கலைஞரின் கவிதைகள்
கவிதை 25 · 25 / 77
தங்கத் தமிழ் மன்றம் கண்டவரே
மன்றேறி மணிக்கவிதை முழக்கவந்த கவிஞர்களே
குன்றேறி நீர் நிற்க முடியாது! முடியுமா?
குன்று ஏறி நீர் நிற்க முடியுமா? புகழ்க்
குன்றேறி நீர் நிற்க முடியாதென்று
என்றேனும் சொன்னேனா? இல்லை
இன்றேனும் சொன்னேனா?
மாக்கவியென்று பாரதியைப் போற்றுகின்றார்.
நான் ஒப்பவில்லை.
அரைத்த மாக்கவியா பாரதியார்? இல்லை; இல்லையா (ப்)
பணியாரக் கவியா?
யாப்பு அணி ஆரக் கவியா?
மாக்கவிதான்.அரி மாக்கவி
தலைக்கவியவர்-புதுமைக்குத் தலைக்கவியவர் - நாட்டு விடு தலைக்கவியவர்
தலைப்பாகை முறுக்கிவிட்ட குத்து மீசை
நடுநடுங்கி எதிரிகளை ஓடவைக்கும் பார்வைப் பகலவனாம் பாரதியார்!
தலை
பா
கை
முறுக்கிவிட்ட குத்துமீசை
கைமுறுக்கி; விட்ட குத்து-
மீசை நடுநடுங்க எதிரிகளை ஓட வைக்கும்
பார்வைப் பகலவனாம் பாரதியார்!
"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்" எனப்பாடும்
அவன் சீற்றம் கண்டீரோ!
"ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே!"
அடைவதற்குள் அறுதியிட்டுச் சொன்னவனாம்
அடலேறு, மொழி பகரும் மன்னவனாம்
அவனுக்குச் சின்னவனாம் இளம்மருது போன்றவனாம்.
எடுத்தவுடன்
"எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா" என்று
பாரதி பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்
பார் அதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன்
கனக சுப்பு ரத்தினம் என்று காததூரம் இருந்த பெயரைக்
கவி பாரதிக்குத்தாசனென்று கச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்
களம்சென்று தமிழ்காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக்கொண்டான்
நிமிர்ந்த நோக்கு
நெரித்த புருவம்
நீர்வீழ்ச்சி ஓசை-நெற் கதிர்க்கட்டு மீசை
பாட்டெழுதும் வித்தையிலே பாரதி ரசவாதம் கற்றவனாம் - இவனைப் பார்
அதிரசவாதம் கற்றவனாம்
அதிரசவாதம் கற்றவனாம்
அத்துணை இனிப்பு இவன் பாட்டில்!
சஞ்சீவிபர்வதத்தின் சாரலுக்கு நமை இட்டுச் சென்று
சங்கீதப் பேச்சொன்றைக் கேட்கச் சொல்வான்.
காதலி "நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன்" என்றாள்
காதலன் "ஆகையால் ஓர் முத்தம் அச்சாரம் போடெ" ன்றான்!!
அதிரச வாதமன்றோ - அஃது அவனுக்கே பழக்கமன்றோ!
"சிற்றுாரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?"
வினாக்குறியா? வெடிக்கும் எரிமலையா?
புரட்சிக்கவிஞனெனப் புவியொப்பி மாலைபோடப்
போதாதோ இவ்வரிகள்?
"ஒரு மனிதன் தேவைக்கே இந்தத்தேசம்
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்'"
முழுமனிதன் பாட்டன்றோ இப்பாட்டு; இதுகேட்டு
அழும் மனிதன் அரைமனிதன் குறை மனிதன்
அரைகுறை மனிதன்
"இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!"
எனத் தொடங்கி;
"சுருட்டுகின்றார் (சில பேர்கள்) தம் கையில்
கிடைத்தவற்றை" என முடிக்கும்
இவனோர்
சுருட்டுக்கவிஞன் - புகைச் சுருட்டுக்கவிஞன் - இவன்
புரட்டுக்கவிஞனாவான்;
மூடப்பழக்கமெலாம் தலைகீழ்ப் புரட்டும் கவிஞனாவான்.
அமளி துமளி ஆர்ப்பாட்டம் அணிவகுப்பு!
அமைதியிலே உலகுவாழப் புதுவைக்குயில் கூவாதோ?
"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"
அமைதிக் கவிஞனாக அழைக்கின்றான் உலகத்தை
'சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமய பேதம் வளர்த்தே தளர்வது நன்றா?"
காந்தியார் கதறிய கருத்தினைக் கவிஞன்
கனலிடை மெழுகென உருகியே கேட்பான்.
"பொய்யுரைப்போன் பயங்காளி பிறர்
பூமி சுரண்டிடுவோன் - பெருச்சாளி
வையக மக்கள் எல்லோரும் நலம்
வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி"
கருத்துக்கவிஞன்; சற்றுக் கருத்த கவிஞன்
காலக்கவிஞன்; முக்காலக் கவிஞன்
அவன் சுவையாய்த் தமிழுக்கு அருவியின் பாடல்
அமைவாய்க் கண்ட அற்புதம் என்னே!
'விருந்து வரக்கண்ட மெல்லி முகம்போல்
முல்லை அரும்பு மலர்ந்ததென்ன வேடிக்கை
தெரிந்தவரைக் கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும்
சிரிப்பதுதான் இதன் வாடிக்கை "
இன்னொன்று கேளீர்:
விழிக்கு இனியவள் ஒருத்தி ஆடுகின்றாள்.
மொழிக்குச் சுவையேற்றித் தாசன் பாடுகின்றார்:-
சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும் வானில் மிதக்கும் அவள் தாமரைக்கை!
மேலும் வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு:
சாடை புரிகின்ற விரல்.
கண்கவரும் செம்பவளக்காம்பு"
மற்றொன்று;
"தொண்டையிலே ஒன்றுமே அடைக்க வில்லை
துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான்
அண்டையிலே மங்கைபோய் 'அத்தான்' என்றாள்
அத்தானா தூங்கிடுவான்? (அருகில்) உட்கார்! என்றான்"
அவருக்கே உரிய கேலி!
அவர் கவிதைக்கே உரிய சுவை!
உவமைக்கோர் கவிஞன் என்று
உரைக்கின்றார் பெருங்கவிஞர் ஒன்றிரண்டா எடுத்துச் சொல்ல?
"தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பன்ன
இருள் தன் கட்டுக் குலைந்தது"
"சோற்றை அள்ளுங்கால் துவள் வாழைத் தண்டில் உறும்
சாற்றைப் போலே வடியத்தக்க வண்ணம்
ஊற்று நெய்யை"
புரட்சியா? அமைதியா? பொங்கும் உவமையா?
கருத்தா? தமிழ்ப் போதை தரும் சுவைத்தேனா?
எதனை எது மிஞ்சுமென்று எவர் கூறி வாதிட்டாலும்
ஒப்பமாட்டேன்; ஒன்றையொன்று மிஞ்சுமென்பேன்!
ஏடெத்தனை அவர் தந்தார்!
இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றி வைத்தார்
இசையமுது பொழிந்து, அதற்குப் பாண்டியன் பரிசு பெற்றார்
நமக்குக் குறிஞ்சித்திட்டுமுண்டு
குயில் இதழ் நடத்தும்போது அழகின் சிரிப்பாலே தமிழியக்கம் கவர்ந்துவிட்டார்.
அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார் அவர்
காதல் நினைவாலே கவிப்பெண்ணை வாடவிட்டுச்
சாவின் எதிர்பாராமுத்தத்தால் பிரிந்துவிட்டார்...
என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்துவிட்டார்..
இரு கவியும் இறப்புலகின் சந்தித்து
என்ன பேசியிருப்பாரென எண்ணுகின்றீர்?
"நாம் தமிழ் நாட்டில் இன்றைக்கு இல்லையென்று
நம் மக்கள் பேசுகின்றார் - நம்புவதோ இதனை நாமும்?
'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே'
சிந்தைகவர் இந்தப் பாட்டினையே செயல்படுத்த மிக்கமனம்
நொந்துதான் காத்திருந்தேன்; இன்று
விந்தை கண்டனையோ தம்பீ - நம்
தந்தையர் நாட்டுக்குத் தமிழ்நாடெனப் பெயர் தந்தவர் அண்ணா!
நாம் வாழ்கின்றோம் அங்கு! மெய்யலவோ?" என்று
பரவசத்தால் நடமாடும் பாரதிக்கு வணக்கம் சொல்லிப்
பாவேந்தன் பகர்வான்
"கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
