உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 20 · 20 / 77

பகை அஞ்சாமை கொண்டிருந்தால் வீரனாவான்

பழி அஞ்சாமை கொண்டிருந்தால் கயவனாவான்

அன்புடைமை காட்டுவதில் பெண்ணாவான்

நல்லேர் உழுவதிலும் சிறப்பாகச்

சொல்லேர் உழுவதிலும் செம்மை சால் உழவனாவான்

வாய்ப்பதிகம் எனினும் வருகின்ற வசதிகளை

இழப்பதிலே துறவியாவான்

நகுதற் பொருட்டன்று நட்டல் மேற் சென்றிடித்தல்

பொருட்டெனும் குறள் உணர்ந்த தன்மையினால்

திறன் வாய்ந்த நண்பனாவான்

பெண்ணுக்குப் பெருமை தற்காத்தல்;

வீரனுக்கு விழுப்புண்ணில்;

நண்பனுக்கு நன்றியிலே;

துறவிக்குக் கல்லறையில்;

கயவனுக்குக் காணும் பெருமையெல்லாம்;

குயவனது மண்பாண்டம்!

என்பெருமை உம்மிடையே இருப்பதுதான்!

இப்பெருமை நிலைத்தாலே போதுமென்பேன்.

வணக்கம்

வாழ்க

புதிய பாதை

(13.8.1968 அன்று கும்பகோணம் மூர்த்தி கலை அரங்கில்

"புதிய பாதை" என்ற தலைப்பில் நடைபெற்ற

வேளாண்மைக் கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதையுரை)

தாளாண்மை கொண்டிங்கு தமிழரசைச் சிறப்பாக்கும்

வேளாண்மைத் துறையமைச்ச!

கவிதை வாளாண்மை கொண்டிங்கு உழவுப் பேராண்மை காட்ட வந்த

புலவர்களே!

தன்சேய் விளைக்கின்ற மரகத மணிகள் கண்டு இது

நன்சேய் என மகிழ்கின்றாள் நிலமடந்தை.

தஞ்சை விளைக்கின்ற மரகத நெல்மணிகள் கண்டு இது

நஞ்சை என மகிழ்கின்றாள் நிலமடந்தை.

புகார் இருக்கும் தஞ்சைக் கடைமடையில்

பூம் புகார் இருக்கும் தஞ்சைக் கடலோரம்

மிகார் என் சொல்லை இங்குளார் அதனால்

புகார் தீய நினைவுடனே

முன் புகார்த் திகைத் திருநாள்

முன்பு கார்த்திகைத் திரு நாள்

முன்பு-கார்-திகைத்து

இருநாள் ஒருநாள் அல்ல பல நாள்

பருவ மழையின்றிப் போனாலும்

துருவ மீன் போல ஒளி காட்டித் தஞ்சையின் வெற்றிப்

புருவம் தூக்கி நின்றீர் வாழ்க நன்று!

வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் மழையன்றோ?

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழையன்றோ?

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழையன்றோ?

நீர் இன்றி அமையாது உலகெனினும் அதனை வகைப்படுத்த

ஆறின்றி இயலாது என உணர்ந்தார்

ஆறு கண்டார் அதனாலே சோறு கண்டார்

எத்தனை ஆறு

இத்தரை மீது

சித்திர நெல்லைச்

சிரிக்கச் செய்தது;

பச்சைப்பட்டு

விரிக்கச் செய்தது;

வறுமைப் பேயை

எரிக்கச் செய்தது

வீட்டோரம் காட்டோரம் தேர்தல்

ஓட்டோரம் இருக்கும் நல்லீர் - சிறிது

ஆற்றோரம் வாரீர்! இன்று என்

பாட்டோரம் வாரீர்! நன்று!

குடமுருட்டிக் காவிரிப் பெண் ஆடுகின்ற காட்சி கண்டு காதல்

கொள் இடம் இதுதான் என்று; காதல்

கொள்ளிடம் இதுதான் என்று

வீர சோழன் வருகின்றன் ஓடம் போக்கி - என்மேல்,

வை கை என்று வளைக்கின்றான்

வைகை என்று வளைக்கின்றான்

உன் பல் மணிமுத்தா என நெளிகின்றான்.

காவிரியோ கண் சிமிட்டி,

என் மன்னியார் வருகின்றாள்:

மறைந்திடுக அத்தான் என்கின்றாள்;

அவனோ வரட்டுமே மன்னியார்,

நம் காதலுக்கு அவளென்ன கல்லணையா?

காமினி பாமினி நாமினி காதலர்கள்

ஆம் இனி திருமணமென்று பிறருக்குச் சொல்லிவிடு.

காதல் அக்கினியாறுமோ கண்ணே அருகில் வந்துவிடு

காதல் அக்கினி ஆறுமோ கண்ணே?

அருகில் வந்துவிடு!

அவளோ யாரும் நம்மீது தப் பெண்ணார்

நம் காதல் பிரிக்க வெண்ணார்

பிறர் வெட்டார் நம் உறவெனினும் அத்தான்

வெட்கம் என்னைத் தடுக்குதென்றாள்

வீரசோழன் விரைந்தணைத்துக் கொண்டவாறு

பாலாறு முன்னே பருகிடுவோம் வா என்றான்.

மஞ்சளார் முகவதியும் அவன் மடிமீது சாய்ந்தபடி

மணமெப்போது அத்தான் என்றாள்

பெரியாறு தலைமையிலே பெரிதாக நடக்குமென்றான்.

ஆறுகளை ஒன்றாக இணைத்துக் காதல் கதை

பின்னியதாய்க் கருதாதீர்!

ஆங்காங்கு வாய்ப்புக் கூறுகளைச் சீராக்கி

வளம்பெருக்கும் நதிகளுக்கு

உழுவார் உலகத்தார்க்கு ஆணி

உழன்றும் உழவேதலை என

நன்றிசொல்வோம் எழுவார் வள்ளுவரும் வாழ்த்துரைக்க!

சேற்றில் மலரும் அவன் வாழ்வு!

உழவனோர் மன்னன்

நாற்று முடியிருக்கும் அவன் தலையில்

உழவனோர் வீரன்; என்றும்

போர் இருக்கும் அவன் களத்தில் (வைக்கோற்போர்)

உழவனோர் ஓவியன்

வயல்கள் அனைத்தும் அவன் வரைந்த சித்திரம்!

உழவனோர் தெய்வம்

உயிர்களைக் காப்பதால்!

குருவை முன் வைத்துத் தாளடியில் உழைக்கின்ற

திருவைப் போற்றிடுவோம்.

நிலம் பிறந்த நாளாகப் பாடுபட்டு வருகின்றீர்

நலம் சிறக்க நாட்டுக்கு இன்னுயிரைக் கொடுக்கின்றீர்

உடலில் பலம் இருக்கும் வரையினிலே வயல் வெளியில் கிடக்கின்றீர்

கலம், மரக்கால், படியென்று பழங்கணக்கெழுதிப் பார்க்கின்றீர்

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கெதுவும் மிஞ்சாதென்று

உதட்டையே பிதுக்குகின்றீர்

ஏனிந்த நிலையென்று யோசித்ததாலே

ஏற்றமிகு முன்னேற்றப் பாதைக்கு வழி கண்டோம்.

கண்ட வழி; ஏட்டோடு இருப்பது அழகுமல்ல;

கவியரங்கப் பாட்டோடு முடிவதும் நல்லதல்ல.

வீட்டோடு கிடப்பவர்கள் விழித்தெழுக தமிழ் நாட்டோரே

விடுதலை நாளின்று துடித்தெழுக

காட்டோடு கழனியோடு உழல்கின்றீர்

ஆட்டோடு மாட்டோடு சுழல்கின்றீர்

பழைய முறை மாற்றிப் பயிர் செய்தால்

நிறையப் பலன் கிடைக்க வழியுண்டு

உழக்குதான் மிச்சமென்ற இருட்டுநிலை

கிழக்கு வெளுத்ததுபோல் மறைந்துவிடும்;

நந்தன் போல் ஓர் இரவில் பயிர் செய்ய

நான் உம்மை அழைக்கவில்லை.

கந்தா கடம்பா கருப்பா முனியா என்று

கருவேல மரத்தடியில் ''மிராசுதார்" போடும் கூச்சல்;

கால் நடையைக் கட்டிப்போட்டு

சால் கொண்டு மனித முதுகொடிய அவை கருணையுடன் தந்த உரம்;

இறைத்த தண்ணீர் - தார்க் கோல் கொண்டு குத்துவதால்

சுற்றும் எருது

இப்படிப் பரம்பரையாய் நடக்கின்ற உழவுத் தொழிலில்

பம்பரத்தின் வேகந்தான் வேண்டுமென்று இணைக்கின்றோம்

விஞ்ஞானத்தை!

படித்தவர்கள் மேல்நாட்டில் விதைக்கின்றார் விளைக்கின்றார்

விஞ்ஞானக் கருவியினால் உழுகின்றார்; இங்கோ

படித்தவர்கள் அழுகின்றார் பயிர் விளைக்க!

விழுகின்றார் வரிசையாக வேலைதேடி!