உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 17 · 17 / 77

(கவிஞர் பொன்னிவளவன் 'காதல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

ராஜேந்திரன்,

பெயரிலே வீரமுண்டு; சரிதப் பெருமையும் என்றுமுண்டு

கங்கை கொண்ட ராஜேந்திரன்

சிவ கங்கை கண்ட ராஜேந்திரன்.

நம் சிந்தையிலே நிற்பவராம்

நெஞ்சில் சிலையாக இருப்பவராம்.

இந்த நண்பர் வீரம் பற்றிப் பாடிடுவார்.

என்பு தெரிகின்ற உடல் எனினும் எஃகுடையார் உள்ளத்தில்!

அன்பு தவழ்கிற அருந் தோழர்

முன்பு சொன்னதற்குப் பதில் சொல்லி ஒலித்திடுவார் தமிழ்வீரம்!

(கவிஞர் ராசேந்திரன் 'வீரம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

வீர வழக்கறிஞர் அப்துல் ரகுமானும்

சாரமுள்ள வாதம் இரண்டொன்றைக் கூறிடுவார்;

தீர்ப்பளிப்பேன் பின்னாலே!

(கவிஞர் அப்துல் ரகுமான் முடிவுரை பாடுகிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

காதல் வழக்கறிஞர் ஈரோடு தமிழன்பன்

வாதம் செய்திடுவார்:

என் தீர்ப்பு அதன் பின்னே!

(கவிஞர் தமிழன்பன் முடிவுரை பாடுகிறார்)

தலைவர் கலைஞரின் தீர்ப்புக் கவிதை:

பேரன்பு கொண்டோரே! பெரியோரே! இது வரையில்

வெறும் வம்பு நடந்ததாய்க் கருதாதீர்: இது

விறுவிறுப்பாய் நடந்த வம்பு

இந்த வம்பு நாடெங்கும் நடைபெறவே

நான் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வீரந்தான் பெரிதென்று வாதமிட்ட நண்பருக்கு

காதல் என்றால் கசக்கும் பொருளல்ல.

காதல்தான் பெரிதென்று வழக்காடும் நண்பர்கள்

கோழையாய் இருந்திடலாம் குறையில்லை அதில் ஒன்றும்!

ஆனால்

கோழைகளைக் கோழைகள்தான் காதலிப்பர்

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்" என முல்லைக்கலி முழக்குவதை

மறந்திடவோ?

பாய்ந்து வரும் காளையினை அடக்குவதில் - தான்

மாய்ந்து போக நேரிடினும் அஞ்சாத மறவனையே

மாலையிட்டாள் தமிழச்சி

பெண்ணை அணைத்து மார்பகத்தில் முகம்

வைப்பது போல் -

காளைக் கொம்பிடையே தலை வைப்பீர் விழுப்

புண்ணைப் பெறுவதற்கு

எனக் சொல்லி அது நடந்த பின்னால்

மனம் ஒப்பி மணந்து கொண்டாள் தமிழப் பெண்ணாள்.

அதற்காகக்

காதல் காவியத்தில் வீரமன்றோ முதற்படியாய் இருந்த

தென்று

வாதமிடல் சரியல்ல!

காதல் அடைவதற்கே

சாதலுக்கும் அஞ்சாத வீரம் கொண்டார்!

இதை நினைத்தால்

காதல் பெரிதென்றே தோன்றுமன்றோ!

"பொருதடக்கைவாளெங்கே

மணிமார்பெங்கே

போர் முகத்தில் எவர் வரினும்

புறங் கொடாத

பருவயிரத் தோளெங்கே, எங்கே?" என்று

கலிங்கப் பரணி கர்ச்சிக்கும்.

"கலவிக் களியின் மயக்கத்தால்

கலைபோ யகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்றெடுத்துடுப்பர்...."

இந்தக் காதல் பாடலும் கலிங்கப் பரணிதான்-

தென்று படைமுகம் நோக்கிப் புறப்பட்ட வீரன்

பாவைத் துயர் கேட்டுருகித் திரும்பிய சேதியைப்

பாலைக் கலி பகரும்

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவனை'க்

காட்டுகின்ற குறள்தான்

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்'' என்று

காதல் தேன் பொழியும்.

"இன் நிழல் இன்மையான் வருந்திய

மடப்பிணைக்குத்

தன் நிழலைக் கொடுத்தளிக்கும் கலை" யென்று

மானிடையே ஊறுகின்ற காதல்தனைத்

தேனிடையே பழச்சுளை போல் தருகின்ற கலித்தொகைதான்

வேங்கையுடன் பொருதுகின்ற வேழத்தின் வீரச் செயல் காட்டிக்

குறிஞ்சிக்குச் சிறப்புக் கூறும்!

புராணமாம் ராமாயணக் காதையிலே

இராவணனின் அருஞ்செல்வன் இந்திரஜித்தன்

சுவைமிகு காதலாலே சுலோச்சனை கணவனானான்.

பகைப்படை மிகுந்தபோது தலையிழந்து வீரனானான்.

தலையிழந்து போகுமுன்னே

நிலை குலையச் செய்திட்டான் எதிரிகளை!

நிகும்பலை கண்ட வீரன்

பகைவரிடைப் பெருங் கும்பலை அழித்தபின்னர்

மடியலானான் மறவனானான்

மணிமகுட ராவணனின் மைந்தனானான்....

பாரதத்தில் வத்சலையின் அத்தானாம் அபிமன்யு

சத்தான முத்தங்கள் ஒன்று பத்து நூறாக

முத்தான வாயிதழில் வழங்கிடுவான்!

கொத்தாகக் காதல் கனி பெற்றுக் கொள்வான் - அந்த

முற்றாத இளம்பிஞ்சுபோர் முனையில்

பற்றாத உயிரே இல்லை - பின்னர்

வற்றாத புகழோடு மாண்டு விட்டான்.

குற்றால அருவி நிகர் குழல் கொண்ட

பொற்றாமரையின்பால் காதல்! அதற்காக

விற்றானோ வீரம்; களத்தில்? இல்லையில்லை - சிந்துபாடும்

சிற்றாறாய் இருக்கின்றான் இதிகாசத்தில்.

புவிமன்னன் பெற்ற பெண்ணை

கவிமன்னன் பிள்ளை, ஆண்டான்!

கவிமன்னன் பிள்ளையாண்டான்

"அம்பிகாபதி - அமராவதி காதல்''

அன்றென்ன ஆயிற்று?

வீர மரணம்தான்!

அக்காலக் கதை எதற்கு-

இக்கால எடுத்துக்காட்டு என்ன என்பீர்?

எத்தனையோ உண்டதற்கு இயம்புகின்றேன்.

எட்டாவது எட்வர்டு காதலுக்கு முடிதுறந்தான் - அதனாலே

எட்டும் பெருமையெலாம் காதலுக்குக் கிட்டிடுமோ?

மங்கை யவள் மடிவேண்டும் எனச் சொல்லக் காதல் போதும்

முடிவேண்டாம் எனச் சொல்ல தீரம் வேண்டும்;

தியாக உள்ளம் வேண்டும்;

அவ்வளவேன் அப்பாவி "சீனி" யென்பான் அடுத்த வீட்டுச்

''சோனி' மீது காதல் கொண்டு

அவசரமாய் வேலி தாண்டிக் குதிக்கின்றானே;

அதுவுமொரு வீரமன்றோ?

காதலுக்காக வீரம் - வீரரிடை காதல் -

இரண்டையும் வெண்ணெய் மோர் போலப் பிரித்திட

எண்ணுவது பொருந்தாது.

காதலிலே தோல்வியுற்றோர் கழுத்தினிலே சுருக்கிட்டுத் தொங்குகின்றார்.

காதலுக்கு மறுப்பிருந்தால்

சாதலொன்றே வழியென்று

ஆறுகுளம் தேடுகின்றார்.

ஆவி தனைப் போக்கிக் கொள்ள!

காதல் மட்டும் மேவுவதால் இச்செய்கை புரிகின்றார்

காவலுக்கு வீரத்தை இணைத்துக் கொண்டால் அது

கடவுளெனக் காப்பாற்றும் காதலரை!

''நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்

நாட்டினர்தாம் வியந்து நன்றாம் என்பார்

வீடகத்தே. கிணற்றோரத்தே, ஊரினிலே காதல் என்றால்

உறுமுகின்றார்-

பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய்கின்றார்" எனப்

பாரதியார் குற்றம் சாட்டியதும்

"காதல் நெருப்பால் கடல் உன்பால் தாவிடுவேன்

சாதி என்னும் சங்கிலி என் தாளைப் பிணைத்ததடி”

பாரதிதாசனார் பாடியதும் என்று

காதலில் வீரம் கலக்காத மனிதர்க் கன்றோ?