உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 27 · 27 / 77

முப்பதாண்டுக் காலத்திற்கு முன்பாக முன்னேற்றக் கருத்துரைத்தான்.

நாலைந்து பிள்ளைக்குத் தந்தையான ஒருவன்

நடுநடுங்கித் திண்ணையிலே படுத்துக் கொண்டான்

நங்கையவள் அவன் மனைவி வருகின்றாள்; இங்கு

கங்கையைப் போல் பிரவாகம் காட்டுகின்ற கவிஞன் நடை கேளுங்கள்:-

"அருமனைவி என்னிடத்தில் மெதுவாக வந்தாள்;

' அயர்ந்தீரோ?" என்றுரைத்தாள்; மலர்க் கரத்தால் தொட்டாள்!

"தெருவினிலே பனி" என்றாள்; ஆமென்று சொன்னேன் !

தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம், வார்த்தையென்ன தேவை?

பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஓர் நாள்

பட்ட கடன்காரர் வந்து படுத்துகின்ற நேரம்

சித்தமெலாம் மூத்த பெண் சுரநோயை எண்ணித்

திடுக்கிடுங்கால் ஒரு கிழவி என்னிடத்தில் வந்து,

முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல

முகூர்த்தத்தில் உன் மனைவி பிள்ளை பெற்றாள் என்றான

தொத்துநோய் ஏழ்மை, கடன்காரர் தொல்லை,

தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!''

அந்தப் பாரதிதாசன் பெண்ணைப் பெருமை செய்தான்-

மண்ணைப் போல மிதிபடும் மானிடத்தைப் பார்த்து;

''உன்னை விற்காதே!" என்றான்

' எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்" என

எக்காளக் குரல் கொடுத்தான்.

காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி"யாய் நின்றான்

"தொண்டு செய்து கிடப்பவன் ஆமை" என்றான்.

தொகை தொகையாய்க் கவிச்சர விளக்கு ஏற்றி வைத்தான்

பாரதிக்கு வாரிசாய்ப் பாரதிதாசனானான்

தலைவர்க்கும் - கவிஞர்க்கும் பிற தகைமை சால் மேதைக்கும் - தமக்குப்பின்

இருக்கின்ற பரம்பரையே தகுதியாகும்.

இன்று பார்க்கின்ற இடமெல்லாம் பாரதி பரம்பரையைப்

பாரதிதாசன் வழித் தோன்றல்களைப் பார்க்கின்றோம்!

கோகின்றார் சொல் முத்து... பல் கவிஞர்! (பல கவிஞர்)

பல் இல்லாக் கவிஞர்களும்! (தேர்தல்)

வாக்கென்றால் பாரதிக்கும் பாரதிதாசர்க்கும் வேறு

நோக்கின்றி வழங்கிடுவார்....

இரு கவியும் வருவரோ ஆள்வதற்கு நம் கவியரசை!

இனியுமேன் வரவேண்டும் ஆள்வதற்கு?

இப்போதே ஆள்கின்றார் நமதுள்ளம்!

அவர் வாழ்க!

அவர் புகழ் வாழ்க!

வணக்கம் !

பாரதியார்

12.9.69 அன்று சென்னை வாணி மகாலில் நடைபெற்ற பாரதி விழாக் கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமைக் கவிதை உரை

★

வணக்கம்.

வரவேற்புக் கவிதை தந்த நாரண துரைக்கண்ணன் நல்லதோர் எழுத்துச் சிற்பி.

கடுஞ்சொல்லைக் குறைத்துக்கொண்ட கருணாநிதி என்று கவின் தமிழால் இங்கு சொன்னார்;

அல்ல அல்ல - கடிதோச்சி மெல்ல எறியக் கற்றுக்கொண்டேன்; அவ்வளவே!

அவைநடுவே வீற்றிருக்கும் ஆன்றோரே!.

அறிவுசால் பெரியோரே! அன்புத் தாய்மாரே!

அருங்கவியாம் பாரதியின் உருவங்காட்டத் தமிழ்த்

திருமலியும் கவிதையுடன் வந்திருக்கும் பெருமைமிகு புலவர்களே! வணங்குகின்றேன்

ஆறிரண்டு திங்கள் அதற்குமேல் பதினெட்டுத் திங்கள்

ஆயிற்று முப்பதாம் திங்கள் - நான் அமைச்சனாகப் பதவிஏற்று!

சினக்கேள்வி எழுப்புகின்ற சிங்கம் இங்கில்லை எனினும்

சிலையுருவாய்க் கடற்கரையில் நிற்கின்றார்.

அவர் புகழைப் பாடுதற்கு ஒளவை என்னை அழைத்திட்டாள்.

ஆகாகா! பதினெட்டு ஒளவை உண்டே

அதில் எந்த ஔவை? என்பீர்; அறிந்திடுவீர்!

முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினமாம்

பத்தொன்பதாம் ஒளவைதான் எனை அழைத்தாள்!

(அடுத்து கவியரங்கத் தலைவரான கலைஞர் அவர்கள் பாரதியார் சிறப்பு பற்றிப் பாடித் தம் முன்னுரையை முடித்து, கவியரங்கில் பாட வந்திருக்கும் கவிஞர்களை முறைப்படி அழைத்து அவையோருக்கு அறிமுகப்படுத்துகிறார்.)

முதலில் பாரதி கண்ட தமிழுணர்வைப் பாட்டாலே விளக்குகின்றார் வா.மு.சேதுராமன்.

வா.மு.சேதுராமன் வந்திடுக! தமிழ் தந்திடுக:

(கவிஞர் வா.மு.சேதுராமன் 'பாரதி கண்ட தமிழுணர்வு' பற்றிப் பாடி முடிக்கிறார்.)

தலைவர் கலைஞர்:

சோலைக் குயில் காதல் சொன்ன கதை அத்தனையும்

மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டார் பாரதியார்;

'கற்பனையே ஆனாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?'

என அழைத்தார் பாரதியார்.

அவர் அழைப்பை ஏற்று அன்பர் தூரனும் வந்துவிட்டார்.

ஆசைக்குயில் அருகே தூரனை நாம் விடுத்துச் சற்றுத் தூரமாய் நின்றிடுவோம்;

தமிழ் ஒலிக்கும்போது மட்டும் நெருங்கிடுவோம்.

(கவிஞர் பெரியசாமித் தூரன் 'பாரதி கண்ட குயில்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

நான் கண்ட பராசக்தி நீர் கண்டீர்!

ஏன் கண்டோம் எனக்கேட்டுப் பழமை வாதி

தான்கண்ட சேதிமட்டும் மறைத்து விட்டார்

தேன்கொண்ட தமிழெடுத்துப் பக்தி

மான்கண்ட பராசக்தி பெயராலே

வான்கொண்ட மட்டும் வீரம் வழங்குகின்றார் பாரதியார்

- அதனை

விசுவபாரதியும் விளக்குகின்றார்:

(கவிஞர் விசுவபாரதி 'பாரதி கண்ட பராசக்தி' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

தாயாகத் - தமிழாகத் - தாயகத்தில்

மூத்த சேயாகத்-தடைபடா அன்புருவாக அண்ணன் கண்டவன் நான்.

கண்ணன் கண்டவன் பாரதி!

கிருட்டிணனும் கண்ணனும் ஒன்றென்பார் சிலர்

இல்லையென்பார் சிலர்-

இருட்டினிலே ஆராய்ச்சி விளக்கேற்றிக் குழம்பாமல் உரைத்திடுவார் கு.சா.கி.

(கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி 'பாரதி கண்ட கண்ணன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

பார்த்தன் மனைவி பாஞ்ச யை நேரில் பார்த்ததில்லை பாரதியும்

பார்த்தவர் ஒருவர் உண்டிங்கே;

பார்ப்பீர் அவர்தான் பீஷ்மராம்!

கணைமழை தன்னில் படுத்தவரே

கவிமழை பொழிய வந்திடுவீர்!

(கவிஞர் பீஷ்மர் 'பாரதி கண்ட பாஞ்சாலி' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

சேலாடும் விழிகள் மேற் செயற்கைப் புருவம்

சிவப்பாக இதழ்களிலே வண்ணப்பூச்சு

காலாடை அரையாடை அணிவதிலே கடும்போட்டி

கல்ரதங்கள் அஜந்தாக்கள் அத்தனையும் தலையில் ஏற்றிக்

கண்காட்சிப் பொருளாக நடக்கின்றாளே, அவளல்ல புதுமைப் பெண்!

பின் யார் என்று கேட்கின்றீரோ?

அறிவிக்க அம்மையார் இருக்கின்றார்கள்!

புதுமைப் பெண் பார்க்க இடம்மாறி உட்காராமல்

இருந்த இடத்தில் இருந்திடுவீர்:

(கவிஞர் இரா இராசலக்குமி 'பாரதி கண்ட புதுமைப் பெண்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

புதுவை சுப்ரமணிய பாரதிக்கு விழா எடுக்கும் வேளையிலே

போட்டியாக வருதல் கூடாதெனப் புத்தனேரி சுப்ரமணியக் கவிராயர் வரவில்லை

அதனாலே முடிவுரைக்குப் போகின்றேன் பொறுத்தருள்க!

பெண்ணைப் பெருமை செய்தான்

மண்ணைப் போல் மிதிபடும் மானிடரைப் பார்த்து

உன்னை விற்காதே என்றான்.

விரோதிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேனென

விடுதலைக் குரல் கொடுத்தான்.

காரிருள் அடிமை நீக்க நல்ல கதிரொளியாய் நின்றான்.

தொண்டு செய்யாது கிடப்பவன் 'ஆமை' யென்றான்:

தொகை தொகையாய்க் கவிக்கு விளக்கு ஏற்றி வைத்தான்

அந்தப் பாரதிக்கு வாரிசாய்ப் பாரதிதாசன் வந்தான்.

தலைவர்க்கும், கவிஞர்க்கும், பிற தகைமைசால் மேதைக்கும்.

தமக்குப் பின் இருக்கின்ற பரம்பரையே தகுதியாகும்

பார்க்கின்ற இடமெல்லாம் பாரதி பரம்பரையைப்

பாரதிதாசன் வழித்தோன்றல்களைப் பார்க்கின்றோம்

பாரதிரச் சிரித்து மகிழ்கின்றோம்!

வணக்கம்

வாழ்க!

பொங்கல் திருநாள்

12.1.1970 அன்று சென்னை வானொலியில்

பொங்கல் திருநாள் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமைக் கவிதையுரை

★

வாவி, குளம் வாய்க்கால்கள் நீரெல்லாம்

ஆவியாகி வறட்சிப் புயல் வந்துற்றுப் பயிரெல்லாம்

சாவியாகப் போன நிலை கண்டுவிட்டுத் தமிழ் அரசு

தாவியோடித் திடுதிடென வெப்பத்துயர் தணித்ததாலும்

ஓவிய முகில் அனைத்தும் கருக்கொண்டு புவி

மேவிட மழைக் குழந்தை ஈன்றதாலும்

உணவுக் கட்டுப்பாடென்று முன்பு