம் இட்டழைக்கும் பூமான்கள் வீட்டுக்கே

மின்சாரம் போகுமென்ற நிலைமாற்றி

எழுபத்திரண்டுக்குள் எங்கணுமே மின் இணைப்பு

என் தமிழ்த் திருநாட்டில் ஏற்படவே உழைக்கின்றோம்!

இவையெல்லாம் புகழ்ந்துரைத்துப் பொங்கல் நாளில்

தொகை தொகையாய் மாலை வேண்டாம்; பரிசு வேண்டாம்:

அவைப் புலவீர்; அழகுறவே ஓர்பாட்டு நீர்பாடின்

பகைப் புலம் ஒழித்த பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்பேன்.

குகைப் புலியை முறத்தாலே எதிர்த்த நாட்டில்

திகைப்புற்று நிற்போமோ வன்முறையை வீழ்த்திக் காட்ட!

புகைக் கருத்துப் போக்கிவிட்டுப் புதுக்கருத்துப் போற்றிடுவோம்

பொங்கல் நாளில்! கிழங்களின்

சிகை கருத்தால் சாயப் பூச்சென்று சொல்வோம்; - பொய்யர்

தம்

மிகைக் கருத்தை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளல் தீதேயன்றோ

இலக்கியங்கள் பயின்ற நல்லோர் இன்தமிழ் செய்

கவிதை வல்லோர்

இருமூன்று தலைப்புகளில் கவிகள் பாடி

தரும் ஊன்று கோலாகத் தந்திடுவார் தமிழர் வாழ!