கலைஞரின் கவிதைகள்
கவிதை 19 · 19 / 77
"இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்"
எதுவுமில்லையென ஏங்கியிருப்பாரைக் கண்டு
"எது இல்லை என் மகனே?
வெடித்திருக்கும் என் வயிற்றில் மண்வளம் பார்
வெட்டியெடுத்தாலோ நீர்வளம் மிகுந்துவிடும்
வெகுதூரம் அகழ்ந்திட்டால் வைரமணி வழங்கிடுவேன்
வெகுளியாய் வாழாமல் வேளாண்குடி பெருக்கிடுக!"
எனச் சிரித்து நிலமடந்தை நிற்கின்றாள்
உழவர் திருமகனே உணர்ந்திடுக
புவிச் சிரிப்பு
உழைத்துப் பெற்றிடுக உடனடியாய்ப் புதுச் செழிப்பு;
அடுத்து;
நண்பர் வருகின்றார்
அடுத்து வரும் நண்பர்களை ஆதரித்து அன்புகொண்டு
படுத்துறங்கும் வேளையிலும் அவர் நினைவாய் நானிருந்து
எனைக்
கெடுத்திடவே துணிந்தபோதும் நட்புடனே அணுகி நைந்து
இனித் தடுத்திடவே முடியாது அவர் வீழ்ச்சி என்பதாலே
முடித்துவிட்ட கேண்மையெலாம் பெரிய கதை.
எதில் முதல்வனாய் இருக்க வேண்டும் நண்பன்;
இன்ப விளையாட்டிலா?
இடித்துரைக்கும் பண்பாட்டிலா? இதில்
எதில் முதல்வனாய் இருக்கவேண்டும் நண்பன் என்று
எழில் முதல்வன் எழுத்தாரம் சூட்டுகின்றார்
தொழில் பேராசிரியர்; கவிப்
பொழில் தமிழ்க் குயில்
கூவிடுக நன்று
கூறிடுக நண்பர்:
(பேராசிரியர் எழில் முதல்வன் 'நண்பன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
நட்புக்கோர் அதிகாரம்
நட்பாராயப் பிறிதோர் அதிகாரம்
பழகுதலுக்கோர் அதிகாரம்
பாங்குடனே "தீ நட்பு" "கூடா நட்பு" எனப்
பகுத்து ஒவ்வொன்றுக்குமோர் அதிகாரம்
வகுத்தளித்த வள்ளுவனும்
நண்பர்களால் மெத்தப் பாடுபட்டானோ நம்மைப்போல!
நண்பர் எனில் நமது எழில் முதல்வன் சொன்னதுபோல்
நட்புக்கோர் அடையாளம்
பிசிராந்தை -கோப்பெருஞ்சோழனன்றோ!
திருமணத்தில் போர் ஓலை வந்தவுடன்
தேனமுதைப் புறம் விடுத்துத்
தேசிங்குப்படை சேர்ந்த மகமத்கான்
சரித்திரத்துப் புத்தகத்தில் சரியாத ஏடானான்.
ஆண்களிடை அதிக நேரம் நின்றுவிட்டோம்
வீரன் என்றும் உழவன் என்றும்,
நட்பு விதைக்கின்ற தோழன் என்றும்
வெகு நேரம் ஆனதனால்
களைப்பாறப் பெண் வேண்டும்
பெற்றுக் கொடுக்கவொரு புலவர் வருகின்றார்!
பெறுவதெப்போது? வளர்வதெப்போது? நம்
பேரனுக்குத் திருமணமா? எனக் கேட்பீர்
சந்தக்கவிமணியாம் தமிழழகன்
தந்தப் பெண்மணியைத் தருகின்றார்.
கண்டிடுவீர்
சந்தக் கவி தந்தச் சிமிழ்
சிந்துத் தமிழ் செவி மடுப்பீர்.
(சந்தக்கவிமணி தமிழழகன் 'பெண்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
பெண்கள்
பெய் என்றால் பெய்து விடும் மழை என்றார் கவிஞர்
கற்புநிறை பெண்ணை அந்தக் கடுஞ்சோதனைக்கு ஆளாக்கி
மழை பெய்யா விட்டாலோ மாசு தூவிடல் முறையன்று
பெய்யெனப் பெய்யும் மழை என்று பெண்ணைப்
பெருமையாய்ச் சொன்ன குறள் - நல்ல
பெண்ணொருத்தி பெய்யெனப் பெய்கின்ற மழை போன்றாள்
எனும் கருத்தை நிலை நாட்டும்.
பழங்கருத்து தலை காட்டும்; துரத்த வேண்டும்.
அடுத்து; பெண்ணைத் தொடர்ந்து துறவு வருவானேன்? நம்
கண்ணையெலாம் 'காவி' மறைப்பானேன்?
பெண்வந்தால் துறவு வரும் சில துறவிக்குத் துறவுக்குத் துறவு வரும்.
இரு துறவு ஏற்றவர்கள் இந்தத் தமிழகத்தில் பலருண்டு
இனியதாம் இல்லறத்தை முதலில் துறந்து
கனிரசம், பால், தயிர், கமண்டலம் என்றிருந்து
கன உடல் கொழுத்தவுடன்
துறவறத்தைத் துறக்கின்றார் வெளிப்படையாய்!
இலைமறை காயாக இருக்கின்றார் கெட்டிக்காரர் இந்தத்
தலைமறைவு வேலையெல்லாம் தகுமா என்று
கலைமிகு பாவாணர் தூரனாரும்
நெருங்கி வந்து நெஞ்சம் திறக்கின்றார்!
துறக்கின்றார் என எண்ணாதீர்
திறக்கின்றார் கவிதை நெஞ்சம்!
(கவிஞர் பெரியசாமித்தூரன் 'துறவு' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
துறவு நன்றெனினும்
தூய்மையாய் இருத்தல் வேண்டும்
வேடமாய்த் தொடர்தல் தீது; தீயிற்
சூடமாய்ப் பற்றிக் கொள்ளும் நெஞ்சுக்குத்
துறவுநிலை ஆடிக்காற்றுப் பஞ்சாம்
நஞ்சாம் வாழ்க்கை என்பார் பகலில்
பஞ்சாமிர்தம் தேவையென்பார் இரவில் அதனை
அஞ்சாமல் கண்டிக்கும் உரம் வேண்டும் மனதுக்கு
அரசு கட்டில் மணிமகுடம் அணிமணிகள் துறந்துவிட்டு
ஆரண்யம் சென்ற முனி விசுவாமித்திரரும்
மேனகையின் விசுவாசமித்திரராய் ஆனகதை அறியீரோ?
''மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்"
இதை மறுப்பார் கயவரிலே ஒருவகையாம்; அதில்
பலவகையும் பாடுதற்குத்
திருச்சிற்றம்பலம் வருகின்றார்
தித்திக்கும் தமிழ் தருகின்றார்:
(கவிஞர் திருச்சிற்றம்பலம் 'கயவர்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
மொழிந்தகவி அத்தனையும் முகமலர்ந்து கேட்டிருந்த நல்லோரே
முழுநிலாப் போல் அமர்ந்திருக்கும் எனதருமை நாவலரே!
முடிவுரையை நிகழ்த்துகின்றேன் முடிந்த பின்னர் சென்றிடுவீர்
ஆண்மை கொள் வீரனையும்
அன்பு சால் பெண்ணினையும்
கேண்மை மிகு நண்பனையும்
கேடு சூழ் கயவனையும்
பழகு தவத் துறவியையும்
உழவு செய் மனிதனையும்
அறுமறையில் அறுவராய்த் தேர்ந்தெடுத்து அளித்திடுக விளக்கமென்றார் அமைச்சனைத்தான் விட்டுவிட்டார்.
அருகில் வைத்துக் குறை கூறக் கூடாதென்ற எண்ணம் போலும்!
"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு"
"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு''
"பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துட் தெவ்வோர்
எழுபதுகோடி உறும்"
இழிவினைத் தேடும் அமைச்சனை விடவே
எழுபது கோடிப் பகைவர்கள் மேலாம்
இவ்வாறு அமைச்சு பற்றிச்
செவ்வாழைக் குறள் கருத்தில்
ஒவ்வாமல் போனவர்கள்
எவ்வாறு சிறப்புறுவர்?
மங்காத ஒளி விடுத்து மண்டபத்து இருட்டுக்குள்
வௌவாலைப் போன்றவர்தான் தொங்கிடுவர்
நிலமாளும் எங்களுக்குத்
தூங்காமை கல்வி துணிவுடைமை
நீங்காமல் இருக்க வேண்டுமென்றார்; நான்
கற்றது சிறிதெனினும் கவியெழுத இரவெல்லாம்
தூங்கவில்லை வேறு ஓய்வுமில்லை
துணிவுடைமை இருப்பதாலே
அணி சீர் தளை தொடை எதுவுமின்றிக் கவி
அரங்கேற வந்து விட்டேன்
புவியாளப் புகன்ற குறள் என்
கவியாளத் திருத்திக் கொண்டேன்.
அதற்காகக் கவியரங்கீர்
கடி தோச்சி மெல்ல எறிக எனக் கேட்டுக் கொள்வேன்.
அமைச்சனுக்குத் தனியாக விளக்கம் ஏன்?
