கலைஞரின் கவிதைகள்
கவிதை 18 · 18 / 77
ஆதலினால்
மானிடரே காதல் செய்வீர்;
வீரம் கலந்து காதல் செய்வீர்.
வீரமில்லாக் காதலினால் விரக்தியுண்டு
காதலில்லா வீரத்தில் கடுமையுண்டு
வாழ்வில் துணிவே இல்லை...
வாழ்வில் கனிவே இல்லை...
அவையோர்க்கு என் தீர்ப்பை அறிவிக்கின்றேன்:-
காதலும் வீரமும் கட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தை-
இதற்குக் குடும்பக் கட்டுப்பாடில்லை;
பெற்றிடுவீர் தாராளமாக!
வணக்கம்.
✤
அருமறையில் அறுவர்
10.8.68 அன்று தமிழ் வட்டத்தின் சார்பில்
சென்னையில் "அருமறையில் அறுவர்"
எனுந் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்
கலைஞர் மு. கருணாநிதி
அவர்களின் தலைமைக் கவிதையுரை
★
அவை நடுவினிலே வீற்றிருக்கும் ஆன்றோரே,
அறிவுசால் பெரியோரே
அன்புத் தாய்மாரே,
அருமறையாம் திருக்குறளில் அறுவர் காட்ட - தமிழ்த்
திருமலியும் கவிதையுடன் வந்திருக்கும்
பெருமைமிகு புலவர்களே! வணங்குகின்றேன்!
ஆறிரண்டு திங்கள் அதற்கு மேல் நாலு திங்கள்
ஆயிற்றுப் பதினாறு திங்கள் - நான்
அமைச்சனாய்ப் பதவியேற்று
இதற்கிடையே
ஐந்தாறு கவியரங்கில் அவைத் தலைமை ஏற்கச் சொல்லிப்
பைந்தமிழை மறவாமல் பதவியில் இருக்கச் செய்தார்!
பாட்டெழுதும் புலவன் என்று பரிந்து அழைக்கவில்லை
நாள்தோறும்
சீட்டெழுதி வருகின்றார் கணக்கற்றோர்
மனுக்களுடன்
உழல்கின்றேன் அவரிடையே - ஓய்வே இல்லை
சுழல்கின்ற பம்பரமும் சுற்றிப்பின் படுத்துக் கொள்ளும்
உருள்கின்றேன் ஊரூராய் உதைபட்ட பந்தைப்போல்!
உடல் இளைத்துப் போனாலும் உயிர்மட்டும் இளைக்கவில்லை
நெஞ்சில்
சுடர்வழங்கத் தமிழிருக்கச் சோர்வுதான் மேவிடுமோ?
அடலேறு மொழித் தமிழே - இன்பக்
கடலேறு மலைத் தமிழே - சோலை
மடலேறு சுவைத் தமிழே - நீ என்
உடலேறி உயிரேறி வாழ்விக்கின்றாய்; வணங்குகின்றேன்.
இலக்கணத்தை எதிர்க்கும் எண்ணம் என்பால் இல்லை
இலக்கணம் தான் ஊடல் செய்யும் அன்புக் கிள்ளை
ஒருபாட்டும் இலக்கணமுடன் ஒருப்பட்டு வராவிடினும்
நான் தரும்பாட்டு தமிழ் உணர்வைக் கொல்லாதெனும் துணிவுடனே
கரும்பாட்டும் ஆலையிலே வேம்பொன்று புகுந்தது போல
இக் கவிக் கூட்ட மேடையிலே வீரமாய்ப்புகுந்து விட்டேன், தென்றல்.
அரும்பாட்டும் பூங்காவில் உங்கள்
அரும் பாட்டு, தமிழ் மாலையிலே பூவாம்
அந்தப் பூவாடும்
சுரும்பாட்டம் இருக்கின்றீர் நீங்கள்; நானோ
துரும்பாட்டம் இருக்கின்றேன் உம்மிடையே!
எறும்பாட்டும் இரும்புத் தூண் என்றால்;
எறும்பு ஆட்டும் இரும்புத் தூண் என்றால்;
என் வெறும் பாட்டும் வென்று விடும் நும்மை!
தமிழ் வட்டம் அமைத்திங்கே
தமிழ் விழா நடத்துகின்ற
தகைசால் வி.கே.சி. நடராசன்
தந்திடுக வருகை என்றார்
இட்டமுடன் அழைத்ததனால் அவர் என்னை
வட்டமிடல் ஆகாதென்று வருகின்றேன் எனச் சொன்னேன்
வந்து விட்டேன் தலைமை தாங்க
வட்டமெனில் வகைப்படுத்தும் பேராம் - ஒரு
திட்டமுடன் செயலாற்றும் கூறாம்.
பொட்டிடும் பாவைக்கு நெற்றியிலே வட்டம்
கொட்டிடும் ஒளிமழை நிலவுமோர் வட்டம்
மட்டில்லாத் தொலைவுகொள் கதிருமொரு வட்டம்; சில
மாணவர்கள் வாங்குகின்ற எண்களோ முழுவட்டம்!
காதல் செயலுக்குக் கட்டிலொரு வட்டம்
கனிமொழிப் பிள்ளைக்குத் தொட்டிலொரு வட்டம்
மாதர் வாழ்வுக்குக் கற்புநெறி வட்டம்
மறவர் பெருமைக்குப் போர்க்களமே வட்டம்
உழவர் ஏருக்கு விளைநிலமே வட்டம்
நண்பர் உறவுக்கு அன்பகமே வட்டம்
துறவோர் தூய்மைக்கு மனக்கூண்டே வட்டம்
கயவர் வாழ்வுக்குத் தெரியாது வட்டம்
கண்டபின்னர் அமைவதுதான் 'கயவர்:' எனும் பட்டம்
முதலில் 'வீரன்' எனும் தலைப்பினிலே
முரசறைவார் கணேச நல்லார்!
இறந்திடுவேன் எதிர்ப்பினிலே என் தலைவன்
இருவிழியும் நீர் பொழிய!
அச்சாவை இரந்திடுவேன்....
மறந்திடுமோ திருக்குறளும்?
மறக்கவில்லை!
மானினத்தார் வீரங்காட்டி
ஆண் இனத்தைப் புறங்காணும் புறப்பாடல்
பழைய திறப்பாடல்!
விழுப்புண் படாத நாள் எல்லாம் வீரன்
வீணான நாள் என்பான் என்ற குறட்பாடல்
துள்ளிவருகுது வேல் என்று
துடித்து நின்றது இமையென்றால்
எள்ளி நகைப்பான் வள்ளுவனும்
ஏறு தழுவுதல் வீரர்க்கழகு - அவர்வாயில்
வெற்றிலைச் சேறு தடவுதல் மகளிர்க்கழகு
சாக அஞ்சார் களம் செல்வார்
சா. க. அஞ்சார் கவி சொல்வார்
வீரன்' கவி சொல்வார்:
(கவிஞர் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் எம்.எல்.சி. 'வீரன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
படுத்திருக்கும் எழுத்தெல்லாம் பாய்ந்து துள்ள
கொடுத்திருக்கும் புதுவேகம் என்ன சொல்ல?
"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்" என்றே
மறவர்க்கிலக்கணம் வரைந்தது குறளும்! அதை
- மறந்தவர் சிலரோ வரியை மாற்றி
"உயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
மயிர் நீப்பர் மானம் வரின்' என்று
மொட்டையடிக்கின்றார் தேர்தல் பந்தயத்தில்!
"யானையினைக் குறிபார்த்துத் தவறும் வேல்
கானமுயல் கொன்றெறியும் அம்பின் மேல்"
இந்த மானமொழி வழங்குகின்றான்
"குறள் வீரன்" இன்று;
பூனை குறுக்கானால் போச்சுதடா உயிர் என்று
ஞான மொழி பேசுகின்றான் தமிழ் வீரன்!
களம் காண்பான் வீரன் என்றால்
நெற் களம் காண்பான் உழவர் மகன்!
போர் மீது செல்லுதலே வீரன் வேலை
கணேசர் வைக்கோற் போர் மீது உறங்குதலே உழவன் வேலை.
பகைவர்
முடி பறித்தல் வீரன் நோக்கம் - நாற்று
முடி பறித்தல் நடவின் நோக்கம்
உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு
வேற்றுமையோ ஒன்றே ஒன்று
உழவன் வாழ வைப்பான்
வீரன் சாக வைப்பான்!
உழவனது பெருமையெலாம் உரைப்பதற்கு
உழுவலன்பர் சாரதியும் வருகின்றார்
பார்த்தசாரதி
பாட்டுச் சாரதியாய் மாறிப் பைந்தமிழ்த் தேர் ஓட்டிடுவார்
இல்லை..இல்லை ஏர் ஓட்டிடுவார்
உழவன் பற்றிப் பாடுகின்றார்; அதனாலே:
(கவிஞர் நா.பார்த்தசாரதி 'உழவன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
உழவே தலை என்றுரைத்ததனால்
உழவனுக்குத் தலைவனில்லை
உழவன் பற்றி பாடுவோர்க்கும் தலைவனில்லை
அறிந்திடுக!
