உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 24 · 24 / 77

வாள் ஆகும்.

'"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை'

எனக் கூறி; வியர்வைக்கு விரைந்திடுவோம்

சிப்பியின் வியர்வையிலே முத்து பிறக்கும் - ஒரு

சிற்பியின் வியர்வையிலே சிலை பிறக்கும்.

உழவனின் வியர்வைலே பசி பறக்கும் -ஒரு

மழவனின் வியர்வையிலே பகைபறக்கும்.

வலியோர்கள் வியர்வையெல்லாம் பன்னீராம் - மிரு

எளியோர்கள் வியர்வையெல்லாம் செந்நீராம்.

உலைக்களத்தில் கொட்டுகின்ற வியர்வைதனைத் தழல் உறிஞ்சும் -

காதற் கலைக்களத்தில் கொட்டுகின்ற வியர்வையெலாம் சந்தனமாம் சவ்வாதாம்

அதனை வியர்வை யென்றால் இலக்கியங்கள் ஒவ்வாதாம்

அதனால் அது சவ்வாதாம்;

இப்படி விரிந்த கடல் முதலாய் வியர்வைக் குளம் வரையில்

செறிந்திடும் வர்ணனை செய்திடக் கவிஞர் சிறப்புடன் இங்கே இருந்திடும் போது

நானே அதிகம் பாடுதல் நன்றோ?

தேனே கனியே தினையே அமுதே

ஊனே உயிரே தமிழே தாயே

வணக்கம் சொன்னேன் வாழ்க நன்று!

முதலில் முனைகின்றார் கடல் தாண்ட முருகுசுந்தரனார்

பனைவெல்லம் போல் இனிக்கும் பாதருவார்

கடற் பா தருவார்:

(கவிஞர் முருகுசுந்தரம் 'கடல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து மழை;

நாவற்பழமென நல்லகவி உதிர்க்கின்ற

நடராசப் புலமை நம்பி, கவி மழை பொழிய வருகின்றார்;

குடையிருந்தால் பிடித்துக் கொள்வீர்;

(கவிஞர் தி.கு. நடராசன் 'மழை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து ஆறு;

நமதன்பர் தமிழன்பன்

நாவினிக்கும் சொல் அன்பர் சொல்லம்பர்

ஆறுதலைப்பூ அவருக்கு!

ஆறு தலைப்பு அவருக்கு

தடையின்றி ஓடலாம் தமிழாறு

ஒலிபெருக்கித் தடையின்றி ஓடலாம் தமிழாறு:

(கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'ஆறு' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து கிணறு;

வெட்டுகின்றார் ராமராசன் கிணறொன்று

கட்டுகின்றார் கயிறொன்றில் தமிழ்க் குடத்தை;

கொட்டுகின்றார் புது வெள்ளம்

குடித்து மகிழ்வீர், நீர் குடித்து மகிழ்வீர்,

கிணற்று நீர் குடித்து மகிழ்வீர்:

(கவிஞர் ராமராசன் 'கிணறு' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழலாம்.

மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்றார்

சம்சாரம் புகவில்லை இன்றுவரை

அதற்காக மின்சாரம் தொட வேண்டாம்!

என் தோழர் என்பதாலே எச்சரிக்கை செய்கின்றேன்..

அடுத்து குளம்:

நண்பர் அக்பர் என்றும் அவுரங்கசீப் என்றும்

அந்த நாளில் களம் கண்டார்

அவர் வழியில் அப்துர் ரகுமான் குளம் கண்டார்

அதனைச் சொல்ல அவரும் களம் கண்டார் - கவிக் களம் கண்டார்

குளம் கண்டால் விடுவோமோ?

கரையோரம் குந்திக் களைப்பாறிடுவோம்:

(கவிஞர் அப்துர் ரகுமான் 'குளம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து கண்ணீர்:

கந்தசாமி யெனும் தமிழ்க் கவியேறு

நொந்த மனங்கொண்டு கண்ணீர்விட

இந்த அவைதனிலே வருகின்றார்;

கவலையென்ன கேட்டிடுவோம்...

முடிந்தால் குறை தீர்த்திடுவோம்:

(கவிஞர் கந்தசாமி 'கண்ணீர்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து வியர்வை;

வெண் முத்து வியர்வைதனை எடுத்துக்காட்ட

நடுக் கண்ணொத்த கறுப்பு நிறம் தேவைதானே?

பண்ணொத்துப் பாடுதற்கு வருகின்றார்

பொன்னி வளவன்

பொன்னொத்த பாவளவன்

வியர்வை சொட்டப் பாடி - நம்

அயர்வையெல்லாம் விரட்டப் போகின்றார்:

(கவிஞர் பொன்னிவளவன் 'வியர்வை' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

"பாசனத்து மந்திரி என்றதனால்

பயனுண்டு நீர்க் குடும்பத் தலைப்பால்; எனவே

பறந்து வந்தேன் பரமத்தி வேலூர் நோக்கி

பல தலைப்பில் பாவலர்கள் பாடிவிட்டார்

ஒரு தலைப்பை ஒரு தலைப்பார் வம்புக்கிழுத்து

நம் தலைப்பை நிறைவு செய்தார்.

நம் தலைப் - பை - நிறைவு செய்தார்.

ஒரு தலைப்பட்சமாய் நானும் தீர்ப்பொன்றும் வழங்க மாட்டேன்

ஆனாலும் ஒன்றே ஒன்று;

கடல் இருந்து மழை பெருகி

ஆறு ஓடி

கிணறு குளம் நீர் நிறைய வேண்டும்.

நீர்க் குடும்பத்தில் ஒன்று குறைய வேண்டும்;

மற்றொன்று மறைய வேண்டும்.

வியர்வை குறைய வேண்டும் - வேலை செய்வோர்க்கு

வசதி பெருகுவதால் வியர்வை குறைய வேண்டும்.

கண்ணீர் மறைய வேண்டும்.

எல்லார்க்கும் இன்பம்

என்றும் வேண்டுவதால் கண்ணீர் மறைய

வேண்டும்!

வணக்கம்.

வாழ்க!

பாரதிதாசன்

8.12.68 அன்று பம்பாய் பாரதி கலை மன்றத்தில்

"பாரதிதாசன்" என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையுரை

★

கண்ணை இமை காப்பது போல்

என்னை என்றும் காப்பதற்குப் பம்பாயில் இருக்கின்ற தோழர்களே

எண்ணெயென இரத்தத்தைப் பெய்து தந்து

தண்ணிலவாம் தமிழன்னை காக்கின்ற தீரர்களே

வெட்டி வா என்றுரைத்தால்

கட்டி வரும் வீரர்களே

பெட்டிக்குள் இருக்கின்ற பணத்தை ஏழை

எடுத்தெடுத்துப் பார்த்து மகிழ்வதுபோல்

எனை அழைத்தழைத்து மகிழ்கின்ற நண்பர்களே

மலைஎலியாம் மாவீரன் சிவாஜி கண்ட

மராட்டியத்து மண் மீது நிலைகுலையா நேர்மையுடன் நேசமதை வைத்தவரே!

அலைபாடுங் கடல் மல்லை அங்குண்டு தமிழ்நாட்டில்

கலைபாடுங் காவியங்கள் கவின்பாடும் சிற்பங்கள்

நஞ்சையுண்டு தஞ்சையிலே; அங்கு

நஞ்சையுண்ட சிவனார்க்குக் கோயில் உண்டு

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

யானை கட்டிப் போரடித்த மதுரையுண்டு அங்கு

மீன் ஆட்சி நடத்தியதால் மீன்பொறித்த கொடியுண்டு

மீனாட்சி அம்மைக்கும் வான்முட்டும் கோயிலுண்டு

நெல்லையுண்டு சேலம் உண்டு

குற்றாலம் கோவையுண்டு வாழ்வில்

தொல்லை கண்ட காரணத்தால்

தாராவிதனில் வந்து பேராவி போக்குகின்றீர் நீர்

மாதுங்கா வாழ்ந்தாலும் மனமெல்லாம் அங்கேதான்;

இதைக் காதுங்காதும் வைத்தாற்போல் சொல்லுகிறேன்

ஒருமைப்பாடு காண இந்தியாவும் நம்

உரிமைப்பாடு காணத் தமிழகமும்

உயர்தனிக் கொள்கையெனக் கொண்டுவிட்டோம்

பயன்பல பெருக்குதற்குத் தொண்டு செய்வோம்

இந்த முன்னுரையுடனே என்னுரை தொடங்குவேன்

வந்திடுக பம்பாய்க்கென்று வருந்திமிக அழைத்ததாக நேற்று ரங்கா சொன்னார்

வருந்தியபின் அழைத்தாரோ!

அழைத்த பின்னர் வருந்தினாரோ? அறியோம் யாம்

ஆனாலும் எடுத்தபணி முடிப்பதற்கு ஏறிவிட்டோம்

பைந்தமிழால் சுவை கூட்டும் பம்பாய் வாழ் பெரியோரே

சிங்கக் கவிஞன் பாரதி பேரால் கவியரங்கு