கலைஞரின் கவிதைகள்
கவிதை 23 · 23 / 77
தொண்டர், பிள்ளைக்கறி யளித்தார் சிறுத்-
தொண்டர் பிள்ளைக் கறியளித்தார்; இன்று
கண்டர், பிள்ளைக் கறிவளித்தார்.
பிள்ளைக்கு அறிவளித்தார்.
புறந்தூய்மை நீரான் அமைவதற்குக் காவிரியும்
அகந்தூய்மை வாய்மையாற் காணப்படக் கல்லூரியும்
பொருத்தமாய்க் கொண்டவரைக் கொடை பொழிலெனக் கூறிடுவோம்,
என்றுமே கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.
ஈரமுள்ள இடத்தில்தான் ஈகையுண்டாம் - காவிரி
தீரமுள்ள இவ்விடத்தில் ஈரமுண்டு
ஈதலுண்டு இசைபட வாழ்தலுண்டாம்
நீர்க் குடும்பம் எனும் தலைப்பில்
நெடிய புகழ்க் கவிமக்கள் பாடுகின்றார்;
நீர், குடும்பத்தின் உறவன்றோ எனச் சொல்லி
நீர் எழுத்துக் கவியெழுதும் எனைப்பிடித்து - அணி
சீர் எழுத்துப் புலவரிடை நிறுத்தி விட்டார்.
கார் எழுத்து மழையாகும்; மழையின்
பார் எழுத்து ஆறாகும்;ஆற்றின்
நேர் எழுத்தே குளமென்போம்; கிணறென்போம்!
இதற்கெல்லாம் வேர் எழுத்துக் கடலென்பார்
தலையில் யார் எழுத்து என நைவார், விடுவார் கண்ணீர்
பார்; எழுத்தை மாற்றுகின்றேன் எனச் சொல்வார்;
வியர்வைப் போர் எழுத்தால் விதியை வெல்வார்
வானக் கிழவன் இருமுதலே இடியென்றும்
வாடிப் பிதுங்கும் அவன் கண்ணொளியே மின்னலென்றும்
அவன் வடிக்கின்ற கோழை எச்சில்தான் மழையே என்றும்
வர்ணித்தால் நோய் மழையை வரவேற்க ஒப்போம்
வாலிபர்க்குப் பிடித்தமான உவமை சொல்வேன்
வானத்து மீன் பெண்கள்; கூட்டுப் பேச்சே இடிக்குமுறல்;
அவர் வாளொத்த கண்வீச்சே மின்னல் கீற்று;
வட்டமதிக் காதலன்மேல் தெளிக்கின்ற பன்னீரே மழைத் துளியாம்
வீரர்க்குப் பொருத்தமான உவமை யெனில்
இருவீரர் நெஞ்சங்கள் மோதுவதே இடிமுழக்கம்
பெருவீரர் வேல் உராய்தல் விண்ணின் மின்னல்
பலவீரர் பொழியும் செந்நீர் மழையே யாகும்.
பொதுவில் வானகமே போர்க் களமாம்
போர்க்களமெனினும், போகக்களமெனினும்
பொல்லா நோய்க்களமெனினும் - உழவின்
நல்லார் மழை தரும் வானத்தை 'மானம்' என்றார் கொச்சையாக!
பொருத்தம்தானே?
மழையில் நாம் நனைந்தது போதும்
கடலருகே வந்திடுவோம்.
கடலென்றால் வைணவர்க்குத் திருமால் பள்ளி கொண்ட நினைவே தோன்றும்.
உடலெங்கும் நீறுபூசுஞ் சைவர்க்குச்
சிவன் நஞ்சுண்ட கதைதான் தோன்றும்
படை கொண்டு அழிக்கவொண்ணாப் பூம்புகாரை
கடல் தடையின்றி அழித்துவிட்ட வரலாறே நமக்குத் தோன்றும்.
இத்தனையும் கூட்டிக் கழித்தால் இன்னும் எத்தனையோ நன்மைகளும் கடலால் உண்டாம்.
முத்தனைய பற்கள் என்று - கரும்புச்
சத்தனைய பெண் பேச்சுப் பேசுதற்கு முத்தினையே தந்ததுவும் கடலே அன்றோ!
பருவ நிலமடந்தை உடுத்துகின்ற நீலப் பட்டாடை
நிலாப் பெண்ணைத் தழுவுதற்கு அலைக்கரந் தூக்கும்,
நெடுந்தோளன், நீலவண்ண ஆணழகன்.
குலவுகின்ற காதலர்க்குக் கடலோரம் மணல்மெத்தை
உலவுகின்ற கவிஞர்க்குக் கற்பனைப் பரிசுக் கத்தை.
கும்மிருட்டு மதியோர்க்குக் கரையோரம் தெரிவதெல்லாம் நண்டு நத்தை;
கொட்டில் தும்பிட்ட மாடுகள்போல் நாவாய்கள் நிற்கும் துறைமுகத்தைக்
காண்பதுவும் களிப்பதுவும் கடலால் அன்றோ!
கான்யூட் மன்னனது கர்வமடக்கியதால் பெருமையுற்று,
காந்தி மகான் உப்புக் காய்ச்சியதால் அருமைபெற்று
வாஸ்கோட காமாவின் கலங்களுக்கு வழியும் விட்டு,
வாணிபத்தில் கடல் கடந்த தமிழருக்கு முதல் வரலாறீந்து,
பரந்த மனம் என்பதற்கு உவமையாகி.
பலகாலம் அசைந்தாடும் ஊமையாகி,
சிலகாலம் ஊழியாகி,
உலகிற்குத் தீமையாகிப் பின்
சினம் அடக்கும் துறவிபோல ஆமையாகிச்
சீறும் அலை சுருக்கிக் கொள்வாய்;
கடலே நின் சீரெல்லாம் சிறப்பெல்லாம் சொல்லப் போமோ?
அதனாலே கடல் கடந்து ஆறடைவோம் வந்திடுவீர்.
மழையிடை வந்து மலையிடை தழுவி
இழை இடை வந்த பொன்துகில் போலத்
தாழந் தழையிடை வந்து தலையினை நீட்டும்
மடலதுபோல மாதர் குழலிடை வந்து கோலம் காட்டும்
வகிடது போலக் களிநடை பூண்டு
காவினில் சென்று காவிரி யானாய்
அணிமணி பூண்ட பெண்ணே யானாய்
பெண்ணே என்றார் பெண்ணை என்றார்;
நீ கைவைத்த இடமெல்லாம் களி நடமாடுவதால்
வைகை என்றார் வளங் கொழிக்கச் சிந்து பாடுகின்றார்.
கோதாவரியில்லை தமிழ்நாட்டில்
கோதாய் வரியில்லை தமிழ்நாட்டில்!
புஞ்சைக்குக் கோதாவரியில்லை தமிழ்நாட்டில்
வெளிநாட்டுத் தமிழர்க்கு; வாழ்வு கொள் இடமுண்டு:
வரையறுத்துச் செய்கின்றோம்.
வணங்குகின்றோம் - ஆறே நீ வாழ்க நன்று
ஆறு தலைப்பென்றே எனையழைத்தார் இங்கு
ஏழு தலைப்பெழுதிப் பாடச் சொன்னார்; பாடுகின்றேன்.
அடுத்து கிணற்றுக்குச் சென்றிடுவோம்;
நான் கவியூரின் கிணற்றுத் தவளை
நாட்டு வளப்பமறிவேன் - நும்போல்
பாட்டு வளப்பமறியேன் அய்யா!
நெடுவானம் மழைதர மறுத்துவிட்டால்
ஆனாலும் நீளாறு, குளம், குட்டை, வறண்டுபோய் வாடிவிட்டால்
தாகம் போக்க ஒரு குவளை தண்ணீரும் இல்லாமற் போய்விட்டால்
உமிழ் நீரை உள்ளுக்குள் விழுங்குதல் போல்
உரக்கேணி ஊற்றுக்கேணி
ஆழக்கேணி ஆற்றுக்கேணி
உடனடியாய்த் தோண்டுகின்றோம்
கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது என்பாரே
அதன் பொருள் என்ன; புரிகிறதா?
கிணறு வெட்ட மண் குவியும் - ஒரு பூதம்
பூமிக்குள் அடைந்திருந்த 'காற்று' வெளிக் கிளம்பும் - மறுபூதம்
பொங்கிவரும் புது 'நீர்' - அடுத்தபூதம்
பொலிவுமிகு 'வான்' தெரியும் நீர் மீது - நாலாம் பூதம்
புவியாளும் ஆதவனின் 'தீ'க்கதிரால் அந்நீரும் தூய்மையாகும் -ஐந்தாம் பூதம்
இந்தப் பஞ்சபூதம் வருவதைத்தான் பழையவர்கள் அழகாய்ச் சொன்னார்;
அறிவுப் பஞ்சைகளோ அலறுகின்றார் பூதமென்று!
குளம் உண்டு ஊருக்கு அழகாக
எனக்குளம் உண்டு கவிபாடுவதில்;
பொதுப்பணியாற்றுவதில் எனக்கு உளம் உண்டு.
மரைக்குளம் பேர் எழிலே - தா மரைக்குளம் பேர் எழிலே
மறைக்குளம் திருக்குறளே!
மறைக்கு உளம் திருக்குறளே!
தீர்த்தக்குளம் - பாலம்
தீர்த்தகுளம் பல உண்டு; அதிற் சில உயிர்
தீர்த்த குளம் உண்டு.
நீச்சற்குளம் நகர்ப்புறத்தில் - இன்னும்
நீசர்குளம் சிற்றுாரில் இருக்கலாமா?
கொள்மடையும் வடிமடையும் குளத்திற்குத் தேவை - அறிவு
கொள்மடையும் அன்பு வடிமடையும் உளத்திற்குத் தேவை.
எக்குளத்திற்கும் படித்துறைக் கல் வேண்டும்!
எஃகு உளத்திற்கும் படித்திட உரைகல் வேண்டும்.
"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு"
என்று பாடிக் குளம் விட்டுக் கரையேறுகின்றேன்.
கடல் பெரிது காசினியில்
மழை இனிது மன்பதைக்கே
ஆற்றின் புகழ் மிகவாகும் அவனியிலே
கிணற்றுக்கும் கீர்த்தி பல உண்டென்போமே
குளமெல்லாம் குவலயத்தின் அமுதவாய்கள்;
எல்லாம் சரி!
இத்தனைக்கும் முகில் கூட்டம் கண்ணீர் வடித்தால் அன்றோ
மழையாகிக் கடல் பொங்கும்.
ஆறு ஓடும் கேணி ஊறும் குளம் நிரம்பும்!
காரிருள் ஏன் தொலைந்தது கனவின்பம் ஏன் கலைந்த தென்று
காலைமலர் வடிக்கும் கண்ணீர் பனித்துளியாம்;
தென்னம் பாளை வடிக்கும் கண்ணீர்தான் மதுச் சாறு.
வாழை வடிக்கும் கண்ணீரே பால் ஆகும்
ஏழை வடிக்கும் கண்ணீரோ வேல் ஆகும்
