உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 26 · 26 / 77

பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!'

என்றெழுதி வந்தேன்....

இன்றெல்லாத் தமிழர்களும் தமிழைத்தம் இன்னுயிராய்க் கொண்டு

சென்றங்கு எட்டுத்திசை பரப்புதற்கு முனைந்தார் அய்ய!

நாம் சாகவில்லை வாழ்கின்றோம் தாயகத்தில்!

உண்மைதான் நீர் உரைத்த" தென்றான்.

பாரதியும் தன் தாசனையே தழுவிக்கொண்டு

பாரதிரச் சிரிக்கின்றான்

இருவருமே பாடுகின்றார்

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

இணைந்து நாமும் பாடிடுவோம்

ஏற்றமிகு தமிழகத்தைக் கண்டிடுவோம்

நாற்றமிகு சாதிப்பூசல் களைந்திடுவோம்

ஆற்றல்மிகு பாரதிக்கும் அவர் தாசர்க்கும் விழா எடுப்போம்

விழா எடுக்கும் வேளையிலே அவர்தம்

விழாக்கருத்தைச் செவிமடுப்போம்.

முதலில் உவமை யெனுந் தலைப்பினிலே ஒருவர் பாட வருகின்றார்

என் நண்பர் தனி அன்பர்

பொன் பூவும் மணமுடைத்து என்பாராம் தன் கவியால்

பொருநை நதிப் பெருக்கனைய தமிழ் காட்டும்

கருணை ஆனந்தக் கவிஞர்

என் கேலிக்கு நற் கருவி

வேலிக்கு ஓணான் போலச் சாட்சி சொல்வார் எனக்காக

கூலிக்கு மாரடிக்கும் கொள்கையில்லாக் குணக்குன்று

முதன் முதலாய் பம்பாய்க்கு வந்துள்ளார்;

நேற்றுத்தான் முதன் முதலாய் விமானமும் ஏறியுள்ளார்!

சீராக அவர் ஏறியதும் 'சீட்பெல்ட்' டைத்தான் போடுமென்றேன்.

நேராக எனைப்பார்த்துத் தன் இடுப்பு 'பெல்ட்' தனை இறுக்கிக் கொண்டார்!

விமானப் பெண்ணாளும் விலாநோகச் சிரித்துவிட்டு

விடுவிடென மாட்டிவிட்டாள் விமானப் 'பெல்ட்டு தனை

'பட்டிக்காட்டான் யானை பார்த்தது போல' என்பதுதானே பழமொழி!

அதனை மாற்றிக் கொள்வீர் இவரைப் பார்த்து!

பட்டிக்காட்டான் பம்பாய் பார்த்ததுபோல்;

வந்திறங்கியவுடன் வாய்பிளந்து வானளாவிய மாடம் பார்த்தார்

விமானக் கூடம் பார்த்தார்

அதனாலே கையில் வைத்திருந்த விலை உயர் பொருள் ஒன்றைக்

காணாமற் போக்கி விட்டார்!

இவர்தான் அக் கவிஞர்

உள்ளங்கவர் பாவேந்தின் உவமை அழகெல்லாம்.

கள்ளங் கபடமிலா என் நண்பர் பாடிடுவார்

பள்ளம் போய் வீழ்கின்ற பாய்ச்சல் நீரதுபோல்

வெள்ளம் காண்போம் தமிழ் நடையில்:

(கவிஞர் ஆனந்தம் 'உவமை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து; இன்பம் எனும் எழில் தலைப்பில்

அன்பர் திரு. சுந்தரனார் பாடுகின்றார்

புவியில் இன்பம் பொலிக என்றே கவியின் கனவால் சொன்ன கவிஞர்

அரசியலில் எதிர் வரிசைதான் அவர் வரிசை என்றாலும் சிலர்போல அவர் எதிர்வரி 'சைத்தான்' இல்லை!

புது வரிசை தமிழ்த் தாய்க்குப் படைத்திடுவார்

மதுவரிசையில்லாமல் கவியெழுதும் மாண்புடையார்

எளிய உடை எளிய நடை; பழங் கருத்து நெளிய விடாப் புதுமை நெஞ்சம்:

புளிய மிலார் அடிபோலப் பாட்டடியால் என்றும்

குளியலிலா அழுக்குமனம் திருத்திடுவார்.

அவர் பாட்டு புறப்பாட்டு ஆனால் இன்றோ அகப்பாட்டு பாடுதற்கு அகப்பட்டுக் கொண்டார் இங்கே!

இன்பமெனும் தலைப்பினிலே எழுத்தாரம் வழங்கிடவே

என் நண்ப வந்திடுக:

(கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 'இன்பம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து. பெண்மை எனும் தலைப்பினிலே

பெருமை மிகு கவி பாட

உண்மை மிகு உயர் தமிழர்

வெண்மையுள்ளக் கணேசனார் வருகின்றார்

வட்டி யின்றிக் கடன் வழங்காச் செட்டி நாட்டுச் செம்மல் இவர்

சட்டை யில்லாத் திருஉருவம் - எதிர்ப்பைச் சட்டை செய்யாப் புகழ் உருவம்!

கதர் அணியார் -கதர் அணியார்ந்த கட்டுடல் - கதர் அணியார்

மல்லுக்கு நிற்பார் - தமிழ் பழித்த எதிரியுடன் மல்லுக்கு நிற்பார் - விடுதலை

நெல்லுக்கு வியர்வை பாய்ச்சி இன்று சொல்லுக்குச் சுவையேற்ற வந்துள்ளார்

கல்லுக்கும் உயிர் கொடுக்கும் கவித் தமிழால் கனிப்பாட்டு தந்திடுவார்

இப்போது வந்திடுவார்:

(கவிஞர் சா.கணேசன் 'பெண்மை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து; அவை கூட்டி அமர்ந்ததற்குச் சுவை கூட்டல் வேண்டாமோ

அதற்காக வருகின்றார் அப்துர் ரகுமான்

ரவை போட்ட துப்பாக்கி வெடிப்பதுபோல்

சொல் வெடிக்கும் - சுவை வடிக்கும்

இவர் ஒரு வானம்பாடி

இருக்குமிடம் வாணியம்பாடி

பாரதிக்குத் தாசன் பாரதிதாசன் எனில்

அந்தத் தாசர்க்குத் தாசர் இவர் தமிழ்க் கவிதை தீட்டுவதில்!

குடமிட்ட தீபம் இவர் இனிமேல் குன்றிலிட்ட தீபந்தான்

புடமிட்ட தங்கம் இவர் இனிமேல் புகழ்மீட்டு வீணையிவர்

சுவைப்பாட்டு தந்திடுவார்

சுவைத்திருப்பீர்; நான் குறுக்கேயில்லை:

(கவிஞர் அப்துர் ரகுமான் 'சுவை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

நேற்றிரவு பம்பாய் நகர் விடுதி யொன்றில்

போர்த்தியவாறு நான் தூங்குகின்றேன்

"காத்திருந்தேன் கண்ணாளா வந்தாயோ" எனச் சொல்லிக்

கரம்பிடித்தாள் கனவுலக மங்கை நல்லாள்

"காரிகையுன் பேரென்ன?" எனக் கேட்கக் களிப்புடனே

"முத்தம்மா" எனச் சொன்னாள்

சொப்பனத்துச் சுந்தரியே சொல்லிடுக ஒரு விளக்கம்

தப்பிதமாய் எண்ணாதே - முகம் பார்த்தால் முத்துச்சாமி போல் இருக்குதம்மா!

அகம் மட்டும் ஆண்மை மாறிப் பெண்மையாகப்

அவளும்... போனதுவோ!" எனக் கேட்டேன்;

கலகலவெனச் சிரித்துவிட்டுக் கையால் மறைத்திருந்த மீசைதனைக் காட்டிவிட்டாள்!

கண்டுகொண்டேன் கைகாரி அவள்தானென்று

தப்பிக்க வழியில்லாத் தையலவள்

"அத்தானே ஒப்பிக்க இருக்கின்றேன் எனதுள்ளம் உம்மிடமே;

ஆனால் மீசை வந்து ஆசைதனைக் கெடுக்கு" தென்றாள்

"பூசை வைத்துப் போ என்றால் போமோ மீசை?

பூவையே நீ புனர்ஜென்மம் எடுத்துப் புதுப்பெண்ணாக வா" என்றேன்.

போய்விட்டாள் விழித்துக் கொண்டேன்

வேடிக்கைக் கனவு நேற்று விளைந்த விதம் நீர் அறிவீர்

தமிழ் வேட்கை மிகு முத்துச்சாமி

விரைவினிலே பெண்ணாக மாறி, எனை மணக்க வேண்டுமென்று

விரும்புவதாய் இம்மன்றில் தெரிவித்தார்

மறு ஜென்ம வாழ்விருந்தால் எனை மணப்பதுறுதி யென்றார்

அறிவீர் அன்றோ!

அதை நினைத்துத் தூங்கி விட்டேன்

அதனாலே கன்வு கண்டேன்

மாரியப்பன் மாரியம்மாள் ஆகின்ற புரட்சியெல்லாம் நடக்கும்போது

முத்துச்சாமி முத்தம்மாளாகிவிட்டால் எங்கள் அமைச்சரவையில் ஆரணங்கு இருவராவார்!

அது நிற்க;

பாவேந்தர் பாட்டாலே செய்த புரட்சி பாடிக்காட்ட என் தோழர் முத்து தனை அழைக்கின்றேன்

நேற்று நினைவோடு நாணிக் கோணி வாராமல்

நம்மிடையே வந்திடுவார் நற்றமிழைத் தந்திடுவார்;

(அமைச்சர் மா.முத்துச்சாமி 'புரட்சி' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

"கண்கள் விற்றுச் சித்திரம் வாங்குவதோ?" எனக்கேட்ட பாரதிக்குத் தாசன்

பெண்கள் கொய்யாப்பழக் கூட்ட" மென்றுரைத்தான்.

"தனித்துக் கிடந்திடும் லாயம் அதில்

தள்ளி யடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்திரவுண்டு - வீட்டில்

காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டுமோ?

எனக் கேட்டான்

"காதல் அடைதல் உயிர் இயற்கை - அது

கட்டில் அகப்படும் தன்மையதோ? அடி

கோதை தொடங்கடி! என்று சொன்னான்

இன்பம் கொள்ளை! கொள்ளை! கொள்ளை! மாந்தோப்பில்!'

என்று மகிழ்ந்தவன்;

''காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?"

எனக் கேட்டான்

எப்போது தெரியுமா?

இப்போது தானே நாம் எனக் கேட்டான்

குடும்பக் கட்டுப்பாடென்று கூறி

குசேலரைப் போல ஆகாதீர் எனப் பிரச்சாரம் புரிகின்றோம் பேரரசின் சார்பில்!

பெருங்கவிஞன் பிள்ளைக் கட்டுப்பாடு தேவையென