கலைஞரின் கவிதைகள்
கவிதை 16 · 16 / 77
பண்பு சால் நமது நண்பர் நம் பழைய ஊர்க்காரர்;
ஈரோடு!
காவிரியில் நீராடும் பெண் மீது காதல் கொண்டு
அலைகள் போராடும் ஒன்றுக்கொன்று - அந்த
ஈரோடு தமிழன்பன்
சீரோடு காதல் சொல்லி
வேரொடு பலாக் கனிகள்
தார் போடாச் செவ்வாழைப் பூக்கள்
மார்போடு அணைத்துமகிழ் மயிற்பேடு
காளை தந்த வரிசையெலாம் பெற்றுத் தன்
தந்த வரிசை காட்டுகின்ற பெண்ணல்ல.
இரு வரிசை ஏற்று
இருவர் இசைவேற்றுத் தம்
இரு வரிசை விட்டு
ஒரு வரிசை யாவதற்கு ஒருப்பட்ட ஒளித்தங்கம்
தரு வரிசை தருகின்ற தோட்டத்தில் - அவர்
முறுவலிசை, முழங்குகின்ற காதல் இசை.
அந்தப் பருவ இசை இல்லாமல் - வீரத்தின்
கருவ இசை மேவுமோ? என்று
புருவ மிசை உயர்த்திக் கேட்பார் - தமிழன்பன்
துருவ மிசை நிற்கின்றார் ஈரணியாய்!
ஈரணியாய் நிற்கின்ற கவிஞரிடைச்
சீரணிகள் தெரியாத நான் தலைவன்!
ஜீரணியார் என் கருத்தை எனினும் சொல்லி வைத்தேன்.
இருவர் அணி லாவணியா! இல்லை இல்லை
ஒன்று காதல் தாவணியாம்
பிறிதொன்று வீரப் பேரணியாம் நான்
இடையில் ஏன் நிற்க வேண்டும்?
இடையென்ன நிற்பதற்கு உரலா? என்பீர்
உடுக்கென்பேன்; அந்த உடுக்கடித்து
ஆவேசத் தமிழ்மாரி வரவழைக்கும்
துடுக்கான பூசாரி நான் இன்று!
எடுத்திடுவீர் கவிதைக் கணை
தொடுத்திடுவீர் கண்யமுடன்
வாரும் நண்ப; தமிழ் அன்ப;
இந்தப் போரும் நன்கு தொடங்கிடுக!
(கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'காதல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் நோய் பற்றிச்
சோலைப் பூப்பறித்துச் சுவை மகரந்தப் பொடி சேர்த்துச்
சேலைத் தலைப்பாலே மாதர் முகமூடும் அளவுக்குச்
சிரிப்போடும் துடிப்போடும் காதல் குறிப்பேடு தயாரித்தார் தமிழன்பன் மிகப் பொறுப்போடு
வாலிபர்கள் கேட்டிருந்தார் - சுறு சுறுப்போடு
மாணவர்கள் சுவைத்திருந்தார் - கொஞ்சம் வெறுப்போடு
முதியவர்கள் தம்வயதை நொந்து கொண்டார்.
மறுப்பேடு கொண்டிங்கே வருகின்றார் ஒருவர்;
'காதலென்ன கத்தரிக்காய்?
வீரம் தான் மிளகாய்!" என்று
மோதிடவே மத்தகத்தை ஆட்டுகின்றார்
வாதிடவே வீர வழி காட்டுகின்றார்.
"இதற்கும் எங்குற்றான் உன்றன் மகன்?" எனக்கேட்ட வீரனிடம்
பொங்குற்ற மகிழ்வோடு தாய்க் கிழவி
"புலி போன இடம் நானறியேன் போர்க்களம்தான்
போயிருக்கும் - அப்
புலி வாழ்ந்த குகையிதுதான்"
எனத் தன் வயிற்றைக் காட்டி நின்றாள்!
அந்தப் புறப்பாட்டு - புகழ்ப்பாட்டு -
அருந்தமிழர் போற்றுகின்ற வீரப்பாட்டு -
போர்க்களத்தில் வேலெறிந்து ஆனையினைக் கொன்றவீரன்;
பகை எதிர்க்க வேறொரு வேல்தேடி அலுத்த பின்னர் -
தன் மார்பினிலே தைத்திருக்கும் வேல் கண்டு மகிழ்ந்தானென்று கூறுகின்ற
குறளே வீரம்!
இவ்வாறெலாம்:
ஆணிப்பொன் தமிழ் கொண்டு வாணியம்பாடியார் வாதிடுவார்.
ஊர்சொன்னால் பேர் சொல்ல வேண்டாமோ?
ஓங்குபுகழ் அப்துர் ரகுமான் என்பார்
வீங்கு திரைக்கடல் போன்ற சொல் வளத்தார்
தீங்குதரும் எச்செயலும் - நாட்டில்
மூங்கில் இலைப் பனிநீர் போல்
தூங்கவிடாத் தூய்மையாளர்
நீங்கவில்லை அவர் பாட்டு என்மனத்தில்; அவருக்குத்
தாங்கவில்லை 'காதல்தான் பெரிது' என்ற வாதம், அதற்காக
ஏங்கவில்லை எழுந்துவிட்டார் சிங்கம்-
விடமாட்டார் காதலை அவர்; அது வெற்றியடைய விடமாட்டார்!
வீரப் போர் புரிந்திடவே வருகின்றார்.
வாள் எடுப்பார் என அஞ்சாதீர்!
தாள் எடுப்பார் - தான் கவி எழுதிய தாள் எடுப்பார்
தகத்தகாய மின்வெட்டால் காதலுக்குப் பலத்த காயம் செய்திடுவார்.
காதலிக்க நேரமில்லை என்பார்: இல்லை இல்லை!
காதலிக்க வீரமில்லை என்பார்
அந்தக் காதல் படும் பாட்டைக் காண்பதற்குக்
கண்ணல்ல; காது வேண்டும்.
இந்தக்
களப்போரில் காதற் சாவா?
வீரச் சாவா?
அதை
நடிப்போரின் ஆற்றலிலே கண்டிடுவோம்!
(கவிஞர் அப்துர் ரகுமான் 'வீரம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
தித்திக்கும் காதலென்று செப்பிடவே
தி.கு.நடராசன் வருகின்றார்.
தலையில் கங்கையுடன் நடமாடும், காதல்
கலையின் தெய்வமன்றோ நடராசர்?
இதைச் சொன்னால் இந்த நடராசன்
பார்த்தாயா, பரமசிவன் தலையிலே காதல் வைத்துப்
பாதத்தில் வீரம் வைத்தார் என; அவர்
காலடியில் கிடக்கின்ற மனிதனையே சாட்சியாக்கிக்
கண்ணடிப்பார் - காதலிலே வென்று விட்டேன் என்று!
ஆளிருப்பார் - வீரமாக; ஆனால் காதல் பேச்சு!
முகத் திரண்டு தேள் இருக்கும்; மீசை அதன் பேராம் - குறிக்
கோள் வேறிருக்கும்; என்றாலும் இங்கு
கூத்துக்குப் பாத்திரமாய் வந்துள்ளார்
வாத்துக்கு அன்னமெனப் பேர்வைத்து
வனப்புமிகும் பெண்களது நடையழகை உவமை சொல்லி
இனிப்பு மிகும் காதலிலே' எனச் சொல்வார்; இல்லறப்
புளிப்புக்கு வழியில்லாப் பருவம், அவர்
தவிப்புக்கு வழிவிடுவோம். வருக தம்பி!
(கவிஞர் தி.கு.நடராசன் 'காதல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
காதற் சேவல் தந்த அடியை
வீரச் சேவல் திருப்பிக் கொடுக்கக்
கடுகி வருகுது முருகுசுந்தர உருவில்
கிளம்பி முருகெனிலோ அழகு; சுந்தரமும் அஃதே!
இந்த அழகழகு;
காதல் பற்றிப் பாடாமல்
வீரம் பற்றிப் பாடுவது என்ன விந்தை?
கத்திச் சுடர்
சுற்றிச் சுழல்
வற்றிப் பகை
வெற்றித்திரு
பற்றிக் கவி
கற்றுக் கொள
முத்துத் தமிழ்
முருகுத் தமிழ் கேட்டிடுவோம்!
(கவிஞர் முருகுசுந்தரம் 'வீரம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
பொன்னி வளவன்.
காதலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
நிறைய சம்பந்தம்;
ஏனெனில் இதுவரையில் எங்கும் சம்பந்தம் போடவில்லை;
அதனாலே இருக்கிறது சம்பந்தம், இவர் தமிழ்ப்
பூவாரம் தொடுப்பதிலே
தேவாரச் சம்பந்தர்.
சர்க்கரைப் பேச்சாளர்! சதியாக அணுகிவிடில்
நக்கீரக் கொள்கையாளர் அவர் நாக்கை அறுப்பதிலே!
காதல் பற்றிச் சொன்னாலும் கடுமையாகச் சொல்லிடுவார்.
விரகதாப வேதனையை வீரமாக முரசறைவார்
காதலரே வந்திடுக
கவிதை வரி தந்திடுக!
